MARGAZHI SELVI 4 J K SIVAN

மார்கழிச் செல்வி 4 – நங்கநல்லூர் J K SIVAN
ஆங்கில வருஷம் கணக்குப்படி கோதை — இனி அவளை அப்படியே அழைப்போம். கி. மு 3005ல் பிறந்தாள் என்றும் 785 -805 அவளது காலம் என்றும் கூறுகிறார்கள். இருபது வருஷம் வாழ்ந்தாளா? நமக்கு ஆண்டாள் வருகை முக்யமாகட்டும். வருஷம் தெரிந்து என்ன பண்ணப்போகிறோம். ஐந்து வயதிலிருந்தே அப்பாவோடு பூப்பறித்து தொடுத்து அரங்கனுக்கு மாலை தயாரிக்க உதவினாள் .
கோதை பெரியாழ்வாரிடம் கல்வி கற்றாள். அவர் தான் ஆசிரியர். குரு. அவர் கற்பித்த பாடம் ஆழ்வார்கள் பாசுரங்கள். வேத சாஸ்திரங்கள். அவரைப்போலவே அவளும் பாசுரங்கள் இயற்றலானாள். அரங்கனைப் பற்றி அவ்வளவும் அறிந்து கொண்டாள் . அவனை அடையவும் முற்பட்டாள். அரங்கன் நினைவு அவளை முழுதும் ஆட்கொண்டது. அவனுக்கே ஆளானாள். அவனுடையவள் என்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். அரங்கனுக்கென்று தொடுத்த மாலையை தினமும் தனது தோள்களில் அணிந்து தானும், தான் தொடுத்த மாலையும், இரண்டுமே அவனுக்கு பொருத்தமா என்றும் அறிய முற்பட்டாள். கிணற்றில் தெளிந்த நீரில் தனது மாலையிட்ட உருவத்தை பார்த்து மகிழ்ந்தாள். இன்றும் அந்த கிணறு வில்லிப்புத்தூரில் இருக்கிறது. நிறைய காசை போட்டு நிரப்பி பார்க்க முடியாதபடி கம்பி வலைகள்!!
அவளது திருப்பாவையில் அவள் ஆயர்குடி பெண்ணாக யமுனை நதியில் மற்ற பெண்களுடன் நோன்பு நோற்றாள் . கிருஷ்ணனை வேண்டினாள் . ஒரு வேளை ராதையே தான் கோதையோ?
கண்ணனை பரிபூர்ணமாக சரணாகதி அடைந்தால் கிட்டும் பலன் அத்தனையும் சொல்கிறாள். கிருஷ்ணனின் சௌலப்யம் புரியவைக்கிறாள்.
நிறைய திவ்ய தேசங்கள் என்கிற வைஷ்ணவ க்ஷேத்ரங்களுக்கு செல்பவர்களே!,
ஒரு சேதி இதுவரை தெரியாதிருந்தால் இனி தெரிந்து கொள்ளலாம். பல திவ்ய தேச ஆலயங்களில் வட மேற்கு பகுதியில் ஆண்டாள் சந்நிதியை ஏற்படுத்தியவர் ராமானுஜர். ஆண்டாள் மீது அத்தனை பற்று, பக்தி. அவள் தமிழின் இனிமையில் கட்டுண்டவர். திருமலையில் அடிவாரத்தில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சந்நிதியில் பெருமாளுக்கு வலது பாகத்தில் வழக்கமாக அருள் பாலிக்கும் ஸ்ரீ தேவிக்கு பதிலாக ஆண்டாள் சிலையை சாசனம் பண்ணியவர் ராமானுஜர் என அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆண்டாளின் வாக்கு அந்த ஞானியின் ப்ராண மூச்சாகவே இருந்தது என தாராளமாக கூறலாம்.
ஆண்டாள் என்பது ஒரு கற்பனை வடிவம் அல்ல. நிஜமாகவே இருந்தவள். பரமனைப் பாடியவள். பலர் சாக்ஷியாக கண்ணால் காணும்போதே திருவரங்கத்தில் அவன் சந்நிதிக்குள் ஓடி அவனை அணைத்தவாறு அவனோடு இணைந்தவள். ஜோதியில் கலந்தவள் என்றும் சொல்லலாம்.
பதினோரு திவ்யதேசங்கள் அவளது மங்களாசாசனம் பெற்றவை. அவை : முதலாவது திவ்யதேசம் ஸ்ரீ ரங்கம், அடுத்தவை, திரு ஆய்ப்பாடி, திருக்கண்ணபுரம், திருக்குடந்தை, துவாரகை, பரமபதம், திருவேங்கடம். திருப்பாற்கடல், திருமாலிருஞ் சோலை, வடமதுரை, ஸ்ரீ வில்லிப்புத்தூர்.
