
புண்ய மாசம் புரட்டாசி – நங்கநல்லூர் J K SIVAN
ஹிந்துக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புண்ய தினமாக அமைந்துள்ளது. மாதங்களும் அவ்வாறே தனித்வமான
விசேஷங்கள் கொண்டவை. இதோ புரட்டாசி மாதம் பிறந்து இன்று நாலு நாள் ஆகிவிட்டது. புரட்டாசி ரொம்ப புகழ் வாய்ந்த தெய்வீக மாசம். தமிழ் வருஷத்தில் ஆறாவது மாசம். ஜோசியர்களைக் கேட்டால் சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்கள் தான் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாசம் ஒரு சாமி மாசம். மார்கழி மாதிரி. முக்கியமாக நமது தாத்தா பாட்டிகளின் அருளாசி கிடைக்கும் மாசம். நம்ம மஹா விஷ்ணுவுக்கு ரொம்ப பிடித்த மாசம். பெருமாள் கோவில்களில் இந்த மாசம் விமரிசையாக பூஜைகள் நடக்கும். என் நண்பன் என்னோடு SISCO எனும் பெரிய கப்பல் நிறுவனத்தில் பணி புரிந்த ஸ்ரீனிவாசனின் வீட்டில் ஒவ்வொரு புரட்டாசி சனிக் கிழமையும் பிரபல சங்கீத வித்துவான்கள் கலைஞர்கள் சிறப்பாக நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்துவார்கள். இது பல வருஷங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஆரம்பித்து வைத்தவர் என் நண்பனின் தந்தை ஸ்ரீ கொத்தமலிங்கம் சுப்பு அவர்கள்.எல்லாவற்றையும் விட புரட்டாசி எனக்கு ரொம்ப பிடித்த இருப்பதற்கு நானே தான் காரணம். ஆமாம் புரட்டாசி மகம் கிருஷ்ணபக்ஷம் அன்று 1939ல் பிறந்ததால் இன்றோடு 86 முடிந்து 87க்குள் தலை நீட்டுகிறேனே. அது எனக்கு இம்பார்ட்டண்ட் தானே. உலகத்திலேயே அதி முக்கியமான நாள் அல்லவா இது.
புரட்டாசி மாச அமாவாசைக்கு பெயர் மஹாளய அமாவாசை. மஹாளய பக்ஷம் பொதுவாக பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் ஆரம்பித்து அமாவாசை வரை நீடிக்கின்றது. மஹாளய பக்ஷம் பதினைந்து பதினாறு நாளும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறோம், தர்ப்பணம் பண்ணுகிறோம். அவர்கள் ஆசி பெறுகிறோம்.
சக்திஸ்வரூபமான உமா தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், சிவன் அர்த்தநாரீசு வராகவும் ஒன்றுபட்ட தினம் தான் கேதார கௌரி விரதமாகும். இதை லக்ஷ்மி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்றும் சொல்வதுமுண்டு. அநேகமாக புரட்டாசியில் இது நிகழும். கிரஹங்களில் புதனுக்குரிய மாசம் புரட்டாசி. கன்னி மாசம் என்பதை, கன்னிமூலை விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் அனுஷ்டிப்பதுண்டு.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு விசேஷமானவை. கணேச பக்தர்கள் இந்த விரதங்கள் அனுஷ்டிப்பது மூலம் விநாயகப்பெருமானின் நல் ஆசியைப் பெறுகிறார்கள்.
மஹாளயபக்ஷம் புரட்டாசியில் பிரதானமானது. புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை என்ற புனிதமான நாள். மஹாளய பக்ஷம் முழுதும் தினமும் நம்மமுடைய மூதாதையர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து ஒரு பத்து நாட்கள் நம்மோடு தங்கிச் செல்கிறார்கள். நம் கண்ணுக்கு தெரியாததால் நாம் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. எள்ளும் நீரும் அவர்களுக்கு அளிப்பதன் மூலம், தான தர்மங்கள் பண்ணுவதன் மூலம், அவர்கள் திருப்தி அடைந்து நம்மை வாழ்த்திவிட்டு திரும்பிச் செல்கிறார்கள்.
