
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN
8 வது பகுதி
ஹனுமான் வாசாம கோசரர். பரம புத்திசாலி. பராக்ரமன். பலவான். இனி இங்கே க்ஷணமும் தாமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தார். சண்டி தேவியை மனதால் நூறுதரம் வணங்கி எழுந்தார் ‘தாயே, இவரை நீதானம்மா காப்பாற்றணும்’ என்று வேண்டிக் கொண்டு ராம லக்ஷ்மணர்கள் இருந்த த பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு அங்கிருந்து கோட்டைக்கு வெளியே பறந்து போய் ‘அங்கனமிருக்கா’ எனும் மலையில் இருந்த ஒரு ரஹஸ்ய குகையில் பெட்டியை பத்திரமாக வைத்து விட்டு வந்தார்.
அந்த மலையும் பாதாள லோகத்தில்தான் இருந்தது. மயில் ராவணனை அழிக்காதவரை பாதாளத்தில் இருந்து ராம லஷ்மணர்களை அங்கிருந்து தாமரைத் தண்டின் வழியே பூமிக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் அவர்களை பாதாள லோகத்திலேயே பூமா தேவியின் பொறுப்பில் மறைத்து வைக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. பூமாதேவியிடம் அனுமான் வேண்டினார்
‘அம்மா, பூமா தேவி, நான் வரும்வரை இவர்களை நீதானம்மா பத்திரமா காப்பாத்தணும். உன் தங்கை இலங்கையிலே அசோகவனத்திலே ஒரு மரத்தடியில் ராவணனின் பிடியில் சிக்கி இருக்கிறாள். இவர்களையும் மயில் ராவணன் மாயக் கட்டு போட்டு கட்டி வைத்திருக்கிறான். நான் சென்று மயில் ராவணனைக் கொன்று மாயக்கட்டின் சூத்திரத்தையும் உடைத்து இங்கு வந்து இவர்களை எழ வைப்பேன். அதுவரை நீ தான் அம்மா இவர்களைக் காத்து நான் வந்ததும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என வேண்டினார்.
பூமா தேவியும் அதை ஆமோதிப்பது போல படீர் என தன்னுள் ஒரு வெடிப்பை ஏற்படுத்த அந்த பெட்டியை அந்த வெடிப்புக்குள் வைத்து விட்டு அனுமான் கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பிச் சென்றதும் வெடிப்பும் தானாகவே மூடிக் கொண்டது.
இப்படியாக அனுமான் ஒரு பக்கத்தில் வேலைகளை செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வேறு ஒரு சம்பவம் நடந்து கொண்டிருந்தது. ஹனுமாரிடம் செமத்தியாக அடி வாங்கிக்கொண்டு உயிர் தப்பி ஓடிச் சென்ற கடகன் மயில் ராவணனினிடம் சென்றான். அங்கே பன்னிரண்டாயிரம் கோடி ராக்ஷஸர்கள் ஆயுதங்களை தலைகாணி போல் வைத்துக் கொண்டு உறங்குவதைக் கண்ட கடகன் அனைவரையும் சப்தம் போட்டு எழுப்பினான்.
‘அசுரர்களே… அனைவரும் எழுந்திருங்கள். அந்த வானரம் வந்து விட்டால் உங்கள் அனைவரையும் நொடியில் துவம்சம் செய்திடும்’ என உரக்கக் கத்தியவாறே, ‘சுவாமி…சுவாமி…எழுந்திரும். உமக்கொரு முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கிறேன். அதைக் கேட்டாலே உமக்கு தலையே சுற்றும் ஐயா’ எனக் கூவிக் கொண்டே மயில் ராவணனின் அரண்மனையில் புகுந்து அவனுடைய அறைக்கு முன்னாலே சென்று நின்று கொண்டான்.
