
பேரூரில் பிறந்தநாள் பரிசு. – நங்கநல்லூர் J K SIVAN
இந்த அவசரமான உலகத்திலே ஒவ்வொருவருக்கும் எத்தனையோ அவசர, அவசிய வேலைகள் இருந்து கொண்டே தான் உள்ளது.அப்படி ஒரு வேலை என் முதல் மகன் கிருஷ்ணசாமிக்கு கோயம்பத்தூரில் இருந்ததால் உடனே ஒரு சௌகரி யமான விமானத்தில் ஏறிக்கொண்டு ஜெர்மனியிலிருந்து ஒருவார விடுமுறையில் சென்னை வந்து, உதவிக்கு என்னையும் அழைத்துக் கொண்டு நாங்கள் காரில் கோயம்பத்தூருக்கு புறப்பட்டோம். நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பாதாளம் வரை எதையோ நோண்டி தேடிக்கொண்டிருந்தார்கள். மேலே பாலம் அமைக்கவோ? 50 கி.மீ தூரத்துக் கொரு தடவை காரை நிறுத்தி 70 முதல் 120 வரை சுங்கவரி கலெக்ஷன். அந்த இடத்தில் தான் பிச்சைக்காரர்கள், கொய்யாக்கா வேர்க்கடலை விற்பவர்கள் வேறு சூழ்ந்து கொள்வார்கள். இப்படியாக ஒரு பத்துக்கு மேற்பட்ட இடங்களில் நின்று வரி செலுத்திவிட்டு கோயம்புத்தூரை அடைந்தோம்.
சில வருஷங்கள் வரை என் நெருங்கிய திருப்பூர் உறவினரை சந்திக்க செல்லும்போதெல்லாம் கோயம்பத்தூர் கோவை புதூருக்கும் அவசியம் செல்வேன். திருப்பூர் உறவினர் கைலாச பதவி அடைந்த பிறகு அங்கே போக அவசியமில்லை. ஆகவே கோயம்பத்தூரில் நான் எப்போதோ கட்டிய ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததால் அதன் க்ஷேமத்தை விசாரிக்க செல்வேன். ஏதாவது ஒரு செலவு வைத்துக் கொண்டு எப்போதும் எனக்காக காத்திருக்கும் 30 வருஷ வீடு .திருப்பூர் பஸ் கோயம்புத்துர் காந்திபுரத்தில் கொண்டு இறக்கி விடும். அங்கிருந்து பேரூர் வழியாக செல்லும் பஸ்கள் அடிக்கடி செல்லும். நிச்சயம் அரைமணிக்கு ஒன்று ஓடும். கோவைப்புதூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் தான் பேரூர். அங்கே பஸ் ஒரு பழைய சிவன் கோவிலை காட்டி விட்டு சில நிமிஷங்கள் பஸ்ஸில் இருந்து கொண்டே தியானித்து விட்டு தான் என்னை கோவைப்புதூர் தூக்கி செல்லும். சிவன் கோவில் பெயர் பச்சையில் பட்டீஸ்வரர் ஆலயம் என்று பார்த்ததிலிருந்து ஒருநாள் இறங்கி சிவனை தரிசிக்க மனதில் விருப்பம் வந்து ஒரு தடவை பஸ்ஸிலிருந்து பேரூரில் இறங்க வைத்தது. முதல் முறையாக பல வருஷங்கள் முன்பு பேரூரில் பஸ்ஸிலிருந்து இறங்கினேன்.
சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள பெரிய ஊர் பேரூர். ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது. அந்தப்பக்கம் அவ்வளவு பெரிய கோவில் வேறு எதுவும் கண்ணில் படவில்லை. புராதன பெயர் பிப்ப லாரண்யம் (அரசங்காடு) . PIPAL என்பதும் சமஸ்க்ரித பிப்பலமும் ஒன்று . அரசமரம். பேரூரின் வேறு பழம் பெயர்கள் காமதேனு புரி, பட்டிபுரி, ஆதிபுரி, தக்ஷிண கைலாசம், தவசித்தி புரம் , ஞானபுரம், சுக்லமாபுரம், கல்யாணபுரம், பசுபதி புரம். மேலை சிதம்பரம் . இவ்வளவு புகழும் பெருமையும் கொண்டு சிம்பிளாக இப்போது பேரூர். நிச்சயம் பெரிய ஊர் தான். அருளை வழங்குகிறதே!
