VITTAL THE HORSE. J K SIVAN

”விட்டலன்” குதிரை  –    நங்கநல்லூர்  J K   SIVAN
 பகவான் ஒருவன் தான். அவனுக்கு எத்தனையோ  பெயர்கள். உருவங்கள் கொடுத்து பக்தர்கள் அவரவர் விருப்பம்போல் கொண்டாடுகிறார்கள். மகிழ்கிறார்கள். ஒவ்வொரு  பெயர் உருவமும் மற்றொன்றிலிருந்து வேறு பட்டது. வித்த்யாசமானது.
மஹா விஷ்ணு தான்  எண்ணற்ற உருவங்களும் பெயர்களுக்கும் இடையே  முக்கியமாக  பத்து அவதாரங்கள் எடுத்தவர். (தசாவதாரம்). அவற்றில் ராமன், கிருஷ்ணன் என  ரெண்டு.  கிருஷ்ணன் தான் பாண்டுரங்கன், விட்டலன் என்றும் கொண்டாடப்படுபவன்.    பண்டரிநாதன் பக்தர்கள் அநேகர். அவர்களை பற்றி பக்த விஜயம் புத்தகத்தில் அறிகிறோம்.  நானே  தமிழில்  ”தெவிட்டாத விட்டலா”  புத்தகம்  தமிழிலும் ” VITOBA  THE  NECTAR  புத்தகம் மாநிலத்திலும் எழுதி ஆயிரக் கணக்கான பிரதிகள் விநியோகம் ஆகியிருக்கிறது.பாண்டுரங்க பக்தர்களில் ஒருவர் பானுதாசர்.  இப்போது அவரைப் பற்றிதான்  கொஞ்சம்  சொல்கிறேன். ப்ரதிஷ்டான புரத்தில்  வழக்கம்போல் ஒருநாள்  காலை  சூரியன்  உதயமாகும்போது ஒரு பிராமண  பக்தர் அவனை வணங்கி ஸ்தோத்ரம் பண்ணினார். அவருக்கு  ஒரு அழகான பிள்ளை பிறந்தான். அவனை ஆசையாக வளர்த்து  அவனுக்கு உபநயனம் பண்ணி வேதங்கள் சொல்லி கொடுத்தார். பிராமணர் கொஞ்சம் கோபக்காரர். சரியாக கவனிக்க வில்லை என்றால் கோபம் வந்துவிடும். பாடம் சொல்லிக் கொடுக்கும் போது ஒருநாள்  அந்த பிள்ளை மீது கடும் கோபம் வந்துவிட்டது.  பையன் பயந்து போய் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டான்.  கண் பார்த்த திசையில், கால் போன போக்கில் அப்பாவிடமிருந்து தப்ப ஓடினான். எங்கோ ஒரு காட்டுக்கு நடுவில் ஓடின போது அவன் முன்னால் ஒரு பழைய சிதிலமான கோவில்.  மண்ணில் புதைந்து இருந்ததால், பூமிக்கு அடியில்  கோவிலின்  முக்கால் பாகம்.  கோவிலுக்குள் நுழைந்து கீழே இறங்கி  ஒரு மறைவான இடத்தில் பையன்  அமர்ந்து கொண்டான்.
அந்த பழைய கோவிலில் ஒரு  சூரியன் விக்ரஹம் .  பையனின் அப்பா சூரிய பக்தர் அல்லவா?அவனுக்கும் சூரியன் பிடிக்கும். சூரியனை விழுந்து வணங்கினான்.  அவன் பக்தியை மெச்சிய சூரிய பகவான் ஒரு கிழ பிராமணர் வேடம் தரித்து பையன் முன்னே வந்தார். அவர் கையில் செம்பில் பால். ”இந்தா பையா  குடி”. என்றபோது வயிறு முட்ட பசி ஆற குடித்தான். ”எதற்கும் பயம் வேண்டாம். இங்கேயே இரு. வெளியே காட்டில் போகாதே.  பாண்டுரங்கனை மனதில் தியானம் செய்” என்று கிழவர் உபதேசித்தார். நான் அடிக்கடி வந்து உன்னைப் பார்த்துக் கொள்வேன்.”
