

ஏன் இப்படியெல்லாம்……??– நங்கநல்லூர் ஜே கே. சிவன்
எத்தனையோ விஷயங்களை தாத்தா, பாட்டி, அத்தைகள் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஏன் இப்படி சொன்னார்கள்?, என்ன காரணம்? என்றெல்லாம் திருப்பி கேட்டதில்லை. அவற்றை நம்பினோம், அதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ஒரு சில விஷயங்களை மீண்டும் நினைவூட்டி பார்த்து சொல்கிறேன்;
“எண்ணெயிலும் நீரிலும் நிழலைப் பார்க்கக்கூடாது; கோலம் போடக்கூடாது” . இது ஏதோ நமது மரபிலும், இந்து சாஸ்திரங்களிலும் வரும் ஒரு பழமையான ஆசார நம்பிக்கையோ?. இதற்கு ஆன்மீக, சாஸ்திர, நடைமுறை, உளவியல் என்று பல அடுக்குகளில் விளக்கங்கள் தேட ஆர்வமில்லை. அவர்கள் சொன்னால் ஏதோ நன்மைக்காகத் தான் இருக்கும்.
நிழல் (சாயை) என்பது மனிதனின் ஸூக்ஷ்ம சக்தியின்அடையாளம். எண்ணெய், நீர் போன்ற பளபளப்பான திரவங்களில் நிழல்கள் ,பிம்பங்கள் பிரதிபலிக்கும். அவற்றில் ஒருவன் தன்னுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆயுள், தேஜஸ், மனவலிமை குறையும் என அவர்கள் நம்பி இருக்கலாம்.
ஒரு ஷஷ்டி அப்த பூர்த்திக்கு சமீபத்தில் சென்றபோது மேடையிலிருந்து வாத்தியார்கள் வாயகன்ற ஒரு பாத்திரத்தில் பூஜை செய்த ஜலத்தை வைத்து எல்லோரையும் தரிசிக்க சொன்னார். நிறையபேர் என்னையும் சேர்த்து முகத்தை பாத்திரத்தின் மேல் நீட்டினோம்.. அது மந்த்ர ஜாலம். நமது தேஜஸைக் காக்கும் ஒரு வாத்தியாரிடம் நைஸாக தெரிந்து கொண்டேன். அதை மேற்கொண்டு ஆராய்ந்து ஆதாரம் தேடாத ஆசாரம் இது.
“தைலே சாயாம் ந பச்யேத்” — எண்ணெயில் தன் நிழலைப் பார்க்க வேண்டாம் என சொன்னதற்கு இணங்க ஒரு வாக்கியம் மார்க்கண்டேய புராணத்தில் பார்த்தேன்.
மார்கண்டேயபுராணம் Chapter 43,-11:
घृते तैले तथादर्शे तोये वा नात्मनस्तनुम् ।यः पश्येदशिरस्कां वा मासादूर्ध्वं न जीवति ॥
Ghṛte taile tathādarśe toye vā nātmanaḥ tanum |Yaḥ paśyedaśiraskāṃ vā māsād ūrdhvaṃ na jīvati ||
நெய்யிலோ, எண்ணெயிலோ, கண்ணாடியிலோ அல்லது நீரிலோ தனது உருவத்தைத் தலையற்றதாகக் காண்பது மரணத்தின் அறிகுறியாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் தலையோடு, அதாவது, முகத்தை நன்றாக தெரியும்படி பார்க்க வேண்டும் என்று தானே அர்த்தம்.
எண்ணெய் லக்ஷ்மியின் அம்சம். பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று எண்ணெய் தேய்த்து ஸ்னானம் பண்ணுகிற இன்னும் சில வீடுகளில் இருக்கிறது. பூஜைக்குப் பயன்படுத்தும் எண்ணெயை முகம் பார்க்கும் கண்ணாடிபோல் பயன்படுத்தக் கூடாது. எண்ணெயில் நிழல் பார்ப்பது அந்தப் புனிதப் பொருளின் தன்மையை மாற்றும். முன்பு எல்லாம் வீடுகளில் பல பேர் ஒரே குடும்பமாக வசித்தபோது பெரிய பாத்திரங்களில் எண்ணெய் வைத்திருப்பார்கள்.அதில் குனிந்து பார்த்தால் பாத்திரம் கவிழ வாய்ப்பு.
நீர் என்பது வருண பகவானின் அம்சம். பித்ருக்களின் தத்துவத்துடன் தொடர்புடையது.
குளம், ஆறு, கிணறு போன்ற இடங்களில் நம் உருவத்தை, பிம்பத்தை ரசித்து பார்க்கும் வழக்கமில்லை.
அது மனதை வெளியில் இழுக்கும் என்று ஐதீகம். கிணற்றில் குனிந்து பார்க்கும்போது விழும் அபாயம்.
ஆற்றில் பிரதிபலிப்பைப் பார்க்கும்போது சமநிலை இழக்கலாம்.
நிழலை மிதிக்கக்கூடாது. பிறரின் நிழலை அவமதிக்கக்கூடாது.
இன்னும் ஒரு சில விஷயங்களை சொல்லி முடிக்கிறேன்.
திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற திருத்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேரடியாக நம் வீட்டுக்குத்தான் வர வேண்டும். இத்தனால் புண்ணியங்கள் சேரும். வேண்டிக்கொண்ட விஷயஙள் நிறைவேறும்.
பூஜையறையில் வடக்குப்பார்த்து தெய்வப்படங்களை வைக்கக்கூடாது.’
துணியை தலையில் சுற்றிக்கொண்டு சாப்பிடக்கூடாது.
தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக்கூடாது.
காலை, மாலை சந்தியாகால வேளையில் சாப்பிடுவதும் உறங்குவதும் கூடாது.
பந்தியில் உணவு பரிமாறும்போது ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் பரிமாறி பந்தி ஓரவஞ்சனை செய்யக்கூடாது. இது பட்டினிக்கு வழி வகுக்கும்.
உண்ணும்போது விளக்கு அணைந்தால் உண்ணுவதை நிறுத்தி விட வேண்டும். மறுபடியும் வெளிச்சம் வந்ததும் தட்டில் உள்ளதை மட்டுமே சாப்பிட வேண்டும். மறுபடியும் அதில் உணவை சேர்க்கக்கூடாது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



