SREE KRISHNARPANAM SEVA TRUST PILGRIMAGE J K SIVAN

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN
​பாலூரிலிருந்து பாலாறு …
ஆகஸ்ட் 31 2025 மாலை ஐந்து மணிக்கு மேல் பாலூரில் மழை விட்ட பிறகு பழைய சீவரம் கிராமத்துக்கு சென்றோம்.
பாலூரிலிருந்து ஆறு ஏழு கி.மீ.. பாலாற்றின் இரு கரைகளில் வடகரையில் உள்ளது பழைய சீவரம். மூன்று நதிகள் அங்கே ஒன்று சேருகிறது. பாலாறு, செய்யாறு, வேகவதி. இது ஒரு அற்புத திரிவேணி சங்கமம் என்று சொல்லலாம்.
பாலாற்றை கடந்து, திருமுக்கூடல் ஆற்றை கடந்து பாலத்தில் அக்கரை சென்றால் குட்டியாக ஒரு மலை. அந்த கிராமத்துக்கு பெயர் பழைய சீவரம்.
ஆஜானுபாகுவாக ஆறடி உயரத்தில் ஆகிருதியோடு, ஒரு ​ பழைய நரசிம்மர் கோரைப் பற்களுடன் மடியில் லக்ஷ்மியோடு காட்சி தருகிறார். ​எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் அருமையான காட்சி தருகிறார்.
நமது தேசத்தில், குறிப்பாக தமிழகத்தில் பெயர்கள் மாறுவது ரொம்ப சகஜம். பழைய சீவரம் என்றால் என்ன என்று யோசிப்பவர்களே, அது முதலில் புராண காலத்தில் ஸ்ரீபுரம் என்று இருந்த கிராமம். லக்ஷ்மி வாசம் செய்யும் இடம். காலப்போக்கில் ஸ்ரீ புரம்​, சீபுரம் ஆகி, இன்னும் தேய்ந்து சீவரமாகி விட்டதே தவிர ஸ்ரீ இன்னும் அன்று போல் இன்றும், என்றும் ஸ்ரீ லட்சுமி தாயார் நரசிம்மனோடு ஜம்மென்று அழகு குன்றாத கருணை தம்பதிகளாக இருக்கிறார்கள்.
பழைய சீவரம் கிராமம் செங்கல்பட்டு -காஞ்சிபுரம் மார்கத்தில் பாலாற்றங்கரையில் உள்ளது. ஆயிரக் கணக்கான வருஷங்களாக இருப்பதால் ”பழைய” அடைமொழி. லட்சுமி நரசிம்மர் ஆலயம் இருக்கும் குட்டி மலையின் பெயர் ”பத்மகிரி” புராணம் அறிந்தவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும். அதவாது நைமிசாரண்யம் எனும் வனத்தில் நிறைய யோகிகள், மஹான்கள் , ரிஷிகள் முனிவர்கள் கூடுவார்கள், தவம் செய்வார்கள், எல்லோரும் கூடி தத்தம் சந்தேக நிவர்த்தி பண்ணிக் கொள்வார்கள். விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார் இல்லை) என்ற ஒரு ரிஷி மற்ற ரிஷிகளிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.
”எங்கே சென்று ஸ்ரீ மந் நாராயணனை சிலாரூபத்தில் பூஜித்தால் மோக்ஷ பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு ஸ்தலம் எனக்கு சொல்லுங்கள்?”
மரீச முனிவர் என்பவர் ”நான் பதிலளிக்கிறேன். தெற்கே காஞ்சிபுரம் செல்லுங்கள், போகும் வழியில் பாலாறு வேகவதி, செய்யாறு மூன்று நதிகளும் ஒன்று கூடும் நதி சங்கமத்தில், முக்கூடலில், லக்ஷ்மி நரசிம்மர் அருள் பாலிக்கும் ஒரு ஸ்தலம் இருக்கிறது என்று இந்த பழைய சீவரத்தை அடையாளம் காட்டி அங்கே போகச் சொல்கிறார்.
”ஆஹா அப்படியா?
