
@திருவெம்பாவை 2 – நங்கநல்லூர் J K SIVAN
மணி வாசகர் – மார்கழி 2
திருவெம்பாவை முதல் பாடலில் மணி வாசகர் துயில் கொண்ட ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை எடுத்துரைத்தார் அல்லவா? இன்னும் எழுப்புகிறார் மற்றவர்களை,
” ஹே பெண்ணே, முதலும் முடிவும் இல்லாத, காணுதற்கு அரிய பெருமையை யுடைய ஒளிமயமான சிவபெருமானை நாங்கள் பாடுவதைக் கேட்டும், வாள் போன்ற கூரிய , பெரிய கண்களைக் கொண்ட பெண்ணே, இன்னுமா தூங்குகிறாய்? உன் காது கேட்காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் சப்தம் தெருவெல்லாம் எதிரொலிக்கிறது. உன் டமார செவியில் மட்டும் புகவில்லையோ?
இதோ பார் எங்கள் தோழி ஒருத்தி பக்தி மேலீட்டால் பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு அப்படியே ஸ்தம்பித்து சிறிதும் தனது நினைவின்றி கிடக்கிறாள்.
இது என்ன அற்புதமான நிலைமை பார்! என் கண் போன்றவளே , இவளது பக்தியின் பெருமை நீயும் உணர்வாய்.?
2. பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
”ஹே பெண்ணே, சிறந்த ஆபரணங்களை உடலில் அணிந்தவளே! என்னடி எப்போதும் பேசுகிறாயே, அது யாரைப் பற்றி?” என்று கேட்பேனே , அப்போது நீ என்ன சொல்வாய் என்பது ஞாபகமிருக்கிறதா?
”இரவும் பகலும் நான் பேசுவது ஒன்றைப் பற்றி தான் . அது தான் எப்போதும் என் உள்ளே நிறைந்திருக்கும் ஞானப்பிரகாசம், பரஞ்சோதி, பரமேஸ்வரன் அண்ணாமலையான் பற்றி தான். என் அன்பு, ஒருவரிடத்தில் மட்டுமே, அதுவும் எதற்கும் மேலான ஒளிப் பிழம்பான அந்த தில்லை நாதனுக்கு மட்டும் தான் என்று சொல்வாய்”
”அப்படிப்பட்ட நீ ஏன் இப்போது இந்த பட்டு விரித்த படுக்கையிடம் அன்பு வைத்து அதை விட்டு எழுந்தி ருக்கவே மனம் இல்லையா? ” என்கிறார்கள் அந்த தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவள் தோழிகள்.
நாம் பேசும் பொழுதெல்லாம் அந்த உடுக்கை தரித்த பரமேசன் புகழ் பாடி எங்களோடு இன்பம் துய்த்தாய், பாசம் நேசம் எல்லாம் எல்லாம் இப்போது இந்த படுக்கை மீது விழுந்துவிட்டதா? எனக் கேள்வி கேட்கிறார்கள்.
அதற்கு அந்த தூங்கிய பெண், அவள் தான் இப்போது விழித்துக் கொண்டு விட்டாளே! என்ன சொல்கிறாள்?
”பெண்களே! சீச்சி . போதுமடி ….. நீங்கள் பேசும் நகைச்சுவை பேச்செல்லாமே எப்போதும் இப்படித்தான். நக்கல் நையாண்டி. இதைப்போல் பலவற்றை நான் உங்களிடம் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். என்னோடு விளையாடி என்னை கேலி செய்ய இது சரியான ஒரு சமயம் என்று முடிவெடுத்து விட்டீர்களா?
தேவர்களும் வழிபடுதற்கு கூச்சப்படும் அழகிய தாமரை மலர் போன்ற தனது திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவமானவன் என் தெய்வம். அருணாசலேஸ்வரன், தில்லைச் சிற்றம் பலத்தான். இடதுபதம் தூக்கி நின்றாடும் கண்கண்ட தெய்வம் அந்த சபாபதி மீது அன்பு பொருந்தி யவர்கள் அல்லவா நாம்– அது தான் நானும் நீங்களும்… என்னைப்போய் நீங்கள் இப்படி…”!
அந்த பெண் எழுந்து விரைந்து வாயிலில் காத்திருக்கும் பெண்களோடு சேர்ந்து கொள்கிறாள்.
”ரொம்ப நல்லது பெண்ணே. அப்படி யென்றால் ,உனது எண்ணம், பிடிப்பு, விருப்பு எல்லாமே அந்த சர்வேஸ்வரனின் மேலேயே இருக்கட்டும். ஏன் தெரியுமா? விண்ணவர்களும் மண்ணவர்களும் போற்றி வணங்கும் ஒளியை, , சிவலோக நாதனை, சிற்றம்பலனை, பொன்னம்பலனை, நாம் வாஞ்சையுடன் வணங்கும் விஸ்வேஸ்வரனை நினையா நாளெல்லாம் பிறவா நாளே.
மார்கழி அதிகாலை வழக்கம்போல் சில பெண்கள் சிவனைத் துதித்தவாறு மற்ற பெண்களை துயில் எழுப்புவதாக மிக அருமையாக மணி வாசகர் அருளிய திருவெம்பாவை அவரது திருவாசகத்தில் ஒரு பகுதி.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