ராமானுஜர் ஆண்டாளின் நாச்சியார் மொழி அருளிச்செயல், திருப்பாவை ஆகியவைகளை பிரசங்கம் உபன்யாசம் எல்லாம் பண்ண தான் அருகதை யில்லாதவன் என்று சொல்லிக்கொண்ட மஹா ஞானி, உத்தமர், மகோன்னத ஆண்டாள் பக்தர்.
இப்பூவுலகில் ஆண்டாளுக்கு தனது தந்தையான விஷ்ணுசித்தரைத் தவிர தெரிந்த ஒரே ஆண் அரங்கன் ஒருவனே. வயது வந்து விட்டதே — அந்த காலத்தில் பெண்களுக்கு 9 அல்லது 10 வயதுக்குள்ளாகவே அல்லவோ திருமணம் முடிப்பார்கள். விஷ்ணு சித்தர் வரன் தேட ஆரம்பித்தார்.
” என்னப்பா கொஞ்ச நாளாக எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருக்கிறீர்கள்?”
”என் கடமையை நான் செய்ய வேண்டாமா தாயே?”
”என்னப்பா அப்படி உங்களுக்கு ஒரு முக்கியமான கடமை ?”
”உனக்கு பொருத்தமான ஒரு வரன் தேடுகிறேன் அம்மா ?”
”எதற்கப்பா வீணாக அலைகிறீர்கள் நானே தேடியாச்சே!”
”அடேடே, ஆச்சர்யமாக இருக்கிறதே. யாரம்மா அந்த பாக்யசாலி?”
”உங்களுக்கு தெரிந்தவர் தான் அப்பா”! நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்தி சொல்லி மகிழ்வைத்தவர் அப்பா ”
”புரியவில்லையே ! யாரம்மா அது, விவரமாக சொல்லம்மா “
”நீங்கள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எடுத்துச் சொன்ன அறிமுகப்படுத்திய அரங்கன் தான் நான் வரித்த மணாளன்”
”ஹா ! என்னம்மா இது” ”நாராயணா நாராயணா – காதைப் பொத்திக்கொண்டார் விஷ்ணு சித்தர். பகவான் அவன். நாம் எல்லாரும் சாதாரண மனிதர்கள் ஆச்சே. பக்தி ஒன்றுதான் நமது உறவு அவனோடு தாயே!. வாழ்க்கை என்பது நமக்கு நம்முள் ஒருவரோடு அமைவது தான் நியாயமானது. வழக்கமானது நமது சம்ப்ரதாயம் அது தான் அம்மா ”
”அப்பா, உங்கள் மகள் வாழப்போவது அந்த அரங்கன் ஒருவனுடனே தவிர வேறு யாருடனும் கனவிலும் கூட நிச்சயமாக இல்லை. இனி அது பற்றி பேச்சே வேண்டாம். என் சொல் மீறி வேறு ஏற்பாடு ஏதாவது செய்ய முற்பட்டால் இறந்த உங்கள் மகளை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்க வேண்டுமானால் செய்யுங்கள் ”
அந்தக் கணம் முதல் அந்த ஜீவாத்மா பரமாத்மாவுக்கு கைங்கர்யம் இடைவிடாது செய்து உபாயம், உபேயம் அதைத் தொடர்ந்து பரம புருஷார்த்தம் அடைந்தது.
ஆண்டாள் என்றாலே நினைக்கும்போதே எனக்கு வியப்பு. எப்படி ஒரு சிறு பெண் இப்படி எழுதினாள் என்று. மனித காரியம் அல்லவே இது.
