SIVA THATHTHA STORIES J K SIVAN

சிவா தாத்தா கதைகள் –  நங்கநல்லூர்  J K   SIVAN
மலைப்பாம்பின்  கதை

நாம்   இப்போது கிருஷ்ணன் காலத்தில் அல்லவா  இருக்கிறோம். அதாவது  ஐந்தாயிரம் வருஷம் பின்னோக்கி சென்றுவிட்டோம் ஒரு நொடியில். அங்கு நடக்கும் நிகழ்ச்சியை பார்க்கிறோம்.  பிருந்தாவனத்திலிருந்து எல்லோரும் மாட்டு வண்டிகளில் கூட்டமாக எங்கே போகிறார்கள்?வண்டி போகும் பாதையில் வெகு தூரம் சென்றால் சரஸ்வதி நதிக்கரை வருமே. அங்கே வருஷா வருஷம் கிராமத்தார்கள் அனைவரும் சென்று ஸ்னானம் செய்து விட்டு ஒன்றிரண்டு நாள் காட்டில் தங்கி காட்டுக்கு நடுவே உள்ள  பசுபதி நாதர், அம்பிகாதேவியையும் வணங்கி,  படையல், பூஜைகள் செய்துவிட்டு திரும்புவார்கள். இது காலாகாலமாக நடக்கும் ஒரு வழக்கம்.
அம்பிகா தேவி கோவில் காட்டில் உள்ளதால்  இரவெல்லாம்  எங்கு பார்த்தாலும் கோவிலைச் சுற்றி தீவட்டிகள் கொளுத்தி வெளிச்சம் இருக்கும். காட்டு மிருகங்கள் வெளிச்சத்தை பார்த்து பயந்து அருகே வராது.  எல்லோரும்   கூடி பாடுவார்கள் .  கூத்து, நாடகம், பஜனை எல்லாம்  இரவு பகலாக தொடரும்.
ஆகவே தான் மாட்டு வண்டிகள் நிறைய  உணவுப்பொருள்கள்,  தான தர்ம வஸ்துக்கள் குழந்தை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக  கிளம்பிவிட்டார்கள். கோபர்களின் தலைவர் நந்தகோபன் தனது குடும்பத்தோடு ஒரு மாட்டு வண்டியில் கிளம்பிவிட்டார்.  ஒரு இரவில்  மாட்டு வண்டிகள் எல்லாம் அம்பிகா வனம்  அடைந்தன.  அங்கே  இருக்கும் காட்டு வாசிகள், ரிஷிகள், பிராமணர்கள் முனிவர்கள் எல்லோரும் ஆவலோடு  நந்தகோபர் எப்போது வந்தாலும் பிராமணர்களை  உபாசித்து அவர்களுக்கு  தானம் தர்மம்  எல்லாம்  செய்வாரல்லவா?  பசுக்களை, தங்க காசுகளை, எல்லாம்  தாராளமாக  தானம் செய்வதில் பேர் பெற்றவர் நந்தகோபர். பலராமனும் கிருஷ்ணனும்  அம்பிகாவனம்  கோவிலுக்கு  அருகே எல்லோரும் தங்க  தரையை சுத்தம் செய்து மண் சுவர் எழுப்பி  கூரை வேய்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு  பக்கம்  பெண்களுக்கு தேவையான  உணவுப் பொருள்களை வழங்கி உணவு தயாரிக்க உதவிக்கொண்டிருந்தார்கள்.
