
everyonefollowmeமயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN
9வது நிறைவு பகுதி
ஹனுமான் உடனே தாமதிக்காமல் மயில் ராவணனை
அடைந்தார். ஹநுமானைக் கண்டது அவன் ‘ஹே வானரமே, உன்னைத்தான் நான் இத்தனை நேரமாகவும் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ எங்கே சென்று ஒளிந்து கொண்டாய்? என் மாயத்தைப் பார்த்து பயந்து ஓடி விட்டாயா? வா….உன்னை எமலோகத்துக்கு அனுப்ப ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வா…’ என சூளுரைத்தான்.
மயில் ராவணன் உயிர் நிலை எங்குள்ளது என்பதை அறிந்து கொண்டு விட்ட ஹனுமார் முன்னைவிட அதிக உற்சாகத்தோடு யுத்தம் செய்யக் கிளம்பினார்.
‘மயில் ராவணா, வா உன்னை வதைக்கவே நானிங்கு வந்துள்ளேன். யுத்தம்செய் என்னோடு”’ எனக் கொக்க ரித்தபடி யுத்தம் செய்து கொண்டே மெல்ல மெல்ல மயில் ராவணன் உயிர் நிலை இருந்த மலை அருகில் வரை ஓடி ஓடி சென்று அங்கே அவனை இழுத்தார். மயில் ராவணனும் தனத்கு உயிர் நிலை உள்ள மலை யை மறந்து போயிருந்தான். ஆகவே ஹநுமானைத் துரத்திக் கொண்டு அவர் பின்னே ஓடினான். அதுதானே ஹனுமான் எதிர்பார்த்தது!.
ஹனுமானின் மன நிலையை அறியாத மயில் ராவணன் அவரது கண்களையும் கவனத்தையும் பலவாறு திசை திருப்பும் வண்ணம் மந்திர மற்றும் மாயாஜாலங்களை செய்தது அவரை தடுமாற்றினான். அவற்றை கண்ட அனுமான் உள்ளுக்குளே நிஜமாகவே தடுமாறினார். ஒருவிதத்தில் பயமும் கொண்டார். ‘இதென்னெடா, இந்த மாயாஜாலக்கரன் என்னென்னமோ செய்கிறான்’ என அதிசயித்தார்.
”மயில் ராவணா, எண்ணிப்பார் நீ செய்த பாவச் செயல்களை. உன் சகோதரன் தாயாதி தசகண்ட ராவணன் ராமனின் மனைவியை களவாடிக் கொண்டு வந்து இலங்கையில் சிறை வைத்துள்ளான். அவளை மீட்க வந்த ராமனை நீ சிறை பிடித்து வைத்துள்ளாய். உனக்கு துரோகம் செய்தவனை மட்டுமே நீ தண்டிக்க லாமே தவிர உனக்கு சம்மந்தமில்லாத விஷயத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? ராமன் உனக்கென்ன பாவம் செய்தார்? தர்ம சாஸ்திரம், நீதி நெறி இவற்றை அறிந்துள்ளவன் என மார் தட்டிக் கொள்ளும் நீ கோழை போல மாயாஜாலத்தைக் காட்டி போரிடுவது என்ன நியாயம்? நீ வீரனாக இருந்தால், தைரியசாலியாக இருந்தால், பலசாலி என நினைத்தால், வா நேருக்கு நேர் வந்து மோது. மூடனே, இதை மட்டும் அவசியம் நினை வில் வைத்துக் கொள். இன்னும் சிறிது நேர அவகாசம் தருகிறேன், நியாயத்தை உணர்ந்து ராம லஷ்மணர் களை எம்மிடம் ஒப்படைத்து விடு. இல்லையேல் உன் மீது நின்று கொண்டு நான் உன் உயிர் நிலைகளை கொல்லபோகிறேன் என்பதை மறக்காதே. ”
இதைக்கேட்ட மயில் ராவணன் நடுங்கினான். .
