
RAMANA MAHARSHI – J K SIVAN
ரமண மஹரிஷி – நங்கநல்லூர் J K SIVAN
சாந்தம்மா சொல்லும் விஷயம்:
திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக பல வெள்ளைக்காரர்களும் வர ஆரம்பித்தார்கள். ரமணர் மஹிமை, பெருமை உலகமெல்லாம் மெதுவாக பரவி வந்த காலம்.
ஒருநாள் குதிரை வண்டியில் ஒரு வெள்ளைக்காரர் வந்தார். ஆஸ்ரமத்தில் மஹரிஷியைப் பார்த்துவிட்டு ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி அவரிடம் காட்டினார். அதைப் பார்த்த பகவான் ஒன்றுமே பேசவில்லை. எதிரே உட்கார்ந்திருந்த அந்த வெள்ளைக்காரரை உற்றுப் பார்த்தார். வெள்ளைக்காரரும் மஹரிஷியின் கண்களை சந்தித்தார். பகவான் கண்களை மூடியபோது வெள்ளைக்காரரும் கண்களை மூடிக்கொண்டார். நேரம் இப்படியே ஓடியது. எங்கும் அமைதி. அசைவில்லை. மத்யானம் சாப்பாடு நேரம் வந்தது. மகரிஷி கண்ணை திறக்கவே இல்லை. மஹரிஷியின் பக்தர்களில் ஒருவர் மாதவ சாமி , பகவானின் கமண்டலத்தை கையில் எடுத்துக் கொண்டு காத்திருந்தார். ஹாலில் இருந்து சாப்பாட்டுக் கூடத்துக்கு கையைப் பிடித்து மகரிஷியை சாப்பிட அழைத்துச் செல்பவர். மஹரிஷி கற்சிலையாக உட்கார்ந்திருந்தார். எதிரே வெள்ளைக்காரரும் அப்படியே. யாரும் அவரை தொடவோ அருகில் சென்று நிஷ்டையை கலைக்கவோ மாட்டார்கள். பயம் பக்தி. மகானின் முகம் சுடர் விட்டது.
சின்னசாமி கொஞ்சம் உரத்த குரலில் எங்கோ பேசினார். அந்த சப்தத்தில் மகரிஷி நிஷ்டை கலையலாம் என்று எதிர் பார்ப்பு. சாப்பாட்டுக் கூடத்தில் பாத்திரங்களின் ஓசை பெரிதாக கேட்டது. அதுவும் அவர் நிஷ்டையை கலைக்கவில்லை. கடிகாரம் 12 மணி காட்டியது. பகவான் கண்ணை திறந்தார். கண்கள் ஒளி வீசின. மாதவ சாமி கமண்டலத்தை கையில் எடுத்துக்கொண்டு அருகில் வந்தார். வெள்ளைக்காரர் கண்ணை திறந்தார். மஹரிஷியை நமஸ்கரித்து விட்டு எழுந்து குதிரை வண்டியில் ஏறி வந்த வழியே சென்றுவிட்டார். அதற்கப்புறம் அவரை யாரும் பார்க்க வில்லை. எல்லோருக்கும் ஆச்சர்யம். ‘ அட இவ்வளவு சீக்கிரம் அந்த வெள்ளைக்காரருக்கு பகவானின் மௌன உபதேசம், அருள் கிடைத்து விட்டதா?
ஒரு தவறை மைசூர் மஹாராஜா ஆஸ்ரமத்துக்கு வந்தார். மஹரிஷியோடு தனியாக பேச அனுமதி கேட்டார். ஒப்புதல் கிடைத்தது. மகரிஷி குளிக்கப் போகும் சமயம் அவரை சந்திக்க அனுமதி கிடைத்தது. தட்டுகள் தட்டுகளாக அநேக வித பக்ஷணங்களை பரிசுப்பொருள்களை மஹாராஜா கொண்டு வந்து பகவான் காலடியில் வைத்தார். பகவான் பேசவில்லை. அவற்றை பார்க்கவோ தொடவோ இல்லை. பத்து நிமிஷ நேரம் போல மஹாராஜா நின்று கொண்டே மகரிஷியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினார். மஹாராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. மஹரிஷியின் பாதங்களில் மகாராஜாவின் கண்ணீர்.
”என்னை ஒரு சிம்மாசனத்தின் மேல் உட்கார்த்தி கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள் சுவாமி. நான் மஹாராஜா குடும்பத்தில் பிறந்த பாவத்திற்காக.. உங்கள் பாதத்தின் அருகில் உட்காரும் பாக்யம் எனக்கு அதனால் போய் விட்டது பிரபு. உங்களுக்கு பாத கைங்கர்யம் பண்ணும் அதிர்ஷ்டத்தை இழந்து விட்டேன். இன்னொரு முறை வரமுடியாது. இந்த சில நிமிஷங்கள் தான் எனக்கு கிடைத்தவை. உங்கள் அருளை வேண்டுகிறேன்”. மஹாராஜா கதறினார்.