கடகன் படபடவென அவன் அறைக் கதவைத் தட்டியதும் எழுந்து வந்த மயில் ராவணனிடம் நடந்த அனைத்தையும் விலாவாரியாகக் கூறினான். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த மயில் ராவணனை ஆஸ்வாசப்படுத்தி விட்டு கடகன் சொன்னான்
‘சுவாமி, இந்த விஷயத்தை சற்று நிதானமா கேளுங்கள். அனைவரையும் துவம்சம் செய்த அந்த வானரம் காளி கோவிலுக்கு பக்கத்தில் ஓடினதாக செய்தி கிடைத்ததால் இங்கு வந்து உம்மிடம் கூறினேன்’ என்று கடகன் சொன்னதும் ‘அடே நாராசப் பயலே, உடனே காளி கோவிலுக்குச் சென்று அந்த பெட்டி பத்திரமாயிருக்கான்னு பார்த்து விட்டு வா .நானும் இதோ வாளுடன் கிளம்பி வருகிறேன்’ என்று கூறிவிட்டு காளி கோவிலுக்கு ஓடிச் சென்று பார்த்தால் காளிக்கு முன்னாலிருந்த பெட்டியைக் காணோம்.மயில் ராவணன் வெகுண்டெழுந்தான். ‘ஏமாந்துவிட்டோம்….கடகா….ஏமாந்துவிட்டோம்…. நீ சொன்ன .அந்த வானரம் இங்கே வந்து பெட்டியை தூக்கிக் கொண்டு போயிருக்கிறது‘ என கோபத்தில் குதித்தான்.
‘கடகா, இப்போ என்ன செய்வது? அந்த வானரம் பெட்டியில் இருந்த ராம லஷ்மணர்களை கொண்டு சென்று விட்டதே. அவர்களோடு காளியும் சேர்ந்து போய் விட்டாளா எனத் தெரியவில்லை. இவள் முகத்தைப் பார்த்தாலே அவளும் சந்தோஷமாக அவருடன் சேர்ந்து போய்விட்டது போலத் தோணுகிறதே. அந்த வானரம் இங்கே வந்ததற்கு காரணம் தூம்ரதண்டியாத்தான் இருக்கும். அவள்தானே தண்ணீர் எடுக்க வெளியில் போனாள். அப்போது அந்த வானரத்தை அழைத்து வந்திருப்பாளோ?. இப்போதே போய் அவளை வெட்டிக் கொன்று விட்டு வா’ என கடகனுக்கு மயில் ராவணன் ஆணையிட்டான். அனுமான் அடித்த அடியில் உடம்பெல்லாம் ரணமாகிவிட்ட கடகனும் ஒளிந்து ஒளிந்து கொண்டு தூம்ரதண்டியை பார்க்கப் போனான். எங்காவது ஹனுமானின் கண்ணில் பட்டுவிட்டால் தன்னை இன்னும் அடித்து துவைத்து விடுவார் அவர் என பயந்தான். போகும் போது வழியில் தனக்கு துணையா இருக்க நிறைய ராக்ஷஸர்களை சேர்த்துக் கொண்டு சென்றான்.
தூம்ரதண்டியின் வீட்டை அடைந்ததும் அங்கே தூம்ரதண்டியும் ஹனுமானும் நீலமேகனுடன் பேசிக் கொண்டு இருந்ததைக் கண்டு வந்த வேகத்திலேயே ஓடிப் போய் மயில் ராவணனிடம் ‘ஐயா சுவாமி அங்கு அந்த வானரம் தூம்ரதண்டியோடும், நீலமேகனோடும் கூடிக் கூடிக் குலாவி பேசிக் கொண்டிருக்கிறார்’ என்று விஷயம் கூறினான்.
