
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம்
பாடல்கள் 14-18
14. வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் அருள்பெற்றுத் துன்பத்தின்றும்
விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களிஎனக்கே.
அடியேனை ஆட்கொண்டருளிய உத்தரகோச மங்கை அரசே, நீ எத்தனை கருணை உள்ளம் கொண்டவன். உன்னை விரும்புகின்ற எல்லா அடியார்களின் உள்ளத்திலும் நீங்காது நிலைத்து உறைகின்றவன். நானும் அப்படி ஒரு அதிர்ஷ்டக்காரன். அப்படி உன் கருணை என் மீதிருந்தாலும் எப்படி அருமையான தெளிந்த நீர்ப்பரப்பில் அமிழிந்தி ருந்தாலும் நீரைக் குடியாமல் தாகத்தால் வாடுகிறவன் போல் அல்லவா நான் இருக்கிறேன். உன் கருணை என் மீது நிறைந்திருந்த போதும் என் மனம் உன்னை நினையாமல் உலக ஈர்ப்புகளில் அல்லவோ செல்கிறது. ஐயா, பரமேஸ்வவரா, என்னை இந்த குணத்திற்காக, குறைக்காக , கை விட்டு விடாதீர். நான் உமது திருவடியில் சரணமடைந்து பேரின்பம் அடைய அருள் புரியவேண்டும்.
15. களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டும் கலந்தருள
வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே
எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடை என்னப்பனே.
உத்தரகோச மங்கைக்கு ராஜாவே, சர்வேஸ்வரா, இந்த பிரபஞ்சத்தில் ஒளிர்கின்ற ஒளிகளுக்கெல்லாம் ஒளியைத் தரும் உந்தன் திருவடிப் பேரொளியில் அடியேன் வணங்கி இருக்க வழி காட்டவேண்டும். நினதருள் கிடைத்தும் அதை பூரணமாக அனுபவிக்க என் மனம் தவறுகிறதே. எனக்கு தந்தையும் தாயும் அம்மையப்பா நீ ஒருவன் தானே. என் ஞானபிதாவே, என்னை அடிமையாக எப்போதோ நான் அர்ப்பணித்துவிட்டேனே. நினது தூக்கிய திருவடி தரிசனம் சதா பெறுவதற்கு அருள்வாயாக. என் மனத்தில் வேறெந்த எண்ணமும் இன்றி நின் திருவடி ஒன்றே பதிந்திருக்கவேண்டும். அது இல்லாத என்னை கைவிட்டு விடவேண்டாம்.
16. என்னைஅப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின் றெய்த்தலைந்தேன்
மின்னைஒப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ மிக்கின்மெய்யே
உன்னைஒப் பாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
அன்னைஒப் பாய் எனக் கத்தன்ஒப் பாய்என் அரும்பொருளே.
உத்தரகோச மங்கை மங்களநாதா, பொன்னார் மேனியனே, உன் மேனிக்கு இணை மின்னல் ஒன்றே. நீயே உனக்கு நிகரானவன். நீ என் தாய், நீ என் தந்தை. எனக்குக் கிடைத்தற்கு அரிய அரும் பொருளே, பரம்பொருளே, அடியேனை, ”நீ பயப்படாதே நான் இருக்கிறேன்” என்று சொல்ல யார் இருக்கிறார்கள்? உனக்கு அடிமை நான். உன்னை நினைக்காவிட்டாலும் என்னை கை விட்டுவிடாதே. அஞ்சேல் என அருள் புரிவாய் அப்பா.
17 பொருளே தமியேன் புகலிட மேநின் புகழ்இகழ்வார்வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்மை யார்விழுங்கும்
அருளே அணிபொழில் உத்தர கோசமங் கைக்கரசே
இருளே வெளியே இகபர மாகி இருந்தவனே.
உத்தரகோச மங்கை மன்னா, மனதில் உண்மை பக்தியோடு, பாசத்தோடு, அணுகியவரை பரவசத்தோடு அணைக்கும் பரமேசா, இருளும் நீ, ஒளியும் நீ, எல்லாமும் நீ இம்மை மறுமை இரண்டுமே நீ. அனாதையான எனக்கு சரணாகதி அளிப்பவனே , உன் புகழை நிந்திப்பவர்க்கு, பயமளிப்பவனே, என்னை கைவிட்டு விடாதே.
18. இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால்
விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க நஞ்சமுதா
அருந்தின னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே.
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அம்ருதம் வரும் முன்பு வாசுகியின் நஞ்சு ஆலஹாலவிஷமாக வெளிவந்தது. எவரும் அதை நெருங்க அஞ்சியபோது லகுவாய் அதை எடுத்து விழுங்கிய நீலகண்டனே, உத்தரகோச மங்கை மன்னா, சர்வ வியாதிக்கும், துன்பத்துக்கு நிவாரணியாக, அருமருந்தானவனே, எழுந்தருளியிருந்து, என்னை ஆண்டு கொள்வாய். என்னை உனக்கு எப்போதோ இழந்துவிட்டேன். நான் உன் அடிமை , உடைமை, என்னை ஏற்றுக்கொள். கைவிட்டு விடாதே.
மணிவாசகரின் தூய பக்திக்கு ஈடு இணை ஏது?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


