
காசு மாலை எப்போ தருவாய்? – நங்கநல்லூர் J K SIVAN
இன்று மாசி சனிக்கிழமை. மஹா விஷ்ணு அவதாரமான ஸ்ரீ திருப்பதி வெங்கடேசனுக்கு உகந்தநாள். ஏராளமான பக்தர்கள் லக்ஷக்கணக்காக இரவும் பகலும் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து அரை நிமிஷ தரிசனம் ஆனந்தமாக பெறும் ஸ்தலம் திருப்பதி வேங்கடேசன் ஆலயம்.
எப்போதோ TTD திருப்பதி திருமலை தேவஸ்தான பிரதம நிர்வாகியாக இருந்த ஸ்ரீ . ப்ரசாத் எழுதிய ” NAAHAM KARTHAA ” புத்தகத்தில் வரும் ஒரு அருமையான விஷயம் படித்தது நினைவுக்கு வருகிறது. அதை சுருக்கமாக சொல்கிறேன்;
எத்தனையோ தீவிர மதவெறியர்கள் நம்முடைய பல ஆலயங்களை சிதைத்து, விக்ரஹங்களை உடைத்து,
பக்தர்களைக் கொன்ற ரத்தக்கறை படிந்த சரித்திரத்தில் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் இல்லை. அவர் சக்தி அவர்கள் சக்திக்கு மேலானது. வெள்ளைக்காரர்கள் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் திருப்பதி இருந்த
போதும் அவர்கள் மனதையே மாற்றியது வேங்கடேசன் சக்தி. இதோ நான் படித்த அற்புத விஷய சாராம்சம்.
++
கர்நாடகா சிக்மகளூரிலிருந்து இருபது பேர் கொண்ட ஒரு நடுத்தர குடும்பம் திருப்பதியில் வெங்கடேசன் ஆலயத்தில் நிற்கிறது. அவர்களிடம் ஒரு தங்க காசுமாலை. அதை பெருமாளுக்கு அணிவித்து தரிசனம் செய்ய வேண்டுகிறார்கள். கோவில் நிர்வாகி பேஷ்கார் விஷயத்தை தலைமை அதிகாரி பிரசாத் திடம் சொல்கிறார். ஆலயத்தில் ஆயிரமாயிரம் வருஷமாக ஒரு விதிமுறை வழக்கத்தில் இருக்கிறது. யார் எந்த ஆபரணம் பெருமாளுக்கு அளித்தாலும், அணிவிக்க விரும்பினாலும், அதன் மதிப்புக்கு ஈடாக அதே அளவு பணம் சேவா கைங்கர்யமாக தேவஸ்தானத்துக்கு செலுத்த வேண்டும். ‘வர்த்தனா” என்ற விதி முறை இது. அதை எடுத்துச் சொல்ல பிரசாத் அந்த கர்நாடக பக்தர்களிடம் செல்கிறார்.
இருபது பேரில் தலைவர் நாகராஜராவ். பள்ளிக்கூட ஆசிரியர் 18 வருஷ சர்வீஸ். 470 ரூபாய் சம்பளம். மற்றவர்கள் அதிக வருமானம் இல்லாத குடும்பத்தினர். அந்த குடும்பத்தில் நாகராஜாராவ் ஒருவர் தான் சம்பாதிப்பவர்.
”என்ன சார் வேண்டும் உங்களுக்கு?” – பிரசாத் கேட்கிறார்.
”ஐயா, என் பெயர் நாகராஜ ராவ். பள்ளிக்கூட வாத்யார். இவர்கள் என் குடும்பத்தினர். நாங்கள் பெருமாள் பக்தர்கள். பதினாறு வருஷம் முன்பு ஒருநாள் என் ஸ்வப்னத்தில் பெருமாள் வந்து ”எனக்கு ஒரு 108 தங்க காசுமாலை சாற்றி தரிசனம் செய்” என்றார். ஏன் என்னிடம் வந்து பெருமாள் இதைக் கேட்டார் என்று இன்றளவில் எனக்குப் புரியவில்லை. மறுநாள் காலை யாரோ சிலர் ”இந்தாங்கோ சார் திருப்பதி பிரசாதம். உங்களுக்கு கொடுக்க வந்தோம்” என்று திருப்பதி லட்டு பிரசாதம் என் கையில் திணிக்கிறார்கள்”.
முதல் நாள் இரவு வெங்கடேசன் கனவில் காசுமாலை கேட்கிறான். மறுநாள் காலை எனக்கு அவன் ப்ரசாதம் பெற வைக்கிறான். என்ன ஆச்சர்யம் என்று பிரமித்தேன். யாரிடமும் இதை சொல்லவில்லை. ரெண்டு நாள் கழித்து மீண்டும் பெருமாள் கனவில் வருகிறார் . ”எனக்கு காசுமாலை எங்கே? ” முதல் கனவை நினைவூட்டுகிறார். இந்த முறை மறுநாள் காலையில் என் குடும்பத்தார் அனைவரிடமும் விஷயத்தை விவரமாக சொன்னேன். எங்களிடம் காசு கிடையாது. எங்கள் வறண்ட நிலமும் எந்த விளைச்சலும் தந்து வருமானம் இல்லையே எப்படி காசுமாலை வாங்குவது தயார் செய்வது, பெறுவது?”
