
ரங் வாலி ஹோலி பண்டிகை — நங்கநல்லூர் J K SIVAN
இந்த வருஷம் 4.3.26 அன்று ஹோலி பண்டிகை. உலகில் அநேக ஹிந்துக்கள் கொண்டாடுவார்கள். ஜே-பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஹிந்துக்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. பல பேர் ஏழைகள். அன்றாட சாப்பாட்டுக்கு பல முறை யோசித்து வழி தேடுபவர்கள். எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தாலும் அதையெல்லாம் மறந்து சுகமாக, சந்தோஷமாக, அன்போது கூடி வாழ தெரிந்தவர்கள். பாக்கியசாலிகள். வருஷத்தில் ஒவ்வொருநாளும் வருஷம் முச்சூடும் அவர்களுக்கு ஏதோ ஒரு பண்டிகை இருந்து கொண்டே இருக்கும். நடுநடுவே கல்யாணங்கள் விமரிசையான விழாக்கள், கோவிலிலும் பொது இடங்களிலும். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்.!
வெளிநாடுகளில் மட்டுமல்ல,நமது நாட்டிலேயே பல மாநிலங்களிலும் ஹோலி பண்டிகை அன்று எல்லோர் மேலும் கலர் கலராக வண்ணங்களை பீச்சும், தெளிக்கும், பூசும் விழா வாக பரிமளிக்கிறது. இன்று வெள்ளை சட்டையைப் பார்க்கமுடியாது. தன்னை வான வில்லாக்கியதற்கு எவரும் கோபிக்க மாட்டார்கள். மகிழ்ச்சியோடு சிரிப்பார்கள். எப்போதும் அல்ல. இன்று ஒரு நாள். அது தான் ஹோலி பண்டிகை.
ஹோலி பண்டிகை கெட்டதை நல்லதும், தீமையை நன்மையும், வென்ற நாள். அன்பின் வெளிப்பாடு. வசந்தத்தின் வரவை அறிவுறுத்தும் நாள் என்றெல்லாம் அர்த்தம் சொல்வார் கள். சந்தோஷம் எப்படி வந்தால் என்ன?
ஹோலி கொண்டாட வயசு கிடையாது. ரங்வாலி ஹோலி என்றால் கிழம் கட்டைகள் கூட ஒருவர் மேல் ஒருவர் சாயம் பூசும், பீச்சும். வடக்கே இது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. எல்லாமே கலர் கலராக சிரிக்கும் . கிருஷ்ணன் பிறந்து விளையாடிய ஊரில் அடேயப்பா, கேட்கவே வேண்டாம்… நாம் இப்போது கொஞ்சம் பின்னாலே கண்ணன் காலத்துக்கே போவோம்.. இதோ இப்போது பிருந்தாவனத்தில் அல்லவா இருக்கிறோம் …
கோபிகளோடு கிருஷ்ணன் யமுனா நதி தீரத்தில் ராஸ லீலையில் அனைவரோடும் விளையாடுகிறான். அலகிலா விளையாட்டுடையான் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்… இப்போது நாம் பார்க்கும் கண்ணனுக்கு பத்து வயதுக்கு மேலே இல்லை….எங்கிருந்தோ இருந்து ஓடிவந்து இதோ ராதை அவனை இறுக அணைத்துக்கொள்கிறாள். மூச்சு முட்டுகிறது. அந்த சந்தோஷத்தோடு உரத்த குரலில் கண்ணன் மீது கொண்ட அன்பை பாசத்தை பெருமையோடு பாடுகிறாள். மற்ற கோபியர்களும் போட்டி போட்டுக்கொண்டு வந்து கண்ணன் மீது முட்டி மோதி அவனைத் தமது சொத்தாக்க முயல்கிறார்கள். கண்களில் ஆர்வம், மனதில் இன்பம். பக்தியும் பாசமும் கலந்த சொல்ல இயலாத சுகம்.ஒருத்தி எப்படியோ அவனது முகத்தை இறுக்கி பிடித்துகொண்டு காதில் ஏதோ ரகசியம் சொல்வதுபோல் அவன் கன்னத்தில் நிறைய முத்தமிட்டுவிட்டாள் . அவளது நீண்ட நாளைய ஆவல் நிறைவேறியது.
