
பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN
17/4/2026-22/4/2026
திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர்
21.4, 2026 திரிசூர் கேரளாவில் ஒரு முக்கிய நகரம். போக்குவரத்து நெரிசல் இன்றியமையாதது. சுறுசுறுப்பான, வளர்ந்து கொண்டே போகும் நகரம். இங்கே அமைதி மயமான வடக்குநாதர் ஆலய தரிசனம் பெற்றபின் அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிளுக்கு விஸ்வநாதன் தம்பதியர் அழைத்து சென்றார்கள்.
மிகவும் புகழ் பெற்ற புராதன கேரள ஆலயங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள உன்னிகிருஷ்ணனை பார்த்துக்கொண்டே இருக்கலாம். வெளியே செல்ல மனம் வராது. இங்கே பத்ரகாளி, கணபதி, சாஸ்தா தரிசனமும் பெற முடியும். வழக்கம் போல் இதுவும் ஒரு ஓடு/செப்புத்தகடு விமான கூம்பு வடிவ விதானம் கொண்ட ஆலயம் தான். இங்கே என்ன விசேஷம் என்றால் கிருஷ்ணனுக்கும் பத்ரகாளிக்கும் சம அளவில் வழிபாடு .பக்தர்கள் தொழுகை.
இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏடகளத்தூர் என்ற ஊரில் தான் இருந்ததாம். 16ம் நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்த சில சமூக கலவரங்கள் இந்த ஆலயத்தையும் விட்டு வைக்கவில்லை. . பக்தர்கள் ஜாக்கிரதையாக இங்கிருக்கும் கிருஷ்ண விக்ரஹத்தை வேறு இடத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று விட்டார்கள்.
கிருஷ்ணன் ‘கச்சபிள்ளி மனா’ எனப்படும் நம்பூதிரி பிராமண இல்லத்தில் கிருஷ்ணன் சில காலம் வாசம் செய்தார். அந்த இல்லத்தில் வாழ்ந்த நம்பூதிரி தம்பதிகளுக்கு புத்ர பாக்யம் இல்லை. இப்படி ஒரு அழகான கிருஷ்ணன் தங்கள் வீட்டுக்கு வந்தால் எத்தனை சந்தோஷம் அடைந்திருப்பார்கள்? ”கிருஷ்ணா, நீ தாண்டா எங்க வீட்டு பிள்ளை!” என்று அவனை இரவும் பகலுமாக கொஞ்சி சீராட்டி பாராட்டி வழிபட்டார்கள். பெரிய ராஜ தந்திரி, மஹாராஜா, விஸ்வரூப கிருஷ்ணனைக் காட்டிலும் குட்டிப் பயலாக உண்ணி கிருஷ்ணனாகவே அவன் அவர்களிடம் இருந்தால் தானே அவன் மீது பாசத்தை அவர்களால் கொட்டி வளர்க்க முடியும்? அந்த இல்லம் ஒரு கோயிலாக மாறிவிட்டது.
அந்த இல்லத்தில் இருந்தவர்கள் பரம்பரையாக கொடுங்களூர் பகவதி உபாசகர்கள். அந்த வீட்டில் ஒரு முதியவரால் கொடுங்களூர் சென்று பகவதியை தரிசிக்க முடியாமல் மனம் வாடி ”அம்மா என்னால் முடியவில்லையே. நான் எப்படி உன்னை வந்து தரிசிப்பேன்? என்று வருந்தியபோது அம்பாள் தானாகவே அவர் இல்லம் தேடி வந்து இருக்கிறாள். வந்தவள் அந்த வீட்டிலேயே வாசம் செய்தாள். அவள் எப்படி வந்தாள் தெரியுமா?
கருப்பு நிறத்தில், தீப்பொறி பறக்கும் சிவந்த கண்கள். பயம் தோன்றும்படியான தோற்றம். பிச்சைக்காரி போல ஒரு நாள் ராத்திரி வாசலில் வந்து ”அம்மா” என்று கூப்பிடுகிறாள். இருட்டோடு விடாது பெய்யும் மழை. வெளிச்சம் இல்லை. வீட்டுக்குள் இருந்த அந்த வயோதிக நம்பூதிரி கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு மெதுவாக வாசல் பக்கம் வந்து கதவை திறந்தார். இவள் நிற்கிறாள். அவர் சந்தேகமோ பயமோ கொள்ளவில்லை. யோசிக்கவே இல்லை. ஆஹா , இந்த அகால நேரத்தில் வாசலில் ஒரு பெண் பசியோடு நிற்கிறாளே என்று மட்டுமே மனதில் பட்டது.
”வாம்மா வீட்டுக்குள்ளே”. அன்போடு வரவேற்றார். இது தான் அந்த சக்தி உபாசகனின் ‘அதிதி தேவோ பவ” (விருந்தினர் தெய்வம்) என்ற உபசாரம். அந்த பெண் வீட்டுக்குள் வந்ததும் சுற்றி முற்றி பார்த்தாள் . எங்கும் ஏழ்மையின் சின்னம். அவள் வந்த மறு வினாடி வீட்டில் தீபம் பிரகாசித்து ஒளி கூட்டியது. ஒரு அசாதாரணமான மௌனம், அமைதி நிலவியது. மழையில் தொப்பலாக நனைந்து வந்தவளுக்கு உலர்ந்த வஸ்திரம், சூடான உணவு, தீர்த்தம் எல்லாம் கொடுத்து அன்போடு உபசரித்தார் நம்பூதிரி. ”தாத்தா நான் இங்கேயே உங்களோடு தங்கலாமா?”“அம்மா, இது உன் வீடு. என்னிடம் எதற்கு அனுமதி கேட்கிறாய்?”