மறுநாள் அதிகாலையில்  நந்தகோபரும் அவர் சகோதரன்  சுனந்தனும் சரஸ்வதி நதியில்  இறங்கி  இடுப்பளவு ஆழத்தில்  நின்றுகொண்டு அம்பிகையையும்  பசுபதினாதரையும்  வேண்டிக் கொண்டிருந்தனர். சூரியன் உதயமாகவில்லை. காட்டில் இருட்டு.  சரஸ்வதி நதிக்கரையில்  ஒரு  பெரிய  மலைப்பாம்பு  வெகுகாலமாக வசித்து வந்தது. அதற்கு   பொறுக்க முடியாத பசி. ஆகாரம் தேடி அலைந்து கொண்டிருந்தது. சரஸ்வதி நதியில்  சில  மனிதர்கள் நடமாட்டம் தெரிந்ததும் மெதுவாக பாம்பு  நீரில் இறங்கியது. முதலில் அதன் கண்ணில் பட்டது  நந்தகோபர் என்பதால் அவர் காலைப்  பிடித்துகொண்டு சரசரவென்று  சுற்றி  வளைத்தது.  கொஞ்சம் கொஞ்சமாக  இன்னும்  சற்று நேரத்தில்  நந்தகோபன்  வெகு நாட்களாக  பசியில்  வாடும்  அந்த  மலைப் பாம்பிற்கு  உணவாகப் போகிறார் என்று அருகில் இருந்தவர்களுக்கு தெரியவே எல்லோருமாக அதை  கம்பு கட்டைகளால் அடித்தார்கள்.  நந்தகோபரின் கைகால்கள் பாம்பின் உடலில் இறுக்க  பிணைக்கப்பட்டிருந்ததால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அவர் நினைவு  கிருஷ்ணன் மேல் சென்றது. பாசம் கண்ணீரை வரவழைத்தது.  தான்  இறக்குமுன்பு  கண்ணனைக்  காண  ஆசை மேலிட்டது.  வாய்  “கிருஷ்ணா கிருஷ்ணா,  நான்  உன்னை  பார்க்கவேண்டுமே  அருகில்  வா”  என்று  அலறியது .
  சுனந்தனும் உரக்க  “ கிருஷ்ணா, பலராமர்   உடனே வந்து காப்பாற்றுங்கள் ”  என்று  கத்தினார். சரஸ்வதி   கரையில்   வேலை  செய்துகொண்டிருந்த கிருஷ்ணனும்  பலராமனும்   சுனந்தரின்  அலறலைக்கேட்டு  ஓடி வந்தனர். இதற்குள்  அந்த பெரிய  மலைப்பாம்பு  நந்தகோபரை  முக்கால் வாசி விழுங்கிவிட்டது. கிருஷ்ணன்  பாம்பை நெருங்கினான்.  இதற்குள்  நிறைய  தீமூட்டி,    அந்த  பாம்பை  துன்புறுத்தி அதன் மூலம் அது  நந்தகோபனை விடுவிக்குமா என்றெல்லாம்  கோபர்கள்  பாடுபட்டு எந்த  பயனும்  இல்லை.
ஒரே நொடியில்  கிருஷ்ணன் நந்தகோபர் அருகே ஓடிவந்து  பாம்பை  நெருங்கி அதன் வயிற்றில் காலால் மிதித்தான். அந்த  பலத்தை,   அதனால் ஏற்பட்ட  தாங்க  முடியாத வலியால்  பாம்பு  நந்தகோபனை வெளியே கக்கி,  விடுவித்தது மட்டுமல்ல, தன்   உயிரையும் மெதுவாக  இழந்து கொண்டிருந்தது.. அந்த  கிழட்டு  பாம்பு  கொஞ்சமாக  கொஞ்சமாக  மூச்சை விட்டு  இறந்தது.  அப்போது ஒரு  ஆச்சர்யம்  நடந்தது. பாம்பு  இறந்து விட்டாலும் அதன் உடல்  அங்கு இப்போது இல்லை. அது  கிடந்த   இடத்தில் ஒரு  தேவலோக வித்யாதரன்  நின்று கொண்டிருந்தான். பளபளவென்று  மினுக்கும்  தங்க  உடலில், ஆபரணங்கள் அணிந்து கிரீடத்துடன் கைகளை  கூப்பி  வணங்கியவாறு  அவன்  கிருஷ்ணனை  நன்றியோடு  நோக்கி கொண்டிருந்தான்.”வித்யாதரா,  நீ  யார், எவ்வாறு இந்த  மலைப்பாம்பின் உடலில்  இருந்தாய்? எவ்வளவு  காலமாக இவ்வாறு  இருந்தாய்?  என்று  கிருஷ்ணன் கேட்டான்.