ஹனுமான் ராம லஷ்மணர்களை பெட்டியோடு எங்கோ கொண்டு சென்று மறைத்தும் வைத்து விட்டார் இருந்தா லும் மயில்ராவணா , ராம லக்ஷ்மணர்களை பெட்டியி லிருந்து விடுவி… என்று ஏன் சொன்னார் தெரியுமா? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பிரம்மாவிடம் வரம் பெற்ற மயில் ராவணன் நிறைய புண்ணியமும் காளி பூஜையும் செய்தவன். ஆகவே அவனுக்கு சொர்கத் துக்கு செல்ல வாய்ப்பும் உள்ளது. இப்போ தன் தப்பை யும் உணர்ந்து வைகுண்ட நாராயணரின் அவதார மான ராம லஷ்மணர்களையும் விடுதலை செய்து இன்னொரு நல்ல காரியத்தை செய்தால் அவன் செய்த அனைத்து பாபங்களும் அழிந்து போக ஒரு வாய்ப்பும் இருக்கும் அல்லவா? வைகுண்ட பதவியும் அவனுக்குக் கிடைக்கட்டுமே!
மயில் ராவணன் யோசித்தான். எப்படி ஹநுமானுக்கு தன உயிர் நிலை ரஹஸ்யம் தெரிந்தது? யார் சொல்லி இருப்பார்கள்? ஒருவேளை நான் பேசிக் கொண்டிருந்த தை ஒட்டுக் கேட்டு விட்ட அந்தப் பாதகி தூம்ரதண்டி தண்ணீர் எடுக்கப் போகும்போது ஹநுமானுக்கு கூறி விட்டாளோ ? இனி தாமதித்தால் இந்த வானரம் நம்மைக் கொன்று விடும்’ என யோசனை செய்தவன் இன்னொன்றையும் அப்போதுதான் கவனித்தான்.
‘அடடா, யுத்தம் செய்து கொண்டே இந்த வானரம் ஓடிக் கொண்டே இருக்க அதனை துரத்திக் கொண்டு என் உயிர் நிலை மறைந்துள்ள இந்த மலைக்கருகே அல்ல வா அந்த வானரம் என்னை அழைத்து வந்துவிட் டது.? இங்கிருந்து முதலில் என் அரண்மனைப் பகுதிக் கே செல்வோம்’ என யோசனை செய்து கொண்டிருந்த போதே அவன் மனதில் உள்ளதை உணர்ந்து கொண்ட ஹனுமான் ஆகாயத்துக்குச் பறந்து சென்று அங்கிருந்து மயில்ராவணன் எதிர்பாராத நேரத்திலே அவர் மீது தொப்பென குதித்து அவனை பூமியோடு அழுத்தினார். ஆனால் அதி மாயாவியான மயில் ராவணனோ இனியும் தாமதிக்கலாகாது என மனதில் முடிவு செய்து அங்கிருந் து மாயமாகிப் போய் முதலில் ராம லஷ்மணர்களை கொல்லும் காரியத்தை செய்யலானான். ‘முடிவா என்னிடமுள்ள கடைசி அஸ்த்ரமான வீராண யாகம் செய்து அதில் வெளி வரும் பூதத்தையும் ஏவினால் அது அனுமானையும் கொன்று போடும். ராம லஷ்மணர்கள் எங்கிருந்தாலும் அவர்களும் அப்படியே மாண்டு போவார்கள் என எண்ணினான்.