சில நாட்கள் கழித்து தான் வந்தவள் சாதாரண பெண் அல்ல. தான் வழிபடும் கொடுங்களூர் பகவதி என்று நம்பூதிரி புரிந்து கொண்டார். அவள் பாதத்தில் விழுந்து வணங்கினார். ”அம்மா இந்த பாவியை, ஏழையை தேடி நீ வந்தது என் பூர்வ ஜென்ம புண்யம் ” என்றார்.“இங்கே நானாக வரவில்லை, உன் பக்தி என்னை இங்கு கட்டி இழுத்து வரச் செய்தது. நான் இங்கு தங்கி உன்னை காப்பாற்றுவேன்”ஆகவே தான் அந்த வீடு அப்போது முதல் ஒரு புண்ய ஸ்தலமாகி, இப்போது திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்.. உண்ணி கிருஷ்ணன் வந்த பிறகு அம்பாள் பகவதியும் கிருஷ்ணனோடு சரிசமமாக பூஜிக்கப்பட்டாள் .
திருவம்பாடி ஆலயம் சரித்திரம் இது. ஆகவே இது விஷ்ணு அம்பாள் சக்தி ரெண்டுமே சேர்ந்த புண்ய ஸ்தலம். திருவம்பாடி வீட்டில் கிருஷ்ணன் வந்தபோது குழந்தையாக இல்லை. வந்த கணமே பாலக்ரிஷ்ணனாக உருவெடுத்தார் என்று கேள்விப்பட்டேன்.
இங்கே உள்ள கிருஷ்ணன் ஒரு கையில் புல்லாங்குழல் , இன்னொரு கையை நீட்டி அதில் வெண்ணை வாங்கும்படியாக
அமைந்துள்ளது. மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்த கிருஷ்ணன் கோவில். உயிரோடு கிருஷ்ணன் இங்கே உள்ளான் என்று பக்தர்கள் நம்பிக்கை.
இங்கே இன்னொரு அதிசயமான வழிபாடும் உள்ளது. குடம் என்றால் தண்ணீர் சேமிக்கும் பாத்திரம் இல்லை. குடை என்று அதற்கு இங்கே பெயர்.
திருச்சூர் பூரம் மிகப் பிரபலமான விழா. திரிசூரில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா. திருவம்படி கிருஷ்ணன் கோவிலிலும் அருகே உள்ள பரமேக்காவு பகவதி கோவிலிலும் கொண்டாடப்படுகிறது.குடம் விழா யானை மேல் வைக்கப்படும் நெடும்பட்டம், குடை மூலம் தேவியின் ஆவாஹனமாக கருதப்படுகிறது.
நிறைய யானைகள் இந்த விழாவில் பங்கு கொள்ளும். யானை தெய்வ வாகனம். திருவம்படி யானைக்கு சிவ சுந்தர் என்று பெயர்.இப்போது இல்லை என தெரிகிறது.
குடை அதன் மேல் தெய்வ சந்நிதி.சக்தியின் அம்சம். குடை மாறும் நிகழ்ச்சி குடமாட்டம் எனப்படுகிறது. இது வேடிக்கை இல்லை. பக்தி பூர்வ சடங்கு. ஒரே நேரத்தில் பல குடங்கள் , அது தான் வண்ண வண்ண குடைகள் உயர்த்தி உயர்த்தி அசைக்கப்பட்டு மாற்றப்படுகிறது. கண் கொள்ளா காட்சி. அனுபவம். வேகம் ரெண்டுமே பிரமிக்க வைக்கும். ஏனென்றால் ஒவ்வொரு குடையும் தனித்துவம் வாய்ந்தது. தனி வடிவம் நிறம், அலங்காரம் கொண்டது. திருவம்பாடி யானைகள் பரமேக்காவு யானைகள் மேல் போட்டா போட்டியாக குடைகள் மாறுவது வேறு எங்கும் காணமுடியதே . போட்டி இல்லை. பரமேஸ்வரி வெவ்வேறு ஸ்வரூபங்களில் குடையாக ஆவாஹனம் ஆகி சாந்நித்யம் அளிக்கிறாள் என்ற வெளிப்பாடு. மூர்த்தி இல்லாமல், சின்னங்களில் சக்தி வரும்” பகவதி அம்பாள் ராஜ மாதா அல்லவா? பழைய காலத்தில் பெரிய ராஜாக்கள் யானை மேல் பவனி வருவார்கள், அவர்கள் யானை மேல் அம்பாரி, பெரிய குடை இருக்குமே. அது ஒரு ராஜ மரியாதை. அம்பாளுக்கு அப்படியொரு பக்தி தோய்ந்த மரியாதை இந்த யானை, குடை.கேரளாவில் மட்டும் ஏன் அநேக கோவில்கள் பக்தி பூர்வமான சம்பவங்கள் அதிசயங்கள் நிறைய ?வேறெதுவும் காரணம் இல்லை. நமக்கு தெரிந்த ஒரே வரி விடை; ”குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