சரி செப்புக்காசுகளில் தங்கமுலாம் பூசி காசு மாலை தருவோமா? என்று யோசித்தோம். அன்றிரவே கனவில் மீண்டும் வெங்கடேசன் கனவில் வருகிறான். ”நான் தங்க காசுமாலை கேட்டேனே எப்போது தருவாய்?” என்கிறார்.
குடும்பத்தில் அனைவரும் மீண்டும் ஒன்று கலந்து ஆலோசித்து அன்று முதல் ஒருவேளை உணவை நாம் அனைவரும் விலக்கி காசு சேர்ப்பது என்று முடிவெடுத்து ஆறு மாதத்தில் ரெண்டு தங்க காசு வாங்கினோம். போகப்போக குடும்பத்தில் சிலருக்கு நல்ல வேலை கிடைத்தது. எங்கள் வறண்ட நிலத்திலும் விளைச்சல் பெருகி கொஞ்சம் வசதி ஏற்பட்டு கடந்த பதினாறு வருஷத்தில் 108 தங்கக்காசுகளில் பெருமாள் தாயார் உருவம் பொறித்து, கனமாக, தங்கக் காசுமாலை தயார் செய்துவிட்டோம்.
முந்தாநாள் இரவு நாங்கள் எல்லோரும் திருப்பதி செல்ல தயாராகும் முன் இரவில் ஏழுமலையான் மீண்டும் கனவில் வந்தான். ”நீ கொண்டுவரும் காசுமாலை நன்றாக இருக்கிறது.அதை எடுத்துக்கொண்டு நீங்கள் என்னிடம் வந்து எனக்கு அணிவித்து தரிசனம் பெறுங்கள். இதில் ஏதாவது சங்கடம் இருந்தால், இதோ இவனிடம் போய் சொல்லுங்கள் அவன் உதவுவான் ”என்று ஒரு முகத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அந்த முகத்தை உற்று பார்த்தேன். அது யார் என்று முன் பின் பழக்கமில்லை. முகம் அப்படியே நினைவில் இருக்கிறது. நீங்கள் தப்பாக நினைக்கவில்லை என்றால் கூறுகிறேன். அந்த முகம் உங்கள் முகம் தான் ” என்கிறார் நாகராஜராவ்.
பிரசாத் இதை கேட்டு அதிர்ந்து போனார். அவர் யார் என்று நாகராஜ ராவுக்கோ, மற்றவர்களுக்கோ தெரியாது. ஒரு ஏழை குடும்பம்,எதிரே நிற்கிறது. இவர்கள் நிதி நிலைமை அவர்கள் உடையில், உருவத்தில் தெரிகிறது. பிரத்தியேகமாக அபிஷேகம், அர்ச்சனை, ஆபரணம் சாற்றி, தரிசனம் பெற அதிக கட்டணம் கட்டவேண்டும். அதையே இவர்களால் கட்ட முடியாத நிலை. திரும்பி ஊருக்குப் போக மட்டும் பஸ் செலவுக்கு காசு வைத்திருக்கிறார்கள். இவர்களால் எப்படி காசுமாலை மதிப்புக்கு ஈடாக கட்டணம் தேவஸ்தானத்துக்கு ‘வர்த்தனா” விதி முறைப்படி கட்ட முடியும்?. காசு மாலை தயார் செய்வதற்கே இந்த குடும்பம் பதினாறு வருஷம் கஷ்டப்பட்டிருக்கிறதே? அன்றைய மதிப்பு படி மூன்று லக்ஷ ரூபாய் காசு மாலை மதிப்புக்கு ஈடாக பணம் வேறு எப்படி கட்ட முடியும்? பகவானே என்னை வேறு இதில் பிணைத்திருக்கிறாயே. என் முகத்தை இவர்களிடம் காட்டி ‘இவனைப் போய் பார். இவன் உதவுவான்’ என்று என் மேல் சுமையை தள்ளி இருக்கிறாயே. நான் என்ன செய்வேன்?” வெங்கடேசா நீ தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் ” பிரசாத் மனமுருகி பெருமாளை வேண்டினார்.
ப்ரசாதுக்கு நாகராஜராவ் பொய் சொல்லும் மனிதராக தோன்றவில்லை. ஏழை பெருமாள் பக்த குடும்பம் என்று மட்டும் புரிந்தது.
எதிரே பிரசாத் கண்மூடி நிற்பதை நாகராஜ ராவ் குடும்பம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. ராவுக்கு இந்த மனிதர் தான் பெருமாள் அடையாளம் காட்டியவர் அவரிடம் உதவி கேட்டிருக்கிறேன். பெருமாள் வழி விடுவார் என்று நம்பிக்கை.