‘இதென்னடா மீண்டும் அவனைக் காணோம் . எங்கே மாயமாகி விட்டான்?’ என எண்ணியவாறு அனுமான் அவனைத் தேடத் துவங்க தூரத்தில் தெரிந்த ஒரு வனத்தில் சில காரியங்கள் நடைபெறுவதைப் பார்த்தார். ஒரு பெரிய ஆலமரம் தெரிந்தது. அதன் அடியில் பத்து பதினைந்து புரோகிதர் போன்ற உருவில் இருந்த ராக்ஷச பிராம்மணர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். கையில் பூக்கூடை, எண்ணை, நெய், சமித்துக்கள், சின்ன சின்ன மரக்கட்டைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த மரத்தில் அருகில் இருந்த பொந்துக்குள் அவசரமவசரமாக நுழைவதைக் கண்டார். ‘ஓஹோ…எதோ விசித்திரம் அங்கு நடக்குது. …அதுவும் மயில் ராவணனின் அரண்மனைக்கருகில் அவனுக்கு தெரியாமல் நடக்க இயலுமா?’ என நினைத்தவர் தன்னை சிறு பிராணி யாகி க் கொண்டு தானும் ஓடோடிச் சென்று அந்த பொந்துக்குள் என்ன நடக்கிறதெனப் பார்க்கலானார்.
அத பொந்துக்குள் சில யாக காரியங்கள் நடந்து கொண்டி ருந்ததைக் கண்டார். முக்கோண வடியில் யாக குண்டம். யாக குண்டத்தின் அனைத்து மூலை யிலும் எருமை மாட்டின் கபாலம் தொங்கியது. யாக குண்டத் தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. கபாலத்தின் மூலம் நெய்யும் ஊற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது. யாக குண்டத்தின் எதிரிலே இடுப்பிலே ஈர வஸ்திரத்துடன் மயில் ராவணன். யாக குண்டத்திலே நவதானியங்களையும் நெய்யையும் ஊற்றிக் கொண்டு ‘ப்லீம்…க்லீம் …ஓம்…ப்லூம்ம்…பும்…….பும்…ப்ரும்……கிலும் ‘ என சப்தமிட்டபடி எதோ மந்திர உச்சாடனயையும் செய்து கொண்டிருந்தான். தன் கையில் வாளினால் வெட்டிக் கொண்டு அதில் இருந்து வழிந்த ரத்தத்தையும் அதிலே வழிய விட்டான். புஸ்ஸ்….பூச்ச்ஸ்.. ஓஹ்ஹாக்கோ………. ஒஹூஒ….ஒஹோ என எதோ கத்தியவாறே அந்த அக்னி குண்டத்தில் இருந்து பெரிய பூதம் ஒன்று வெளி வந்தது. அந்த பூதத்திடம் மயில் ராவணன் கூறலானான்
‘ஹே பூதமேநானுன்னை இப்போ படைத்திருக்கிறேன். நீ எனக்கு சேவகன். அதனால தாமதிக்காமல் போய் என்னை அழிக்க வந்த வானரத்தை கொன்று விட்டு வா, நானுனக்கு விடுதலை தருவேன்’ என்று கூறவும் பூதமும் கொக்கரித்தது ‘ மன்னா….நானுனக்கு அடிமையே ….உம்மை வதம் செய்ய வந்துள்ள அந்த அனுமன் எனும் வானரத்தை இதோ போய் நொடிப் பொழுதில் வதம் செய்து அதன் தலையைக் கொண்டு வந்து இந்த குண்டத்தில் போடுகிறேன்… ’ என்று கூவி விட்டு வெளியே ஓடியது.
