
”எழுந்திரு, வா என் பின்னாலே சட்டுனு”
நங்கநல்லூர் J K SIVAN
இது நடந்தது மதுரையிலே. 225 வருஷங்கள் முன்னாலே. வெள்ளைக்காரன் காலம். மதுரை ஜில்லாவுக்கு ஒரு நல்ல வெள்ளைக்காரன் கலெக்டர் ஆனான். ரோஸ் பீட்டர் அவன் பேர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அவன் கையிலே இருந்தாலும் அவனுக்கு நமது கடவுள் மேலே மரியாதை, கொஞ்சம் பக்தியும் நேர்மையும் ஜாஸ்தி. எல்லோரிடமும் அன்பாக பழகி பீட்டர் பாண்டியன் என்ற பேரும் வாங்கிட்டான் ரோஸ் பீட்டர். கலெக்டர் வீட்டுக்கும் ஆபிசுக்கும் நடுவே மீனாட்சி அம்மன் கோவில் இருந்தது. கலெக்டர் மாளிகைக்கு எதிரில் தான் அம்பாள் ஆலயம். கிருத்துவராக இருந்தும் ரோஸ் பீட்டருக்கு நாளாக நாளாக மதுரை மீனாட்சி மீது ஒரு தனி மதிப்பு மரியாதை வளர்ந்தது. ஏதோ ஒரு சக்தி அவளிடம் இருப்பதால் தானே இத்தனை ஆயிரம் மக்கள் எங்கிருந்தோ வந்து அவளை வழிபடுகிறார்கள் ! மீனாக்ஷியின் உருவப்படம் வைத்திருந்தார். மதுரை மீனாட்சி ஆலயம் அவர் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. குதிரையின் மீது பிரயாணம் செய்தவாறு கோவிலைச் சுற்றி வருவார். ஆலய நிர்வாகம் ஒழுங்காக நடப்பதில் தனி ஈடுபாடு கவனம் செலுத்தினார்.
அப்போ நிறைய வீடுகள் கிடையாதே. தோட்டம் வயல் குளம் குட்டை தான் எங்கேயும் . ரோஸ் குதிரை மேலே ஏறி தான் ஆபிஸ் போவான். ஆனால் நடுவே மீனாட்சி அம்மன் கோவில் வரும்போது இறங்கி தலையிலே குல்லாவை கழட்டிட்டு, காலிலே ஷூவை கழட்டிட்டு மரியாதையோடு நடந்து போவான். கோவிலுக்குள்ளே போனதில்லை. மீனாட்சியிடம் அவ்வளவு பக்தி மரியாதை.
வைகை ஒருநா வெள்ளத்திலே கரைபுரண்டு ஓடிச்சி . ராத்திரி கரை உடைஞ்சிடுச்சி . கலெக்டர் வீட்லே தூங்கறான். ஓவுன்னு மழை. வெள்ளம் ஊருக்குள்ளே வேகமாக ஓடியார ஆரம்பிச்சாச்சு. தூங்கற கலெக்டர் காதுலே ‘ஜல் ஜல்’ னு தோ ஒரு சலங்கை கொலுசு சத்தம் விடாம கேட்டிச்சு. ‘இன்னாடா ரோதனை இது ன்னு எந்திரிச்சான். இங்கே எங்கிட்டிருந்து கொலுசு சத்தம்வருது? பளிச்சுனு ஒரு மின்னல் வெளிச்சம். லாந்தர் விளக்கை பெரிசு பண்ணி பாக்கிறான் கலெக்டர். ஒரு சின்ன மூணு வயசு பொண்ணு. பட்டு பாவாடை சட்டை போட்டுக்கிட்டு நிக்குது. கழுத்துல மூக்கிலே,காதுலே எல்லாம் நிறைய நகை போட்டுக்கிட்டு பளிச்சுனு மினுக்குது. அழகா இருக்குது. ”பீட்டர் வா உடனே இங்கே ”ன்னு கை காட்டி கூப்பிடுது.”அட , இந்த சிறிசு என்னை பேர் சொல்லி கூப்பிடுதே. எதுக்கு?’ அந்த குட்டிப்பொண்ணு அவனை எழுப்பி கையைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு போச்சு. கனவா, நினைவா. ரோபோ போல பீட்டர் ரோஸ் வெளியே நடந்தான். யார் அந்த பெண். மூன்று வயது இருக்கும் போல் இருக்கிறதே. எதற்கு என்னை எழுப்பி வெளியே கொண்டு செல்கிறாள்?. காரிருளில் கொட்டும் மழையில் பேசாமல் அவள் பின்னால் வெளியே நடந்தார் பீட்டர் ரோஸ்.
