MAHA SIVARATHRI EXPERIENCE J K SIVAN

மஹா சிவராத்ரி அனுபவம் – நங்கநல்லூர் J K SIVAN
சிவனுக்கு பிரத்யேகமாக வருஷத்தில் ஒரு ராத்திரி உலகமெங்கும் உள்ள சைவர்கள் கொண்டாடுகிறார்கள். அது இன்று சிவராத்திரி என்று பெயர் கொண்டது. அன்று தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என காஷ்மீரத்தில் கொண்டாடுகிறார்கள். சிவராத்ரிக்கு 3 நாள் முன்னாடி வைபவம் ஆரம்பித்து சிவராத்ரிக்கு பிறகும் 2 நாள் தொடரும்.
சிவன் அபிஷேகப் பிரியன். ருத்ரம் சமகம் ஆயிரக்கணக்கில் சொல்லி அபிஷேகம் நடக்கும்போது பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அந்த மந்திர சப்தத்துக்கு தனி ஒரு சக்தி உண்டு. நான் ஸ்ரீ மஹா ருத்ர குழுவில் சேர்ந்து பல கோவில்களில் சிவன் முன்னால் அமர்ந்து சொல்லியிருக்கிறேன். அந்த ஆனந்த அனுபவத்தை எப்படி சொல்வேன்? அனுபவித்திருக்கிறேன். த்ரியம்பகம் என்ற மஹா மிருத்யுஞ்சய ஜபத்தை விடாமல் சொல்லிக் கொண்டும் இருப்பதும் என் வழக்கம்.
ஓம் ந ம சி வா ய என்பது பஞ்சாக்ஷர மந்த்ரம். ஐந்தெழுத்து மந்திரம் என்று தமிழ் மறை சொல்லும். ஹர ஹர மஹா தேவா, சம்போ மஹா தேவா என்று சிவனை உச்சரித்து வணங்குவது வழக்கம். சிவராத்ரியை வடக்கே சிவனின் ஆனந்த தாண்டவத்தை சம்பந்தப்படுத்தியும் கொண்டாடு கிறார்கள்.
இந்த வருஷம் 2023ல் பெப்ரவரி 18, சிவராத்ரி எப்போதும் மாசி மாத கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியில் வரும். இன்று இரவெல்லாம் உபவாசம் இருந்து, கண் விழித்து, வில்வார்ச்சனை, நாம ஜபம், அபிஷேகம் நடக்கும்.
”அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்வதாண்டவர், ஜலந்தராசுர சம்ஹாரர், கால ஸம்ஹாரர்….இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.
அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவது. அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தியைப் பார்த்திருப்பீர்கள். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. கவனித்திருக்க மாட்டீர்களே ! இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும். இந்த லிங்கோத்பவர் யார்?
ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு ஸ்லோகம் சொல்வோம் , அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:
ஆபாதால நப: ஸ்தலாந்த புவன ப்ரஹ்மாண்டமா விஸ்புரத் ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம் ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம் விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||
என்ன அர்த்தம்? பாதாளம் முதல் ஆகாச பரியந்தம் வரை எல்லையே யில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும். ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் இல்லை. எந்த வஸ்துவை எதிரில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை பிரதி பலிக்கும். குண-தோஷம் இல்லாதது . ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். நிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தம் தான் இந்த ஸ்படிக லிங்கம். அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ் களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்மா வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது தெரியும்.
மேலே சொன்ன ஸ்லோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. “பூர்ணேந்து” என்று ஸ் லோகத்தில் வருவது, ‘பூரண இந்து!’; இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும்,கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட “ஸகள” ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா ‘நிஷ்கள’ தத்வமாயிருக்கிற போது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக் கிறார். அதிலிருந்து அம்ருதமே கங்கை மாதிரி கொட்டுகிறது.
யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வ ரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அம்ருதம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோக மெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் ருத்ர அபிஷேகம் செய்வது. ருத்ர அபிஷேகத் துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை அறிவுறுத்துகிறது.
ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம் தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த் தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.
லிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது?வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவைகளுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்திற்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை காட்டவே லிங்காகாரம்.
சரியான வட்டமான (circle) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. “பிரபஞ்சமே ‘எல்லிப்டிக்’ காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை (Solar System) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீள வட்டமாகத்தான் இருக்கிறது” என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் “ஆவிஸ்புரத்” என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.
யாராவது நமக்கு ஆப்த பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; நேரில் அவருடைய உருவத் தையும் பார்த்தால் இன்னமும் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்ரஹம் பண்ணினால் தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால் தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அரு வுருவான லிங்கமான தோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்யரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை, அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தான் அவர் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார். அடி முடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரி யாகும்.
அப்படி ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லி தோண்டும் ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானவர். பக்ஷிக்குப் பறப்பது ஸ்வபாவம். பக்ஷியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம் திரும்பி வந்தது. ‘நான் கண்டு விட்டேன்’ எனப் பொய் சொல்லியது. அதனால் தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படிஇருக்கிறது.
பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம் அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால்,பரமாத்மா ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்; சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாத பரமேஸ்வரனை ‘என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்’ என்கிற அகங்கார மில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ‘ஆசுதோஷி’ என்று ஒரு பெயர் இருக்கிறது. ‘ஆஷுடோஷ் முகர்ஜி’ என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தர் வங்காளத்தில் இருந்தது தெரியுமா?. ஆசுதோஷி என்கிற வார்த்தை தான்’ ஆஷுடோஷ்’ என்றாயிற்று. ‘ஆசுகவி’ என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்ரஹம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.
சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை. சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார். சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார் என்பது ஒரு அருமையான வாசகம்.
இனி ஒரு சின்ன சிவராத்திரி மகிமை கதை சொல்லி முடிக்கிறேன். வாரணாசியில் ஒரு வேடன். தான் கொன்ற பறவைகளோடு காட்டிலிருந்து திரும்பினான். இரவு நேரம் நெருங்கவே களைத்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான். கண் அயர்ந்தான். கண் விழித்த போது இரவு. இருட்டு. அன்று சிவராத்திரி என்பது அவனுக்கு எங்கே தெரியும்? மரத்தில் ஏறினான். கொன்ற பறவைகளை ஒரு மரக் கிளையில் கட்டினான். பொழுது விடிய காத்திருந்தான். அவன் ஏறியது ஒரு வில்வ மரம். கீழே ஒரு லிங்கம் இருந்தது அவனுக்கு இருட்டில் லிங்கம் இருந்தது தெரியாது. தூக்கம் வரவில்லையே என்ன செய்வது? நேரம் போவதற்காக மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே வீசிக் கொண்டிருந்தான். எல்லாமே கீழே லிங்கத்தின் மேல் விழுந்தது. பனி நீர் வேறு அதன் மேல் சொட்டியது. ஆகவே லிங்கத்துக்கு அபிஷேகமும் ஆயிற்று, வில்வார்ச்சனையும் ஆயிற்று!! பொழுது விடிந்தது. வேடன் வீடு சென்றான்.
சில காலத்தில் அந்த வேடன் இறந்தான். அவன் உயிர் யமலோகம் கொண்டு போகப் பட்டது. அதை தடுத்து சிவ கணங்கள் அவன் உயிரை சிவலோகம் கொண்டு செல்ல விரும்பின. எம தூதர்கள் தோற்றனர். எமனுக்கு விஷயம் போயிற்று. சிவலோகம் வந்தான் யமன். நந்தி அவனிடம் சிவராத்ரி மகிமை பற்றியும் அந்த வேடன் ஆற்றிய சிவ பக்தியும் சொல்ல அந்த வேடன் கைலாச பதவி அடைந்தான். அன்றிலிருந்து சிவ பக்தர்களை சிவன் உத்தரவு இன்றி யமன் தொடுவதில்லை. மார்க்கண்டேயன் அனுபவம் அவன் என்றும் மறப்பதில்லை.