பிராமணர் வீட்டில்  ஒரே சோகம். அப்பாவும் அம்மாவும் பையனை எங்கெல்லாமோ தேடினார்கள். அழுதார்கள். ஏழு நாள் ஆகியும் பையனைப் பற்றி  ஒரு விவரமும் இல்லையே.   ப்ரதிஷ்டானபுரம் கிராம பையன் ஒருவன் எதேச்சையாக காட்டுக்கு  மரம் வெட்ட வந்தவன் கண்ணில்  பிராமண பையன் பட்டதும்.”வீட்டுக்கு  வா” என்று அழைத்தான். பையன் வீடு திரும்ப  பயந்து மறுத்து விட்டான்.  ஊர்க்கார பையன் ப்ராமணரிடம் அவர் பிள்ளை காட்டுக்குள் ஒரு கோயிலில் இருப்பதைச்  சொன்னதும் அப்பா அம்மா இருவரும் ஊர்க்காரர்களோடு  சேர்ந்து அங்கே ஓடிவந்தார்கள்.
கோவிலுக்குள் சூரியநாராயணன் விக்ரஹம் . அதன் காலடியில் பையன் படுத்துத்  தூங்கிக் கொண்டிருந்தான்.”என் மகனே, செல்வமே, எப்படியடா எங்களை விட்டுப்  போக துணிந்தாய்?. எப்படிடா ஏழு நாட்கள் அன்ன ஆகாரமின்றி  இங்கே காட்டுக்குள்  உன்னால்  இருக்க முடிந்தது.?” பெற்றோர்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்.”அம்மா, அப்பா, இங்கே  ஒரு தாத்தா வருகிறார். என் மீது அன்பும் பாசமும் கொண்டவராக எனக்கு வேளா  வேளைக்கு பால்  பழம் எல்லாம் கொண்டு வந்து தருகிறார்.
”ஆஹா, பகவானே, சூர்யநாராயணா, என்னே உன் கருணை. இந்த  ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில், கொடிய வனவிலங்குகள் உலாவும் பகுதியில் இந்த சிறு குழந்தைக்கு  பாதுகாப்பு கொடுத்து, உன்னருகே வைத்துக் கொண்டு, அவனுக்கு பெற்ற   தாயை விட  சாலப்  பரிந்து உணவூட்டியவன் நீ யேதான்”சூரிய நாராயணனை எல்லோரும் வணங்கினார்கள்.  சூரியனுக்கு ‘பானு” என்று பெயர் அல்லவா? சூரிய பகவான் கிருபையால் பாதுகாக்கப்படுகிற நீ  இன்று முதல் பானு தாசன் என்ற பெயர் கொண்டவன் என்று எல்லோரும் அந்த பையனை வாழ்த்திக்  கொண்டாடினார்கள். ‘  அப்பா  பானுதாசனைத் தோளில்  தூக்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தார்.பகவானே, சூர்யநாராயணா,  இவன்  உன் தெய்வானுக்கிரஹம் பெற்றவன். இனி ஒரு வார்த்தை கூட  கடிந்து கோபமுடன் பேசமாட்டேன் என்று அப்பா  பகவானிடம் மன்னிப்பு கேட்டார். பானுதாசன் ஹரி நாம சங்கீர்த்தனத்திலும் தியானத்திலும்  காலம் கழித்தான். அவனுக்கு கல்யாணமும் நடந்தது.  காலப்போக்கில் பெற்றோர்  மறைந்தனர்.  பானுதாசன் எந்த  உலக ஈர்ப்பும் இன்றி, சதா நாராயண  தியானத்திலேயே காலம் போக்கினான். அந்த ஊர்  ராஜா அரண்மனையில்  உத்யோகம் தர அழைத்தபோது வேண்டாம் என மறுத்துவிட்டார் பானு தாசர். மனைவி குழந்தைகளுக்கு உணவு உடை இருக்க இடம் வேண்டுமே? எந்த வருமானமுமின்றி எப்படி பராமரிப்பது?அப்பா அம்மா இருந்தபோது அவர்கள் அந்த சுமையை தங்கினார்கள்? இனி?…