வெளியே காவலில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம் . கவலை. எதற்கு கலெக்டர் தனியே இரவில் எழுந்து வெளியே நடக்கிறார். அரைத்தூக்கம் போல் இருக்கிறதே அவரைப் பார்த்தால். அவர்கள் கண்ணுக்கு பொண்ணு தெரியலியே .
ஒரு ரெண்டு நிமிஷம் கூட ஆவலே . கலெக்டர் வெளியே வந்ததும் டமால் னு காதைப் பொளக்கிற சத்தம். பட படன்னு வெடி சத்தத்தோடு அவன் வீடு இடிஞ்சு விழுது.. வெள்ளம் தண்ணி வீடு இருந்த இடத்தை முழுகடிச்சுட்டுது. அவன் வீடு இப்போ வைகை நதிக்குள்ளே.
வீட்டுக்குள்ளாறவே இருந்திருந்தா அவன் கதி என்னா ஆயிருக்கும்? யோசித்து பார்த்தான். உடம்பு வெவெடவெடன்னு அடிச்சு. மாரு படபடன்னு அடிச்சிக்கிச்சி. கண்ணு சுத்துது.
”அம்மாடி, தாயே, பொண்ணே, யாருடி நீ. என்னை எழுப்பி கூட்டி வந்து காப்பாத்தினவள்”. பீட்டர் தேடுறான். அந்த பொண்ணு எங்கே திடீர்னு காணோம்?. அவளை கடைசியா ரோஸ் பாக்கும்போது வெறும் காலோடு கொலுசு சத்தம் கேக்க கோவிலைப் பாக்க நேரா ஓடினாள்… மூடியிருந்த கோவில் கதவுக்குள் எப்படி நுழைந்தாள்? எங்குமே தேடியும் அவளைக் காணோம். நிசப்த நள்ளிரவில் எங்கே ஒரு சிறு பெண் ஓடி கண்ணெதிரே மறைய முடியும்? ஹிந்துக்கள் கோவிலில் காலணி அணிந்துகொண்டு உள்ளே செல்ல மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியுமே”ஏதோ பிரமையில் இருந்த கலெக்டர் இன்னும் சுதாரித்துக் கொள்ளவில்லை. அதிசயமாக தானாகவே இருளில் அறையில் இருந்து வெளியே வந்து உயிர் தப்பிய அவரை எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள். என்ன நடந்தது?.. பீட்டர் பாண்டியன் கெட்டிக்காரன். புரிஞ்சி கிட்டான்.
” டே பீட்டரு , உன்னை காப்பாத்தியது மீனாக்ஷி டா”- அவன் நெஞ்சிலே யாரோ திருப்பி திருப்பி சொல்றாங்களே.
சந்தோஷமா நன்றியா எதுன்னு ரோஸுக்கு புரியலே. ஒரே பரவசம் கலெக்டருக்கு.
பொழுது விடிஞ்சுது. கொஞ்சம் மழை விட்டது.
கோவில் தர்ம கர்த்தா, அர்ச்சகர் எல்லோரையும் கூட்டிவாங்கன்னு ஆளு விட்டு அனுப்புனான். அவங்க ஓடி வந்தாங்க.
”உங்கள எதுக்கு கூப்பிட்டேன் தெரியுமா? ”அழகான ஒரு சிறு பெண். மூன்று நான்கு வயது ஆனவள் போல் இருந்தாள் . சிரித்த முகம். ஆஹா என்ன அழகு. கண்ணைப்பறிக்கும் ஆபரணங்கள் பளிச்சென்று அணிந்தவள். பாசமாக என்னை பார்த்தவள் ”பீட்டர் எழுந்திரு உடனே. என்று என்னை தூக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பி வா என் பின்னே” என்று என் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள் . பலமுறை யோசித்தேன். அவள் வேறு யாராகவும் இருக்க முடியாது. நிச்சயம் மதுரை அம்பிகை மீனாட்சி தான். எங்கிட்ட இருக்கிற இந்த மதுரை கோயிலில் இருக்கிற பெண் சாமி படத்தில் பார்த்தது போலவே இருந்தது அந்த பெண்ணின். ஒன்றும் தோன்றாமல் ஏதோ ஒரு சக்தி என்னை ஈர்க்க நானும் அந்த பெண் உருவத்தின் பின் தூக்கம் கலைந்து சென்றேன்” என்றார் ரோஸ் பீட்டர். ஆம் அந்த பெண் என் மனதில் எப்போதும் இருந்த மதுரை கடவுள் மீனாட்சிதான் என்று கூறினார். இந்த அதிசய சம்பவம் உண்மை. மதுரை ஆலய சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.