ஒருவள் கிருஷ்ணனின் பீதாம்பரத்தை இழுத்து அவனை தன்னோடு சேர்த்துக்கொண்டு கரும்பு தோட்டத்தில் தொபு கடீர் என்று அவனோடு சேர்ந்து வீழ்ந்தாள்.
ராதையும் கிருஷ்ணனும் நிஜமும் நிழலுமாகவே தோன்றினாலும், நிலவும் குளுமையும் போல் இணை பிரியாமலே நமக்கு காண்கிறார்கள். ராதையை நினைக்காமல் கண்ணனை எண்ண முடியவில்லை. ராதா இருந்தாளா, என்பதே கேள்வி இல்லை. கிருஷ்ணன் இருந்தான் என்றால் ராதை இருந்தாள் என்பதே விடை.
பிருந்தாவனத்தில் உடலும் உயிரும் கண்ணனே. அப்போது அங்கே வாழ்ந்தவர்கள் எல்லோரின் வாழ்க்கையுமே அவனைச் சுற்றியே அமைந்திருந்தது. கோபியர் அவனோடு சேர்ந்து விளையாடினர். அவன் குழல் நாதத்தில் மயங்கினர். அன்பை எவ்வளவு அவன் மீது கொட்டினார்களோ பலமடங்கு அவனிடமிருந்து அதைப் பெற்ற பாக்யசாலிகள் அவர்கள். . கோபியரில் தலை சிறந்தவளாக திகழ்ந்தவள் ராதா. அவளது குரல் கண்ணன் குழலைப் போன்று இனிமையானது என்று கூட சொல்லும் அளவுக்கு காந்த சக்தி கொண்டது.
கண்ணன் குழல் ஒலி உலகையே தன்னுள் அடக்கும் சக்தி வாய்ந்தது. அதில் மயங்கிய அனைத்து கோபியரும் கண்ணனை தங்கள் இதயத்தில் பிணைத்துக் கொண்டதோடு அல்லாமல் அவனைத் தங்களுக்கே என்று ஒவ்வொருவரும் போட்டி போட்டார்கள்.சொந்தமாக கருதினார்கள். அதில் முதலாவது ராதா. கிருஷ்ணன் தனது பிரேமையை அவளுக்கே அளித்தான். அவனிலும் 10 வருஷங்கள் அவள் மூத்தவள் என்பது அங்கு வித்யாசமாக படவே இல்லை. பிரேமைக்கு வயசோ, வித்தியாசமோ, மதமோ, மொழியோ எந்த பேதமும் கிடையாதே. இரு மனம் ஒன்றாய் கலந்த பின்னாலே எது வரும் குறுக்கே?
ராதா யார்? வ்ரிஷபானு என்கிறவர் அவரது பூர்வ ஜன்மத்தில் ராஜா சுச்சந்தராவாக இருந்தார். அவருக்கும் அவர் மனைவி கலாவதிக்கும் பிரம்மா கொடுத்த வரத்தின் பயனாக த்வாபர யுகத்தில் லக்ஷ்மி தேவியே பெண்ணாக அவதரித்தாள். அவளே ராதா. கலாவதி ராணியே வ்ரிஷ பானுவின் மனைவி கீர்த்தி குமாரி. வ்ரிஷபானு வசித்த ஊர் பர்ஸானா. தொலை தூரம் நடக்கவேண்டாம் . கொஞ்சம் தள்ளி கோகுலம் என்று ஒரு ஊர். அந்த ஊரில் நந்த கோபன் ஒன்று ஒரு பிரமுகன். அந்த ஊரின் கோபர் தலைவன். வ்ரிஷ பானுவின் நண்பன். ஒரு ஹோலி பண்டிகை போது நண்பர்கள் இருவரும் சந்தித்தனர். நந்தகோபன் வீட்டுக்கு வ்ரிஷபானு, மனைவியோடும், ராதாவோடும் வந்த போது தான் ராதையும் கிருஷ்ணனும் முதன் முதலாக சந்தித்தனர்.