‘அடே பூதமே, என்னையா கொல்ல வந்தாய்?நானுன்னை
முதலில் கொல்வேன்’ என சூளுரைத்த அனுமான் ஓடோடி வெளியில் வந்து பூதத்துடன் சண்டையிடலா னார். அந்த பூதமோ நெருப்பை வாயில் இருந்து கக்கத் துவங்க அந்த அக்னியின் சுவாலை தாங்க முடியாமல் தவித்த அனுமான் அக்னி தேவனை தோத்திரம் செய்யத் துவங்கினார்’
அக்னி பகவானும் அனுமானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அருள்புரிய அனுமானின் உடல் சூடு குறைந்து அமைதியாயிற்று. அனுமான் உடனே கிளம்பி மீண்டும் தூம்ரதண்டியை சந்தித்து அவளிடம் தற்போது அவருக்குள்ள பிரச்னைக்கு வேறேதும் உபாயம் கூற முடியுமா என்று கேட்க அவளும் தனக்கேதும் அது குறித்து தெரியாதே என்று கை விரித்தாள். ஹனுமான் தரும தேவதையிடம் அந்த பூதத்தை அழிக்க ஏதேனும் உபாயம் உள்ளதா என்று கேட்க அவள் கூறினாள் ‘ராமபக்தனே, உம்மால் முடியாததில்லை எனும் அளவு இந்நாள்வரை நீரும் உம்மால் ஆன அனைத்து உக்திக ளையும் கைகொண்டு அரக்கர்களை அழித்துள்ளீர். ஆனால் இப்போதுள்ள இந்த பூதமானது மயில் ராவணனால் அக்னியில் இருந்து பெறப்பட்ட பூதம் என்பதால் அவன் தற்போது செய்து வரும் அக்னி யாகத்தை அழிப்பது மூலமே அந்த பூதத்தையும் அழிக்க முடியும். அந்த யாகம் அழியும்வரை நீரும் அந்த பூதத்தைக் கொல்ல முடியாது. அப்படியொரு வரம் அதுக்குள்ளது. அதை வேறெந்த உபாயத்தாலும் அழிக்க முடியாது. ஒரு ரஹஸ்யம் சொல்கிறேன்.மயில் ராவணனின் தங்கக் கோட்டைக்கும் வெள்ளிக் கோட்டைக்கும் இடையிலே உள்ள பகுதியில் ஒரு மரப்பொந்தில் வீரணா என்ற யாகம் ஒண்ணு செய்யறான். அதில் அதர்வண வேதத்தையும் ஓதிக் கொண்டிருக்கிறான். இப்படி ஒரு பயங்கர பூதத்தையும் அவனால் படைக்க முடிந்தது. இப்போது அவன் அந்த யாகத்தை தொடர்ந்து கொண்டிருப்பவன் அதை முடிக்கும் முன் அங்கு சென்று அதில் விக்னத்தை எற்படுத்துவீரானால் இந்த பூதமும் தன்னால அழிந்து விடும். வேறேதும் இதுக்கு வழியில்லை சுவாமி’ என்று கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்ட அனுமானும் ஆகாயம் மூலமாக உடனே கிளம்பிச் சென்று அந்த இடத்தை தேடத் துவங்கினார். மாயாஜாலன் மயில் ராவணனும் தான் யாகம் செய்யும் முன் பல்லாயிரம் இடங்களை ஒரே மாதிரி தோற்றம் தருமாறு பிரமிக்க வைத்திருந் தான். அதானால் அவனை கண்டு பிடிப்பது அனுமாருக் கு கடினமாயிற்று . விடா முயற்சியினால் வாயு பகவானின் அருளைக் கொண்டு அந்த நிஜ யாக சாலையைக் கண்டு பிடித்து அந்த யாக குண்டத்தை விக்னப்படுத்தி விட பூதமும் அழிந்து போயிற்று. மயில் ராவணனும் அனுமான் தன் தந்திரங்கள் அனைத்தை யும் எப்படியோ தவிடு பொடியாக்கி விட்டு வந்துடராரே என பயந்து அங்கிருந்து மாயமாகிப் போனான். அனுமானுக்கு இப்போ மயில் ராவணனை கண்டு பிடிக்க வேண்டியது அடுத்த வேலையும் ஆயிற்று. மீண்டும் மீண்டும் மாயமாகிக் கொண்டே இருப்பவனை எப்படி பிடிப்பது என்பதே கவலையாயிற்று. அங்கிருந்து மாயமாகிப் போன மயில் ராவணன் அனுமான் தன்னைக் கண்டு பிடிக்க முடியாதபடி வெகு தூரத்துக்கு இருந்த மலை பகுதியிலே வெள்ளியாங்கிரி எனும் மலையை உருவாக்கி கொண்டு அதற்குள்ளே பதுங்கிக் கொண்டான்.