மழை நின்றது. மறுபடியும் மதுரை பழைய நிலைக்கு தயாரானது. பீட்டர் ரோஸ் மனதில் ஒரு எண்ணம். தன்னைக் கைபிடித்து வெளியே இழுத்து, நொறுங்கிய பழைய மாளிகை சிதிலத்தில் இருந்து உயிர் காப்பாற்றிய அம்பிகைக்கு ஏதாவது ஒரு காணிக்கை செய்ய வேண்டும்.
கோவில் நிர்வாகத்தினரை அழைத்தார். ”உங்கள் மீனாட்சி அம்பாளுக்கு எந்த நகை ஆபணம் இல்லையோ, தேவையோ, அதை என்னிடம் சொல்லுங்கள். நான் உடனே அதை செய்து என் காணிக்கையாக அளிக்க விரும்புகிறேன்’;”’அம்பாள் மீனாக்ஷி சர்வாலங்கார சர்வாபரண பூஷிதை. எல்லாமே இருக்கிறது, எதுவும் வேண்டாம்”
”இல்லை ஏதாவது ஒன்று நான் செய்து தந்தே ஆக வேண்டும். நீங்களும் அதை அவளுக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் . அது எது என்ன என்று நீங்கள் கலந்து ஆலோசித்து உடனே சொல்லுங்கள். இது என் அன்புக்கட்டளை.”
யோசித்த ஆலய நிர்வாகிகள் ”கலெக்டர் அவர்களே, எங்கள் மீனாக்ஷி அம்பிகைக்கு ஒரு காலணி ஜோடி செய்து தாருங்கள்” என்றனர்.
”மிக்க மகிழ்ச்சி, ஆஹா …நானும் அதையே தான் நினைத்தேன். அந்த பெண் அன்றிரவு காலில் எதுவும் அணியாமல் ஓடினாள். உடனே ஏற்பாடு செய்கிறேன்”
கலெக்டர் பீட்டர் ரோஸ், தங்கத்தால் இரண்டு கொலுசு காலணி செய்தார். அதில் 412 பவளங்களும், 72 மரகதக் கற்கள் – 80 வைரக்கற்கள் பொருத்தி – அதில் “”பீட்டர்”” என்று பெயர் பதித்து காணிக்கையாக கொடுத்தார். இந்த கொலுசு காலணி இன்றும் “”சித்திரைத்திருவிழா”” காலத்தில் அம்பாள் மீனாக்ஷிக்கு அணிவிக்கிறார்கள். திருவிழாவில் ஐந்தாம் நாள் அம்பாள் குதிரை வாகனத்தில் மதுரை பிரதான வீதி ஊர்வலத்தில் வரும்போது இதை அணிவாள். .சித்திரை விழாவில் உத்சவ அம்மனை ரோஸ் பீட்டர் பாதுகையோடு பார்க்கலாம். அந்த பாதுகையிலே பீட்டர் னு அவன் பேர் பொரிச்சிருக்கும். குதிரை மேலே உட்கார்ந்து அம்மன் போகும்போது காலுக்கு அது மிதியடி. சித்திரை திருவிழாவில் ஐந்தாம் நாள் தங்க குதிரை மேல் அம்மன் பவனியில் இது கண்கொள்ளாக் காட்சி.
மதுரை மீனாட்சி அந்த தூங்கா நகரத்தின் தாய். எண்ணற்ற ஹிந்து பக்தர்கள் தரிசித்து மகிழும் அன்னை பராசக்தி. அவள் சாதாரணமானவளா? ஹிந்துக்களுக்கு மட்டும் அருள்பவளா? இல்லை என்கிறது மேலே நடந்த சரித்திர நிகழ்ச்சி பீட்டர் ரோஸ் மீனாட்சி பக்தர் என்பதில் சந்தேகமே இல்லை.
மற்றொரு சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது தெரியுமா?
வேட்டையாட ரோஸ் பீட்டர் சென்றான். வழியில் ஒரு காட்டு யானை அவனைத் தாக்கி தனியே அதனிடம் அகப்பட்டுக்கொண்ட போது ”அம்மா மீனாட்சி என்னை காப்பாற்று” என்று வேண்ட அவனிடம் இருந்த துப்பாக்கியில் இருந்த ஒரே குண்டால் யானையைப் படுகாயம் அடையச் செய்து அது தப்பி ஓடச் செய்து உயிர் தப்பினான்
வேலை காலம் முடிந்து பீட்டர் ரோஸ் மற்றவர்களை போல் இங்கிலாந்து திரும்பவில்லை. ”என்னை இங்கே மதுரையில் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் புதைத்து விடுங்கள். இந்த சர்ச் மெயின் கார்டு சதுக்கத்தில் இன்றும் உள்ளது. அவரது கல்லறை மதுரை மீனாட்சி ஆலயத்தை பார்த்தவாறு தான் இருக்கிறது என்கிறார்கள். உண்மையான பக்திக்கு மதம் என்றும் தடையாக இருந்ததில்லை.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


