
காட்டழகிய சிங்கர் – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீரங்கம் திருச்சி செல்கிறவர்கள் எத்தனை பேருக்கு இங்கே மூன்று அற்புத நரசிம்மர்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாக கோவில் கொண்டு இருப்பது தெரியும்? எனக்கு தெரியாது. பலமுறை ஸ்ரீரங்கம் திருச்சி, திருவானைக்கா போயிருக்கிறேன். எனக்கு சொல்ல வேண்டும் என ஏனோ நண்பர்கள் யாருக்குமே தோணவில்லை. ஆகவே வேக வேகமாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
முந்தைய பதிவு ஒன்றில் திருச்சி சிந்தாமணி அருகே ஆற்றழகிய சிங்கர் ஆலயம் பற்றி சொன்னேனே ஞாபகம் இருக்கிறதா?. மற்ற ரெண்டு சிங்கர்களைப் பற்றி ரெண்டு நாள் முன்பு நண்பர் லட்சுமி நரசிம்மன் சொன்னதைப் பற்றி ஒவ்வொன்றாக எழுதுகிறேன். நான் இன்னும் பார்க்காத தரிசிக்காத நரசிம்மர் அவர்கள். ஒருநாள் எல்லோருமே போவோம். இப்போது சொல்லப்போவது காட்டழகிய சிங்கரைப் பற்றி…கேள்விப்படாத பெயர்!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ஒரு காலத்தில் அகண்ட, எவரும் அண்ட முடியாத காடாக, இருந்த பகுதியில் யானைகள் மட்டுமே உலவிக் கொண்டிருந்தன. வடக்கே கொள்ளிடத்துக்கும் தெற்கே காவேரிக்கும் இடையே உள்ள தீவு மாதிரி இந்த க்ஷேத்ரம்.
அந்த பகுதி திருவானைக்கா என்று பெயரிலேயே யானையை கொண்டது.பின்னர் அங்கே ஒரு நரசிம்மர் சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் முன்பு இங்கே குடிகொண்டார். அப்புறம் யானைகளின் தொந்தரவு குறைந்தது. காட்டில் உருவான அந்த நரசிம்மர் தான் காட்டழகிய சிங்கர். ஸ்வயம்பு விக்ரஹம். ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் ஆகிய ஊர்கள், கோயில்களின் எல்லை காவல் தெய்வம் இவர். மேற்கு பார்த்தவாறு அமைந்திருக்கும் அவருடைய இடது தொடையில் லக்ஷ்மி அருள்பாலிக்கிறாள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு உண்டான எல்லா வழிபாடுகளும், இந்த நரசிம்மனுக்கும் உண்டு. ப்ரதோஷ காலத்தில் சிறப்பு பூஜைகள் விசேஷமாக நடக்கும்..
ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே சில நிமிஷங்கள் பொடி நடை தூரத்தில் இந்த கோயில் உள்ளது. சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு.
பெரியாழ்வாரின் சிஷ்யர்களில் ஒருவன் நெடுமாறன் எனும் வல்லபதேவ பாண்டியன் தான் இந்த ஸ்ரீரங்க காட்டில் லக்ஷ்மி நரசிம்மப் பெருமாளுக்கு கோவில் கட்டியவன். கி.பி.1297ல், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்தக் கோயிலை புனர்நிர்மாணம் செய்து, கோயில் அழகுறத் திகழ வழி வகுத்தான். இந்த ராஜா தான் ஸ்ரீரங்கம் சித்திரை வீதியை நமக்கு அளித்தவன். கலியுகராமன் என்றும் அவனுக்கு ஒரு பெயர். கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் என்று கிராமங்களை நான்கு வேதம் ஓதும் பிராமணர்களுக்கு மான்யம் அளித்தவன்.
இந்த ராஜாக்கள் கோயில் கட்டுவதற்கு முன்பே ஸ்ரீரங்கநாதர் காலத்திலேயே இங்கே வந்தவர் காட்டழகிய நரசிம்மர்.
மூலவர் மேற்கு நோக்கி, சுமார் 8 உயரத்தில் பிரமாண்டமாக இடது மடியில் மஹாலக்ஷ்மியோடு காட்சி தருகிறார். இடது கரம் தாயாரை அணைத்திருக்க, வலது திருக்கரத்தில் அபய முத்திரை. மற்ற ரெண்டு கரங்களிலும் சங்கு சக்கரம். வெள்ளை வெளேரென்ற வெள்ளிப்பல் ”நான் உக்ர நரசிம்மன் இல்லைடா. சாந்த ஸ்வரூபி..”என்கிறது.
காட்டழகிய சிங்கருக்கு உத்ஸவ மூர்த்தி கிடையாது. ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளுக்கு காவலாக இருப்பவர். இவரது உத்ஸவராக அந்தப் பெரிய பெருமாளே (ரங்கநாதப் பெருமாள்) அமைகிறார். காட்டழகிய சிங்கரின் பெருமையினையும் சக்தியையும் இந்த உலகிற்கு அறிவிக்க ஒவ்வொரு விஜயதசமியன்று நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள்) விசேஷ பல்லக்கில் காட்டழகரை சந்திக்க வந்து, கோயிலின் முன் மண்டபத்தில் பீடத்தில் இருந்த வண்ணம் சேவார்த்திகளுக்கு காட்சி தருகின்றார். விசேஷ திருவாராதனம் (பூஜைகள்) மற்றம் அமுதுபடிகள் (நைவேத்தியம்) ஆகியவை அப்போது கோலாகலமாக அவருக்கு நடக்கும். அப்புறம் பெருமாள் குதிரை வாகனத்தில் பெருமாள் பார் வேட்டைக்கு புறப்பட்டுவிடுவார். வனம் என்றால் காடு. வேட்டையாடும் இடம் அல்லவா? வன்னி மரம் ஸ்தல விருக்ஷம்.
ஸ்ரீராமாநுஜரின் சீடர் பிள்ளை லோகாச்சார்யர் காட்டழகிய சிங்கர் கோயிலில் தினமும் காலக்ஷேபம், உபன்யாசம் செய்தவராம். 15ம் நூற்றாண்டில் மணவாள மாமுனிகள் கோவில் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத்தியிருக்கிறார். பிள்ளை லோகாசார்யர் காட்டழகிய சிங்கர் மேல் ஸ்ரீவசநவ பூஷணம் போன்ற 18 கிரந்தங்களை இயற்றியுள்ளார். இதுவரை எனக்கு தெரியாது. படித்ததில்லை.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

