
ஹரித கோத்ர சகோதர சகோதரிகளே,
- நங்கநல்லூர் J K SIVAN
யாரெல்லாம் ஹரித கோத்ரமோ அவர்கள் என் ”ச கோத்ரர்கள்” சகோதர, சகோதரிகள். இது அரசியல் பொதுக்கூட்டத்தில் எல்லோரையும் பொதுவாக அழைக்கும் ”சகோதர சகோதரிகளே’ அல்ல . அப்படிச் சொல்வதில் இதயமோ, மனமோ சம்பந்தமில்லாதது. வெறும் வெத்து வார்த்தை. உதடுகள் மட்டுமே உறவாடும் ரகம் .நான் சொல்லும் ‘ச கோத்ரர்கள்’ ஒரு படி அதிகம், மேலே. ஏனென்றால், நாம் ஒரே ரிஷி மூலம் கொண்டவர்கள். ஹரித ரிஷி வம்சாவளி…ஒரே கோத்திரக்காரர்களான நமக்குள் பிணைப்பு, இணைப்பு அதிகம்.
ஹரித ரிஷி வேதகால மனிதர். மஹாபண்டிதர் ஞானி. நீதி, நேர்மையாளர். ஸ்ம்ரிதி எனப்படும் சட்டம் ஒழுங்குகளை அளித்தவர். அவர் சாதாரணர் அல்ல. ஒரு ராஜா. வேதகாலத்தில் ரிஷிகள் ராஜாவாகவும் ராஜாக்கள் ரிஷியாகவும் இருந்ததுண்டு. ஹரிதர் பிராமண குல சூர்ய வம்ச ராஜரிஷி .ஹரித ரிஷி ஆங்கிரஸ ரிஷி வம்சத்தவர், அத்ரி மஹரிஷி உறவு கொண்டவர் என்றும் அறிகிறேன்.
நான் அபி வாதயே சொல்லும்போது என்னை அடையாளம் காட்ட மூன்று ரிஷிகளை சொல்வேனே அவர்கள் ஹரித கோத்ர ரிஷிகள். ”ஆங்கிரஸர் , அம்பரீஷர், யௌவனாஸ்வர்’. நமது முன்னோடிகள்.
ஹரிதர் க்ஷத்ரியராக பிறந்தவர் என்றாலும் இடை விடாத தவத்தால் ப்ரம்ம ரிஷியானவர். அப்படித்தானே விஸ்வாமித்ரரும் ப்ரம்மரிஷியானவர். ஹரிதர் வம்சத்தவர் பிராம்மணர்கள் ஆனது இப்படி தான்.
ஹரிதர் அளித்த ஸ்ம்ரிதியில் பிராமணர்களின் கடமை, வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம், சடங்குகள், நித்யானுஷ்டானம், கல்யாண விதிகள் எல்லாம் இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கப் படாதவை. பெயரளவில் நான் ஹரித ரிஷி கோத்ரம், அவர் வம்சாவழி என்று பெருமையாக ஒரு வினாடி சொல்லிக்கொள்ள மட்டுமே முடியும் நிலை.
’வேதா , வேதம் என்ற மாமிகளை பார்த்தது மட்டுமே நான் அறிந்த வேத ஞானம். வேதங்களை எல்லாம் முழுதும் அன்றும் இன்றும் என்றும் அறியாமை உள்ளது. ரிக் வேத சம்ப்ரதாயம் ஆங்கிரஸ ரிஷி வகையறா.
”ஹரித” என்றால் பச்சை என்று அர்த்தம். வளமையை சுபிக்ஷத்தை குறிப்பிடுவது.
ஹரிதரைப் பற்றி விஷ்ணு புராணம், மத்ஸ்ய புராணம், வாயு புராணம் ஆங்காங்கே சொல்கிறது. ரொம்ப ஆசாரமான ப்ரம்ம ரிஷி, தர்ம சாஸ்த்ர நிபுணர், குரு. இன்று ஐயர்களில் அநேகர் ஹரித கோத்திரக்
காரர்கள் என்றாலும் வைஷ்ணவர்களும் இதில் சேர்த்தி. மொழி தெலுங்கோ, தமிழோ, மராத்த்தியோ, கன்னடமோ, அதுஅவரவர் வாழும் இடத்தைப் பொறுத்தது. அக்னி, சூர்யன்,விஷ்ணு உபாசகர்கள் பலர் இதில் உண்டு.