ஆஸ்ரமத்தில் ரமணரின் செல்லப்பசு லக்ஷ்மி. எப்போது தோன்றுகிறதோ அப்போது ஆசிரமத்திற்குள் மகரிஷி அருகே வரும். வந்து படுக்கும், நிற்கும், உட்காரும். ஒருசமயம் அப்படி வந்தது. நிறை மாச கர்ப்பம். அதை பராமரிப்பவர் தினமும் ஆஸ்ரமத்துக்கு அழைத்துக் கொண்டு வருவார். சாயந்திரம் திரும்பி போய்விடும்.
சாப்பாடு நேரம். மகரிஷி எதிரே இருந்த செய்தித் தாள்களை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையில் இருந்த பேப்பரை லக்ஷ்மி நக்கியது. பகவான் அதைப் பார்த்து விட்டு ”கொஞ்சம் இரு லக்ஷ்மி” என்று சொன்னார். லக்ஷ்மி பேப்பரை நக்கிக் கொண்டே இருந்தது. பேப்பரை கீழே வைத்தார். அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டார்.மஹரிஷி தலையும் லக்ஷ்மி தலையும் ஒன்று சேர்ந்தது. இருவரும் அப்படியே வெகு நேரம் சந்தோஷமாக இணைந்திருந்தார்கள். அற்புதமான இந்த காட்சியை அநேக பக்தர்கள் கண்டு நாங்கள் எல்லாம் பார்த்து ஆனந்தித்தோம்” என்கிறாள் சாந்தம்மா.சாந்தம்மா பக்கம் திரும்பிய மகரிஷி அவளிடம் :”சாந்தம்மா, உனக்கு லக்ஷ்மி என்ன பண்ணுகிறாள் என்று தெரியுமா?””சொல்லுங்கோ குருநாதா””லக்ஷ்மி சமாதி நிலையில் இருக்கிறாள்”
லக்ஷ்மியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. கண்கள் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து மகரிஷி பசுவிடம் கேட்டார். ”லக்ஷ்மி இப்போ எப்படி இருக்கு?”
லக்ஷ்மி தலையை மகிழ்ச்சியோடு ஆட்டியது. அவரைப்பார்த்து அம்மா என்று ஆசையாக மெல்லிய குரலில் கூவியது. பின்பக்கமாகவே நகர்ந்தது. வாலை மகரிஷி பக்கம் காட்ட விரும்பவில்லை. அப்படியே ஹாலிலிருந்து வாசலுக்கு சென்று விட்டது. அன்றிலிருந்து நாலாவது நாள் லக்ஷ்மி ப்ரசவித்தது. லக்ஷ்மி யை பராமரித்தவர் லட்சுமியையும் அதன் மூன்று கன்றுகளையும் ஆஸ்ரமத்துக்கு அழைத்து வந்தார். லக்ஷ்மி தனது மூன்று கன்றுகளோடு ஆஸ்ரமத்தில் ஹாலுக்குள் வந்தது. மகரிஷி சோபா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு விட்டது.
”இத்தனை நாளா, தினமும் சாயந்திரம் லக்ஷ்மி ஆஸ்ரமத்தில் இருந்து தள்ளி இருந்த அந்த பராமரிக்கும் மனிதரின் வீட்டுக்கு பிரசவத்துக்காக செல்ல வேண்டி இருந்தது. அதனால் கண்ணீர். இனிமேல் எங்கும் போகவேண்டாம். அவளுடைய மூன்று கன்றுகளோடு இங்கேயே இருக்கபோபோகிறாள் என்ற ஆனந்தம். இது தான் அவள் வீடு என்று லக்ஷ்மிக்கு நன்றாக தெரியும். நாம் அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். பாருங்கோ எவ்வளவு சந்தோஷமா,உரிமையோடு தன்னம்பிக்கையோடு அவள் உட்கார்ந்திருக்கிறாள்”என்றார் மகரிஷி.
ஆஸ்ரமம் துவங்கிய ஆரம்ப காலத்தில் மகரிஷி மலைமேல் ஏறும்போது ஒரு ஹரிஜன் மஹரிஷியோடு கிணற்றங்கரை வரை சற்று தூரத்தில் கூடவே வருவார். ஒருநாள் மஹரிஷி அவனைக் கூப்பிட்டு ”இனிமேல் நீ எப்போதும் சிவ சிவா”என்று சொல்லிக்கொண்டே இரு என்று உபதேசித்தார். கேட்காமலேயே, ஒருவனைக் கூப்பிட்டு அவனுக்கு மகரிஷி உபதேசம் செய்தது எவ்வளவு ஆச்சர்யம். அந்த மனிதன் புண்யாத்மா. இல்லாவிட்டால் இந்த பாக்கியம் யாருக்கு தானாகவே கிட்டும். அதற்கப்புறம் அந்த மனிதனைக் காணோம்.” என்று ஆச்சர்யமாக சொல்கிறாள் சாந்தம்மா .
