
பொன்னோ, பொருளோ, சதமல்ல. நங்கநல்லூர் J K SIVAN
இது எவரையும் குறிப்பிடவில்லை என்றாலும் எப்போதோ வாழ்ந்த ஒரு சிலரின் வாழ்க்கையோடு பொருந்தினால் அது வாஸ்தவம் தான். உலகத்தில் நடப்பது, அறிந்த தெரிந்த அனுபவம், தான் எழுத்தோ, பேச்சோ, பாட்டோ ஏதாவது ஒன்றாகிறது.
‘அவனுக்கு’ இறைவன் அற்புதமான குரலைக் கொடுத்திருந்தான். அதை அந்த கெட்டிக்காரன் உணர்ந்திருந்தான். பாடினான், உலகம் மெய் மறந்து கேட்டது. ராஜாவாக, சக்ரவர்த்தியாக உயர்ந்ததா. சில காலத்திற்கு பிறகு அவன் கோலோச்சிய காலம் மங்க ஆரம்பித்தது. அவன் குரல் இப்போது வெளியே எழும்பவில்லை. சினிமா, கலை உலகம் அவனை மறந்து போய்விட்டது . ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த, பாடிய அழகு நடிகன் அவன். குரல் வெண்கல நாதம் . அவன் குரலிலிருந்து மத்தாப்பூ போல சங்கதிகள் பளிச் பளிச்சென்று உதிர்ந்தது . அதில் மயங்காதவர் எவரும் இல்லை. அவனைச் சிறுவயதில் யாரோ ஒரு அறிவாளி பட தயாரிப்பாளனோ இயக்குனனோ கண்டுபிடித்ததே ஒரு கதை.
ஓடும் ரயிலில் அந்த சிறுவன் பெட்டி பெட்டியாக ஏறி, கையில் ஒரு அலுமினியம் லோட்டாவை பாடிக்கொண்டே நீட்டுவான். அவனது ராக ஆலாபனை, குரலின் காந்த சக்தி அந்த ரயிலில் பிரயாணம் செய்த சினிமாக்காரருக்கு ரொம்ப பிடித்தது. ஐந்து ரூபாய் காசுகள் போட்டு தலையசைத்து ரசித்தார். வண்டி ஸ்டேஷனில் நின்றதும் இறங்கும்போது அந்த தனவான் ”பையா, நீயும் என்னோடு வருகிறாயா, உன்னை நாடக கம்பெனியில் பாட, நடிக்க வைக்கிறேன். தங்க இடம், சாப்பாடு, சம்பளம் தருவார்கள்” என்றதும் பரம ஆனந்தம் அந்த சிறுவனுக்கு. அவரோடு சென்றான். அவன் தாய் தந்தை அவனைப் பற்றி கவலைப்படவில்லை.
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, மதராஸ், கோவை என்று பல இடங்களுக்கு நாடக கம்பெனி சென்றது. வருஷங்கள் ஓடியது.
சிறுவன் இப்போது அயன் ராஜ பார்ட் நடிகன். அவன் பெயரைப் போட்டாலே கும்பல் சேர்ந்தது. நாடக கொட்டகைகளில் அவன் படம் பெரிதாக தொங்கியது. நோட்டிஸ் பார்த்து விட்டு மக்கள் வெள்ளம் நிரம்பியது. கொட்டகை பொங்கி வழிந்தது.
பதினெட்டு வயதான காளையாக அவனை சினிமா உலகம் அடையாளம் கண்டு கொண்டது. படத்தில் நடிக்க வைத் தார்கள். அத்தனையும் வெற்றிப்படங்கள். பல இசைத்தட்டுகள் அவன் பாடல்களை தாங்கி ஊர் உலகமெல்லாம் கேட்டு மயங்கியது. அவனைத் தெரியாத ஆளே கிடையாது. குதிரை மேல் சவாரி செய்தான். பெரிய மாளிகை கட்டி வாழ்ந்தான். பன்னீரில் குளித்து தங்கத்தட்டில் உண்டான். பல பெண்கள் அவனை நாடினர். யாரையோ மணந்தான். பலரை கை விட்டான். நடித்தான். குடித்தான். பணம் அவனை அறிவிலியாக்கி சிக்கல்கள் சூழ்ந்தன. கொலை வழக்கிலும் சிக்கினான். சிறை சென்றான். பல வருஷங்கள் கழித்து வெளிவந்தான். அவனை சினிமா உலகம் சட்டென்று அதற்குள் புதிய கால வெள்ளத்தில் மூழ்கி மறந்து விட்டது.
மீண்டும் எப்படியோ பட உலகம் ஒன்றிரண்டு சந்தர்ப்பம் கொடுக்க முன் வந்தது. கண்டிஷன்கள் போட்டது. அவன் சுய கௌரவம், அகம்பாவம், .அதை ஏற்க மறுத்தது. படவுலகம் ஏனோ இப்போது அவன் குரலை கேட்க விரும்ப வில்லை. பாட்டுக்குப் பதில் ‘பேச்சை’ ஆதரித்தது. அவனுக்கு பேச தெரியாது. பாட மட்டுமே நன்றாக வரும்.. குரலில் பழைய கம்பீரம், காந்த சக்தியைக் காணோம்.