ஹரித கோத்ர ரிஷிகள் மூவர் பெயர் ஸம்ஸ்க்ரிதத்தில் आङ्गिरस–अम्बरीष–यौवनाश्व ரிஷிகள்.
ஆங்கிரஸ ரிஷி வேத சாஸ்த்ர நிபுணர்.சப்த ரிஷிகளில் ஒருவர்.பிரஜாபதி. ப்ரம்மாவின் மானஸ புத்ரர் . ரிக்வேத மந்த்ர ரிஷி. தக்ஷன் பெண் ஸ்ரத்தா அவர் மனைவி. ஆங்கிரஸ ரிஷி, தேவ குரு பிரஹஸ்பதிக்கு அப்பா.
அம்பரீஷ ரிஷி ஒரு சக்ரவர்த்தி, ராஜ ரிஷி. ஏகாதசி விரதம் தீவிரமாக அனுஷ்டிப்பவர். ஏகாதசி கதாநாயகர். துர்வாசருக்கு பாடம் கற்பித்த விஷயம் தெரியுமல்லவா? சுருக்கமாக சொல்கிறேன்.
ஒரு ஏகாதசி அன்று விரதமிருந்த அம்பரீஷ மஹாராஜா, மறுநாள் துவாதசி அன்று குறித்த நேரத்தில் பாரணை பண்ணும் நேரம் துர்வாச ரிஷி வருகிறார். ”அம்பரீஷா, நான் கங்கையில் ஸ்னானம் பண்ணிவிட்டு வருகிறேன். பாரணை போஜனம் சேர்ந்து முடிப்போம்”என்று புறப்பட்ட துர்வாசம் வெகுநேரம் திரும்ப வில்லை. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் அந்த விரதம் முடித்து பாரணை செய்தால் மட்டுமே பலன். நேரம் முடியப்போகிறது. என்ன செய்வது? துர்வாசரை விட்டு விட்டு சாப்பிட்டால் அதிதியை அவமதித்த பாபம். சாப்பிடாமல் இருந்தால் ஏகாதசி விரத விதியை மீறின குற்றம்.ஒரே வழி ஒரு உத்ரணி நீரை மட்டும் நாராயணா என்று சொல்லி பருகுவோம். நிர்ஜல ஏகாதசியாக நீர்துளியும் அருந்தாமல் ஏகாதசி இருந்ததை பூர்த்தி செய்ய ஒரு உத்ரணி நீரோடு பாரணையை சம்பிரதாயமாக முடிப்போம். பிறகு ரிஷி துர்வாசர் வந்தவுடன் போஜனம் பண்ணுவோம்” என்று அம்பரீஷர் முடிவு செய்துவிட்டார்.
வெகுநேரம் சென்றபிறகு துர்வாசர் வந்தார். ஏற்கனவே கோபக்கார ரிஷி. நடந்ததைக் கேட்டதும் தாவினார் கோபத்தில். தனது முடியிலிருந்து க்ரித்யா என்ற ராக்ஷஸனை உருவாக்கி ” எனக்காக காத்திருக்காமல் தான் முதலில் த்வாதஸி பாரணை செய்து, என்னை அவமதித்த அம்பரீஷனைக் கொல்” என கட்டளை யிட்டார். கண்ணை மூடிக்கொண்டு வருவதை எதிர்கொள்ள அம்பரீஷ சக்ரவர்த்தி கைகூப்பி ” நாராயணா நாராயணா” என தியானம் பண்ணினார்.