”ஆமாம், அப்படித்தான். உங்களுக்கு தெரியுமா? முன்னொரு காலத்தில் அத்ரி மகரிஷியும் அவர் மனைவி அனசூயாவு ம் வெகு நாளாக தவம் செய்தும் பகவான் காட்சி கொடுக்க வில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும்போது ஒரு அசரீரி ”நீங்கள் இருவரும் தெற்கு நோக்கி சென்று பாலாற்றின் கரையில் பத்மகிரியில் கிழக்கு நோக்கி தவம் செய்தால் பலன் கிடைக்கும் என்று சொன்னது. உடனே அந்த ரிஷி தம்பதிகள் பழைய சீவரத்துக்கு நடக்க ஆரம்பித்தனர். இங்கே வந்து தவம் செய்த அத்ரி முனிவருக்கு அவர் தவத்தை மெச்சி ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹன் காட்சி தந்தார். அவருக்கு தந்த காட்சி இன்னும் அவரைத் தொடர்ந்து வந்த, இன்றும் நம்மைப்போல இங்கே வரும் பல பக்தர்களுக்கும் கிடைக்கிறது.​
31/8.25 அன்று ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் நா​ ங்கள் 25 பேரும் எந்த தவமும் செய்யாமலேயே தரிசனம் கொடுத்து அருள் பாலி​த்தது எங்கள் பூர்வ ஜென்ம புண்யம்.
பிரம்மாண்ட புராணம் 17ம் அத்யாயம் அத்ரி மகரிஷிக்கு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம தரிசனம் இங்கே கொடுத்ததையும், நம் எல்லோருக்கும் அது தொடர்வதையும் பற்றி சொல்கிறது. இங்கே தாயாரின் பெயர் ரொம்ப பொருத்தமாக அஹோபில வல்லி.
பத்மகிரிக்கு அருகிலேயே இன்னொரு சிறு குன்று. 160 படி என்று சொன்னதும் நான் மானசீகமாக மேலே கோயில் கொண்டுள்ள வைத்யநாதனை வேண்டிக்கொண்டேன். அது ஒரு மூலிகைகள் நிறைந்த குன்றாக இருந்தது.​ எங்கள் பஸ் கௌசிக் மேலே ஏறுமோ ஏறாதோ என்ற சந்தேகம் வேறு. . நேரமும் ஆகிவிட்டது. தொலைதூரம் சென்று வீட்டை அடையவேண்டுமே .
​அந்த மலைமேல் உள்ள வைத்திய நாதன் ​ பெயருக்கேற்றார்ப்போல் சர்வவியாதிகளையும் நிவாரணம் செய்பவர் . அம்பாள் தையல்நாயகி.
இன்னொரு ஆச்சர்யமான விஷயம். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஒரு காலத்தில் அத்திமரத்தில் செதுக்கப்பட்ட மூலவராக இருந்து இஸ்லாமிய ஆதிக்கத்தின் போதோ, அல்லது காலபோக்கிலோ பல நூறு ஆண்டுகளுக்கு முன் பின்னமாகி, இந்த பழைய சீவரத்தில் பத்மகிரியில் தான் கல் எடுத்து பெருமாள் விக்ரஹம் ஸ்ரிஷ்டித்து காஞ்சிபுரம் எடுத்துக் கொண்டு போய் வரதராஜாக பிரதிஷ்டை செய்தார்களாம். வருஷா வருஷம் மாட்டுப் பொங்கல் அன்று பார்வேட்டை உற்சவத்துக்கு காஞ்சி வரதராஜர் இங்கே வருகை புரிந்து பத்மகிரி மண்டபத்தில் தங்கி தரிசனம் தருகிறார். ​ இந்த பழைய சீவரம் நரசிம்மர் கோயில் பராந்தக சோழன் காலத்தில் இருந்திருக்கிறது என்று கல்வெட்டு சொல்கிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம், த்ரிபுவன வீர சதுர்வேதி மங்கலமாக மாறி, சிறிது காலம் ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டு பின்னர் இந்த நரசிம்மருக்கு ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என ஒரு நாமம் இருந்தது.
லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு பார்த்து இடது காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டுக்கொண்டு பத்மாசனத்தில்
சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்தவாறு ​தரிசனம் அளித்தார்.
மேல் வலக்கரத்தில் கத்தரி முத்ரையில் சக்ராயுதமும் மேல் இடக்கரத்தில் முத்ரையில் சங்கும், கீழ் வலக்கரம் அபயஹஸ்தமாகவும் கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங் கனம் செய்தபடியும் அமைந்துள்ளது. நரசிம்மரின் தலையில் கிரீடம், திருமார்பில் மகர கண்டிகையும், கௌஸ்துபமும் ​ ஆயிரம் வருஷங்களாக அப்படியே வசீகரத்துடன் இன்னமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.​ செங்கல் பட்டு வரை வந்துவிட்டு இவரை தரிசிக்காமல்​ போகிறவர்கள் துரதிர்ஷ்டகாரர்கள்.
