
பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்- நங்கநல்லூர் J K SIVAN
பல முறை காரில் கோயம்பத்தூர் சென்று இருக்கிறேன். நங்கநல்லூரிலிருந்து புறப்பட்டால் திரிசூலம் விமான நிலையம் வரை ஜான்வாச ஊர்வலம் தான். வேகமாக போகவே முடியாது. அப்புறம் தாம்பரம் வரை நெரிசல். பிறகு வேகமாக போகும் மஹேந்திரா சிட்டி நோக்கி போகும் உத்யோகஸ்தர்கள் கார்கள். கிட்டத்தட்ட இப்படி சென்று அதிகம் நெரிசல் இல்லாத நால்வழி சாலையில் செங்கல்பட்டு மதுராந்தகம் திருச்சி சாலையில் பறக்கலாம். உளுந்தூர்பேட்டை தாண்டியது சேலம் வழியாக ஈரோடு பவானி திருப்பூர் கோயம்பத்தூர் செல்வேன். அப்படியே சொல்லிக்கொடுத்த வார்த்தை, கட்டிக்கொடுத்த சோற்று மூட்டை போல திரும்புவது வழக்கம். சென்ற முறை சேலம் வழியாக வரும்போது மாலை வேளை என்பதால் ஏதாவது ஒரு கோயில் போக ஆசை. பவானிக்கு செல்வோம் என்று ட்ரைவர் சொன்னார். ஆஹா அப்படியே என்று பல பட்டிகள் பாளையங்கள், புத்தூர்கள், எல்லாம் கடந்து பவானி ஆற்றை பார்த்தவுடன் நமஸ்கரித்து விட்டு கோயிலுக்கு வண்டியை விட சொன்னேன்.
பவானியில் அழகான திரிவேணி சங்கமம் ஒன்று இருக்கிறது. மூன்று நதிகள் ஒன்று சேரும் ஸ்தலம். காவேரி, பவானி , அமுதா நதிகள் சங்கமிக்கும் இடம் சிவனுக்கு பிடிக்காமல் இருக்குமா. அப்படியே உட்கார்ந்து விட்டார். நாலு ஏக்கர் பரப்பளவு நிலம். சிவாலயத்தில் மூலவர் பெயர் சங்கமேஸ்வரர். ஆற்றங்கரையில் விஸ்தாரமான மரங்கள் அடர்ந்த குளிர்ந்த சோலைவனம் போல் இருந்தது. வடக்கே பிரயாகை கங்கா யமுனா சரஸ்வதி சங்கமிப்பது போல் மேலே சொன்ன மூன்று நதி சங்கமம் ஆகியல் இந்த ஸ்தலம் தக்ஷிண ப்ரயாகை எனப்படுகிறது. வடக்கே சரஸ்வதி காணப்படுவதில்லை. இங்கே அமுதா!!.
இம்மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. சிவன் சங்கம ஈஸ்வரன். அம்பாள் வேதநாயகி. இலந்தை மரம் ஸ்தல விருக்ஷம். இந்த ஊர் திருநணா பவானி எனப்படுகிறது. தேவார பாடல் பெற்ற ஸ்தலம். ஐந்து நிலை கோபுரம் 7 கலசங்கள்.
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு முன்னால் , இந்த இடம் முனிவர்கள் ரிஷிகளுக்கு தெரிந்திருந்ததால் பராசரர், ப்ரம்மா விஷ்ணு குபேரன் எல்லோரோடும் இங்கே வந்து தவம் பண்ணி இருக்கிறார்கள். குபேரன் ஏன் வந்தான் என்றால் எப்படியோ ஒரு தடவை நம்மைப் போல் அவனும் செல்வம் இழந்து ஆஹா எப்படி மீண்டும் செல்வம் பெறுவது என்று யோசித்து ஒரே வழி இந்த சுயம்பு லிங்கமான சங்கமேஸ்வரனைப் பிடித்துக் கொள்வது தான் என தீர்மானித்து இங்கே வந்து மீண்டும் செல்வம் அனைத்தையும் பெற்றான். நான் போனபோது என்னிடம் எதுவுமில்லை இழப்பதற்கு. ஆகவே பெறவும் எதுவும் தேவைப்படவில்லை.