ஊர்பூரா தேடியும் மயில் ராவணனைக் காணாத அனுமானும் மீண்டும் தூம்ரதண்டியிடம் சென்று யோசனைக் கேட்டார். அவளும் சொன்னாள் ‘ராம பக்தரே, மயில் ராவணன் ஒரு மாயாவி என்று நானும் முன்னர் சொன்னேனே. அது போலத்தான் அவனும் ஏதாவது மாய சொரூபத்தில் இருப்பான்’.
பழசும் புதுசுமான இடம் அனைத்தும் தூம்ரதண்டிக்கு அத்துப்படி என்பதால் அவள் அறியாத புது இடம் எதாவது இருந்தால் அதை காட்டச்சொன்னார். அதற்கு நீ எனக்கு வழிகாட்டு என்று சொன்னார். மயில் ராவண னும் வெள்ளியான்கிரி மலைக்குள்ளே இருந்துகொண்டு
ராம லஷ்மணர்களை அழிக்க வேத மந்திரத் தை ஓதிக் கொண்டிருந்தான்.
இப்படி இருக்கையில் தூரத்தில் இருந்த வெள்ளியான் கிரி மலையைக் கண்ட தூரதண்டி சந்தேகம் கொண்டு அனுமானிடம் கூறினாள் ‘சுவாமி, இதுக்கு முன்னால நானிந்த மலையை பார்த்ததே இல்லை. இப்போது புதியதாக வந்திருக்க வேண்டும். அதனால்தான் தகதகன்னு தகிக்குது’ என்று சந்தேகமாகக் கூற, அனுமானும் அதன் அருகில் சென்று பார்க்க அதிலிருந் து வந்துகொண்டிருந்த மந்திர ஒலியைக் கேட்டு அதுக் குள்ளே யாரோ ஒருவன் இருக்கார்ன்னு முடிவு பண்ணி னார். சரி வரட்டும் பார்க்கலாம்னு அதன் மீது தனது முஷ்டி யினால் ஓங்கிக் குத்து ஒன்றை விட தவிடு பொடியான அந்த மலை உள்ளிருந்து மயில் ராவணனும் வெளிப்பட்டு அனுமானைக் கண்டு பயந்து தப்பி ஓடத் துவங்கினான். இப்போ மயில் ராவணனையும் அனுமான் கண்டு பிடித்து விட்டார். அவனை பிடிக்க அவனை துரத்திக் கொண்டு அவன் பின்னால் ஓடினார்.
மயில் ராவணன் மாய உருவங்களை எடுத்து கடைசி கட்டமாக சிவபெருமான் தனக்களித்திருந்த மந்திர சக்தி வாய்ந்த தன்னுடைய அஸ்திரங்களை எல்லாம் வீசத் துவங்கினான். அனுமானும் சளைக்கவில்லை, அவரும் பதிலுக்கு தன்னிடம் இருந்த ஆயுதங்களுக்கு தூப தீப ஆராதனைக் காட்டி இன்னொரு சிவாஸ்திரத் தையும் கஜாஸ்திரத்தையும் செலுத்தி மயில் ராவண னின் அனைத்து அஸ்திரங்களையும் தவிடு பொடியாக் கினார். இப்படியாக இருவரும் மாறி மாறி பல நாழிகை யாக அஸ்திரங்களை ஏவிக் கொண்டிருக்க இருவரும் களைத்தார்கள். அப்போது அனுமானின் காதில் ஆகாசவாணி கூறிற்று ‘வாயு புத்திரனே இனியும் தாமதிக் காதே அவன் தப்பிக்கும் முன் அவனை தீர்த்துக் கட்டு’ .