“நான்  சுதர்சனன்,  தேவலோகத்தில் இருந்தவன் என்னுடைய  அழகிலும்  என்னுடைய  அந்தஸ்திலும் பெருமையும்  கர்வமும்  கொண்டு  அனைவரிலும் நானே மேலானவன் என்ற தவறான எண்ணம்  என்னுள் புகுந்து அந்த  தவறுக்கு தக்க “பரிசு”  பெற்று இன்று  வரை காட்டில் ஒரு அருவருக்கதக்க  மலைப்பாம்பாக  வாழ்ந்து இன்று உங்களால் சாபம்  நீங்கபெற்றவன்”.
“ ஏன்  இவ்வாறு  பாம்பாக  மாறினாய்?”. “பிரபோ,  என்  கர்வத்தில்  நான்  திளைத்து கொண்டிருந்தபோது  வானில் ஒருநாள்  பறந்து இந்த  வனத்தருகே  வந்து கொண்டிருந்தேன் என்னோடு  வந்தவர்கள் இங்கு  பசுபதி நாதர் கோவிலில் வழிபட  கூடியிருந்தனர்.  வனத்தில்  சில முனிவர்களை கண்டேன்.  ஜடாமுடியோடும்  இலை தழை ஆடையோடும்  அவர்கள்  சரஸ்வதி நதியில்  நீராடி  பசுபதி நாதரை  வழி பட்டுக் கொண்டிருந்தனர். நானும் நண்பர்களும் சரஸ்வதியை ஸ்னானம்  செய்ய விரும்பியதால்  அவர்களை  ”தூர  விலகுங்கள்”  என்று  அருவருப்புடன் இகழ்ந்தேன்.   நாங்கள்  வரும்  வழியில் அருவருப்பான  நீங்கள்  நிற்காதிர்கள்.போங்கள்  என்று விரட்டினேன். அவர்கள் மனம் புண்பட  பேச வைத்தது என்  தலை கர்வம்!.  அவர்கள்  ஆங்கிரச முனிவரும் அவர்  சிஷ்யர்களும் என்பதை  அறிவிலி  நான்  உணரவில்லை  என்னைப்   பார்த்து  ஆங்கிரசர்  “அடே,  வித்யாதரா, என்ன  அகம்பாவம்,ஆணவம் உனக்கு?  ஆண்டவன்  சந்நிதியில் வழிபடும்   முனிவர்களை  அவமதிப்பது  எவ்வளவு  பெரிய  தவறு  என்று உணராமல்  உன்னுடைய  அழகில்  உண்டான  கர்வம் கொண்டவனே   உன்  அழகு, யௌவனம், மிடுக்கு உன்னை மற்றவர்களை  தாழ்வாக  நினைக்க  வைத்ததால்,  இந்த  காட்டிலேயே  ஒரு  மலைப்பாம்பாக நீ  இப்போது முதல்  வாடப்போகிறாய்.  உன் அருவருக்க தக்க  கோரமான உடல்  உன்னை  திருத்தி  உனக்கு  பாடம் கற்பிக்கட்டும்.”
“எவ்வளவு பெரிய  தவறு செய்துவிட்டேன்  நான்?. என் தவறை உணர்ந்து ஆங்கிரஸ் முனிவர்  காலடியில்  விழுந்து “என்  தவறை மன்னிக்க வேண்டும்.  இனி  நான்  தவறு செய்ய மாட்டேன்.  தயவு  செய்து என்னை காப்பாற்றுங்கள்” என்று வேண்டினேன்.
“முடியாதப்பா.  சாபம் இட்டால்   இட்டது தான். அதில்  இருந்து  விமோசனத்துக்கு  தான்  நீ  வழி தேட வேண்டும்.  அனுபவிப்பதை  மாற்ற முடியாதே”  என்றார்  முனிவர்.
“எனக்கு  எப்போது  விமோசனம்?” என்று  வேண்டினேன்.
இந்த காட்டுக்கு  ஒரு நாள்  நமக்கெல்லாம்  காக்கும் கடவுளான   நாராயணின்  அம்சமான ஸ்ரீ  கிருஷ்ணன்
ஒருநாள் வருவார்.  அவர் கால் விரல் உன் மீது பட்டவுடன் உன் சாபம் தீரும்  நீ விமோசனம் அடைவாய்”.
“அது எப்போது?”  என்று கேட்டேன்.
“காலம் வரும் வரை  பொறுத்திரு”  என்றார்.” என்  தெய்வமே  நீங்கள்  என்னை கரையேற்றி விட்டீர்கள்”  என்று  சுதர்சனன் கிருஷ்ணன் காலில் விழுந்தான் அருகே  நின்ற நந்தகோபன் காலிலும் விழுந்து வணங்கினான். கிருஷ்ணனின் ஆசியோடு  சுதர்சனன்  தேவலோகத்துக்கு  திரும்பினான்

திகைத்து  நின்ற  கோபர்கள், இந்த வருஷம் பசுபதி நாதர் அம்பிகா தேவி  பூஜை வெகு விமரிசையாகநடந்தது மட்டுமில்லாமல்  ஒரு  புதிய கிருஷ்ணானுபவத்தையும் அவர்களுக்கு  அளித்ததில்  அகமகிழ்ந்தனர்

“அடக்கம்  அமரருள் உய்க்கும்”   என்பது  நமக்கு  நினைவுக்கு வந்தாலும்  அமரர்களில் ஒருவனுக்கு  அடக்கம்  இல்லாததால்   வந்த  வினையை  இந்த  கதை  நினைவுறுத்துகிறது அல்லவா?..  

 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;