MARGAZHI VIRUNDHU J K SIVAN

மார்கழி விருந்து   – நங்கநல்லூர்  J K  SIVAN
தொடர் இதோடு முடிகிறது…
பெற்ற மனம் பித்து.

அன்பு நண்பர்களே, யோசித்தீர்களா?  சென்ற மார்கழி முப்பது நாளும்  நாம் ஆண்டாள் கோதை இருவரோடும், அல்லது இருவருமான ஒருவருடன் மட்டுமே, அவள் தந்தையான ஒரு சிறந்த வைணவ சிகாமணி, ஆழ்வார், இல்லை, ஆழ்வார்களுக்குள்ளேயே ”பெரிய” ஆழ்வாருடனும், மனத்தில் கண்ணனோடும் ஆயர் பாடியிலும் வில்லிபுத்தூரிலும் இருந்தோமே. இப்போது  ஆண்டாளுக்கு கல்யாணம் ஆகிவிட்டதே புருஷனிடம் சென்றுவிட்டாளே. கல்யாண வைபவம் முடிந்து எல்லோரும் திரும்பியாகி விட்டதே. பெண்ணின் தந்தை வில்லிப்புத்தூர்  திரும்பி  வந்துவிட்டாரே — தனியராக.
இத்தனை நாளும், இல்லை  பத்து பதினைந்து வருஷங்களாக தனது நிழலாக, உயிராக இருந்த கோதை இப்போது ஸ்ரீரங்கத்தில் அல்லவோ இருக்கிறாள். யாரை விரும்பினாலோ அவனை அடைந்து விட்டதால் என்னை மறந்து போனாளோ?  

இதோ நாம் எல்லோரும்  வில்லிப்புத்தூரில் பெண் வீட்டுக்கு, அது தான், விஷ்ணு சித்தர்  ஆஸ்ரமத்துக்கு,  வந்துவிட்டோம். அங்கே உள்ளே  என்ன நடக்கிறது……?

சிலை போல வெகு நேரம் நின்று கொண்டிருந்தார் விஷ்ணு சித்தர்.சுற்று முற்றும் வெறித்து பார்த்தார். தலையை ஏமாற்றத்தோடு ஆட்டுகிறார். என்னவோ தனக்குத் தானே பேசுகிறாரே!

”அன்னம் ஆகாரம் எல்லாம் மறந்து விட்டதா வெறுத்து விட்டதா? அவளில்லையே! இனி எனக்கு  அன்னம் எதற்கு, நீர் எதற்கு , வீடு வாசல் இந்த தோட்டம் ஏன், என் உடலே எதற்கு? எல்லாம் அவளாகவே இருந்து அவளே இல்லாமல் போன பின் நானே எதற்கு? என் கண்களில் ஆறாக வழியும் நீர் ஆனந்த கண்ணீரா? இல்லை அளக்க முடியாத சோக கண்ணீரா? தெரியவில்லையே. எனது மனம் பித்து பிடித்து விட்டதே!!.

இதோ! இந்த துளசி வனத்தில் தானே, ஒரு ஆடிப் பூரம் அன்று, விடிகாலை என் ரங்கனை பாடிக் கொண்டே புஷ்பம் பறிக்க வந்தபோது அந்த சின்னக்  குவா குவா  குரல் கேட்டேன். ஆச்சர்யமாக, அவளை ஒரு தெய்வ பிம்பமாக, தாயாரின் சிறு வடிவாகப்பார்த்து இதோ இந்த கூடத்தில் இட்டு பால் வார்த்தேன். இங்கு தானே ரங்கன் விக்ரஹத்துக்கு முன்னால் அமர்ந்து அவளை மடியில் போட்டுகொண்டு அனைவர் மத்தியிலும் அவளுக்கு இரவெல்லாம் யோசித்து பொருத்தமாக “கோதை” என்று பெயரிட்டேன். பூமியில் இருந்து தோன்றியவள் என்று அர்த்தமல்லவா. இங்குதானே அவள் எப்போதும் என்னோடு அமர்ந்து பேசுவாள். ரங்கன் கதையெல்லாம் திரும்ப திரும்ப கேட்பாள். வாய் ஓயாமல் நானும் சொல்லிச் சொல்லி மகிழ்வேனே. எப்போதும் இந்த பூக்கூடையை பார்த்து “மாலை ரெடியா?” என்று கேட்பாளே. ஏன் எதற்கு என்று ரொம்ப காலம் புரியாமலே இருந்து விட்டேனே!. தினமும் நான்  ரங்கனுக்கு கட்டிவைத்த மாலையைத்  தன் தோளில் சூட்டிக்கொண்டு இங்கே பின்னால் இருக்கும் கிணற்றில் நீரில் தன் அழகை பார்த்து “ரங்கா, நான் உனக்கு ஏற்றவளா? உனக்கு பிடிக்கிறதா என்னை” என்று கேட்பாளாமே. இறைவனின் மனதில் இடம் பிடித்த அவளை ஒன்றும் அறியாதவனாக நான் கோபித்ததே மா பெரும் தவறு. அவள் சூடிக் கொடுத்த மாலை தான் எனக்கு வேண்டும் என்று ரங்கனே அல்லவா உணர்த்தினான் எனக்கு.
அவள் அவனுக்காகவே பிறந்தவள். என்னிடம் வளர்வதற்காகவே வந்தவள். நான் பாக்யவானே! அப்பறம் தானே அந்த அழகிய மணவாளனே இதை எல்லாம் எனக்கு புரிய வைத்தான்!.
ஆஹா, என்ன குரல், என்னகுரல் அவளுக்கு. எவ்வளவு சூடிகை. எவ்வளவு அறிவு. என்னமாய் தமிழ் பாசுரங்கள் எழுதலானாள். என் பெண் சாதாரண பிறவி அல்ல என்று வாய்க்கு வாய் சொல்வேனே. அவள் பாசுரங்களை நானே எத்தனையோ முறை பாடி மகிழ்ந்தேனே! எல்லாம் அவள் என்னை விட்டு பிரிவதற்காகவேவா?”.

