
ஒரு அற்புத தரிசனம் 8.4.2025.- நங்கநல்லூர் J K SIVAN
திருப்பதி வெங்கடாசலபதி இருக்கும் இடம் ஒரு அசாதாரண ஸ்தலம். ஏழுமலைகள் ஒன்றோடொன்று இணைந்து ஏழாவது மலை வேங்கடகிரி மேல் அமைந்துள்ளது. அந்த மலைக்கு எத்தனையோ மொழிகளில் பலவித பெயர்கள். தமிழில் ஏழுமலை, வடமலை, திருமலை, வடவேங்கடம், இன்னும் எத்தனையோ.மலையில் ஸ்ரீனிவாசன் என்கிற பாலாஜி, உலகத்தில் பல ஹிந்துக்கள் வந்து தரிசிக்க, பல நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறார். இரவு பகல் பூரா ஜனக்கூட்டம். சுற்றி சுற்றி பல மண்டபங்கள்,அதில் பக்தர்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்தி எவ்வளவு சீக்கிரம் தரிசிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வசதியாக இருந்து தரிசிக்க அற்புத ஏற்பாடுகள். எண்ணற்ற படிகள் நடந்து பல மணி நேரங்கள் காத்திருந்து அரை வினாடி அவனை தரிசிக்க பக்தர்கள் பொறுமையாக நிற்கிறார்கள். ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் வெங்கடேசனை ரொம்ப அருகில் நின்று அரைமணி நேரத்துக்கு மேல் தரிசித்தேன். காரணம், நான் ஸ்ரீ P .V அனந்தசயனம் ஐயங்காருடன் சென்றதால். அவர் தான் அப்போதெல்லாம் விடிகாலை வெங்கடேசன் முன் நின்று வெங்கடேச சுப்ரபாதம் பாடுவார். MSS பாடுவதற்கு முந்தைய காலம். TT தேவஸ்தானம் அவரை விடிகாலை மூன்றரை மணிக்கு சுப்ரபாதம், ஸ்ரீனிவாச கத்யம் பாட நியமித்திருந்தது. அவர்மகன் ஸ்ரீ ராமதுரை என்னோடு ஒன்றாக கப்பல் கம்பெனியில் பணி புரிந்தவன் என்பதால் என்னை குடும்பத்தோடு இந்த அற்புத தரிசனம் பெற உதவினார். அடுத்தது நேற்றுதான் 8.4.25 அன்று. என் மகன் கண்ணன் என்னையும் என் மனைவியையும் அழைத்து சென்று தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை+500 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கி பெருமாள் அருகே நிற்க ஏற்பாடு செய்தான். ஒருநாளைக்கு 800 பேருக்கு மட்டும் வாய்ப்பு. இந்த பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுக்க ஆயிரக்கணக்காக மக்கள் வெள்ளம். காலை 9.30க்கு வரிசையில் நின்று 11.30 மணிக்கு வெளியே வர முடிந்தது. தலா ஒரு லட்டு பிரசாதம். ஜருகண்டி வேறு விதத்தில், ஆணும் பெண்ணுமாக கைங்கர்யம் பண்ணுபவர்கள் கையைப் பிடித்து மெதுவாக இழுத்து விடுகிறார்கள். ரெண்டு நிமிஷம் அருகே நின்று தரிசிக்க முடிந்தது.
வேங்கடேசன் ஆலயம் ஒரு மலைக் கோவில். ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று .ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகளின் சூழலில் இருப்பதால் ஸ்ரீனிவாசனுக்கு ஏழுமலையான் எனப் பெயர். அவரை எல்லோருக்கும் தெரிந்தது ”பெருமாள்” என்ற பெயரில். அவர் ரொம்பவே பெரிய ஆள். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். வரப்ரஸாதி . தாயார் பத்மாவதி. அவளை அலமேலு மங்காபுரத்தில் கீழ் திருப்பதியில் சென்று தரிசிக்கவேண்டும்.
வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் பரப்பு கொண்டது. லட்டு பிரசாதம் உலகப்புகழ் பெற்றது. பிரத்யேகமாக தயாரிக்கப்படுவது. புவி சார் குறியீடு கொண்டது. இங்கு முடி காணிக்கை செலுத்துவோர் தான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கை கொண்ட பக்தர்கள் தான். பாரத தேசத்திலேயே அதிக வருமானம் பெரும் ஆலயம். பெருமாள் ஸ்ரீனிவாசன் கலியுக வரதன்.
ஒரு சமயம் பிருகு போன்ற முனிவர்கள் யாகம் செய்து, யாக பலனை சாந்தமான மூர்த்திக்கே அர்ப்பணிக்க எண்ணி பிருகு மும்மூர்த்திகளில் திருமாலின் இருப்பிடத்திற்கு சென்றார். பிருகு முனிவரின் வருகையை அறியாது உறங்கிக் கொண்டிருந்த திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் இதயத்தில் இருந்த திருமகள் கோபம் கொண்டு அவரிடமிருந்து சென்றார்.