அது இறைவனும் இறைவியும் சந்தித்த அதி திவ்ய சிநேக- பாவ சந்திப்பு. சாதாரணமான ஆணும் பெண்ணும் சந்திக்கும் உறவல்ல இது. மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமான தெய்வீக நேசம். பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள உறவையும் மீறியது. வ்ரஜ பூமியின் உயிரே கண்ணன் என்றால் கிருஷ்ணனின் ஆத்மா ராதா. மனித காதலோடுதெய்வீக பிரேமையை ஒப்பிட்டு எடை போடவே கூடாது. தவறான சிந்தனைக்கு அது அடி கோலும். புத்தியை பேதலிக்க வைத்துவிடும்.
ராதாவின் தூய காதல் கண்ணனைக் கட்டிப் போட்டிருந்தது. எல்லா கோப கோபியரும் கண்ணனை விரும்பினாலும் அவனது அன்பில் பங்கேற்றவர்களாக இருந்தும் ராதை எப்போதுமே தனி இடம் பெற்றிருந்தாள் . கண்ணனின் எண்ண பிரதிபலிப்பு அவள். இளம் வயதில் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் ராதையோடு சேர்ந்து விளையாடினான். கொஞ்சம் பெரியவள் என்றாலும் அவனோடு சரி சமமாக ஜோடியாக விளையாடினாள்.
ஒருநாள் கிருஷ்ணன் தேம்பி தேம்பி அழுதான். வெகுநேரம் யாரும் சமாதானம் செய்தும் அழுகை நிற்கவில்லை.
”எண்டா கிருஷ்ணா அழறே, உனக்கு என்ன ஆச்சு? .பதறினாள் யசோதை. சாப்பிட மறுத் தான். எவ்வளவோ சொல்லியும் முடியாது என்று தலை அசைத்தான். கெஞ்சிக் கூத்தாடி ஏன் அவன் அழுகிறான் என்ற காரணத்தை மெதுவாக கண்டுபிடித்தாள் அம்மா யசோதை.
”ராதா மட்டும் அழகாக சிவப்பா இருக்கிறாளே ?’ நான் கருப்பா இருக்கேனே”.விம்மலுக்கு இடையே ஒவ்வொரு வார்த்தையாக காரணத்தை வெளியிட்டான் அந்த மாய கிருஷ்ணன்.
”அப்படி ஒண்ணும் இல்லைடா என் செல்லமே. நீ தான் ரொம்ப, ரொம்ப, ரொம்ப அழகு” என்றாள் யசோதை அவனைக் கட்டிக்கொண்டு.
”நான் அழகு என்று யார் உன் கிட்டே சொன்னது? ராதாவை விடவா? அவள் தானே சிகப்பு. நான் ஏன் கறுப்பா இருக்கேன்?”
”சிவப்பா இருந்தா தான் அழகு என்பதே தப்புடா . கருப்பா மினுமினுன்னு இருக்கிற, கண்ணைப் பறிக்கிற கிருஷ்ணா , உன்னைவிட அழகு உலகத்திலேயே யாரும் கிடையாது டா. கருப்பு இல்லாம வெளுப்பு இல்லை. இரவு இல்லாம பகல் இல்லை. பிரபஞ்சமே முழுதும் கருப்பா இருட்டா தான் இருக்கு. இருண்ட பிரபஞ்சம் இல்லாமல் சூரியனோ நக்ஷத்திரங் களோ இல்லை.” ஒரு பிரசங்கமே செய்துவிட்டாள் யசோதை.
”ஒ அப்படியா. அப்போ கருப்பு தான் அழகு என்கிறாயா அம்மா ?”