ஊர்க்காரர்கள் ஒன்று கூடி  ”பானுதாசரே, உங்கள் குடும்ப கஷ்டம் நீங்கள் அறியவில்லையே? பார்க்கும் எங்களுக்கு உணவால் குடும்ப பசி பட்டினி, வறுமை புரிகிறது. நாங்கள் நூறு ரூபாய் தருகிறோம். அதை வைத்து ஏதாவது  துணி வியாபாரம் பண்ணி அப்புறம் அதில் சம்பாதித்த பிறகு எங்களுக்கு அசல் நூறு ரூபாயை திருப்பித்  தாருங்கள் என்றனர்.  கடைக்குப்  போய் நிறைய துணிமணிகள் வாங்கி அதை பானுதாசரிடம் கொடுத்து  ”இதை எல்லாம் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று விற்று சம்பாதித்து பணம் கொண்டு வந்து குடும்பத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி கொடுங்கள்” என்று சொன்னார்கள்.  இந்த வியாபாரத்தில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த சில வியாபாரிகளையும் அவரோடு   அனுப்பினார்கள். மற்ற  வியாபாரிகளோடு பானுதாசர் குதிரை மேல் சவாரி செய்து கொண்டு  போனார். அவர் குதிரைக்கு நெற்றியில்  ”விட்டலன்” என்று பெயர் எழுதி நாமம் சாற்றி பிரயாணம் செய்தார்.மற்ற வியாபாரிகள் எப்படி லாபம் வைத்து  துணி விற்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். விலையைக்  கூட்டி பொய்   நிஜம் போல் சொல்லி  விற்கவேண்டும். அப்போது தான் லாபம் வரும்” என்றார்கள். ”எனக்கு பொய்  சொல்ல வராதே”  என்றார்  பானு தாசர். ”ஐயா  வியாபாரத்தில் பொய் சொல்லி பிழைக்காதவனே இல்லை” என்று வியாபாரிகள் சொன்னது பானுதாசருக்கு புரியவில்லை. ”இவ்வளவு விலை தான் இந்த துணிக்கு, அதற்கு மேல் லாபம் தான் வைத்து விற்க சொல்கிறார்கள் ” என்று வருவோரிடம் சொல்லி பானுதாசர் விற்பது எல்லோருக்கும் பிடித்துவிட்டது. உண்மையான ஆள் இவர் என்று அவரிடமே துணி வாங்கினார்கள். மேற்கொண்டு காசும் தாராளமாக தந்தார்கள்.  அவரிடம் மட்டுமே  வியாபாரம் அமோகமாக நடந்தது. கூட இருந்த மற்ற வியாபாரிகளுக்கு வியாபாரமே ஆகவில்லை.
”இவன்  மந்திரக்காரன்,அதனால் தான் எல்லோரையும் மயக்கி அமோகமாக வியாபாரம் பண்ணி பணம் கூடவே சம்பாதிக்கிறான். என்று மற்ற வியாபாரிகளுக்கு பானுதாசர் மேல் பொறாமையும் கூட உண்டானது. அவர்களும் பானுதாசரைப் போல் உண்மை விலை சொல்லிப்  பார்த்தும் எவரும் அவர்களிடம் வியாபாரம் பண்ண வரவில்லை.
ஒருநாள் ஒரு புது ஊருக்கு  வியாபாரம் செய்ய பானுதாசரோடு சென்றார்கள். அங்கே சந்தையில் மற்றவர் களோடு  பானுதாசரும் தரையில் துணி விரித்து தன்னுடைய துணிமணிகளை வியாபாரம் செய்ய உட்கார்ந்தார்.