அற்புதமான இந்த பட்டீஸ்வரர் கோவில் கரிகால் சோழன் காலத்தை சேர்ந்தது. ஆயிரம் வருஷங்களுக்கு மேலான புராதன கோவில். எனக்கு முன்னே அப்பர், சுந்தரர், சம்பந்தர், அருணகிரிநாதர், கோரக்க சித்தர், கச்சியப்பர், போன்றவர்கள் பஸ்,காரை, தேடாமல் நடந்தே வந்திருக்கிறார்கள். தேவார பாடல் பெற்ற ஸ்தலம். ஒரு கோவிலையும் விட்டு வைக்காத ராஜராஜன் இதன் அர்த்தமண்டபம், மஹா மண்டபம் எல்லாம் அமைத்தான். நிறைய மானியங்கள் விட்டிருக்கிறான். சுவற்றில் ஜாக்கிரதையாக அதெல்லாம் கல்வெட்டுகளாக எழுதி வைத்திருக்கிறான். இருந்தும் நமது தமிழ் வேறு என்பதால் படிக்க முடியாது.
சோழர் காலத்துக்கு பின்னால் ஆண்ட விஜயநகர நாயக்கர்கள் பங்கும் ஆலய பராமரிப்பில் இருக்கிறது. கொங்கு அரசர்களும் மக்களும் இதை பராமரித்து வருவதால் இன்றும் நமக்கு இந்த அற்புத கோவில் கிடைத்துள்ளது. ஆலயத்தின் உள்ளே கனகசபை அழகாத்ரி நாயக்கன் என்ற மன்னனால் 17ம் நூற்றாண்டு நிர்மாணிக்கப்பட்டது. அப்புறம் தோன்றிய வை கல்யாண மண்டபம், அறுபத்து மூவர் மண்டபம் போன்றவை. புதை பொருள் ஆராய்ச்சிக் காரர்கள் தோண்டிப் பார்த்தபோது எப்படி ரோமானியர்களின் நாணயங்கள் கூட இங்கே உள்ளது என்று தலையை சொரிந்து கொண்டிருக் கிறார்கள். அவ்வளவு பேர் வந்த ஆலயமா இது? சோழர்களைத் தவிர பல்லவர்கள் பாண்டியர்களும் மைசூர் ராயர்கள் கூட இந்த ஆலயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். ஹைதர் அலி கூட மானியம் வழங்கி இருக்கிறார். நாம் தாம் இந்த மாதிரி புராதன ஆலயங்களுக்கு செல்லாதவர்கள் , ஆலய பராமரிப்புக்கு உதவாதவர்களோ? என்றால் அது தான் உண்மை.
கோவிலின் தூண்கள் சிற்பங்கள் நிறைந்து ஆலய சரித்ரம் புராணம் எல்லாம் கண்ணால் தெரிந்து கொள்ள உதவுகின்றன. அசாத்திய சிற்பக்கலை. ஒரு கல்வெட்டு, ஒரு சமயம் யாரோ தண்ணீர் பிரச்னை யில் அருகே ஓடும் நொய்யல் ஆற்றின் கரையை உடைத்ததால், அதை சீராக்கும் செலவை யார் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று சொல்கிறது.
பட்டீஸ்வரர் ஸ்வயம்பு லிங்கம். அம்பாள் மரகதவல்லி, தமிழில் பச்சை நாயகி. சைவ வைணவ ஒருமைப்பாடு கொண்ட ஆலயம். பட்டீஸ்வரர் கிடைத்தபோது அதிசயமாக தான் கிடைத்திருக்கிறார். தேகத்தில் ஐந்து தலை நாகம், நாக யக்னோ பவீதம். நாகமே பூணல். ஜடாதாரி. கங்கை. அரவம். அடி முடி தேடும் அன்னம், வராஹமாக ப்ரம்மா விஷ்ணு. தலையில் பசுவின் கால் குளம்பு வடு . கோவில் நந்தவனத்தில் பின்னால் அளவற்ற பூச்சொரியும் பன்னீர் மரம் ஸ்தல விருக்ஷம். .
உள்ளே ஆஞ்சநேயர், ஸ்ரீமாய கிருஷ்ணர், கொடிமரத்தை ஒட்டி அழகான நந்திகேஸ்வரர் . மேற்கே சென்றால் ஒரு பிரஹாரம் , தெற்கு நோக்கி ஒன்று வடக்கு நோக்கி ஒன்று. நடராஜர் சன்னிதியை அடுத்து கோவில் யானை குளிக்கும் இடம் வரை நீளமாக.
ப்ராஹாரத்தில் நடராஜர் சிவகாமி அம்மன் தரிசனம் கிடைக்கும். கன்னிமூலை கணபதி இருக்கிறார். கொடி மரம், பலி பீடம் நமஸ்கரித்துவிட்டு உள்ளே போனால் நந்திகேஸ்வரர், அப்புறம் மஹா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப க்ரஹம். அர்த்த மண்டபத்தை தாண்டி கர்ப்ப க்ரஹத்தில் தான் தீபாலங்காரம். ஐந்து தலை நாகம் குடையாக லிங்க ஸ்வரூபத்தில் பட்டீஸ்வரர். ஸ்வயம்பு ஆதி லிங்க மூர்த்தி தரிசனம். பட்டீஸ்வரர் சன்னிதியின் பிரகாரத்தில் கிழக்கு மேற்காக கண்ணுக்கு இனிமையாக வரிசையாக 63 நாயன்மார்கள் கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி. மூலவர் பின்புற கோஷ்டத்தில் லிங்கோத் பவர். வடக்கே சன்னிதியில் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சந்நிதி.