உடனே கோபத்தோடு மயில் ராவணன் தன் சேனையின் பல்லாயிரம்பேரை உடனே அங்கு அனுப்பி அந்த வானரத்தைக் கொன்று விட்டு வாருங்கள் என அனுப்பினான். அந்த வீரர்களும் அனுமானைக் கொல்ல கத்தி, கபடா, ஈட்டி, கதை என அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு செல்ல சற்று நேரத்திலேயே போன வேகத்திலேயே பட்டாளத்தில் மிஞ்சிய பத்து பேர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தார்கள். அவர்கள் வந்ததும் இன்னும் பெரும் சேனையை கதாசிங்கன் எனும் அரக்கன் தலைமையில் மயில் ராவணன் அனுப்பி வைக்க அவர்கள் வந்து அனுமான் மீது பாணங்களை மழைபோல பொழிந்தார்கள். நொடியிலே கதாசிங்கனும் மடிந்து விழ அவனை தொடர்ந்து வித்யாசிம்மன் களத்துக்கு வர, அவனும் காலும் கையும் வெட்டப்பட்டு அழிந்தான்.
தன்னுடன் மோதிய ராக்ஷஸர்களை துரத்திச் சென்ற ஹனுமான் மயில் ராவணனுடன் நேரிலே மோத அடுத்தடுத்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த அரக்கர்களை அழித்த வண்ணம் சென்றார். வழியிலே ரத்தம் கக்கி கடகரோமான் என்பவன் மாண்டான். அவனை தொடர்ந்து காலதேஷன் என்பவனும் மாண்டான். அவர்கள் அனைவரும் மூர்கமான அரக்கர்கள். மயில் ராவணனின் படையில் முக்கிய தளபதிகள். அடுத்தடுத்து முக்கிய தளபதிகள் உக்ரசேனன், வக்ரசேனன், தீரசிம்மானவன், வெம்புலியான், சம்புலியான் மற்றும் அநேக லக்ஷ அரக்கர்களைக் கொன்று குவித்தபிறகு எஞ்சி இருந்த சேனையோடு மயில் ராவணன் ஹனுமனை நேரில் சந்தித்தான்.
குதிரைகள் தடதடென நடக்க, படையினர் படபடவென குதித்தோடிவர ஆஹா ஹூ ஹூ ஹோய்….ஹோய்…என பெருங்கூச்சலோடு எல்லா ராக்ஷஸர்களுடன் மயில் ராவணன் மழைபோல விட்ட அம்புகளையும் அஸ்திரங்களையும் நொடிப் பொழுதில் அனுமன் பொடிப்பொடியாக்கி விட மயில் ராவணன் யோசனை செய்தான். ‘அடடா…என் பத்தினி வர்ணமாலி அன்று சொன்னது நடந்து விடும் போலிருக்கே. நான்தான் தப்பு செய்துவிட்டேனோ ? அனாவசியமாக அத்தனை சேனையும் இழந்து தசமுக ராவணனைப் போலாகி விட்டேனோ? இந்த ஹநுமானை எப்படி ஜெயிப்பது? எத்தனை அஸ்திரமானாலும் அஸ்க், புஸ்க் என்று அடித்து நொறுக்குறானே’.
யுத்தம் தொடருந்தது. ஹனுமான் மயில் ராவணனின் முதுகிலே தனது இரண்டு கை முஷ்டியினாலும் பலமாகத் தாக்கினார். அடுத்தகணம் அதே குத்து தன் முதுகிலும் விழுதே என அனுமான் திரும்பினால் அங்கே திடகார்த்தமாக அக்ரோஷத்துடனே மயில் ராவணன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். இரண்டு பேரும் மாறி மாறி அடித்துக் கொண்டே இருக்க ஹனுமான் மயில் ராவணனை கீழே தள்ளி கொன்று சுக்குநூறாக அவன் உடலைக் கிழித்து நாலாபக்கமும் சதைகளை வீசி எறிந்துவிட்டு ‘அப்படா ஒருவழியா மயில் ராவணனை கொன்று விட்டேன்’ என சந்தோஷப்பட்டுக் கொண்டே ‘ராமச்சந்திரா’ என பிராத்தனையை செய்ய பல நூறு யோஜனைக்கப்பால் விழுந்த அத்தனை சதைகளும் காற்று போல பறந்து வந்து யுத்தகளத்திலே மீண்டும் மயில் ராவணனாகி நின்றிருப்பதைப் பார்த்த அனுமான் குழம்பியே போனார்.