கடன் வாங்கினான். தானே படமெடுத்தான். அவனைத் தவிர அவன் படத்தைப் பார்க்க அதிக ஆளில்லை. முடங்கினான். வியாதி வந்தது. சொத்தை விற்று கடனை அடைத்தான். ஓட்டாண்டியானான். ஆரம்ப வாழ்க்கை திரும்பியது.
கோவில்கள் வாசலில் அமர்ந்து பாடினான். தான் யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ள மறுத்தான். அவன் பாட்டை கே ட்டவர்கள் ”ஆஹா, நீ அந்த பெரிய நடிகன் பாடுவானே அவனைப்போலவே அழகாக பாடுகிறாயே, குரல் தான் அவனைப் போல இல்லை” என்று அவனிடமே சொன்னார்கள். தனது புகழ் இன்னும் முற்றிலும் மங்கவில்லை என்ற சந்தோஷம் அவனை வாழ விட்டது.
ஒரு நாள் காலை யாரோ ஒரு தற்போதைய புது நடிகனின் படம் வெளி வருவதால் அவனுடைய பிரம்மாண்டமான பெரிய உருவத்தை, CUT OUT. சட்டம் கட்டி வாசலில் நிற்க வைத்து ஏணி வைத்து மேலே ஏறி அந்த நடிகன் படத்தின் தலையில் பால் நிறைய கொண்டு வந்து குடம் குடமாக ஊற்றினார்கள். அதை வாசலில் ஒரு மூலையில் நின்றவாறு அந்த பழம் பெரும் நடிகன் பார்த்து பெருமூச்சு விட்டான். அந்த CUT OUT பாலபிஷேக நடிகன் ஒரு காலத்தில் தனக்கு கால் பிடித்து விட்ட பையன் என்று தெரிந்து சிரிப்பு வந்தது. ஒரு பெருமூச்சு விட்டான்.
மெதுவாக ஒருநாள் நடக்க முடியாமல் கிழிந்த ஆடைகளோடு தெருவில் நடந்தவன் ஒரு டீக்கடை வாசலில் நின்றான். அந்த டீக்கடையில் தினச் செய்தி பத்ரிகைகளும் வார இதழகிலும், சின்ன மாதாந்திர புத்தகங்களையும் பாலுசாமி நாடார் விற்றார்.
அந்த கடையில் தொங்கிய ஒரு செய்தித்தாளில் அவன் படம் இருந்ததைக் கண்டு நின்று பாரத்தான். அவன் நாடக சினிமா, உலகில் 30ஆண்டுகள் தலை சிறந்து ஆட்சி புரிந்தது, அவன் நாடகங்கள், சினிமா படங்கள், வெகுநாட்கள் ஓடியது பற்றி அவனது பிரபல பழைய படங்களில் இருந்து போட்டோக்கள் அந்த பத்திரிகையில் படமாக தெரிந்தது. அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அந்த பத்திரிகை ஒரு பிரதி வாங்க கூட கையிலோ, பையிலோ காசில்லை.
”என்னா பெரிசு, சினிமா ந்யூஸ் பார்க்கிறியா. ஒரு காபி நாலு ரூபா”
நாடார் கேள்விக்கு அவன் பதில் பேசாமல் தனது படங்களின் போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று கண்களில் நீர் பெருகியது.
‘ஹே, நன்றி கெட்ட உலகமே, நான் தான் அந்த படங்களில் இருப்பவன் ” என்று கத்த முயன்றான். நெஞ்சை ஏதோ அடைத்தது. பேச்சு வரவில்லை, மூச்சுத் திணறியது. டீக்கடை பெஞ்சில் சாய்ந்தான். மண்டையில் ஒரு கல் இடித்து ரத்தம் சொட்டியது. ‘ ஹும் ‘ என்று ஒரு வார்த்தை எழுந்து அடங்கியது.
பால்ராஜ் நாடார் ”யார்டா இந்த சோம்பேறி இங்கே வந்து சாவறான்” என்று முனகிக்கொண்டே சோடா வை வாயில் ஊற்றிய போது அது வழிந்தது. திறந்திருந்த கண்களை மூடி விட்டார். ஓடிப்போய் போலீஸ்காரன் ஒருவனை அழைத்து வந்தார்.
நடிகன் இப்போது விண்ணுலகத்தில் நடிக்க போய்விட்டான். போலீஸ் வந்தது. அவன் யாரென்று அடையாளம் தேடியது. அவனது கிழிந்த ஜிப்பாவில் ஒரு பிளாஸ்டிக் கவரில் அவன் பெயர் அச்சிட்ட புகைப்படங்கள், எல்லாம் ஹிட் படங்களில் அவன் ஹீரோ வாக நடித்த காட்சிகள் தாங்கிய பழைய படங்கள்…..
மறுநாள் அவன் பெயர், பழைய பெருமை, அவன் சாதனைகள் தாங்கிய பத்தி பத்தியாக செய்திகள் வந்தபோது அவன் ‘ காலமானான் ” என்ற வார்த்தையும் அதில் இருந்தது…… நாடார் கடையில் பலர் பத்ரிகை நிறைய விற்றது. பழைய ரசிகர்கள் கண்ணீர் சிந்தினார்கள்….பாவம் நாடாருக்கோ அவனுக்கு கடைசியில் சோடா வாயில் ஊற்றியவன் என்பது தெரியவில்லை. அவருக்கு தமிழை எழுத்து கூட்டி தான் படிக்க தெரியும். நாலு க்ளாஸுக்கு மேல் தாண்டாத கல்வியறிவு.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



