
அவசர ”777 திடீர் சாமி தரிசனம்.- நங்கநல்லூர் ஜே .கே. சிவன்
ஒரு நிமிஷம் யோசியுங்கோ? இப்போதெல்லாம் திருப்பதி ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு தரிசனம் பெற போகவேண்டுமென்றால் முன்பே பதிவு செய்து விட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஏன் ஸார் இப்படி? முன்பெல்லாம் இப்படி இல்லையே? என்று கேட்பவர்கள் சில விஷயங்களை சௌகர்யமாக மறந்து விடுகிறார்கள்.
என் சின்ன வயசில் 75 வருஷங்களுக்கு முன்பு சர்வ சாதாரணமாக நினைத்தபோது திருப்பதி , ஸ்ரீ ரங்கம் கோவிலுக்குள் நுழைந்தேன். இப்போது ஏன் இப்படி என்றால்….. என்ன காரணம்???
முன்பை விட இப்போது ஜனத்தொகை அதிகம்.
”ஓஹோ எல்லோருமே கோவிலுக்கு போக ஆரம்பித்தது விட்டார்களா? என்றால் இல்லை. அப்போதைக்கு இப்போது பாதி பேர் கோவிலுக்கே போவதில்லையே .பின் எதற்காக கூட்டம்?
அப்போது கோவிலுக்கு அருகிலே இருந்தவர்கள், நடக்க முடிந்தவர்கள், மாட்டு வண்டி குதிரை வண்டியில் வர முடிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்வார்கள். இப்போது ரயில், ஆகாய விமானம், பஸ், ஆட்டோ, கார், வேன் இரு சக்கர வாகனங்களென்று வசதி பெருகிவிட்டதால் தொலை தூரத்திலிருந்தும் கூட ஏதோ வேண்டுதலுக்காக, அல்லது தரிசனத்துக்காக சுலபத்தில் வந்து விடுகிறார்கள்.
முன்பு ஸ்ரீரங்கம் திருப்பதி எங்கே இருக்கிறது எப்படி போவது என்று வழி கூட தெரியாதவர்கள் இருந்தார்கள். காட்டு பாதை அதிகம், கள்ளர் பயம், விலங்குகள் பயம், இருட்டு என்று இடையூறுகள். இப்போது மீடியா, செய்தி தாள்கள், பத்ரிகைகள், புத்தகங்கள், வாட்ஸாப்ப், முகநூல், யூட்யூப் மொபைல் என்று பல விதங்களில் கோவில்கள், படங்கள், விழாக்கள், போக வர GPS வழிகாட்டி, தங்க வசதி, பற்றி விபரங்கள் வினாடியில் கிடைக்கிறது. ஆகவே கூட்டம். அதை சமாளிக்க கூண்டுகள், வரிசைகள், முன் பதிவுகள்.கட்டணங்கள். இது எது போலஎன்றால் மருந்து சிகிச்சை ஆஸ்பத்தரி, ஆம்புலன்ஸ் வசதிகள் விஞ்ஞானம் மூலம் அதிகரித்து விட்டதுபோல் கூடவே புது புது வியாதிகளும் முளைத்து விட்டதல்லவா அது போல். முன்பு யாருக்கு டெங்கு, கோரோனோ கொலஸ்டரோல், எய்ட்ஸ் தெரிந்தது?
இன்னொரு முக்கிய விஷயம் திருப்பதி வெங்கடேசன் கலியுக வரதன்,கண்கண்ட தெய்வம்,ரங்கநாதனும் அப்படியே என்று பேர் பிரபலமாகிவிட்டதால், (எல்லாம் மேலே சொன்னவைகள் மூலம்) தங்கள் கவலைகள், ஏக்கங்கள், துன்பம், சிக்கல் தீர, விருப்பங்கள் நிறைவேற பக்தர்கள் அதிகமாக கூடுகிறார்கள்.
முன்பெல்லாம் அன்னதானம் கிடையாது. யார் வந்தாலும் கை நிறைய பிரசாதம் உண்டு. இப்போது உட்காரவைத்து இலையில் தட்டில் இலவச சோறு பரிமாறுகிறார்கள். ஏன் கூட்டம் கூடாது?
முன்பு இருந்த வாழ்க்கையில் மனச்சிக்கல் , அழுத்தம் சஞ்சலம் இல்லை. இப்போது ஐந்து வயது முதல் மனதில் ஏதோ ஒரு வித அழுத்தம் வந்து சேர்ந்து கொள்கிறது. வாழ்க்கையின் திசை மாறி விட்டது. டாக்டரிடம் போனால் இருக்கும் சேமிப்பை எல்லாம் இழக்க நேரிடுகிறது. பகவான் எனும் வைத்தீஸ்வரனிடம் சென்றால் , ஆன்மிகம் மூலம்,எளிமையாயிற்றே,இலவசமாயிற்றே. ஆகவே அமைதி தேடி வரும் நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டம் அதிகம்.
கோவிலை பெரிசு பண்ண வழியில்லை. ஆகவே கூட்ட நெரிசலை தவிர்க்க பலவித யுக்திகள் தேவையாகிவிட்டது. எப்படி ஒவ்வொரு நாளும் வரும் லக்ஷக்கணக்கான கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும்?
முதியோர், உடல்நலக் குறைபாடு உள்ளோர், தொலைதூரத்திலிருந்து வருபவர்கள், ஆகியோருக்கு விரைவான தரிசனம் உதவியாக இருக்கலாம். அதற்காக சிறப்பு வசதிகள் வந்துவிட்டது அதில் தப்பு கண்டுபிடிக்க முடியாது. முடியாதவர்கள் யூ ட்யூபில் தரிசனம் பெறுவோம். அதற்கும் வசதி இருக்கிறதே.
கோவில்களின் கூட்டம் இன்று சமூக, பொருளாதார, ஆன்மீக மாற்றங்களின் விளைவு. “Special Dharshan” சில இடங்களில் நிர்வாகத் தேவையாகி விட்டது. பாரபக்ஷம் எதுவென்றால் VIP தரிசனம். அதுவும் பல காரணங்கள் கொண்டதாக உள்ளது.
மேலே சொன்ன காரணம் எதையும் பற்றி அறியாத, பாமர பக்தர்கள் இன்றும் இருக்கிறார்கள். பன்னிரண்டு பதினைந்து மணி நேரம் கூட கூண்டுகளில் அமர்ந்து மெதுவாக ஊர்ந்து இலவச தரிசனம் பெறுகிறார்கள். குறை சொல்வதில்லை. அவர்களுக்கு உணவு கிடைக்கிறது. உட்கார இளைப்பாற, கழிப்பறைகள் வசதி உள்ளது.
அக்காலம் போலவே இக்காலத்திலும் கோவில் தரிசனத்துக்கு என்று எப்போதும் நேரம் ஒதுக்காதவர்கள் . அவசரம் இல்லாமல் தரிசனம் பெற துணிந்தவர்கள் இருக்கிறார்கள். என்றுமிருப்பார்கள்.
எதுவுமே காத்திருந்து பெற்றால் அதற்கு மதிப்பு அதிகம். உண்மையான ஆத்மீகம் பக்தி மனதில் தான் இருக்கிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