​பழைய சீவரத்தை ஒட்டி ஆற்றங்கரையில் நின்று பார்த்தால் மூன்று ஆறுகளும் சங்கமாவது தெரியும். இது ஒரு முக்கொம்பு தான்.
பழைய சீவரத்தைஇருந்து பாலத்தில் ஏறி அக்கரைக்கு சென்றால் அற்புதமான ஒரு நிற்கும் பெருமாளை தரிசிக்கலாம்.
பெருமாளுக்கு அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்று பெயர். உயரமாக கம்பீரமாக சர்வாலங்காரமாக நிற்கிறார். ஒரு விசேஷம் இங்கே என்னவென்றால் பெருமாள் நிற்கும் பீடம் வழக்கமாக சிவலிங்கத்தின் பீடமான ஆவுடையார் போல் இருக்கிறது. தொண்டமான் காஞ்சிபுர ராஜாவாக இருந்த காலத்தில் இந்த பகுதியெல்லாம் தொண்டைமண்டல ராஜ்யம். ​ 9ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து ஆலயம்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டுகள் என்று புரியாத தமிழில் கோவில்களில் கல்வெட்டுகள் சுவர்களில் காணப்படுகிறது. நிச்சயம் 1200 வருஷங்களுக்கு குறைவில்லை. புராதன ஆலயங்கள். தொல் பொருள் ஆராய்ச்சி
இலாகாவால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
முன்னொருகாலத்தில் இங்கே வேத பாடசாலைகள்,மருத்துவ மனைகள், யாத்ரிகள் தங்க சத்திரங்கள் இருந்திருக்கிறது. படுத்துக்கொண்டிருந்த பெருமாள் தொண்டைமானுக்கு தரிசனம் கொடுக்க எழுந்து நின்றாராம். வருஷா வருஷம் காஞ்சி வரதர் இங்கே மாட்டு பொங்கல் அன்று வருகிறாராம். தொண்டமான் திருப்பதி வெங்கடேச பெருமாள் பக்தன். அவன் அரண்மனையிலிருந்து திருப்பதிக்கு சுரங்க பாதை இருந்தது. தொண்டைமானுக்கு அடிக்கடி திருப்பதி வெங்கடேசனை தரிசிக்கவேண்டும். மறுநாள் கிளம்பி போகலாம் என்று ஒரு தடவை தீர்மானித்த போது அன்றிரவு கனவில் வேங்கடேசன் தோன்றி ”அடேய், தொண்டமான், நீ நாளை என்னை பார்க்க கிளம்பாதே, உன் அடுத்த நாட்டு ராஜா, உன் ராஜ்யத்தின் மேல் படையெடுத்து வரப்போகிறான். உன் பிள்ளையோடு போருக்கு தயாராகு. சீக்கிரம். அப்புறம் போர் முடிந்தபிறகு என்னைப் பார்க்க வா” என்று எச்சரித்தான்.​
”பெருமாளே நீ தான் எனக்கு வெற்றி தரவேண்டும். உனக்கு சங்கு சக்ரம் பண்ணிபோட எனக்கு வெகுநாளாக ஆசை என்று வேண்டிக் கொண்டான் தொண்டைமான். தொண்டைமான் வெற்றி பெற்றான். அவன் அளித்த சங்கு சக்ரத்தை பின்னர் ஸ்ரீ ராமானுஜர் வெங்கடேசனுக்கு சாற்றியதை தான் நாம் இன்றும் தரிசிக்கிறோம்.​ அப்பன் வெங்கடேசன் கழுத்தில் அழகான 108 சாளக்ராம கல் மாலையோடு நிமிர்ந்து ஆறடி உயரமாக வடக்கு பார்த்தபடி நிற்கிறார். தாயார் கிழக்கு பார்த்த தனி சந்நிதியில்.
