
ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர் – நங்கநல்லூர் J K SIVAN
நரசிம்ம பக்தர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் என்னைக் கண்டு எனக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மூன்று நரசிம்மர்களைப் பற்றி இதுவரை நான் கேள்விப்படாத, பார்க்காத அந்த நரசிம்மர்களைப் பற்றி கூறியபோது என் மனதில் ”அப்பா நரசிம்மா, என்னை எப்படியாவது ஒரு முறையாவது உன்னை தரிசிக்க அருள் புரிவாயா” என்று மானசீகமாக வேண்டிக்கொண்டேன். 85+ல் இந்த ஆசை நிறைவேறுவது பிறர் கையில் அல்லவா இருக்கிறது. என்னால் நடக்க ரெண்டு முடியும். தனியாக பிரயாணம் செய்ய முடியாதே! வீட்டில் தனியாக போக விட மாட்டார்களே . மூன்று நரசிம்மர்களில் ரெண்டு பேரை, ஆற்றழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் பற்றி உங்களுக்கு உடனே தெரிவித்துவிட்டேன். மூன்றாவது அழகர் மேட்டழகிய சிங்கர்.
கட்டாயம் நீங்களாவது உடனே சென்று அவர்களை தரிசித்து எனக்காகவும் வேண்டிக்கொள்ள வேண்டும் என்பது என் பிரார்த்தனை.
ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் தாயார் சந்நதிக்கு அருகில் இருப்பவர் மேட்டழகிய சிங்கர் கோயில். இவர் சன்னதி மிகப் பெருமை வாய்ந்தது. மேட்டழகிய சிங்கர், ரங்கநாதர் கோயிலிலேயே சந்நதி கொண்டிருப் பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் அவரை தரிசிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், காட்டழகிய சிங்கர் சற்று தொலைவில், கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளதால், பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கம்பரின் ராமாயண அரங்கேற்றம், மேட்டழகிய சிங்கர் சந்நதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் நடந்தது. அரங்கேற்றத்தின்போது அழகியசிங்கர் சிரித்த ஒலி இடியென அனைவருக்கும் கேட்டதாம். அழகிய சிங்கரைப் பாட எண்ணியே கம்பர் தம் ராமாயணத்தில் சிங்கப் பெருமானின் பெருமையையும் பக்தன் பிரகலாதனின் மூலம் நாராயண மந்திரப் பெருமையையும் சொல்ல எண்ணி, இரணியன் வதைப் படலம் என்ற ஒன்றையே வைத்துப் பாடினாராம். வால்மீகி ராமாயணத்தில் நரசிங்கர் இல்லையே.
கம்பர் இந்த மேட்டழகிய சிங்கருக்காகவே பாடியதுதான் இரணியன் வதைப் படலம் என்பர்.
ஹிரண்ய கசிபுவின் ஹிம்ஸை எனும் கொடுமையைக் களைந்த மஹாசக்தி தான் ஸிம்ஹம். எங்கெல்லாம் கொடுமை நடக்கிறதோ அங்கெல்லாம் ஸிம்ஹம் தோன்றி ஹிம்சையை அழித்து நல்லதைக் காப்பாற்றும். மத்ஸ்யம், கூர்மம், வராகம் போன்ற விலங்கு வடிவெடுத்த ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம் நரசிம்மன். ராமர், பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்கள் தீமையை அகற்றியதோடு, மனிதர்கள் தம்மைப் போலவே ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று வலியுறுத்திய அவதாரங்கள்.
மேலே சொன்ன ரெண்டும் இல்லாத, ரெண்டும் கலந்த, நரசிம்மன் மனிதனும் விலங்கும் சேர்ந்த திருவடிவம். அதாவது தீமையை அழிக்கும் பராக்கிரமமும் பக்தனைக் காக்கும் கருணையும் கொண்ட அழகிய வடிவம்.நான் சொல்லவில்லை, இதை கல்வெட்டுகள் அந்த கால தமிழில் சொல்கிறது. மேட்டழகிய சிங்கர் சந்நிதி தரையிலிருந்து மேடாக கொஞ்சம் உயர்ந்த நிலையில் உள்ளது. கோயில் வடக்கு பகத்த்தில் தாயார் சந்நிதியின் அருகே சோழர்களால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் ஆண்ட நாயக்க மன்னர்கள் கால ஓவியங்கள் இன்னும் உருவத்தை நமக்கு காட்டுவது விசேஷம்.
நரசிம்ம ஸ்வாமியை நமஸ்கரித்து நாம் உச்சரிக்க சில நாமங்கள்:
1. மாதா நிருஸிம்ஹ: பிதா நிருஸிம்ஹ
2. ப்ராதா நிருஸிம்ஹ: ஸகா நிருஸிம்ஹ
3. வித்யா நிருஸிம்ஹ: த்ரவிணம் நிருஸிம்ஹ
4. ஸ்வாமி நிருஸிம்ஹ: ஸகலம் நிருஸிம்ஹ
5. இதோ நிருஸிம்ஹ: பரதோ நிருஸிம்ஹ
6. யதோ யதோ யாஹி; ததோ நிருஸிம்ஹ
7. நிருஸிம்ஹ தேவாத் ந பரஞ்ச கிஞ்சித்
8. தஸ்மான் நிருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!
தமிழில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா:
நரசிம்மா நீ தான் எனக்கு அம்மா, நரசிம்மா நீ தான் எனக்கு அப்பா, எனக்கு உடன் பிறந்த சகோதரனும் நீதான் நரசிம்மா. நான் விரும்பும் நல்ல நண்பனும் நீ தான் நரசிம்மா. எனக்கு கொடுக்கப்பட்ட நல்லறிவு நீ தானப்பா நரசிம்மா. எனக்கு வாய்த்த சகல செல்வங்களும் தனமும் நீதான் நரசிம்மா. எனக்கு உன்னைவிட்டால் முதலாளி,எஜமான் வேறே யாருமில்லை நரசிம்மா. எனக்கு எல்லாமும் நீ தான் நரசிம்மா, எங்கும் நீயே, இகலோகத்திலும் பரலோகத்திலும் நீ தான் எனக்கு நரசிம்மா. நான் எங்கேயெல்லாம் நகர்கிறேனோ அங்கெல்லாம் நீயும் என்னோடு தான் நரசிம்மா. ஏன் தெரியுமா, நரசிம்மா, உன்னைவிட உயர்ந்த தெய்வம் வேறெவரும் கிடையாது. காக்கும் தெய்வம் அல்லவா நீ. நாராயணன் நீ தானே. ஆகவே தான் உன்னை சரணடைகிறேன் நரசிம்மா.
ஸம்ஸ்க்ரிதம் தெரியவேண்டும் என்று அவசியமில்லை. அதன் உள்ளர்த்தம் தான் மேலே சொன்னது. இதை உள்ளன்போடு தான் நரசிம்மன் கேட்க விரும்புகிறான். அவனுக்கு எந்த பாஷையும் பேசினாலும் பேசாவிட்டாலும் கூட நினைத்தாலே புரியுமே.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

