
சப்த விடங்க க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN திருவாரூர் – வீதி விடங்கர்
சப்த விடங்க க்ஷேத்ரங்களில் பிரதானமானது திருவாரூர் வீதி விடங்கர் ஆலயம். நாங்கள் திருக்கார வாசல் என்ற ஊரில் இருந்தோம். அங்கிருந்து திருவாரூர் கிளம்பின மறுநாள் ஆடி அமாவாசை. திருவாரூர் கமலாலயத்தில் நிறைய வாத்தியார்கள் இருக்கிறார்கள். ஆகவே அமாவாசை தர்ப்பண அனுஷ்டானங்களை கமலாலயக் கரையில் முடித்துக் கொள்வதற்காக முதல்நாள் இரவே திருவாரூர் வந்து விட்டோம். தியாகேசன் ஆலய தரிசனம் செய்தபிறகு ஒரு இடம் தேடி தங்குவோம் என்று எண்ணம். கோவில் வாசலில் வேங்கடசுப்ரமணியன் என்ற மின்சார இலாகாவில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர் தென்பட்டார். அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு என் கையிலிருந்த மஹா பெரியவா பற்றி நான் எழுதிய ”பேசும் தெய்வம்” புத்தகத்தைக் கொடுத்தேன். தங்க இடம், மறுநாள் காலை தர்ப்பண வசதி சாப்பாடு ஆகியவை பற்றி விசாரித்தேன். பரம சந்தோஷம் அவருக்கு. எங்கோ சென்றார் பத்தே நிமிஷத்தில் நாங்கள் தங்க ஒரு நல்ல விடுதியை கோவில் எதிரிலேயே பிடித்துக் கொடுத்தார். அடுத்தநாள் ஆடி அமாவாசை தர்ப்பணம் பண்ண ஒரு வாத்யாரையும் ஏற்பாடு பண்ணி காலை 7 மணிக்கு கமலாலயம் குளக்கரைக்கு வரச் சொன்னார். எங்கள் சாப்பாட்டிற்கு வடை பாயசத்தோடு வீட்டு சமையல் ஒன்றும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார். வெகுநாள் பழகியவர் போல் அவர் குடும்பம் எங்கள் மேல் பாசத்தை கொட்டியது. 93 வயது வேங்கடசுப்ரமணியன் அம்மா உபசரித்து வரவேற்றாள். கிடுகிடுவென்று அங்குமிங்கும் நடந்து தனது வேலைகளை யார் உதவியும் இன்று தானாகவே மடியாக செய்து கொள்கிறாள். அவளை நமஸ்கரித்தோம். சந்தோஷமாக ஆசிர்வதித்தாள். என் புத்தகங்கள் ரொம்ப பிடித்ததாம்.
ஆலயம் கதவு சாத்துவதற்கு முன்பு சீக்கிரம் சென்று தரிசனம் பாருங்கள் என்று வேங்கடசுப்ரமணியன் எங்களை அழைத்துச் சென்றார். ஓடினோம். சப்த விடங்க க்ஷேத்ரத்தில் அதி முக்கியமான திருவாரூர் மரகத லிங்க வீதி விடங்கரின் அபிஷேகமும் முதல் நாள் இரவு 7.30மணிக்கு காத்திருந்து அற்புதமாக பார்க்க முடிந்தது. கொடுத்து வைத்தவர்கள் நாங்கள். இல்லையென்றால் இதெல்லாம் நடக்குமா கிடைக்குமா? இரவே தியாகராஜரை தரிசித்தோம். நாங்கள் தங்கிய விடுதிக் கருகிலேயே வெறும் இட்டலி சட்னி மட்டும் சூடாக ஒருவர் தயாரித்து விற்கிறார். எனவே இரவு ஆகாரமும் இனிது முடிந்தது.
திருவாரூர் தியாகராஜர் ஆலயம் ரெண்டாயிரம் வருஷ மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் கூட. நாயன்மார்கள் பாடல் பெற்ற ஸ்தலம். பஞ்ச பூத ஸ்தலத்தில் ப்ரித்வி ஸ்தலம். பிரம்மாண்ட ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். காவிரி தென்கரை பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களில் இது 87ஆவது. பிரதான சப்த விடங்க க்ஷேத்ரம். நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். திருவாரூர் பற்றிய சில அற்புத விஷயங்கள் சொல்கிறேன்.
எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .
சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பரவையைப் பெண் கேட்ட திருத்தலம்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.
திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவு கொண்டதாகும். 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பு. 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட பெரிய சிவஸ்தலம் திருவாரூர். சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள். ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கர வர்த்திக்கும் அளிக்கப் பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிஷ்டை செய்யப்பெற்றவர்.
திருவாரூரில் பிறந்தாலே முக்தி காரண்டீ என்று பெருமை கொண்ட க்ஷேத்ரம். தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த சிவாலயம். கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.
திருவாரூர் தேர் திருவிழா, திருக்கோவில், கமலாலயம் திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு ரொம்ப நேர்த்தி. கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
திருவாரூரில் நான்கு தீர்த்தங்கள் . 1. கமலாலயம் – இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் – இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் – இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் – (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது. இதைத் தவிர “செங்கழுநீர்ஓடை” என ஒரு நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.
தியாகராஜர் இங்கே அற்புதமான அஜபா நடன மூர்த்தி. சுந்தரர், “திருத்தொண்டத் தொகை”யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய க்ஷேத்ரம் திருவாரூர். முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் செம்மையாக ஆண்ட ஊர். தண்டியடிகள் அவதரித்து முக்தியடைந்த ஸ்தலம். கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் சிலை உள்ளது.நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலமும் திருவாரூர் தான். .
சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர ராயர்கள் கல்வெட்டுகள் 65 உள்ளன என்று அறிந்தேன். அம்பாள் பெயர்கள் நீலோத்பலாம்பாள். கமலாம்பாள். கமலாம்பாள் சந்நிதி சக்தி பீடங்களில் ஒன்று. சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் கமலாம்பாள் வீற்றிருக்கிறாள். முத்துஸ்வாமி தீக்ஷிதர் அன்னை கமலாம்பாள் மேல் நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.
ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணம் கமலாலயக் கரையில் வேங்கடசுப்ரமணியன் அழைத்து வந்த வாத்யார் உதவியோடு படித்துறையில் நிறைவேறியது. குளக்கரை யோரத்தில் ”மாற்றுரைத்த பிள்ளையார்” இருக்கிறார். அவரைப் பற்றிய கதை அழகானது.
சுந்தரர் இறைவன் கொடுத்த பொற்காசு உண்மையிலேயே தங்கமா என்று சந்தேகப்பட, அருகே இருந்த இந்த பிள்ளையார் வட்டிக்கடை மார்வாடி போல் தங்கத்தை உரைத்துப் பார்த்து மாற்று குறைவில்லை என்று சொன்ன இடம். திருவாரூரைப் பற்றியே நூற்றுக்கணக்கான கதைகள் எழுத விஷயம் இருக்கும்போல இருக்கிறது. தர்ப்பணம் முடிந்து வேங்கடசுப்ரமணியன் ஏற்பாடு பண்ணி இருந்த கணபதி அய்யர் மெஸ்ஸில் சுடச்சுட வீட்டு சாப்பாடு. சிரம பரிகாரம் சற்று எடுத்துக் கொண்டு அடுத்த விடங்க க்ஷேத்ரத்துக்கு புறப்பட்டோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

