
ஆனை ஐயா சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN
உ.வே.சா. என் உறவினர் என்பதில் எனக்கு பெருமை இருந்து என்ன பயன்? ஒரு எழுத்து கூட அவர் போல் எழுத ,தமிழ் ஞானம், திறமை, இல்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. உ.வே.சா. நினைவு கூர்ந்து ‘புதியதும் பழையதும்’ என்ற தலைப்பில் அற்புத கட்டுரைகள் வழங்கி இருக்கிறார். அதில் ஒன்று சுருக்கமாக தருகிறேன். .
தஞ்சாவூரில் ஒரு ப்ராமண நிலச்சுவான்தார். நிறைய நிலபுலன்கள் உள்ளவர். பெரும் தனவந்தர். அவர் வீட்டில் ஒரு கல்யாணம். தடபுடலாக ஏற்பாடு. அப்போதெல்லாம் ஐந்து நாள் ஏழுநாள் கல்யாணம். ஊரையே வளைத்துப் போட்டு பந்தல், கச்சேரிகள், வருவோர் போவோர்க் கெல்லாம் இன்சுவை விருந்து… ஒரு பெரிய கச்சேரி ஏற்பாடு செய்யவேண்டும் என்று வீட்டுப் பெண்மணிகள் ஆசைப்பட்டு யோசனை சொன்னதைக் கேட்டு, அவர் அப்போது தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சிறந்த சங்கீத வித்வான்களாக இருந்த ஆனை, ஐயா, என்ற ரெண்டு சகோதரர்களின், சிறந்த சங்கீத வித்வான்கள் கச்சேரியாக ஏற்பாடு பண்ணினார். இந்த வித்வான்கள் வையச்சேரி மஹா வைத்ய நாதய்யரின் தாய் வழி முன்னோர்கள். சமஸ்க்ரிதம், தெலுங்கு, தமிழ் எல்லாவற்றிலும் வல்லுநர்கள்.
ஒரு சமயம் தஞ்சாவூருக்கு ஹைதராபாத் முஸ்லீம் வித்வான் பரம்பரையாக கற்று அனுபவத்தோடு பாடிய ஹிந்துஸ்தானி சங்கீதத்தை ராஜா முன்னால் பாடி பரிசு பெற்றபோது உங்களில் யாராவது இது போல் பாட முடியுமா என்று சவால் விட்டான் . ராஜா முன்னிலையில் ஆனை ஐயா இருவரும் அறுபது நாள் அவகாசம் கொடுங்கள் அதைப் பாடிக்காட்டுகிறோம் என்று அதைக் கற்றுக்கொண்டு பயிசற்சி, முயற்சியோடு, அந்த முஸ்லீம் வித்வான் முன்னால் அவனை விட அற்புதமாக பாடிக்காட்டியபோது அந்த முஸ்லீம் வித்வான் சரணடைந்தார். ”ஆஹா எத்தனையோ வருஷங்களாக முயன்று கற்று பாடியதை, இவர்கள் அறுபதேநாளில், மொழி தெரியாமல், ஹிந்துஸ்தானி சங்கீதம் அறியாமல், பாடி ஜெயித்துவிட்டார்களே என்று போற்றினான்.
ஆனை ஐயா இருவரும் ஸ்வரப்ரஸ்தாரம், பல்லவி, ஆலாபனை, ராகம் எல்லாம் விஸ்தாரமாக சேர்ந்தே பாடுவார்கள்.
பணக்காரர் வீட்டு கல்யாண விழாவில் ஆனை ஐயா கச்சேரி என்ற விஷயம் பரவி, எண்ணற்ற ரசிகர்கள் பல வூர்களிலிருந்தும் கூட வண்டி கட்டிக்கொண்டு வந்து வெள்ளம் போல கூடி விட்டார்கள். கச்சேரி மணிக்கணக்காக பிரமாதமாக நடந்து கொண்டிருந்தது.
பணக்கார மிராசுதாருக்கு அவர்கள் எல்லோரும் தன் பெருமை அறிந்து தன்னைப் பார்ப்பதற்கு வந்தவர் என்று நினைப்பு. பெருமிதம் தாங்கவில்லை. அவருக்கு சங்கீதம் சுட்டுப்போட்டாலும் தெரியாது. புரியாது. சபையில் தனக்கு சங்கீத ஞானம் உண்டு என்று காட்டிக்கொள்ள பேராசை. வந்தவர்கள் எல்லோரையும் உபசரித்துக் கொண்டே அங்கும் இங்கும் அலைத்தவர் நடுநடுவே கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு கச்சேரியை ரசிப்பது போல் தலையாட்டிவிட்டு போவார்.