”ஆமாம் ஆமாம் ”
”சரி உன்னையும் அந்த ராதாவையும் கருப்பா பண்ணிவிடுகிறேன்;; என்று கண்ணன் யசோதை, ராதையின் முகம் கை எல்லாம் கருப்பு நீல வண்ணம் பூசினான். மற்ற கோபியர்க் கும் கூட பூசினான். தை வடக்கே கிராமிய ஓவியமாக பல இடங்களில் இதை வீட்டுச் சுவற்றில் படமாக வரைந்திருக்கிறார்கள். ‘
கண்ணன் இவ்வாறு ராதைக்கும் மற்றோருக்கும் வண்ணங்கள் பூசியதை இன்றும் கொண்டாடுகிறார்கள். ஹோலி பண்டிகை இது தானோ? அன்று தெரிந்தவர் தெரியாதவர் எல்லோர் மீதும் வண்ணங்கள் கலந்த பொடிகள், கலவைகளை பூசுவார்கள், நீரில் கலந்து பீச்சுவார்கள். இன்றும் கண்ணன் ராதா சம்பந்தப்பட்ட பர்சானா, பிருந்தாவன், கோகுலம், மதுரா என்று அநேக இடங்களில் இந்த வண்ணக்கலவை பூசும் வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. அனைவருமே மகிழ்வர். கண்ணன் சம்பந்தப்பட்ட எல்லாமே மகிழ்ச்சி தானே
சில வருஷங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் ஒரு பீஹார் குடும்பம். நிறைய ஆணும் பெண்ணுமாக சிரிப்பும் கும்மாளமும். எல்லோரு கையிலும் வண்ணப்பொடிகள். பேங்க்கு போகலாம் என்ற எண்ணம். என்று மில்லாமல் இன்று ஏன் எனக்கு புத்தி இப்படிப் போயிற்று. வெள்ளைச் சட்டை . வெள்ளை வேஷ்டி.. வாசலில் என்னைப் பார்த்ததும் சில இளசுகள் ஏதோ அவர்கள் மொழியில் பேசி சிரிக்கும்போது எனக்கு பட்சி சொல்லியது. உடனே எனக்கு எதிர்புறமாக இருந்த சந்தில் தீயணைக்கும் இன்ஜின் மாதிரி என் ஸ்கூட்டரை விட்டுக் கொண்டு வேகமாக சென்று வண்ணப்பூச்சில் ஹோலி யிலிருந்து தப்பினேன். திரும்பி வரும் போதும் பால் திருட வரும் பூனை மாதிரி நாலு பக்கமும் பார்த்துக்கொண்டு சப்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்தேன். கண்ணன் சம்பந்தப்பட்ட எல்லாமே மகிழ்ச்சி தானே.
ஹோலியைப் பற்றி ஒரு புராண கதை;
ஹிரண்யகசிபு மூவுலகும் தனக்கு அடிமை. எல்லோரும் தன்னை கடவுளாக வணங்கச் சொன்னான். ஆனால் அவன் மகன் பிரஹ்லாதன் விஷ்ணு பக்தன். அவனே வணங்கவில்லை.இதனால் கோபமடைந்த ஹிரண்யகசிபு, தனது சகோதரி ஹோலிகாவிடம் பிரஹ்லாதனை தீயில் எரிக்கச் சொன்னான். தீயில் எரியாத வரம் பெற்றிருந்த ஹோலிகா, பிரஹ்லாதனை மடியில் வைத்து தீக்குள் அமர்ந்தாள்.
ஆனால் இறைவன் அருளால் பிரஹ்லாதன் காப்பாற்றப்பட்டார்; ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.
இதன் நினைவாகவே “ஹோலிகா தஹன்” (Holika Dahan) என்ற தீக்குழம்பு நிகழ்ச்சி ஹோலிக்கு முந்தைய இரவில் நடத்தப்படுகிறது. ஹோலி பண்டிகை மதுரா மற்றும் பிரிந்தாவன் பகுதிகளில் 10–15 நாட்கள் கோலாகலமாக கொ ண்டாடப்படுகிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

