SANISHWAR J K SIVAN

சனைஸ்சரன் – நங்கநல்லூர் J K SIVAN

இன்று சனிக்கிழமை . சனீஸ்வர பகவான் நினைவு வருவது ஞாயமே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா?என்றால் பயம் தான். ஏன்?. அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம். சனீஸ்வரன் பெயர் உண்மையில் சனைச்சரன் மெதுவாக நடப்பவன். மற்ற கிரஹங்கள் ஒரு ராசியில் இருக்கும் காலத்தை விட சனைஸ்சரன் வந்து தங்கி கிளம்பி போக ரெண்டரை வருஷம் எடுத்துக் கொள்பவன். ஒவ்வொருவருக்கும் மூன்று முறை இப்படி ரெண்டரை வருஷங்கள் வரும் என்பதால் அவனுக்கு ஏழரை நாட்டான் என்று பெயர் பெயர். ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர் வந்து விட்டால், ”சனி வந்து தொலைந்து விட்டது. சரியான ஏழரை நாட்டான்” என்று முணுமுணுக்கிறோம் அல்லது நெருங்கியவர்களிடம் சொல்கிறோம் அல்லது மனதிலேயே திட்டுகிறோம். சனைஸ்சரன் வந்து போவதை சனிப்பெயர்ச்சி என்கிறோம். அவனைத் திருப்தி படுத்தினால் நம்மை ரொம்பப்படுத்த மாட்டான் என ஒரு நம்பிக்கை. இது ஒரு வித ஆன்மீக லஞ்சம். அவன் பார்வையால் காரியங்கள் சரியாக நடக்காது, மனக்கிலேசம், நிம்மதியின்மை, வியாதி, போன்ற பல துன்பங்கள் நேரும் என்று ஒரு பயம். சனி தோஷ பரிஹார ஸ்தலங்கள் என்று பல கோவில்கள் உள்ளன.எல்லா கோவில்களும் சைவர்கள் விஜயம் செய்பவை. சிவன் மூல விக்ரஹம். சனி நம்மை பிடிப்பதற்குள் நாம் அவனைப் பிடித்து எப்படியாவது அவன் நல்லது செய்ய வேண்டிக் கொள்ளத்தான் பரிஹார ஸ்தலங்களுக்கு செல்கிறோம். சனீஸ்வரன் நவக்கிரஹங்களில் ஒருவன். நல்லது செய்பவன் என்பதை மறந்துவிடுகிறோம். சனிபெயர்ச்சி அன்று எல்லா கோவில்களிலும் அதிக கூட்டம் அம்முகிறது. நமது தேசத்தில் சனி பகவானுக்கு கோவில்கள் உள்ளன.

சனீஸ்வரன் நியாயவாதி. நேர்மையானவன். நல்லவன். நல்லதே செய்பவன். வீட்டில் அவன் படத்தை, விக்ரஹத்தை வைத்து வணங்குபவர்களை இன்றுவரை பார்த்ததில்லை.

சூர்ய பகவானுக்கு ரெண்டு பிள்ளைகள் பெரியவன் யமன். சின்னவன் சனைஸ்சரன். பெரியவன் ஆயுளை முடிப்பவன். சின்னவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பவன். எல்லா கோவில்களிலும் நவகிரஹ சந்நிதியில் சனி பகவான் இருந்தாலும் சில கோவில்களில் பிரதான தெய்வமாக இருக்கிறார். சனிபகவான் சந்நிதியில் யாரும் நேரே அவரை நின்று பார்ப்ப தில்லை. நம் பார்வை தான் அவர் மேல் படவேண்டும். அவர் பார்வை படவேண்டாம் என்பது ஐதீகம்.

சனீஸ்வரன் பிறந்த நாள் புராட்டாசி சனிக்கிழமை ரோஹிணி நக்ஷத்ரம். காஸ்யப கோத்ரம். அம்மா சாயா தேவி.அப்பா சூர்யன். காக்கை வாஹனம். கருப்பு நிறம். ரொம்ப நீதி நியாயவான்.

வடக்கே மஹாராஷ்டிராவில் சனி சிங்கணாப்பூர் என்ற இடத்தில் ரொம்ப பெரிய கோவில். அஹ்மத் நகரில் தேவாஸா எங்கிற கிராமத்தில் 5 1/2 அடி உயர கருப்பு கல் ரூபத்தில் அருள் பாலிக்கிறார். மேலே கூரை இல்லாத கோவில். உலகப்ரஸித்த சனி பகவான் கோவில். ஏக்கர் கணக்கான பரப்பளவு கொண்ட கோவில். சென்று பார்த்து அதிசயித்தேன்.