அமுத நதி பற்றி ஒன்றும் தெரியாததால் புராண பக்கங்களை தேடின பொது தேவர்கள் பாற்கடல் கடைந்து பெற்ற அமிர்தத்தை குடத்தில் நிரப்பி எடுத்து சென்றபோது வழியில் சில துளி அமிர்தம் கீழே இங்கே விழுந்திருக்கிறது. அது ஆறாக பெருகி அமுதநதி ஆகியது என்கிறது புராணம். துளி துளியாக எல்லோரும் குடித்து ஆறு காலியாகி இருக்கும். பேர் மட்டும் இருக்கிறது. அதை குடிக்க முடியாதே. பூமிக்கடியில் மறைந்தோடுவதால் அமுதா நதி ஒரு “அந்தர்வாஹினி”படிக்கட்டு, படித்துறை அழகாக இருக்கிறது. நிறைய ஸ்நானம் செய்வதைப் பார்த்தேன். நிறைய பேர் பித்ருக்கடன் இங்கே செலுத்துகிறார்கள். ஞான சம்பந்தர் பார்த்து விட்டு எழுதிய தேவாரம் ஒன்று;
“பந்தார் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டேற் தேற
அந்தார் அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண்சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளி பொளிரத் தேமாக்கனி சிந்தும் திருநணாவே.”
இயற்கை வளம் சூழ்ந்த, தேனும் பழங்களும் நிறைந்த புனித நிலம் திருநணா (பவானி) எனப் புகழப்படுகிறது.
உயரமான ராஜகோபுரம் தூரத்திலேயே தெரிந்தது. சோழர்கால சிற்பங்கள் தூண்களில் தெரிகிறது. யாளியின் கம்பீர உருவம் சில தூண்களில் அழகு சேர்த்தது. சோழர் கால பெரிய கோவில்களில் தூண்களில் ஆஜானுபாகுவாக குதிரை ஒன்று முன் கால்கள் ரெண்டையும் தூக்கிக்கொண்டு கோபமாக பார்த்த்டுக்கொண்டு வாயில் கடிவாளத்தோடு நிற்கும், அதன் முதுகில் கையில் வாள் , அல்லது ஈட்டியோடு ஒரு வீரன் அமர்ந்திருப்பான். இது மாதிரி குதிரை வீரன் தூண்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கிடைத்த இடத்தில் எல்லாம் தூண்களில் பலவித அசைவுகளோடும் நடன பெண்மணிகள். ராமர், ஆஞ்சநேயர், முனிவர்கள், சிவலிங்கம் மேல் பசு மரத்தடியில் பால் சொறிவது, பக்கத்தில் கன்றுக்குட்டி.. அற்புதமாக இருக்கும் பார்ப்பதற்கு. சங்கமேஸ்வரர் கோவில் தூண்களில் இதெல்லாம் மீண்டும் பார்த்தேன். ஆயிரம் வருஷங்களுக்கு மேலாக பாண்டியர், நாயக்கர், மைசூர் அரசர்கள் பராமரித்த கோவில். கல்வெட்டுகள் நில தானம், ஆடு தானம், விளக்கு தானம், பூஜைக்கு ஏற்பாடு திருவிழாக்கள் பற்றி எல்லாம் நமக்கு புரியாத தமிழில் சொல்கிறது.
இங்கே உள்ள காயத்ரி லிங்கம் சிறப்பு வழிபாடு பெறுகிறது. ராகு கேது பித்ரு தோஷம் திருமண தடை, செல்வம் இடையூறுகள் எல்லாம் நீங்கும் என்று பக்தர்கள் வருகிறார்கள்.
இந்த ஆலயத்தில் ஒரு விசேஷ விக்ரஹம் ஜ்வரஹரேஸ்வரர். மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறார். திருஞானசம்பந்தர் இங்கே வந்தபோது அவருடைய அடியார்களுக்கு நல்ல ஜுரம். சம்பந்தர் இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றனர் என கூறப்படுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.எனக்குப் பிடித்த ஒரே மந்த்ரம் எப்போதும் ॐ नमः शिवाय ஓம் நமசிவாய மட்டும் தான்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