அவ்வளவுதான் அதைக் கேட்ட அனுமானின் இரு புஜங் களும் துடி துடிக்க, பற்களை நரனரவெனக் கடித்துக் கொண்டு மயில் ராவணன் அமர்ந்திருந்த தேருக்கு அருகில் சென்று அதன் மீது ஏறி அதை அப்படியே கீழே தள்ள சுக்கு நூறாக பொடிப்பொடியாக்க தேரில் இருந்த மயில் ராவணன் கீழே விழுந்தான். அதை அவன் சற்றும் எதிர்பாராத நிலையில் இருந்தபோது தாமதிக்காமல் அவன் மீது தன் காலை வைத்து அவனை பூமியோடு அழுத்தி தன் விஸ்வரூபத்தை எடுத்து அவன் உயிர் நிலைகள் இருந்த மலையின் குகையில் கையை விட்டு ஐந்து வண்டுகளையும் எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அவற்றை நசுக்கிக் கொல்ல மயில் ராவணனும் உயிர் துறந்தான்.
அப்போது அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அவன் வாயும் தன்னை அறியாமலேயே அனுமானை தோத்தி ரம் செய்யத் துவங்கிற்று.’ஆஞ்சனேயா, வாயுபுத்ரா, ராமதூதா, கருணாகரா….அறியாமையால் செய்த எம் பிழையை மன்னித்து எம்மைக் காத்தருள் ஸ்வாமி’ எனப் பலவாறு அவரை துதித்தான். அடுத்த சில நாழிகையில் தேவலோகத்தில் இருந்து ஒரு புஷ்ப விமானம் ஒன்று அங்கு வந்திறங்க அதிலேறிக் கொண்ட மயில் ராவணனும் ஆஞ்சனேயரை வணங்கி விட்டு தேவலோகத்துக்குச் சென்றான்.
வந்த காரியம் முடிந்ததும் அனுமான் ஓடோடி ராம லஷ்மணர்களை எவ்விடத்தில் பாதுகாப்பாக வைத்தி ருந்தாரோ அங்கே சென்று பூமாதேவியிடம் அவர்களை தமக்கு திருப்பித் தருமாறு கேட்டார். பூமாதேவியும் பூமியைப் பிளந்து தன்னிடம் பத்திரமாக வைத்திருந்த ராம லஷ்மணர்களை அனுமாரிடம் ஒப்படைத்தாள். அந்த பெட்டியை பாதாளத்தை விட்டு வெளியில் சென்ற பின்னரே திறக்க வேண்டும், அப்போதுதான் மாயக் கட்டும் விலகும் என அறிந்திருந்ததினால் அனுமானும் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு அவசரமவசரமாக அதே தாமரைத் தண்டின் வழியே பாதாளத்தை விட்டு வெளியேறிச் சென்றார். சமுத்திரக் கரையை அடைந்ததும் வாயு பகவானின் முன்னிலையில் அந்தப் பெட்டியை அவர் திறந்தவுடன் அதற்குள் இருந்த ராம லஷ்மணர்கள் தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்தார்கள்.
அவர்களைக் கண்ட அனுமானும் ஓடி வந்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். அவர்களை விடுவிக்க பாதாள இலங்கைக்கு அனுமான் சென்றபோது அவரு டைய புத்திரன் மச்சவல்லபன் ராம லஷ்மணர்கள் விடுதலை ஆகி செல்லும்போது அவர்களது ஆசிகளை தமக்கும் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என விரும்பி இருந்தான். அவனும் அங்கே அவர்கள் தரிசனத்தைப் பெறுவதற்காக அங்கே காத்திருந்தான். ராம லஷ்மணர் கள் பெட்டியை விட்டு வெளியில் வந்ததும் அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் தன்னுலகத்துக்குச் செல்லக் கிளம்பினான்.
அவனையும் தம்மோடு வருமாறு ஹனுமான் அழைக்க, மச்ச வல்லபன் சொன்னான்.