பம்பாயில் தியோனார் அருகே ஒரு சனீஸ்வரன் கோவில். 7 அடி உயர சனி பகவான் கருப்பாக நிற்கிறார். சனிக்கிழமைகளில் பூஜை முடிந்து அர்ச்சகருக்கு சாமி வந்து சனீஸ்வரன் அருள் வாக்கு சொல்கிறாராம்.

மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் தித்வாலா எனும் ஊரிலும் ஒரு சனி பகவான் இருக்கிறார். புராதன கோவில். இன்னும் பார்க்கவில்லை.

தெற்கே தமிழ்நாட்டின் அருகே புதுச்சேரி காரைக்கால் பக்கம் திருநள்ளாறு க்ஷேத்ரத்தில் அற்புதமான தர்ப்பாரண் யேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் தனி சந்நிதியோடு இருக்கிறார். தரிசிக்காத ஹிந்துக்களே இல்லை எனலாம். அங்கே நள தீர்த்தத்தில் நீராடியோ அல்லது ஜலத்தை ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டூ சனீஸ்வர பகவானை வணங்கினால், ஏழரை சனி போன்ற பிரச்னைகள் தீரும். திருஞான சம்மந்தர், சுந்தரர், அப்பர் என மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம், காவிரி தென்கரையில் 52-வது சிவ ஸ்தலம்.

டில்லியில் சனி தாம் என்று சந்தர்பூர் சாலையில் ஒரு சனீஸ்வரன் கோவில் இருக்கிறது. நான் இன்னும் சென்று தரிசிக்கவில்லை. பதேபூர் பெரி அருகே அசோலோ பக்கமாம். சக்தி பீடமாக சனீஸ்வர ஆலயம் திகழ்கிறது. உலகத்திலேயே ரொம்ப பெரிய சனி பகவான் இங்கே தான். பக்தர்களே சனிபகவானை தொட்டு பூஜை பண்ணுகிறார்கள். கடுகு எண்ணெய் அபிஷேகம். நம் ஊரில் நல்லெண்ணெய் தான் பிரதானம்.
மத்திய பிரதேசத்தில் சனி சாரா கோவில் ஒன்று சனி பர்வதம் என்ற பகுதியில் இருக்கிறது. குவாலியரிலிருந்து 25 கி.மீ. ஹனுமான் லங்கையை வாலால் எரித்த பின் சனி பகவான் அவரை சந்தித்த இடம். விக்ரமாதித்யன் கட்டிய கோயில் என்கிறார்கள்.
இந்தூரில் ஒரு சனி பகவான் இருக்கிறார். மராத்தி ராணி ஹோல்கர் வம்சத்தவள் அஹல்யா பாய் கட்டிய கோவில். அதற்கு முன்னாலே யும் புராண காலத்து கோவில் தான். கோபால் தாஸ் திவாரி என்ற கண் தெரியாதவர் கனவில் சனி பகவான் வந்து மலையில் ஒரு இடத்தில் தோண்டி எடுத்த கோவில் என்று சொல்கிறார்கள்.

”எனக்கு கண் தெரியாதே நான் எப்படி உன்னை கண்டுபிடிப்பேன்?”
“கண்ணை திறந்து பார் தெரியும்” என்றான் சனீஸ்வரன்.
திவாரிக்கு கண் திறந்து மலையைத் தோண்டி சனீஸ்வரன் சிலை அகப்பட்டது என்று கதை செல்கிறது. சனைஸ்சரன் சனீஸ்வரன் ஆகி நவகிரஹங்களில் சனி ஒருவருக்கே ஈஸ்வரன் பட்டம் தானாகவே கிடைத்துவிட்டது.

