
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN நின்ற சீர் நெடுமாறன்.
திருநீற்றுப்பதிகம்
சிறந்த சிவனடியார்களை தேர்ந்தெடுத்து அறுபத்து மூவாராக சுந்தரரும் சேக்கிழாரும் காட்டி இருக்கிறார்கள். இதில் சிவனடியாரக்ளை ஆதரித்த ராஜாக்களும்,குறுநில மன்னர்களும் சிவனடியார்களாக சேர்ந்து நாம் வழிபடும் 63 நாயன்மார்களாக சிவாலயங்களில் சிலையாக நிற்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் நின்றசீர் நெடுமாற நாயனார். பாண்டிய ராஜா .கூன் பாண்டியன் என்ற பெயராலும் அறியப்படுபவர்.
“நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரரின் திருத்தொண்டத் தொகை குறிப்பிடுகிறது. நெடுமாறனார் பாண்டிநாட்டை ஆண்ட போது, வடநாட்டு மன்னர்கள், பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தவர் இந்த பாண்டிய ராஜா.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முதல் பாண்டியப் பேரரசுக்கு வித்திட்ட மாமன்னன் இந்த பாண்டியா ராஜா. இந்த முதலாம் பாண்டியப் பேரரசு கி.பி.570 முதல் கி.பி.966 வரை சுமார் 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கோலோச்சியது. இந்த நெடுமாறன் ஆண்ட காலம் கி.பி.640-கி.பி.690. மாபெரும் போர் வீரனாக விளங்கிய இவன் சேர, சோழ மன்னர்களோடு போரிட்டுப் பாண்டிய நாட்டை மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியவன். இதில் இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களும் அடங்கும்.
நின்றசீர் நெடுமாறன் ஆரம்பத்தில் சைவராகவும் பின்னர் சமணர்களின் ஈர்ப்பால் சமணமதத்தை சார்ந்திருந்தார். அதனால், பாண்டி நாட்டில் சைவம் நலிவுற்றது.
அவருடைய அல்ல காலம் நெல்வேலி என்னுமிடத்தில் சோழர்களுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற நெடுமாற பாண்டியன், சோழ இளவரசி மானியை மணந்துகொண்டார். அந்த ராணி தான் மங்கையர்க்கரசி எனும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். மங்கையர்க்கரசியார் சிறந்த சிவபக்தை.
சமணரான பாண்டிய ராஜாவுக்கு ஒரு சமயம் தீராத வயிற்று வலி. அதை குணப்படுத்த சமண சமய குருமார்கள் பல வகைகளிலும் முயற்சி செய்தனர். யாராலும் குணப்படுத்த முடியவில்லை. இறுதியாக, மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளின்படி திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து, ‘திருநீற்றுப் பதிகம்’ பாடி, மன்னரின் நெற்றியில் திருநீறு பூச, மன்னரின் வெப்பு நோய் நீங்கியது. அதையடுத்து சமணம் விட்டு விலகி சைவம் சார்ந்த நெடுமாற பாண்டியன், சைவத்துக்கும் சிவனடியார்களுக்கும் பெருந்தொண்டு செய்து சிவபதம் அடைந்தார். இன்று திருநீற்றுப்பதிகம் பற்றி சொல்ல விரும்புகிறேன்.
1.”மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு,சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு, செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே”
விபூதி எனும் திருநீறு, மந்திர சக்தி கொண்டது. பயம் நீக்குவது. நற்பயனைத் தருவது. விண்ணவர் மண்ணவர் , மன்னவர் அனைவரும் போற்றி அணிவது. நெற்றியில் அணிந்தவர்க்கு அழகு, பொலிவு ரெண்டையும் தருவது. துதிக்கப்படுவது. மதுரை சொக்கேசன் அருள் தருவது. .
2.வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு, சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
வேதத்தால் போற்றப்படும் விபூதி. உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சகல வியாதிகள், கஷ்டங்கள், தீர்ப்பது.நல்லறிவும்,தெளிவும்தந்து தீங்குகளை நீக்குவது. விபூதி மஹிமை வாயமனக்க ஓத தகுந்தது. ஸத்ய ஸ்வரூபம்.விபூதி அலங்காரன், அபிஷேகம் சொக்கேசன் அருள் தருவது.
3. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு, சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு, சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
விபூதி மோக்ஷம் தருவது. முனிவர்கள் ரிஷிகள் பெருமையாக அணிவது. எதனிலும் மேலானது. ஆகவே சிவனடியார்கள் உடல் பூரா பூசுவது. சகல உயிர்களுக்கும் சிவபக்தி தருவது. அஷ்டமா சித்தி அளிப்பது.சொக்கேசன் உகந்து அணிவது.
4. காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு, பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு, சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே
விபூதி அணிபவர்களைக் காணும்டபோது இனிமையாக இருக்கிறது. இது அணிவோர்க்கும் காண்போர்க்கும் நன்மை தருவது. பிறப்பு இறப்பு தடுத்து மோக்ஷம் தர வல்லது. ஜீவர்களுக்கு உயர்வைத் தருவது. மதுரை ஆலவாய் அழகன் சொக்கநாதன் அணிவது.
5. பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு, பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு, தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே
விபூதி பூசிக்கொள்ள தேகம் புண்யம் பண்ணி இருக்க வேண்டும். வாய் மணக்க விபூதி மஹிமை சொல்லலாம். உலகத்தில் பந்தங்களால் விளையும் ஆசையை நீக்குவது. மேன்மை பெற செய்வது. லைக்கு செல்ல வழி வகுக்கும். எல்லாவற்றிர்க்கும் சகல கார்ய சித்தி ஒளஷதம் விபூதி. மதுரை சொக்கேசன் அணிவது.
6. அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு, வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு, திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வம் திருநீறு. துன்பம் தீர்ப்பது. மனதை சீர்த்திருத்துவது. சிறப்பளிப்பது. அணியும் எவரையும் இன்புறச் செய்வது. புண்ய பலன். முகத்துக்கு ஆபரணம். மதுரை சொக்கேசன் உகந்து மகிழ்ந்து அணியும் ஆனந்தம் தருவது.
7.எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு,பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு,அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
சாம்பல் அநித்யத்தை நினைவூட்டுவது. முப்புரத்தை எரித்த சாம்பல் இது. இம்மை, மறுமை, ஆகிய ரெண்டிலும் கும் உயிர்த்துணை விபூதி. நித்தியமாயும், உயர்ந்த பொருளாயும் பயின்று , நுகரும் பொருளாக உடையது நீறு. நமது பாக்யம் நமக்கு அது கிடைத்திருக்கிறது. மாயை, சோர்வு தடைகள் அனைத்தும் நீக்கி பரிசுத்தமாக்குவது. வேலாயுதன் தந்தை சூலாயுதம் சொக்கேசன் அழகாக அணிவது.
8. இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு, பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு, அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே
லங்கேசன் இராவணனை நெற்றியில் திருநீறு இல்லாமல் படத்தில் பார்க்க முடியாது. எண்ணங்களை தகுதியாக்கிப் போற்றி வழி படுவதற்கு உரியது . விபூதி அபிஷேகம் பண்ணி புண்யம் அடைந்தவர் பலபேர்கள். பாபத்தைப் போக்குவது உலகம் அநித்தியம், எது சாஸ்வதமல்ல என்று சதா நினைவூட்டும் சாதனம் விபூதி. பன்னக பூஷணன் பரமேஸ்வரன் அணிந்து மதுரையில் காட்சி தருவது.
9. மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு, மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு,ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே
அரியும் அயனும் அரனை பூஜித்து பூசுவது விபூதி. தேவராகில் மெய்யை அலங்கரிப்பது. பிணிகளை நீக்கி இன்பம் தருவது. நஞ்சுண்ட கண்டன் நீலகண்டன், மதுரை சொக்கேசன் அணிவது.
10.குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்,கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு,அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே
சமணர்களும், சாக்கியர்களும் திகைக்கும் தகைமையில் காட்சி தருவது திருநீறு. பூசினாலே தெய்வீகம் தருவது விபூதி. எண்டிசையிலும் சர்வ வியாபியாக சிவனை பரிமளிக்க செய்வது விபூதி. தேவர்கள் பணிந்து ஏத்தும் திரு ஆலவாய் சுந்தரேஸ்வரன் அணிவது.
11. ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
ரிஷபாரூடன் சிவன் சொக்கேசனாக விளங்கி பூசும் வெண்ணீறை திரு ஞான சம்பந்தர், மதுரை மன்னன் கூன் பாண்டியன் நேராக நிற்க வைத்து, நின்ற சீர் நெடுமாறன் என பெயர் வைத்து, அவன் வயிற்றில் திருநீறு பூசி,அவனை வாட்டிய வெப்பு நோயை நிக்கி குணமாக்கினார். .இந்த திருப்பதிகத்தை ஓதும் எவரும் வியாதி இன்றி வாழ்வார்கள் என்கிறது இந்த பலஸ்ருதி . .
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