“ச்சே” என்ன எண்ணம் இது. அவள் எங்கு என்னை விட்டு பிரிந்தாள்?. நான் அல்லவோ மேள தாளங்களோடு அரசன் அனுப்பிய பல்லக்கிலே சகல மாலை மரியாதைகளோடு மஹா லக்ஷ்மியாக அவளைச்  சீவி சிங்காரித்து சீர் வரிசையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினேன். கூடவே போனவனும் கூட.

என்ன அழகு அவளுக்கு, எத்தனை மகிழ்ச்சி முகத்தில். “இன்னும் எத்தனை தூரம் இருக்கு?  எவ்வளவு நேரம் ஆகும் ஸ்ரீ ரங்கத்துக்கு?” என்று வழி முழுதும் கேட்டுக்  கொண்டே வந்தாளே. “என்ன ஆச்சர்யம், என்ன அதிசயம் என்னைக்  கிள்ளிப் பார்த்துக் கொண்டும் கூட என்னால் நம்ப முடியவில்லையே”.

ஸ்ரீ ரங்கம் வந்தவுடனே “இதோ, வந்து விட்டது, ரங்கனின் இடம்.   எனக்காக உன்னை காக்க வைத்து விட்டேனே ரங்கா!, பல்லக்கை இறக்குங் கள்” என்று அவசர அவசரமாக இறக்கச்  சொல்லி தாவிக்  குதித்து ரங்கனின் சந்நிதிக்குள் ஓடினாள். எல்லாரும் ‘ரங்கா ரங்கா’ என்று உணர்ச்சி பொங்க கூவினோம். அவள் பின்னே ஓடினோம். என் கோதை, எனை ஆண்டாள், எங்களையெல்லாம் பார்க்கக் கூட நேரமில்லாமல் உள்ளே சென்றாள். அரவணையில் பள்ளி கொண்ட ரங்கனை ஆரத்தழுவினாள். பிறகு…. பிறகு …..? ரங்கனோடு கலந்து மறைந்தாள்!!!
இறைவனோடு எங்கள் இறைவி ஒன்றாக கலந்தது துக்கமா?? நிச்சயம் இல்லைதான்! ஆனால், ஆனால்,….
அவளை இனி என் கோதையாக பார்க்க முடியவில்லையே!”…..

நண்பர்களே, வாசகர்களே,  ஒரு தகப்பனின் பாசக் குமுறல் தான் இது!. நாமேல்ல்லாம் கூட  லக்ஷங்களிலே  பணம் செலவழித்து பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி, அவளைக்  கணவன் வீட்டுக்கு கட்டுச்சாத கூடை யோடு, அனுப்பும்போது குலுங்கி குலுங்கி அழுகிறோம்.  பாவம் என்னமாக  விஷ்ணு சித்த  பெரிய  ஆழ்வார் அழுவார்…..அவரை அமைதியாக உணர்ச்சிகளை கொட்டவைக்க விட்டு விட்டு நம் வீடுகளுக்கு திரும்புவோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;