அருகே ஒரு கோவில். அங்கே சாயந்திரம்  ஹரிநாம சங்கீர்த்தனம் என்ற சேதி சந்தை பஜாரில் சேதி  காதில் விழுந்ததும் பானுதாசருக்கு சந்தோஷம்.  ”இன்னிக்கு  ஏகாதசி, நாம் எல்லோரும் சாயந்திரம்  நேராக கோவிலுக்கு சென்று பஜனையில் ஈடுபடுவோமா?”என்று மற்ற வியாபாரிகளை  அவர் கேட்டபோது அவர்களுக்கு அதில் விருப்பமில்லை. ”சரி நான் போகிறேன். என் கடையில் உள்ள துணிமணிகளை நீங்களே  பார்த்துக் கொள்ளுங்கள், என்ன வியாபாரம் நடக்கிறதோ நடக்கட்டும்  நான் பாராயணம் பஜனை முடிந்ததும் வந்துவிடுகிறேன்” என்கிறார் பானுதாசர்.”இல்லை நாங்கள் ரொம்ப களைப்பாக இருக்கிறோம். நீ எங்காவது உன் துணிமணிகளை ஜாக்கிரதையா வைத்து விட்டுப்போ ”என்று சொல்லிவிட்டார்கள் மற்ற வியாபாரிகள்.
”நான் இங்கேயே  என் துணிமணிகளை வைத்து விட்டு போகிறேன். விட்டலன் தரிசனம் எனக்கு முக்கியம். அவன் பார்த்துக் கொள்வான் ” என்று பானுதாசர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.விட்டலன் தரிசனம், பக்தர்கள் பரவசம் இதில் பானுதாசர் மனம் ஆழ்ந்ததில் துணிமணி வியாபாரம் எல்லாம் மறந்தே போய் விட்டது.
மற்ற வியாபாரிகள் ஒரு சதித்திட்டம் போட்டார்கள். ”இந்த பயல்  பானுதாசன் துணிமணிகளை நாம் எடுத்து மூட்டை கட்டி  ஆற்றங்கரையில் ஒரு ஒதுக்குப்புறத்தில் மண் தோண்டி குழியில்  புதைத்துவைத்து  விடுவோம். அவன் குதிரையை அவிழ்த்து விடுவோம் அது எங்காவது ஓடிப்  போகட்டும். பானுதாசன் வந்து கேட்டால், நாங்கள் அசந்து தூங்கிக்  கொண்டிருந்த சமயம் திருடர்கள் வந்து  உன் துணிமணிகளை குதிரையோடு சேர்த்து  கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டார்கள்” என்போம்.   பானுதாசன் வெறும் கையுடன் ஊர் திரும்புவான். அவன் போனபிறகு நாம்  அவன் வியாபார துணிமணிகளை விற்று பங்கு போட்டுக் கொள்வோம். என முடிவெடுத்தார்கள்.  துரியோதனன் தர்மனை ஏமாற்றி பகடை ஆட ஐந்து தோற்றுப்போக செயது அவன் ராஜ்யத்தை எடுத்துக் கொண்டது போல்  அவர்களுக்கு சந்தோஷம்.
விட்டலனுக்கு காது கேட்காதா? விட்டலன் அனைத்தும் அறிபவன் அல்லவா? தனது பக்தன் தன்னை பரவசமாக போற்றி பாடி ஆடிக் கொண்டிருந்த நேரம் அவனைக்  காப்பாற்ற,   தான் ஒரு கிழ பிராமணனாக வேஷம் கொண்டு பானுதாசரின் குதிரையைத்  தேடிப்  பிடித்தான். திருட்டு வியாபாரிகள்  எப்படி  பானுதாசரின் பொருளைக்  கைப்பற்றி பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று திட்டம் போடும்போது உண்மையாகவே சில கொள்ளையர்களை விட்டலன் அவர்கல் இருந்த இடம் போக செய்தான். கொள்ளையர்கள்  வியாபாரிகளை அடித்து அவர்களிடமிருந்த பொருள்கள், பணம், அவர்கள் குதிரைகள்  எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு சென்று விட்டார்கள்.