மஹா விஷ்ணுவின் சுதர்சன சக்ரம் வந்துவிட்டது. அரை நொடியில் க்ரித்யா என்கிற ராக்ஷஸனை அழித்தது. அவனை ஏவிய துர்வாசரை துரத்தியது. ஒரே ஓட்டமாக ஒலிம்பிக் ஒட்டப்பந்தய வீரன் போல் துர்வாசர் , மண்ணுலகம், விண்ணுலகம், ப்ரம்ம லோகம், கைலாசம் என்று ஓடினார். சகல தெய்வங்களும் ”ரிஷியே , எங்களால் உம்மைக் காப்பாற்ற முடியாது. மஹா விஷ்ணுவையே அணுகவும். அவர் தான் சுதர்சன சக்ரத்தை அடக்கமுடிந்தவர்”. துர்வாசர் விஷ்ணு காலடியில் போய் விழுந்தார். ” துர்வாசரே , எழுந்திரும், நான் பக்தர் களின் அடிமை, என்னைவிட அவர்களே சக்திமான்கள். நீர் திரும்ப அம்பரீஷனையே நாடும். அவன் மட்டுமே சுதர்ஸன சக்ரத்தை நிறுத்தி உம்மை மன்னிக்க முடியும். அவனுக்காக புறப்பட்டது அல்லவா அது? ஓடுங்கள் ” என்றார் விஷ்ணு. ”அம்பரீஷா என்னை மன்னித்து காப்பாற்று ”என்று அம்பரீஷனை கட்டிக்கொண்டார் துர்வாசர். ”நாராயணா நீ தான் சுதர்சனத்தை மீண்டும் பெற்றுக்கொண்டு எங்களை உய்விக்க வேண்டும்” என்று அம்பரீஷர் தியானம் பண்ணி சுதர்சனம் திரும்பி இந்த கதையும் முடிகிறது. பக்தி தபஸை விட சக்தி வாய்ந்தது.
அம்பரீஷர் சிறந்த விஷ்ணு பக்தர். இக்ஷ்வாகு வம்சம். ராமர் அவதரித்த சூர்ய வம்சம். ரவிகுலம் என்போமே அது. அம்பரீஷர் அப்பா; நாபாக ராஜா. வைவஸ்வத மனு பரம்பரை. அயோத்யாவை ஆண்டவர். சதா அவர்
மனம் விஷ்ணுவை சிந்திக்கும், வார்த்தைகள் விஷ்ணு நாமத்தையே சொல்லும். கைகள் ஆலய கைங் கர்யம் செய்பவை. காதுகள் தெய்வீக விஷயங்களையே கேட்டு ஆனந்திப்பவை. கண்கள் பகவானையே தேடுபவை. கால்கள் தானாகவே கோயில்களை நாடுபவை.
யௌவனாஸ்வர ரிஷி இக்ஷ்வாகு பரம்பரையில் சூர்ய வம்ச ராஜ ரிஷி. குழந்தியில்லாத ராஜா, வேட்டைக்கு போனபோது தாகம் ஏற்பட்டு ப்ருகு முனிவர் ஆஸ்ரமத்தில் வைத்திருந்த மந்திர நீரை குடித்துவிட்டார்.
பிருகு இது தெரிந்ததும் ஓடிவந்தார்.
‘யொவனாஸ்வா, என்ன காரியம் பண்ணிவிட்டாய், உனக்கு புத்ர பாக்யம் ஏற்பட புத்ர காமேஷ்டி யாகம் செய்த மந்திர ஜலம் உன் மனைவி பருகி அவளுக்கு பிறக்க வேண்டிய குழந்தையை நீ அல்லவோ இனி பெற வேண்டும். உன் வயிற்றிலிருந்து ஒரு மகன் பிறக்கபோவதை யாரும் தடுக்க முடியாது ” என்று பிருகு சொல்லிவிட்டார். சீசரியன் ஆபரேஷன் அந்த காலத்திலேயே ஆண் வயிற்றில் சிசு பிறந்து, ஆபரேஷன்….
ஆரம்பித்திருக்கிறது. யௌவனாஸ்வர் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தார்கள். இப்படி தான் ரிஷி மாந்தாதா பிறந்தார்.குழந்தையின் வாயில் தேவேந்திரன் ஒரு விரலை வைத்து அதிலிருந்து அம்ரிதம் சொட்டி குழந்தை ஜீவித்தது. இவன் மாந்தாதா,” என்னிடமிருந்து உறிஞ்சுவான்” என்று தேவேந்திரன் சொன்னதால் அந்த பெயர்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




I am also Haritha Gotherem from Native place of Mannargudi