அவளைப்பற்றி நானும் விடாமல் யோசித்து, சிந்தித்து, அவளை பற்றிய ஒரு சிறு புத்தகம் எழுதினேன். பத்து வருஷம் முன்பு வைகுண்ட ஏகாதசி அன்று அதை வெளியிட்டோம். ” பாவையும் பரமனும்” என்ற பெயர் கொண்ட அந்த புத்தகத்தில் ஆண்டாளை வடக்கே யமுனைக் கரையிலே ஒரு ஆயர்பாடி கோபியாக கிருஷ்ணன் கால துவாபர யுக யாதவப் பெண்ணாக உருவமைத்து மற்ற பெண்களோடு மார்கழி முப்பது நாளும் அவர்கள் அவனை அடைய நோன்பு நோற்று அந்த கிருஷ்ணன் வீட்டையே சுற்றி சுற்றி வந்து அவனையே விரத பலனாக அடைவதாகவும், மற்றொரு பெண் கோதை என்ற பெயரில் எங்கோ தென் கோடியில் வில்லிப் புத்தூரில் ஒரு காட்டின் மத்தியில் துளசி நந்தவனத்தில் ஒரு சிறு பர்ண சாலையில் தன் வளர்ப்பு தந்தை விஷ்ணு சித்தர் என்கிற விஷ்ணு பக்தரிடம் வளர்வதாகவும், அவரிடம் கல்வி பயின்று பாசுரம் இயற்ற தகுதி பெற்று முப்பது பாசுரங்களை தானே அந்த ஆயர்பாடி ஆண்டாளாக நோன்பு நோற்பதாக கற்பனை செய்து திருப்பாவையாக அளிப்பது பற்றியும், விஷ்ணு சித்தர் நாள்தோறும் காத்திருந்து அன்றைய பாசுரத்தை ஆவலாக படித்து ரசித்து அதிசயித்து பெருமாள் கோவிலில் மற்றவர்களுக்கு திருப்பாவையின் உள்ளர்த்தத்தை எடுத்துரைப்பது போன்ற ஒரே மேடையில் மூன்று காட்சிகளாக அமைத்திருந்தது எனக்கே மகிழ்ச்சி அளித்தது. இது ஆண்டாளின் அருள் என்று தான் சொல்வேனே தவிர என் முயற்சி என்று சொல்ல இயலாது. அந்த புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம். பயப்பட வேண்டாம் விலை கிடையாது. நீங்கள் கொடுக்கும் நன் கொடை இது போன்ற புத்தகங்களை வெளிவர ஆகும் செலவில் உங்கள் பங்கும் அதில் உண்டு என்பதற்காகவே.
ஆண்டாள் வாழ்க்கையில் திருப்புமுனை அவள் தன்னை அரங்கனின் மனைவியாக மனதால் வரித்து செயலிலும் அவ்வாறு நடக்க முற்பட்டது. மனத்தைக் கொள்ளைகொண்ட அரங்கனுக்கு ஆசையாக மாலை தொடுத்து அதைத் தான் தோளில் சூடி, மாலையும் கழுத்துமாக அழகு பார்த்துவிட்டு ” அரங்கா உனக்கு திருப்தியா?” என்று கேட்டு அதை தோளிலிருந்து கழற்றி பிறகு அரங்கனுக்கு அது போய் சேர்ந்து ஒருநாள் அந்த மாலையில் கோதையின் தலை முடி இருப்பதைக் கண்ட விஷ்ணு சித்தர், இது மனிதர் உபயோகித்ததாயிற்றே அரங்கனுக்கு உகந்ததாகாதே என்று உணர்ந்து வேறு யாருமே இல்லாததால் அந்த மாலையை கோதை தான் உபயோகித்து இருக்கவேண்டும் என்று அவளை கோபித்து, வேறு மாலை உடனே தயார் செய்து, அரங்கனுக்கு சார்த்த முயல்கையில் அவன் அதை நிராகரித்து கோதை சூடிய மாலையே வேண்டும் என்று சொல்ல,பிறகு தான் விஷ்ணு சித்தர் உணர்கிறார் இவர்கள் இருவருமே ஒருவருக்காக மற்றவர் என்று.
தனது திருமணம் அரங்கனோடு நடந்த வைபவத்தை கனாக் காண்கிறாள் கோதை. ஆண்டாள் என்ற இடைபெண்ணாக தன்னை பாவித்து மார்கழி மாதம் முழுதும் யமுனையில் விடியற்காலை நீராடி நோன்பு நோர்த்து கன்ணனைத் தேடி அவன் வீட்டை சுற்றி வந்து கடைசியில் அவனை சந்தித்து அவன் அருள் பெறுகிறாள் அல்லவா. இதைப்பற்றிய ஒரு வர்ணனை.
”கண்ணா, இந்த மார்கழி முழுதும் பக்தியோடு உன்னை பாடிய இந்த ஆயர்குடி இடைப் பெண்கள் நாங்கள் உன்னிடம் என்ன கேட்கிறோம்? நீயார்? எங்களைப்போல் இடையர் குலத்தில் பிறந்தவனல்லவா? அதனால் நாம் எல்லோரும் ஒரே குலம் அன்றோ? ஒரே வித்தியாசம் நமக்குள் என்னவென்றால் நீ ஆண்டான் நான் ஆண்டாள் ஆக இருந்த போதும் உன் அடிமை. எங்களுக்கு நீ அருள வேண்டிய வரம் என்ன தெரியுமா?. இனி எங்களுக்கு எத்தனை எத்தனை பிறவி பாக்கியோ அத்தனை யிலும் நீ எங்களில் ஒருவன் நாங்கள் உன்னுடையவர்கள் புரிகிறதா? இப்படிப்பட்ட பக்த வாத்சல்யம் எவரிடம் காண முடியும்

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;