கோவிலில்  விட்டலன் ஏகாதசி பஜன் அற்புதமாக  வாத்ய  கோஷங்களோடு  நடை பெற்றுக்கொண்டிருந்தது. பானுதாஸர்  இந்த உலகிலேயே இல்லை. ஆனந்த சாகரத்தில் மூழ்கி இருந்தார். பஜனை எல்லாம் முடிந்து பிரசாதம் விநியோகம் ஆனபிறகு தான் அவருக்கு தனது வியாபார நினைவு வந்தது. ஓடி வந்தார். வரவழியில் ஒரு பிராமணர் தனது குதிரையை பிடித்துக் கொண்டு  நிற்பதைப் பார்த்தார். அவர் குதிரை தான் ‘விட்டலன்’ என்ற பெயரோடும்  நாமத்தோடு நிற்குமே. ஆகவே தனது குதிரையை அவரால் அடையாளம் காண முடிந்தது.”எப்படி என் குதிரை இங்கே வந்தது? அதை கட்டிப்போட்டுவிட்டு மற்ற வியாபாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அல்லவோ வந்தேன்?”குதிரை  பானுதாசரைப் பார்த்ததும் அவர் அருகே வந்தவுடன் அந்த பிராமணரை காணோம். எங்கே மாயமாக மறைந்தார்?  குதிரையைப்   பிடித்துக் கொண்டு மற்ற வியாபாரிகள் தங்கி இருந்த இடத்துக்கு வந்த போது அவர்கள் கதறினார்கள்.
”ஐயா நாங்கள் உங்கள் பணத்தை, பொருள்களை குதிரையை எல்லாம் கைப்பற்றி விற்று  பணத்தை பங்கு போட்டுக்கொள்ள திட்டம் போட்டதன் பலன் எங்கள் குதிரைகள் ,  துணிமணிகள், இத்தனை நாள் சேர்த்து வைத்த  பணம் எல்லாமே போய்விட்டது. கொள்ளையர்கள் சிலர் எங்களை எல்லாம் கண் மண் தெரியாமல் அடித்து விட்டு, எல்லாவற்றையும்  எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். நல்லவர் உங்களை ஏமாற்ற எண்ணியதன் பலன் கைமேல், உடம்பில் அடியோடு  கிடைத்துவிட்டது. நாங்கள் எல்லாம் கோட்டை விட்ட,பரம பிச்சைக்காரர்கள் இப்போது.   நீங்கள் எங்களை மன்னிக்கவேண்டும்” என்று அழுதார்கள்.
பானு தாசர்  அவர்களிடம் ”நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் ஒளித்து வைத்த என்னுடைய துணிமணிகள், என் குதிரை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஊர் திரும்புங்கள். என் மனது  இனிமேலும்  வியாபாரத்தில் ஈடுபடாது,  நான் விட்டலனையே தியானம் பண்ணி என் மிச்ச வாழ்வை கழிக்க விரும்புகிறேன் என்று வீடு திரும்பாமல்  அங்கிருந்தே  பண்டரிபுரம் நடந்தார்.  எங்கு நடந்தாலும்  பானுதாசரின் பஜனை கீர்த்தனங்களைக்  கேட்டவர்கள்  பக்தியில் ஆழ்ந்தார்கள்.
நான் மேலே  சுருக்கமாக  சொன்னது  பானு தாசரைப் பற்றி ரொம்ப கொஞ்சம் தான். இன்னும் அவர் மஹாத்மியம்  நிறைய இருக்கிறது. சொல்கிறேன். காத்திருங்கள். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;