ஆந்திர தேசத்தில் தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் எர்டானுர் என்ற கிராமத்தில் ஒரு சனீஸ்வரன் கோவில் இல்லிறது. சனிபகவான் 20 அடி உயரம். அண்ணாந்து பார்த்து வேண்டிக்கொள்ள வசதி. யார் தலையும் மறைக்காது.
ஆந்திராவிலேயே இன்னொரு இடத்தில் மண்டபள்ளி என்கிற ஊரில் மாண்டேஸ்வர சுவாமி கோயில் சனி பகவான் சந்நிதி ரொம்ப விசேஷம்..
கர்நாடகாவில் உடுப்பிக்கு பக்கத்திலேயே பன்னஞ்சே என்ற ஊரில் ஒரு சனி க்ஷேத்திரம் உள்ளது. 23 அடி உயர சனி பகவான் பக்தர்களை ரக்ஷிக்கிறார்.
நம் தமிழகத்தில் தேனீ பக்கத்தில் குச்சனுரில் உள்ள ஸ்வயம்பு சனீஸ்வரன் பிரபலமானவர். சனிப் பெயற்சியின் போது நிற்க இடம் தேடவேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் கோரி மெட்டுக்கு அருகே மொரட்டாண்டி என்ற கிராமம். அங்கே வெட்டவெளியில் 27 அடி உயரத்தில் சனி பகவான் நிற்கிறார். நான் பார்த்திருக்கிறேன். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ என நீளமான பெயர். பஞ்சலோக விக்ரஹம். பீடத்தையும் சேர்த்தால் 33 அடி . ரொம்ப பெரியவர். இங்கே அவர் வாஹனம் காக்கை இல்லை கழுகு. ஆகமம் அப்படி தான் சொல்கிறதாம். நான்கு கரங்கள். மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்.கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரத ஹஸ்தங்கள். நல்ல கூட்டம் எப்போதும் சனியை பொங்கு சனி மங்கு சனி என்று அழைப்பது வழக்கம். சனி தசையின் பொது கஷ்டங்கள் மேலே மேலே வந்தால் மங்குசனி. அதிர்ஷ்டங்கள் நிறைய அடித்து எதிர்பார்க்காத நன்மை,சுகம் கிடைத்தால் அந்த சனிதசை பொங்கு சனி. வாரியும் கொடுப்பான், வாரியும் விடுபவன் சனி.

பம்பாயிலிருந்து ஒருநாள் காலையில் முதலில் ஷீர்டி சென்றேன்.300 கிமீ. தூரத்தை ஆடி அசைந்து கார் தூக்கிக் கொண்டு சென்றது. பம்பாய் நகர எல்லையைக் கடந்து மஹாராஷ்ட்ர பிரதேச கிராமங்களுக்கு செல்லும் ஹைவே யில் சென்றபோது எலும்புகளின் பலத்தை சோதனை செய்யும் குட்டி குட்டி மலை போன்ற வேகத்தடைகள் (ஸ்பீட் பிரேக்கர்கள்) நிறைந்த சாலைகள்.

ஷீரடியில் சாயந்திரம் பாபாவுக்கு ஆரத்தி பார்த்து விட்டு சனி சிங்கணாப்பூர் சென்றேன். கிட்டத்தட்ட 73 கி.மீ. தூரத்தில் அஹ்மத் நகர் ஜில்லாவில் உள்ள க்ஷேத்ரம்.

வழியெல்லாம் சென்ற பாதையில் இருந்த மாதிரி ரோடு தான். எங்கும் புழுதி, சோம்பேறி மயமான அழுக்கு ஹிந்தி கிராமங்கள். தமிழகத்தில் சாலையின் இருமருங்கிலும் பச்சைப் பசேல் என்று இருக்குமே. ஏன் எங்கே வறண்ட பிரதேசமாக இருக்கிறது? இந்த ஊரில் சனீஸ்வரர் ஆலயம் தவிர வேறு ஒன்றுமில்லை என்று அறிந்தேன். ஆனால் அது ஒன்றே போதுமே. அவர் ப்ரத்யக்ஷமாக இன்றும் அங்கே இருக்கிறார். அவர் தரிசனம் பெற ஆயிரக்கணக்கானோர் இந்த பாதையில் தான் வருகிறார்கள்.

சனி சிங்கணாப்பூரில் சனீஸ்வரன் சிலை வடிவில், விக்ரஹ உருவத்தில் இல்லை. ஒரு பெரிய கரும் பாறைக் கல்லாக தரிசனம் அளிக்கிறார். எப்போதிலிருந்து சனீஸ்வரர் இங்கே வாசம் செயகிறார் என்ற கேள்விக்கு கலியுக ஆரம்பத்தில் சில ஆட்டிடையர்களின் கண்ணில் இந்த பாறை பட்டதால் என்று பதில். அப்படியென்றால் நிச்சயம் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு.