சில நிமிஷங்கள் மௌனமாக கண்மூடி நின்ற பிரசாத் புத்துணர்ச்சியோடு நாகராஜ ராவ் குடும்பத்தை ”நீங்கள் எல்லோரும் சில நிமிஷங்கள் இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு பேஷ்காரைக் கூப்பிட்டார்.
அன்று சனிக்கிழமை.
பேஷ்கார் வந்தவுடன் ”இவர்கள் தேவஸ்தானத்தின் மிக முக்கிய அந்தஸ்து பெற்ற சிறப்பு மிக்கவர்கள். VVIPs . இவர்களை தக்க மாலை மரியாதையோடு பெருமாள் தரிசனம் செய்ய அழைத்துப் போய் பிரத்யேக,
அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரத்தோடு, இவர்கள் அளிக்கும் 108 தங்க காசு மாலையை ஸ்ரீனிவாசனுக்கு அணிவித்து அவர்கள் பரிபூர்ணமாக தரிசனம் செய்தபின் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று கட்டளை யிட்டார்.
அதே போல் நடந்தது. அடிவயிற்றிலிருந்து ”கோவிந்தா, கோவிந்தா ”என்று நாகராஜராவ் குடும்பம் பெருமாள் எதிரே சிரம் மேல் கரம் குவித்து ஆனந்த கண்ணீர் பெறுக அவர்கள் கொண்டுவந்த 108 தக்க காசுமாலையை அணிவித்து அலங்காரமாக அவன் தரிசனம் பெற்று மகிழ்ந்தது. பதினாறு வருஷ கனவு நினைவாகியது.
பிரசாத் உதவி விட்டார். கட்டணம் கட்டுவதை தவிர்த்தாகி விட்டது. காசு மாலை கணக்கில் வந்துவிட்டது. ”வர்த்தனா” கட்டணம் கணக்கில் வரவேண்டுமே? அன்று மாலை ஒரு விசேஷ கூட்டம் கூட்டினார். TTD நிர்வாகி உறுப்பினர்கள் கூடும் முக்கிய நிர்வாக கூட்டம் நடந்தது. பிரசாத் நடந்த விஷயம் அனைத்தையும், பெருமாள் கனவில் வந்தது, அவர் தன்னை அடையாளம் காட்டியது அனைத்தையும் கூறி என்ன செய்யலாம்? என்று யோசித்தார்கள் . எல்லோர் மனதிலும் வெங்கடேசன் புகுந்து என்ன செய்யவேண்டும் என்ற வழியை பிரசாத் மனதில் பதிய விட்டான். வர்த்தனா விதிமுறை ஆயிரம் வருஷங்களாக பல ஜமீன்தார்கள் , மிராசுகள், சிற்றரசர்கள், பிரபுக்கள், நினைத்தபோது ஏதாவது ஒரு ஆபரணம் கொண்டு வந்து பெருமாளுக்கு அணிவிக்க வேண்டும் என்று ஆலயத்துக்கு வருவதை குறைக்க எந்த ஆபரணம் பெருமாளுக்கு அணிவித்து அலங்காரம் செய்யவேண்டுமோ அதற்கு ஈடு பணமும் தேவஸ்தானத்துக்கு கட்டவேண்டும் என்ற விதி முறை அமுலுக்கு வந்தது இன்றும் நிலுவையில் இருக்கிறதால் , சில அபூர்வ சந்தர்ப்பங்களில், இந்த முறையை விலக்க, தலைமை அதிகாரிக்கு மட்டும் விசேஷ அதிகாரம் மற்ற நிர்வாகிகள் தரலாம் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் படி நாகராஜ ராவ் குடும்பம் அளித்த தங்க காசுமாலைக்கு ஈடாக மூன்று லக்ஷம் ரூபாய் வர்த்தனா கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கலாம். ஏனென்றால் அது பெருமாளே அவரிடம் விரும்பி கேட்டது என்று நிரூபணமாகிறதால், பதினாறு வருஷங்கள் இதற்காக காலம் ஆனதால், இந்த ஆபரணம் அணிவிக்க வர்த்தனா கட்டணம் வசூலிக்க வேண்டாம்” என்று அனைவரும் எழுதி,கையெழு
த்திட்டு ஆவணம் தயாரானது.
பிரசாத் பெருமூச்சு விட்டார். பெருமாள் சிரித்து வேடிக்கை பார்த்தான். நாகராஜ ராவ் குடும்பம் பஸ்ஸில் ஆனந்தமாக ஊர் சென்றது.
நண்பர்களே, கலியுக வரதன் ஏழுமலையான் ஒரு உன்னத கண்கண்ட தெய்வம். அவன் பக்தர்களுக்கு வேண்டியதைச் செய்பவன். வேடிக்கை பார்ப்பான், விளையாடுவான், சோதிப்பான். ஆனால் நல்லதே முடிவில் அனுக்ரஹம் செய்பவன். இதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை தானே இது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