கிழக்கு பக்கம் பட்டீஸ்வரருக்கு வடக்கே துர்க்கை சந்நிதி. சண்டிகேஸ்வரர். கிழக்கு மூலையில் நாய் வாகனம் இல்லாத பைரவர், முக்தி தலம் என்பதால் ‘ஞான பைரவர்’. ரொம்ப அற்புத தரிசனம் பெற்றேன்.
இந்த ஆலய பால தண்டாயுதபாணியை தரிசித்து அருணகிரியார் பாடிய திருப்புகழ் உள்ளது. முருகனுக்கு வடக்கே காசி விஸ்வநாதரும், தெற்கே விசாலாட்சி அம்மனும் உள்ளார்கள். பின் பக்கம் சென்றால் கோரக்க சித்தர் தவம் செய்த இடம் . இங்கே வில்வ மரத்தடியில் பக்தர்கள் உட்கார்ந்து தியானம் பண்ணுவது வழக்கம்.
இந்த ஆலயத்தில் ப்ராஹாரத்தில் ஆஞ்சநேயர், அம்மன் மரகத வல்லி சந்நிதிக்கு முன் வரதராஜ பெருமாள் சங்கு, சக்ர தாரியாக நிற்கிறார். தெற்கே ஒரு தனி சன்னிதியில் துர்க்கை அருள் பாலிக்கிறாள். ராகுகால பூஜைக்கு பெண்கள் கூட்டம் ஜாஸ்தி. பராசக்தி மரகதவல்லி, பச்சைநாயகி அம்மன் கிழக்கு நோக்கி சதுர் புஜங்களோடு காண்கிறாள். அபய வரத ஹஸ்தங்களோடு மற்ற இரண்டு கரங்களில் தாமரை மலர்.
அற்புதமான கலைச் சிற்பங்கள் நிறைந்த கனகசபை மண்டபத்துக்கு முன் கோமுனி, பட்டிமுனி ஆகியோரை காணலாம். மண்டப நான்கு தூண்களும் நான்கு வேதங்களாம். நர்த்தன கணபதி, ஷண்முகம், அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் , ஆலங்காட்டு காளியம்மன், யானைத்தோல் உடையுடன் சிவன், பிக்ஷாடனர், ஊர்த்வ தாண்டவ சிவன் எல்லோரையும் அற்புத சிலா ரூபங்களில் காணலாம். ”அடே, தெய்வீக சிற்பி நீ எங்கிருந்தாலும் வாழ்க. ” மண்டப சுவரில் சிவபெருமானின் திரு விளையாடல்கள் வண்ண ஓவியங்களாக கண்ணைக் கவர்கிறது. இரும்பு சங்கிலி போல் பின்னிப் பிணைந்து கற்களில் செதுக்கப்பட்ட சங்கிலி, சிற்பியின் கற்பனா சக்தியையும் அதற்கேற்ப அமைந்த கலைத்திறனை பறை சாற்றுகிறது. இதை இன்னும் ஒரு ஆயிரம் வருஷம் நாம் பாதுகாக்க வேண்டாமா?. எதிர்கால சந்ததியார் இதெல்லாம் கண்டு ஆனந்தித்து அதிசயிக்க வேண்டாமா?
இந்த கோயில் சம்பந்தப்பட்ட அதிசயங்களை சொல்கிறேன் கேளுங்கள். சொல்லாமல் எப்படி இக் கட்டுரையை நிறைவு செய்வது.?
1. இறவாத பனை?? எவர் க்ரீன், என்றும் பசுமை மாறாத, இளமையான மார்க்கண்டேய பனைமரம் ஒன்று இங்கே நிற்கிறது. இந்த பனைமரத்தின் பட்டையை இடித்து கஷாயம் பண்ணி குடித்தால் எல்லா வியாதிகளும் ஓடிவிடும் என்று சொல்லியும் எப்படி இந்த மரத்தை இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்? பாதுகாக்கும் நிர்வாகிகளுக்கு நன்றி. தூரத்திலிருந்து பார்க்க மட்டும் அனுமதியுங்கள், பட்டையை கிளப்பிவிடுவார்கள். அடுத்த தலைமுறைகளுக்கு இறவாத பனை பார்ப்பதற்கு வேண்டாமா?