நல்லெண்ணெய் எங்கும் நிறைந்திருக்கிறது. அதுவே கூட இவ்வாலயத்தின் பிரசித்தம் போல் இருக்கிறது. சனீஸ்வரன் பாறையாக இங்கே தானாகவே எழும்பியிருப்பதால் இங்கே சனீஸ்வரர் ஸ்வயம்புவாக வழிபடப் படுகிறார். சனீஸ்வரர் உருவத்துக்கு அருகே ஒரு பெரிய திரிசூலம். தெற்கு பக்கம் ஒரு நந்தி.
முன்பெல்லாம் இங்கே ஸ்த்ரீகள் அனுமதிக்கப்படவில்லை. நான் சென்றபோது ஸ்த்ரீகள் தான் அதிகம் கண்ணில் பட்டார்கள்.
இங்கே இன்னொரு அதிசயம். எங்கும் சனீஸ்வரர் கண்காணிப்பதால் இந்தப்பக்கத்தில் எந்த வீட்டிற்கும் கடைகளுக்கும் வாசல் கதவே இல்லை. திருடர்கள் ஆசையோடு வந்தால் அவர்களிடம் பணமோ பொருளோ பிடிபடாது. சனீஸ்வரன் பிடித்துக் கொள்வார் என்கிற பயமே போதும்.

சனி சிங்கணாப்பூர் ஈஸ்வரனுக்கு மேலே கோபுரம் கூரை எதுவும் கிடையாது. வானமே கூரை. இதற்கு ஒரு கதை நிலவுகிறது.
கலிகால ஆரம்பத்தில் சில ஆட்டிடையர்கள் ஐந்தரை அடி உயர ஒரு கரும் பாறையை கண்டார்கள் அல்லவா. இந்த விசேஷ பாறையை பார்த்த அந்த ஆட்டிடையன் தனது கையில் இருந்த கம்பியோ கோலோ அதன் கூறிய முனையால் இந்த பாறையை சீண்ட, அதிலிருந்து ரத்தம் வழிந்தது. அவ்வளவு தான் மிரண்டு போன அந்த ஆட்டிடைய சிறுவன் ஓடிப்போய் ஊரில் மற்றவர்களிடம் இந்த அதிசயத்தைச் சொன்னான். அன்றிரவு அந்த ஆட்டிடையர்களில் பக்தி நிரம்பிய ஒருவனின் கனவில் சனீஸ்வரர் தோன்றி ”அடே, பயலே நான் சனீஸ்வரன், சூர்ய புத்ரன். என்னை எப்படி வழிபடவேண்டும் என்று உனக்கு சொல்கிறேன்” என்று விவரங்கள் சொன்னாராம்.

”சாமி உனக்கு நாங்க எங்கே கோவில் கட்டணும்?” என்று கேட்டான்.

”எனக்கு கோவில் எதுவும் வேண்டாம்டா.. மேலே ஆகாயம் தான் கூரை. தினமும் பூஜை பண்ணு . சனிக்கிழமை தைல அபிஷேகம் செய்தால் போதும்” என்றார் சனீஸ்வரன்.

தினமுமே அரை லக்ஷம் பக்தர்களுக்கு குறையாமல் வருகிறார்கள் என்று அறிந்தேன். அமாவாசை அன்று இங்கே கும்பல் அதிகம். சனீஸ்வரர் ஆலயம் விஸ்தீரணமாக இருக்கிறது. அதில் புதிதாக என்னென்னவோ சந்நிதிகள் எல்லாம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், சனீஸ்வரனுக்கு தவிர.

சனி சிங்கணாபூர் செல்லும்போது வழியெல்லாம் நிறைய மாட்டுவண்டிகளை பரிதாபமாக பார்த்தேன். சுமக்க முடியாமல் வாயில் நுரை தள்ள கரும்புகளை சுமக்கும் மாட்டு வண்டிகள் ஏராளம். வழியெல்லாம் தரகர்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. வாங்க எங்கள் விடுதியில் தங்குங்கள் என்று அநேகர் வழிமறித்து பாதி வழியிலேயே துரத்து கிறார்கள். ஷீர்டி அணுகும்போதும் இதே தொல்லை.