‘இதென்னடா சாமி இவன் வலிமை….இவன் மாயம்? இவனுக்கென்ன இத்தனை தவ வலிமை? எத்தனை அடித்தாலும் என்னையும் அடிக்கிறான். உடம்பை சல்லடயாக்கிப் போட்டால் மீண்டும் மீண்டும் ஒன்று மாகாதது போல திடகார்த்த உடம்போடு திரும்பித் திரும்பி வந்து யுத்தமும் செய்கிறான். இவனை நானெப்படி ஜெயிப்பது? தெரியலயே …இதெல்லாம் நமக்கு விபீஷணனும் சொல்லலயே……..இவன் மர்மத்தை எனக்கெவர் விளக்குவார்?’ என வினசத்துடன் தலை மீது தன் கையை வைத்துக் கொண்டு யோசனை செய்து கொண்டிருந்தவர் பொறி தட்டினாற்போல தூம்ரதண்டியை இதைக் குறித்துக் கேட்டுப் பார்க்கலாம் என்றெண்ணி அவளைப் பார்க்கச் சென்றார்.
அதற்கு ஏதுவாக இருக்குமாறு முதலில் அனுமான் மயில் ராவணனை தனது வாலினால் நன்றாகக் கட்டி, ஆகாயத்தில் பறந்து சென்று நாலு சுற்று சுற்றி தூக்கி தூரத்தில் விழுமாறு எறிந்தார். அவனும் நூறு யோசனை தூரத்தில் போய் விழுந்தவுடன் மீண்டும் அதே பலத்துடன் எழுந்து வரலானான். அதைதான் அனுமானும் விரும்பி இருந்தார். அவன் எழுந்து வருவதற்குள் தூம்ரதண்டியிடமோ, நீலமேகனிடமோ சென்று மயில் ராவணனை கொல்வது எப்படி என்பதை கேட்டு விட்டு வரலாம் என்று அந்த அவகாசத்துக்காக அப்படி செய்திருந்தார். அவசரவசரமாக தூம்ரதண்டியை சந்திக்கச் சென்றார். அவர் வந்ததும் தன்னால் மயில் ராவணனைக் கொல்ல முடியலையேன்னும் எத்தனை தடவை அவனைக் கொன்றாலும் அவன் பிழைத்து வந்து விடுகிறானே என ஆதாங்கப்பட்டு அவனைக் கொல்ல உபாயம் ஏதும் உண்டா எனக் கவலையோடு அவளைக் கேட்டார்.
”ஹனுமான், எனக்கு மயில் ராவனனை பற்றிய விவரம் தெரியாது. ஆனால் என் கணவர் ஒருமுறை மயில் ராவணன் வீட்டுக்கு விருந்தாளியாக சென்றபோது பேச்சுக்கு நடுவே தன்னுடைய உயிர் ஸ்தானம் எங்கு உள்ளது என்கிற ரஹஸ்யத்தை சொல்லியதாக எனக்கு சொன்னார். மயில் இராவணன் பிரும்மாவை வேண்டிக் கொண்டு கடுமையான தவம் இருந்தபோது ப்ரம்மா அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டார். அவன் கேட்ட வரம் என்ன என்றால், ” நான் யாருடன் சண்டை போட்டாலும் தனக்கே (மயில் ராவணனுக்கே கு) வெற்றி கிட்ட வேண்டும். அந்த யுத்தத்தில் அவன் உயிர் இழந்தாலும் மீண்டும் மீண்டும் அவன் பிழைத்து எழ வேண்டும்” என்பது தான். ’மயில் ராவணா நீ கேட்கும் வரம் கொடுப்பது கடினம், ஒரு முறை உயிரை விட்டால் உடலில் உள்ள பஞ்ச பூதமும் உடலில் இருந்து வெளியேறி விடும். அதை திரும்ப தர வழியில்லை.” விடாக்கண்டன் கொடாக் கண்டனான மயில்ராவணன் ” ப்ரம்ம தேவா, அப்படி என்றால் என் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் பாதாள இலங்கையில் இருந்து மூவாயிரம் யோசனை தூரத்தில் உள்ள பர்வதம் ஒன்றில் ஐந்து குகையில் ஐந்து வண்டுகளாக இருக்க வேண்டும். அவற்றை ஒருசேரக் கொன்றால் மட்டுமே என் உயிர் போகும் என்கிற வரத்தை கொடுங்கள். தரவில்லை என்றால் இப்போதே உங்கள் முன் என் உயிரை இப்போதே நான் பலி கொடுக்கிறேன்” என்று தன் வாளை உருவினான்.