புரட்டாசி மஹா விஷ்ணுவுக்கு மட்டுமில்லை, அவர் ஸிஸ்டர் , அம்பாளுக்கும் உகந்த மாதம். சிவ பெருமானுக்கும், விநாயகப் பெருமானுக்கும் இம்மாதத்தில் விரதம் நோன்பு கடைபிடிக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமை என்றாலே கோவிந்தா கோவிந்தா என்று குரல் வாசலில் கேட்கும். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து நாமம் போட்டுக்கொண்டு கையில் சொம்பில் அரிசி பருப்பு காசு பெற்றால் தான் அடுத்த வீட்டுக்கு போய் குரல் கொடுப்பார்கள்.
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருப்பவர்கள் பெருமாளுக்கு பச்சரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து தீபம் ஏற்றி பெருமாளை வணங்குவார்கள். கல்யாணத் தடைகள் நீங்கும். திருப்பதி திருமலையில் கும்பல் சொல்லி முடியாது. நிறைய மொட்டைத் தலைகளை சந்தன காப்போடு பார்க்கலாம். வேங்கடேசன் ஏழுமலையான் அவதரித் த நாள் அல்லவா?.சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சனி பகவானின் தீய பலன்கள் நெருங்காது.
தமிழ் வருஷத்தை 6 ருதுக்களாக பிரிக்கிறோம். இதில் வர்ஷ ருது தனங்களையும், தானங்களையும் அளிக்கக்கூடியது. இது புரட்டாசியில் வருகிறது.
இன்னொரு குதூகலம் என்னவென்றால் புரட்டாசி மஹாளய அமாவாசை 21.9.25 அன்று முடிந்ததும் நவராத்திரி விழா துவங்கும். இந்த மாசம் நவராத்ரி வைபவம் 22.9.25 அன்று துவங்குகிறது. மஹாளய அமாவாசை அன்றே சாயந்திரத்துக்குள் வீட்டில் ஒரு சரியான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு கொலுப்படி காட்டப்படும். கொலுப்படி கட்டுவது ரொம்ப ஒரு சாமர்த்தியம் நிறைந்த வேலை. கண்டான் முண்டான் சாமான்கள் வெள்ளை வேஷ்டிக்குள்ளோ, கலர் புடவைக்குள்ளோ மறைந்து ஐந்து ,ஏழு, படிகளாக வெளியே காட்சி அளிக்கும். உள்ளே, ஸ்டூல், பென்ச், அரிசி மூட்டை, மர, தகர டப்பாக்கள், சாய்த்து வைக்கப்பட்ட பெட்டிகள் இத்யாதி விஷயம் நிறைந்தது. இப்போதெல்லாம் டிஸ்மாண்டில் DISMANTLE பண்ணக்கூடிய இரும்பு, அலுமினிய படிகள் வீட்டுக்குள் வந்து சேர்ந்து விட்டது. மற்ற நாட்களில் இந்த கொலுப்படி ஒரு ஸ்டீல் புத்தக அலமாரி. என் அறையில் அப்படி தான் ஸார் .
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி தரும் பண்டிகை நவராத்திரி. இது புரட்டாசிக்கு பெருமை. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையைத் தவிர திங்கள், புதன்கிழமைகள் கூட பெருமாளை வழிபட நேர்த்தியான நாட்கள். எனவே விரத வழிபாடுகள் மகாலக்ஷ்மிக்கும் உகந்தவை. VISIT OUR WEBSITE, READ ALL PREVIOUS ARTICLES AND MY BOOKS FREELY . CLICK THE LINK https://youiandkrishna.org/04/10/2023/mahalayam-and-navarathri-j-k-sivan/
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