ஏன் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்று விசாரித்தபோது ”இங்கே சனீஸ்வரன் சந்நிதியிலிருந்து ஒரு சக்தி அதிர்வு வீச்சு பெண்கள் உடலுக்கு அவ்வளவு நல்லதில்லை” என்று பதில் வந்தது. அதற்கு மேல் விவரம் கேட்கவில்லை. சபரி மலை அய்யப்பன் சந்நிதிபோல் இங்கு ஏதோ சாந்நித்யம் பெண்களை அதுவும் கர்ப்பவதிகளை அனுமதிக்கவில்லை என்று தெரிந்து கொண்டால் போதுமானது. அத்துமீறல் எங்குமே எப்போதுமே உள்ளது தானே.

அற்புதமான கோவில் இது. ப்ரத்யக்ஷமாக இருக்கும் சிங்கணாப்பூர சனீஸ்வரனை ஒரு தரமாவது தரிசித்து அருள் பெற வேண்டும்.
சனீஸ்வர பகவானை வழிபட ஒரு சின்ன சக்தி வாய்ந்த ஸம்ஸ்க்ரித மந்த்ரம் :

ॐ नीलांजनसमाभासं रविपुत्रं यमाग्रजम। छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् ||
Om Nilanjana Samabhasam Ravi Putram Yamagrajam | Chhaya Martanda Samhubhutam Tama Namami Shanescharam ||
ஓம் நீலாஞ்ஜன ஸமாபாசம் ரவி புத்ரம் யமாக்ரஜம், சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்

சனீஸ்வர பகவான் பெயரால் சனிக்கிழமை விசேஷம் என்று சொல்ல அவசியமே இல்லை. சனீஸ்வரன் சூரியனின் புத்ரன் .யமனின் சகோதரன். சின்ன வயசிலிருந்தே சனீஸ்வரனுக்கு கிருஷ்ணன் மேல் ஒரு பாசம், நேசம். சனீஸ்வரனால் நமக்கு வாழ்வில் துன்பமில்லை. நமது கர்ம பலத்தினால், செய்த பாபங்களால், அதன் பலனை நாம் அனுபவித்து கடனை வட்டி யோடு செலுத்துவதை கண்காணிப்பவன். யமனுக்கும் நரக லோகத்தில் அது தானே வேலை.
சனீஸ்வரனும் யமனும் உண்மையில் பாரபக்ஷம் பார்க்காத நீதிமான்கள்.
அது சரி வேங்கடேசனுக்கும் இந்த சனிக்கிழமைக்கும் என்ன தொடர்பு?
முதலில் ஒரு சனிக்கிழமை அன்று தான் வேங்கடேசன் வேங்கடாத்ரி மலையில் காணப்பட்டான்.
அன்று தான் மஹா விஷ்ணு திருமலை வேங்கடேசனாக அவதரித்து காட்சி தர துவங்கினார்.
ஒரு சனிக்கிழமை அன்று தான் மஹாலக்ஷ்மியை தனது மார்பில் உறையச்செய்தார்.
ஒரு சனிக்கிழமை தான் பத்மாவதியை வேங்கடேசன் மணந்தார்.
ஒரு சனிக்கிழமை தான் ஓம்காரம் அங்கே உதித்து ஒலித்தது.
சனிக்கிழமை ஸ்திரவாரம் எனப்படுவதிலிருந்தே எதை அன்று செய்தாலும் உறுதியாக மாறாமல் இருக்கும் என தெரிகிறது.
சனீஸ்வரனால் நமக்கு ஏற்படும் துன்பங்கள், நாம் அப்படி நினைத்தால், அது சனிக்கிழமைகளில் வெங்கடேசனை வணங்கும் போது விலகும். வேங்கடேசா , உன் பக்தர்கள் சனிக்கிழமைகளில் உன்னை வந்து வேண்டி வழிபட்டால் என்னால் ஒரு துன்பமும் இல்லாமல் அவர்கள் துன்பம் விலகச்செய்வேன். த்ரயோதசி சனிக் கிழமைகளில் நேர்ந்தால் அது இன்னும் ரொம்ப விசேஷம். .இன்னும் பலன் அதிகம்.

சனிக்கிழமைகளில் கற்பூர ஹாரதி வெங்கடேசனுக்கு ரொம்ப பிடிக்கும். கை மேல் பலன். செல்வம் கொழிக்கும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;