2. பிறவாத புளி ? இங்கே ஒரு புளியமரம். இந்த மரத்தின் புளியங்கொட்டை மீண்டும் முளைப்பதில்லையாம். வெளி நாட்டு நிபுணர்கள் கூட வந்து எப்படியாவது இந்த மரத்தின் புளியங்கொட்டைகளை விதைத்து செடி காட்ட முயற்சி செய்து ” சே இந்த பழம் புளிக்கும் ”என்று தோற்று திரும்பினதாக சொல்கிறார்கள். ஆனால் மரம் இன்றும் இருக்கிறது.
3 புழுக்காத சாணி: சாணி ஒரு சானிடைசர் SANITIZER என்று இப்போது புரிகிறது. ஏன் வீட்டு வாசலில் சாணம் தெளித்தார் கள் என்று. மாட்டு கொட்டகைகளில் சாணி குழிகளில் சாணத்தில் புழுக்கள் தோன்றி எருவாக பயன்படுகிறது. இந்த ஊரில் என்ன அதிசயம் என்றால் இந்த பேரூர் எல்லைக்குள்ளே இருக்கும் எந்த இடத்திலும் எத்தனை நாள் ஆனாலும் ஆடு மாடு எதன் சாணத்திலும் புழுக்கள் தோன்றாது. ஏன் எப்படி என்று என்னை கேட்கவேண்டாம். உங்களைப்போல் வாய்ப் பிளந்து கேட்பவர்களின் நானும் ஒருவன்.
4. எலும்பு கல்லாகிறது. எலும்பு கால்சியம் CALCIUM காலம் செல்லச் செல்ல பூத்து சாம்பலாகிவிடும். ஆனால் பேரூரில் யாராவது இறந்து விட்டால் அவர்கள் உடல்களை எரித்தபின் எலும்புகளை நொய்யல் ஆற்றில் இட்டால் புண்ணியம் என்று நம்பிக்கை. அந்த எலும்புகள் நாளாவட்டத்தில் கறைவதில்லை. கல்லாக மாறிவிடுகிறதாம். ஏன் எதற்கு ? அதிசயத்தை ரசிப்பதோடு நிற்கவும். ஏன் எதற்கு என்று எல்லாம் கேட்டு பதில் தேடவேண்டாம்.
5. வலது காது மேல் நோக்கி வைத்து மரணம் : பேரூரில் எந்த ஜீவராசி மரணமடைந்தாலும் , அதன் வலது காது மேலே பார்த்து இருக்கும்.
ஒரு கிசுகிசு. இந்த அதிசயங்களை நாம் மட்டும் அல்ல. ஒரு காலத்தில் திப்பு சுல்தான் கூட ஒரு திருவாதிரை அன்று வந்து பார்த்துவிட்டு கோவிலை இடிக்காமல் திரும்பி போயிருக்கிறான். அதுவே ஒரு அதிசயம் அல்லவா?
இந்த அருமையான கோயிலுக்கு பல வருஷங்கள் கழித்து மீண்டும் இப்போது கோயம்பத்தூர் காரில் சென்றபோது காலை வேளையில் சென்றேன் ஆனால் கோயில் காரணம் யாரோ ஒரு அர்ச்சகரோ வேறு கோயில் பணி புரியும் எவரோ கைலாசபதவி அடைந்துவிட்டார் என்பதால் மாலை நாலு மணிக்கு தான் திறப்பார்கள் என்று சொன்னார்கள். என் 86வது பிறந்தநாள் அன்று அங்கே இருந்ததால் பேரூர் பட்டீஸ்வரரை தரிசிக்க வாய்ப்பில்லையே என வருந்தி காலை அங்கிருந்து சென்றவனுக்கு மீண்டும் மாலை ஒரு வேலை வந்து பேரூருக்கு வரவேண்டியிருந்தது. நாலு மணிக்கு கோவிலுக்கு சென்றபோது நான் தான் முதலில் பட்டீஸ்வரர் சந்நிதியில் நின்றவன். பெரிய கம்பீர லிங்கம். மனமார ரேவதி ராகத்தில் சிவன் மேல் ஒரு பாடலை கண்ணை மூடி ரசித்து பாடினேன். அர்ச்சகர் சுவாமி மேல் இருந்த ஒரு மாலையை என் கழுத்தில் போட்ட பிறகு தான் கண்ணை திறந்தேன். அடடா இதை விட சிறந்த பிறந்த நாள் பரிசு எது? என்று தோன்றியது. அன்று காலை தான் முதலில் வடவள்ளியிலிருந்து மருதமலை முருகனை தரிசிக்க சென்றேன். 5 கிமீ. தூரம் தானே. வடவள்ளி நண்பர் மீசை வைத்தா என்னோடு மருதமலை முருகன் தரிசனம் பெற வந்தார். வழியெல்லாம் திருப்புகழ் பாடினார். அற்புதமாக இருந்தது கேட்பதற்கு. மருதமலை முருக தரிசனம் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