‘நான்தான் வாயு புத்திரனின் பிள்ளையின் பிள்ளை என்பதை யாருக்கும் தெரிவிக்க விரும்பவில்லை. அதைக் கேட்டால் தனக்கு அது பற்றி அனுமான் கூறவில்லையே என்று அவர் மீது சுக்ரீவரும் கோபம் கொள்வார். அனுமானின் வியர்வையை விழுங்கி என்னை பெற்றேடுத்தவளை அனுமான் பார்த்தது கூட இல்லை என்பதால் மணம் செய்து கொண்ட பாத்திய தையும் இல்லை. ஆகவே பிரம்மச்சாரியான அனுமா னின் புகழை நான் யார் என்பதை வெளியில் காட்டி கெடுக்க விரும்பவில்லை. ஆகவே நான் உங்கள் அனைவரது பூரண ஆசியுடன் என்னுலகம் சென்று அங்கு ஆனந்தமாக உங்களையும் துதித்தபடி வாசம் செய்வேன். என்னை ஆசிர்வதியுங்கள்’ என்று கூறிவிட்டு அனுமானின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
இனியும் தாமதிக்கலாகாது என்று எண்ணியவர்கள் அனைவரும் இலங்கைக்கு சென்றார்கள். அவர்கள் அனைவரும் திரும்பி வருவதை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட ராவணன் கர்ஜித்தான் ‘ஐயோ என்ன காரியம் ஆகிவிட்டது? அத்தனை கோடிக் கோடி லட்சம் படையி ன ரையும், மாயா ஜாலத்தையும் வைத்திருந்த தாயாதி மயில் ராவணனையுமா வதம் செய்து விட்டு இங்கு வருகிறார்கள்? இதை நானெப்படி தாங்குவேன்? என் துயரத்தை யாரிடம் சொல்வேன்? போகட்டும், போன தெல்லாம் போகட்டும். எனக்குள்ளதும் ஒரு உயிர்தானே. என் சந்ததியினர் அனைவரையும் இழந்து நிற்கும் நானே இப்போ யுத்தத்துக்குப் போய் என்னால் முடிந்ததைப் பார்க்கிறேன். ஒன்று ராம லஷ்மணர்கள் வதமாக வேண்டும். இல்லை நானும் என் சந்ததியி னரிடம் போய் சேர வேண்டும். கொண்டு வாங்கடா என் தேரையும் ஆயுதங்களையும்…..நடங்கடா என்னோட’ என கர்ஜித்துக் கொண்டே தேரில் ஏறி ராமனுடன் யுத்தம் செய்யக் கிளம்பிச் சென்றான்.
கடுமையான யுத்தமும் நடந்து முடிய ராவணனும் வதம் ஆயினான் . அடுத்து அவனுக்கு பதிமூன்று நாள் அதிம காரியங்களையும் விபீஷணன் செய்து முடித்த வுடனேயே ராமனும் தனது மனைவி சீதையை மீட்டுக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டும் தம்மை புனிதம் படுத்திக்கொண்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பி வனத்துக்குச் சென்று பரதனை அழைத்தார்கள். அங்கு வந்த பரதனும் அவர்களை முறையோடு நாட்டுக்கு அழைத்துச் செல்ல அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அனைவருக்கும் கூறினார்கள். ராமனும் அனுமாரைக் கட்டிப் பிடித்து ‘இனி நீ எங்களுடனேயே தான் இருக்கணும்’ என்று கூற ஆகாயத்தில் இருந்து தேவர்கள் புஷ்பமாரிப் பொழிந்தார்கள். பழைய தமிழ் படங்கள் மூன்று நான்குமணி நேரம் ஓடும். நாற்பது ஐம்பது பாட்டுகள் பாடும். கடைசி காட்சியில் சுபம் சுபம் சுபம் என்று மூன்று தடவை கருப்பு வெள்ளையில் காட்டும். நானும் என் மயில் ராவணன் கதையை அப்படியே முடிக்கிறேன்..
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


Great story Sir. Excellent narration
I have not heard of this story until now.