இதையே கொஞ்சம் முன் பிறவி சமாச்சாரம் சேர்த்து இன்னொரு ஸ்வாரஸ்ய கதையாகவும் சொல்வதுண்டு. ராஜா சித்ரபானு இக்ஷ்வாகு வம்சம். மஹா சிவராத்திரியில் மனைவியோடு சர்வேஸ்வர பக்தியோடு உபவாசம் இருந்து சிவ பூஜை பண்ணினான். அன்று ரிஷி அஷ்டாவக்ரர் அவன் அரண்மனைக்கு வந்தார்.
”நீ எதை உத்தேசித்து சிவராத்திரி விரதம் இருக்கிறாய்?” என்று ராஜாவை கேட்டார்.
”எனக்கு முன் ஜென்ம நினைவுகள் வந்தது. வாரணாசியில் நான் ஸுஸ்வரன் என்ற ஒரு வேடனாக இருந்தேன் என்று மேலே சொன்ன கதையை சொன்னான். உபரி விஷயம் என்னவென்றால் ஒரு மானைக் கொல்ல அம்பு குறி பார்த்தான். அதன் குடும்பம் அருகில் நின்றது. அவை அந்த மானின் மரணத்தால் அடையப் போகும் சோகம் கண்ணில் தெரிந்தது. எனவே மானைக் கொல்லவில்லை. அவன் வைத்திருந்த தோல் பையில் துளை. அதன் வழியாக அதில் இருந்த நீர் சொட்டிக் கொண்டிருந்தது. பொழுது போகாமல் பசியோடு விடியும் வரை அந்த மரக் (வில்வ) கிளையில் அமர்ந்து இலைகளைக் கிள்ளி கீழே போட்டு பொழுது போக்கினான். கீழே ஒரு சிவலிங்கம். அதன் மேல் எல்லா வில்வ இலைகளும், நீர்ச் சொட்டுகளும் இரவெல்லாம் விழுந்தது. மறுநாள் காலை பசியோடு வீட்டுக்கு போகும் போது வழியில் உணவு கிடைத்து அதை சாப்பிடும் முன்பு யாரோ ஒரு முதியவன் ”எனக்கு ரொம்ப பசியா இருக்கிறதே, எதாவது இருந்தால் கொடேன் என்று சொன்ன போது தன் உணவை அவனுக்கு கொடுத்தான்”இதனால் அந்த வேடனுக்கு சிவராத்திரி விரதம், வில்வ அர்ச்சனை, அபிஷேக பலன், அதிதி போஜன பலன் அனைத்தும் கிடைத்து மறுஜென்மத்தில் சித்ரபானு ராஜாவானான் என்று வரும்.
சிவ புராணத்தில் ஆறு விஷயங்கள் முக்கியம் என்று சொல்லப்பட்டுள்ளது.
சிவலிங்கத்துக்கு இடைவிடாது அபிஷேகம் , ஜலம் , பால், தேன், வில்வ தளம், விபுதி, பன்னீர், சந்தனம், தயிர்,இளநீர், இவற்றால் நைவேத்யம். பழங்கள், சாம்ப்ராணி, ஊது பத்திகள், தீபம், வெற்றிலை பாக்குவஸ்த்ரம். மந்திர உச்சாடனம் செய்வது ஸம்ப்ரதாயம் ..