வயதான தொண்டமான் ”பெருமாளே எனக்கு மோக்ஷம் தருகிறாயா?”என வேண்டியபோது ”தொண்டைமான்நீ திருமுக்கூடல் வாயேன். அங்கே உனக்கு மோக்ஷம் கிடைக்கும்”
தொண்டமான் திருமுக்கூடலுக்கு ​நமக்கு முன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்​ நடந்து வந்திருக்கிறான். பாலாறு மேல் பாலம் அப்போது இல்லை. அவனை வரவேற்க தான் படுத்துக்கொண்டிருந்த ஸயன கோல அப்பன் பிரசன்ன வெங்கடேசன் எழுந்து​ நின்றவன் இன்று வரை வடக்கே பார்த்து​க்கொண்டு அப்படியே நிற்கிறான். சந்தோஷமாக வேங்கடேசனை தழுவிக்கொண்ட தொண்டமான் ”என் அப்பனே வெங்கடேசா” என்று வாத்சல்யமாக அழைத்தது வெங்கடேச பெருமாள் பெயராகி விட்டது. எப்படி இந்த கிசு கிசு​? இது புருடா இல்லை. ஸ்தல புராணம். பட்டாச்சாரியார் சொன்னது. திருப்பதி வெங்கடேச பெருமா​ள் கோயில் கட்ட உதவியதும் தொண்டமான் தான். திருமலை வையாவூர் பெருமாள் கோவிலும் அவனே கட்டினான். தென் திருப்பதி என்று அதற்கு பெயர். தாயார் அலர்மேல் மங்கை.
​
அப்பன் வெங்கடேசன் தலை கிரீடம் சிவனின் ஜடாமுடி மாதிரி காண்கிறது. நெற்றிக்கண் உண்டாம் அப்பனுக்கு. ப்ரம்ம்மா விஷ்ணு சிவன் மொத்த உருவம் அப்பன் வெங்கடேசன். பெருமாளுக்கு திருமஞ்சனம் கிடையாது. தைல காப்பு மட்டுமே.
நாங்கள் சென்றபோது ​ எங்களைத்தவிர ஒன்று இரண்டு பக்தர்கள் தான் காணப்பட்டார்கள். ஞானிற்றுக்கிழமை கூட கோயிலுக்கு வரமுடியாமல் ரொம்ப பிஸி யாக இருப்பவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, நம்மை அப்படி ‘பிஸி ‘ இருக்க வைக்கும் ஆண்டவனைக் காண ஆலயங்கள் செல்லவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம்.
காணும் பொங்கல் அன்று காஞ்சி வரதராஜர், பழைய சீவர ஆலய லக்ஷ்மி நரசிம்மர், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள், மற்றும் ரெண்டு அருகே உள்ள பெருமாள்கள் ஒன்று சேர்ந்து மண்டபத்தில் இங்கே காட்சி தருவார்கள். பின்னர் ஐந்து பெருமாள்களும் ஊர்வலம் வருவதை தரிசித்தவர்கள் புண்யசாலிகள்.
.​ஒரு கல்வெட்டு என்ன சொல்கிறது என்று படியுங்கள். புரிந்தால் எங்கள் கைதட்டல், பாராட்டுகள். அடுத்த முறை உங்களையும் எங்களோடு யாத்திரைக்கு கூட்டிக்கொண்டு போவோம்.
​”கோவிசய நிருபதுங்க பல்லவ விக்கிரம வருமக்கு யாண்டு இருபத்து நாலாவது காடுபட்டிமுத்தரையர் மகனார் அரிகண்டப்பெருமானாருக்கு ஊற்றுக்காட்டுக்கோட்டத்து சீயபுரத்து சபையோமொட்டிக்கொடுத்த பரிசாவது திருமுக்​கூடல் விஷ்ணுபடாரர்க்கு நந்தாவிளக்கெரிப்பதற்க்கு தந்த எங்கள் கையிற்றந்த முப்பதின் களஞ்சு நாலுப் பொலியூட்டு ஆண்டுவரை களஞ்சின் வாய் மூன்று மஞ்சாடிபொன் ஆயனப்படியால் நாற்களஞ்சரையாலும் ஏறிலும் கறுங்காலும் நாற்பது நாழி எண்ணை நூற்றின்பதி ….​”
​ நேரம் ஆறு மணி யாகிவிட்டது. இன்னும் ஒரே ஒரு கோவில் செல்லவேண்டும். இன்று ராதாஷ்டமி. ராதையின் பிறந்தநாளைக் கொண்டாட என்னை அழைத்திருந்த கிருஷ்ண கோவிலுக்கு நண்பர்கள் எல்லோருடனும் பஸ்ஸில் செல்லவேண்டுமே. போகவே ஒருமணி ”தேஸாலம்” (நேரத்தை இப்படி சொல்வதுண்டு) மேல் ஆகிவிடும் போல இருக்கிறதே

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;