எந்த தெய்வமுமே தவத்தினால் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றிவிட்டால் அவர்களை சாக விடாது. ஆகவே பிரம்மா யோசனை செய்தார். இவனுக்கு வரம் தந்தாலும் அவன் அட்டகாசம் அடங்கப் போவது இல்லை. இவனை வரம் தராமலும் சாகடிக்க முடியாது. அது தனது சக்தியை குறைத்து விடும். ஆகவே ஏதாவது சமயோசிதமாக உபாயம் செய்தே இதை சமாளிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு அவனுக்கு அந்த வரம் தர சம்மதித்தாலும் ஒரு சின்ன பொடியை அதில் வைத்து இருந்தார். அவர் அவனிடம் பஞ்ச பூதங்களையும் ஐந்து வண்டில் தனித் தனியாக வைத்தாலும், மயில் ராவணனைக் கொல்ல வருபவர்கள் அவன் மீது காலை வைத்துக் கொண்டு, அவனை பூமியில் அழுத்திக் கொண்டு, அந்த ஐந்து வண்டுகளையும் பிடித்து தன் உள்ளங்கையில் வைத்து அவற்றை நசுக்கிக் கொன்றால் மட்டுமே அவன் உயிரும் பிரியும் என்று வரம் கொடுத்தார்”. மயில் ராவணனும் அந்த வரத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான்.
ஏன் எனில் யாரால் அவனை பூமியில் அழுத்தி வைத்துக் கொண்டு மூவாயிரம் யோசனை தூரத்தில் உள்ள குகையில் இருக்கும் வண்டுகளைப் பிடித்து நசுக்கிக் கொல்ல முடியட்டும்? அத்தனை பெரிய உருவம் படைத்தவர் எவருமில்லையே என்று நினைத்தான். அப்போது அவனுக்கு மனதில் தோன்றவில்லை, எந்த தெய்வமாவது ஆகாயத்துக்கும் பூமிக்கும் அளவிலான விஸ்வரூபத்தை எடுத்து விட்டால் அதையும் செய்யலாமே என்று’.தூம்ரத்தண்டி சொன்ன விஷயத்தை ஹனுமான் கவனமாக கிரஹித்துக் கொண்டார். ”அம்மா நீங்கள் சொன்ன இந்த விஷயம் எனக்கு போதும். இதுவே எனக்கு உதவியா இருக்கும். அந்த மலையும் எங்குள்ளது என்றாவது தெரியுமா?’ என்று கேட்க தூம்ரதண்டி மலை உள்ள திசையைக் கூறி அதன் மீது ஒரு வெள்ளி மண்டபம் இருக்கும். அதுவே அந்த மலை என்பதின் அடயாளம்’ என்றாள்.
ஹனுமான் மயில் ராவணனைக் கண்டு அவனோடு மோத புறப்பட்டார். அவர் மயில் ராவணனை சந்திக்கும் வரை காத்திருப்போம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