2010 சிவராத்திரி அன்று கள்ளக்குறிச்சி பக்கத்தில் தண்டலை கிராமத்தில் ஸ்வயம்புனாதீஸ்வரர்கோயிலில் ஆறு கால பூஜையிலும் பங்கேற்றேன். தண்டலை கள்ளக்குறிச்சியிலிருந்து 5- 6 கி.மீ தூரம். ஒரு பசுமையான கிராமம். மூன்று பக்கமும் ஏரி சூழ்ந்து திருவரங்கத்தில் ரங்கநாதனைப் போல் இங்கே சிவன் குடி கொண்டி ருக்கிறார். சுயம்பு லிங்கம். கொஞ்சம் பின்னமடைந்து கர்பக்ரஹத்துக்கு பின்னாலே பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்கள். மகா பெரியவா 70-75 வருஷங்களுக்கு முன்னால் வந்து இங்கே தங்கி இங்குள்ள பெரிய லிங்கத்துக்கு பூஜை செய்திருக்கிறாராம், ஒரு மண்டலம் இங்கே வாசம் பண்ணியபோது பெரியவா அப்போது இங்குள்ள ஸ்வயம்புனாதீஸ்வரர் , அம்பாள் அகிலாண்டேஸ்வரி, ஆகியோரின் சான்னித்யம் பற்றி சொன்னதை உள்ளூர் அக்ரஹார வாசிகள் கேட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் வயதான உறவினர். இந்த ஊர் வாசி. ஸ்வயம்புனா தீஸ்வரர் ரொம்பவே கம்பீரமான உருவம் கொண்டவர். தண்டலையில் இப்போது அக்ரஹாரம் இல்லை. எல்லோரும் வேலை தேடி எங்கெங்கோ குடியேறி விட்டார்கள். விவசாயிகள் மட்டுமே காணப்படுகிறார்கள். முழுமையாக சிவனை கவனிக்க எவருமில்லாத நிலையில் ஒருவர் பகுதிநேர வேலையாக — முழுநேர வேலை வேறு எங்கோ !!! எல்லா கோவிலுக்கும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததால் வருமானம் இல்லை என்பதால் சிவாச்சார்யர்களும், சில கோவில் பட்டாச்சர்யார்களும் வேறு வேலை தேடி செல்கிறார்கள். கோவில்கள் பூட்டிக் கிடக்கின்றன. இந்த அவல நிலை மாறவேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப, குல தெய்வ, ஊர்க் கோவில்களின் பராமரிப்பில் ஈடுபாடு கொண்டு அவற்றை சிறப்புற பேணிக் காக்க வேண்டியது அவசியம். இதையே பரமாச்சார்யர் அடிக்கடி வலியுறுத்திச் சொல்வார். பெரிய கோவில்கள், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, திருப்பதி, சிதம்பரம், காஞ்சிபுரம், போன்றவைக்கு செல்பவர்கள் மற்ற கோவில்களையும் சென்று தரிசிக்க வேண்டும். கிடைத்த சிவாசார்யரை வைத்துக்கொண்டு அவருக்கும் உதவி செய்து நான் சென்ற வருஷம் சிவராத்திரி அர்ச்சனை அபிஷேகங்கள் செய்தோம். இதை சிறப்பாக கொண்டாட பெரிதும் உதவி எல்லா செலவுகளையும் பொறுப்பேற்றது தலைமுறை தலைமுறையாக அந்த ஊர்க்காரரும் கள்ளக்குறிச்சியில் மிகப் பிரபலமான கிரிமினல் வக்கீல் ராஜாவும் அவர் குடும்பத்தாரும் தான்.. தாய் 10 அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள் அதை நிதர்சனமாக நேரில் பார்த்து வியந்தேன். ராஜாவின் புகழ் எட்டு திசையிலும் பரவி இருப்பது போலவே அவரது மகன் ராஜா பிரசன்னாவின் புகழும் கூடவே பரவி இருக்கிறது. மகன் சிவில் வக்கீல். ஒற்றுமையான அந்த குடும்பத்தில் பெண்கள் உமா ராஜாவும், கிருத்திகா ராஜ பிரசன்னாவும் அலைந்து பாடுபட்டு எல்லா அபிஷேக, அர்ச்சனை, வஸ்த்ரங்கள், பிரசாதங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் சேகரித்து தண்டலையில் சேர்த்தனர். நாலு கால அபிஷேகம், அர்ச்சனை சிறப்பாக நடைபெற உதவியவர்கள். இப்போது உமா ராஜா இல்லை, சிவனடி சேர்ந்து விட்டார்.