திருமால் பூமியில் திருமகளைத் தேடி வேங்கட மலையில் ஓரிடத்தில் தவமிருந்தார். அவரைச் சுற்றி புற்று உருவானது. அப்புற்றில் தவமிருந்த திருமாலின் மீது புற்றினை உடைக்க வீசப்பட்ட ஒரு கோடாறியால் திருமாலின் தலையிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. திருமால் தவம் கலைந்து வகுளாதேவி ஆசிரமம் சென்றார். அங்கு சீனிவாசன் என்று பெயரிட்டு வகுளாதேவி அன்புடன் உபசரித்து தாயாக வளர்த்தாள். .
அவர்களின் ஆசிரம பகுதி சந்திரகிரி நாட்டினை சேர்ந்தது. அதன் ராஜா ஆகாசராஜனுக்கு அழகிய ஒரு மகள் பத்மாவதி. வகுளாதேவி பத்மாவதியை சீனிவாசனுக்கு மணம் முடித்தாள். திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தேற சீனிவாசன், குபேரனிடம் கடன் வாங்கினார் இன்னும் செலுத்த முடியாமல் பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது.
இக்கோயிலின் நிர்வாகம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கையில் உள்ளது. வெள்ளைக்காரன் காலத்தில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜி வசம் இருந்தது. 1932 வரை மதராஸ் அரசாங்கத்தை சேர்ந்த ஆலயம். 1933ல் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகியது.
மூன்று பிரகாரங்கள் , ராஜகோபுரம். ரங்க மண்டபம் சரித்திரம் வாய்ந்தது. இஸ்லாமியர்கள் தாக்குதலின் போது ஸ்ரீ ரங்கம் உத்ஸவர் ரங்க நாதரை திருப்பதிக்கு இங்கே கொண்டு வந்தார்கள்.
முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம். இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை அடக்கம்.
விமான பிரதட்சணம் ரெண்டாவது பிரகாரம். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம், மூலவர் கர்ப்பகிரஹம் ஆகியவை அடக்கம்.
மூன்றாவது வைகுண்ட பிரகாரம். வருஷாவருஷம் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது.
மூலவர் பல நூற்றாண்டுகளாக நிற்பவர். மூலவர் சந்நிதி மண்டபத்தில் ஒரு படியின் பெயர் ரு படி குலசேகர ஆழ்வார் படி. மூலவர் வேங்கடநாதன் உண்மையில் ஒரு காளி சிலை என்றும் சுப்ரமணியன் என்றும் கருத்துகள் உண்டு என்றாலும் வேங்கடேசனை பெருமாள் என்று வழிபடுபவர் லக்ஷக்கணக்கான பக்தர்கள்.
மூன்றாவது பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சந்நிதி. சதுர் புஜங்கள் சங்கு சக்கரம் கொண்டு மஹா விஷ்ணுவைப் போல் இருக்கிறார். சிவாலயங்களில் சண்டீசுவரர் மாதிரி இவர். திருமாலுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலைகள், பிரசாதங்கள் விஷ்வக்சேனருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இரவும் பகலும் மக்கள் வெள்ளம் நிரம்பிய இந்த ஆலய மண்டபங்களின் பெயர்கள்:
கிருஷ்ண தேவராய மண்டபம்
ரங்க மண்டபம்
திருமலை ராய மண்டபம்
ஜனா மண்டபம்
துவஜஸ்தம்ப மண்டபம்
திருமாமணி மண்டபம்
உண்டியல் மண்டபம் – பரகாமணி மண்டபம். இங்கே தான் கோயிலின் காணிக்கை உண்டியல் உள்ளது. இவ்வுண்டியல் காவாளம் எனப்படும் பித்தளை அண்டாவினைச் சுற்றி துணி கட்டி அமைத்திருக்கிறார்கள்.
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு நடப்பதற்காக கீழ் திருப்பதியிருந்து படிகள் ஆரம்பம். பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள். அலிபிரி பகுதியில் கருடாழ்வாரும், கபில தீர்த்தமும். இதைத் தாண்டி சென்றால் ஆஞ்சநேயர் சிலையும், முழங்கால் முறிச்சான் மலைப்படிகள், காளிகோபுரம்
எல்லாம் வரும். நடந்து வருபவர்களுக்கு தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக தேவஸ்தானம் தருகிறது.நிறைய இடத்தில் உடல் கைப்பை பரிசோதனை துரிதமாக அடிக்கடி நடைபெறுகிறது. மனிதர்களில் விஷமிகளும் உண்டே..
இந்த கோவிலைப் பற்றி நான் எழுதியது கடுகை விட சிறியது. நிறைய சொல்லவேண்டி இருக்கிறது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