தண்டலையில் சிவன் கோவிலுக்கு அருகே ஸ்ரீ சாமுண்டிஸ்வரி எழுந்தருளி இருக்கிறாள். பல நூறுஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அம்மன் மைசூரிலிருந்து எப்படியோ இங்கு வர யாரோ பக்தர்கள் எந்த காலத்திலே யோ புண்யம் செய்தவர்கள் உதவி இருக்கிறார்கள்.
அம்மன் கோவிலில் உள்ளே சென்று நானே விளக்கேற்றி, ஸ்லோகம் சொல்லி, தீபாராதனை காட்டி விபூதி கும்குமம் அங்கிருப்பவர்களுக்கு விநியோகித்தேன். மனம் மிகவும் குளிர்ந்தது. அமைதியான சூழ்நிலை. சிவன், சாமுண்டி கோவிலைச் சுற்றி முப்புறமும் பெரிய ஏரி. எங்கும் பச்சைப் பசேலென வளமையான நெல் வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை. ஒத்தையடிப்பாதை. ஏரிக்கரையில் ஒரு சில மூங்கில் கொத்துக்கள். வேப்ப, அரச மரத்தடியில் மேடை. அதில் ஒரு ஓரமாக அமர்ந்து வயல், ஏரி, அம்மன் இதை மட்டுமே பார்த்து குளிர் தென்றல் காற்றில் நிசப்தமான அந்த சூழ்நிலையில் கண் மூடி அம்மனை நினைத்த போது மனதில் ஒரு கவலையும் இல்லை. நேரம் கிடைத்த போதெல்லாம் தண்டலை சென்று ஏரிக்கரையில் மேடையில் மரத்தடியில் அமர்ந்து வேப்பமர தென்றலை சுவாசித்தால் நோய் அணுகாது, எண்ணங்கள் சீர் படும். ”இவ்வாறு இங்கே தனியே வந்து அமர்ந்து அம்பாளை நினைத்தால்,என் சொந்த சமாச்சாரங்களில் உள்ள சிக்கல்கள் அவிழ்கின்றன. புதிய தெம்புடன், புத்துணர்ச்சி பெற்று திரும்புவேன் ” என்று வக்கீல் ராஜா என்னிடம் சொல்லியதில் 100க்கு 1000 மடங்கு உண்மை என்பது சிறிது நேரம் அந்த மேடையில் உட்கார்ந்த போது நானே அனுபவித்து உணர்ந்தேன்.தண்டலை ஸ்வயம்புநாதீஸ்வரி சந்நிதியில் சிவராத்திரி அன்று நாலு காலமும் ருத்ரம் சமகம் பஜித்தோம், த்ரிசதி அர்ச்சனை செய்தோம், சூக்தங்கள், தேவார திருவாசகங்கள் ஓதினோம். கிட்டத்தட்ட 250-300 கிராம வாசிகள் குடும்பத்தோடு வந்து அமர்ந்து 12 மணி நீரம் கண்ணுறங்காமல் சிவராத்த்ரி இரவு கொண்டாடி னார்கள். நான் சொல்லிக்கொடுத்த ஸ்லோகங்களை, தேவார திருவாசக பதிகங்களை திருப்பிச் சொன்னார் கள். அவர்கள் கையால் புஷ்பங்களை மனதார வேண்டிக்கொண்டு தட்டில் போட்டு அதை அர்ச்சகர் ஸ்வயம்
புனாதீஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சமர்பித்தார்கள். அனைவருக்கும் நாலு கால பூஜை பிரசாதங்கள் விநியோகம் செய்தோம். 12 மணி நேரமும் நின்று கொண்டே இருந்தேன். நிறைய புராண சம்பவங்கள், கதைகள் சொன்னேன். ஆர்வமாக அந்த விவசாய மக்கள் கேட்டு ஆனந்தம் அடைந்தது, யாரும் அவர்களுக்கு இதெல்லாம் கற்றுத் தரவில்லையே என்ற ஆதங்கத்தை மனதில் நெருடச் செய்தது. சொன்ன எனக்கும் கைலாசத்தில் இருப்பது போன்ற ஆனந்தம் ஏற்பட்டது

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;