கச்சேரி களை கட்ட, ஆனை ஐயா இருவரும் ஒரு கீர்த்தனையின் பல்லவியை எடுத்துக்கொண்டு அதில் பலப் பல சங்கதிகளை போட்டு கற்பனா ஸ்வரங்கள், மனோபாவ பூர்த்தியாக அற்புதமாக அலசி பாடிக் கொண்டிருந்ததை பணக்கார மிராசுதாரால் ரசிக்க முடியவில்லை. ரசிகர்கள் மெய்ம்மறந்து கேட்டு ஆனந்தக்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நேரம். எஜமானர் ஒரு தூணின் மேல் சாய்ந்து கொண்டு தலையைத் தலையை ஆட்டிவிட்டு மூக்கின் மேல் விரல் வைத்து, தனது சங்கீத ஞானத்தை பறை சாற்ற நினைத்தார். கண்கள் சிவக்க, தூணைத் தட்டினார். தனது கோபத்தை வெளிக்காட்ட முடிவெடுத்தார். உரக்க கத்தினார்.
”நிறுத்துங்கள் வித்வான்களே, உங்கள் கத்தலை. எனக்கோ இங்கிருப்பவர்களுக்கோ சங்கீதம் தெரியாது என்று நினைப்பா உங்களுக்கு?. ஏதோ எல்லோரும் சொல்கிறார்களே பெரிய வித்வான்கள் என்று அதை நம்பி உங்களைப் பாட அழைத்தால், நீங்கள் என்னடா வென்றால் ஒரே அடியைத் திரும்ப திரும்ப மணிக்கணக்காக நாராசமாக ரெண்டு பெரும் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருந்தால் பாட்டு எப்படி முடியும்?. பாட்டு முழுசாக தெரியாது என்றால் எதற்காக அதை எடுத்துக் கொண்டு பாடுகிறீர்கள்?. ஏதாவது முழுக்க வார்த்தை தெரிந்த சின்னப் பாட்டாக இருந்தாலும் அதைப் பாடவேண்டியுது தானே…உங்களை நம்பி பணத்தை வீணடித்து விட்டேன். அந்த பணத்தை விவசாயத்தில் போட்டாலாவது நல்ல பலன் கொடுக்கும். இதற்கு தான் கச்சேரிக்கு பணம் செலவழிக்க வேண்டாம் என்று சொன்னேன். வீட்டு பொம்மனாட்டிகள் என் வார்த்தையை மதிக்காமல் உங்களைக் கூப்பிட சொன்னார்கள்.”’
சபை திடுக்கிட்டது. ஆனை ஐயா பிரபல வித்வான்கள் அவமானம் தாங்கமுடியாமல் கண்களில் நீரோடு சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டு நேரே எழுந்து நடந்தார்கள். அந்த ஊரில் ஒரு வேங்கடேச பெருமாள் கோவில், பெருமாள் முன் நின்று கொண்டு புன்னாக வராளி ராகத்தில் மன வருத்தத்தோடு ஒரு கீர்த்தனை பாடினார்கள்;
பல்லவி
போதும் போதும் ஐயா- தலைமுறைக்கும்,
அநுபல்லவி,
மதுவளர் வரகாபுரி தனில் விளங்கிய
மங்கை அலர்மேல் மிக மகிழ் வேங்கடாசலனே
சரணம்
அரி யென்ற எழுத்தை அறியாத மூடன் தன்னை ஆதிசேஷன் என்றும்,
ஆயுதமொன்றும் அறியாதவன் தனை, அரிய விஜயன் என்றும் அறிந்தும்
அரைக்காசுக்குதவா லோபியை தான கர்ணன் என்றும்
அழகற்ற வெகு கோரத்தோனை மிக அங்கஜன் என்று புகழ்ந்து அலைந்தது (போதும் )
2.காசுக்கு ஆசை கொண்டு உலுத்தனை சபைதனில் கற்பக தருவென்றும்
கண் தெரியா குருடன் என்று தெரிந்தும் சிவந்த கமலக் கண்ணனென்றும்
பேசுவதெல்லாம் பொய்யான ஒருவனை பிறந்தபோதே அரிச்சந்திரன் என்றும்
பெற்ற தாய்க்கே அன்னமிடாதான் தன்னை பெரிய தர்மன் என்றும் புகழ்ந்தலைந்ததும் (போதும்)
3. அறிவில்லாத பெரும் மடையர் தம் அருகினில் அல்லும் பகலும் நாடி
அன்னை **உமாதாசன் (** ஆனை ஐயா க்ரிதிகளில் அவர்கள் முத்திரை)
உரைக்கும் பதங்களை அவரிடத்தில் பாடி
அறிவரோ , அறியாரோ என்றே மிக அஞ்சி மனது வாடி
ஆசையெனும் பேய்க்காளாய் உலகினில் அற்பரைக் கொண்டாடி திரிந்தலைந்தது (போதும்)
வெங்கடேச பெருமாள் முன் பாடி கண்ணீர் விட்டு சுற்றி இருந்த ரசிகளை வணங்கி, சாப்பிடாமலேயே பணம் கூட வாங்கிக்கொள்ளாமல் ஊருக்கு நடந்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சுவாமி சன்னிதானத்தில் தவிர எந்த நிகழ்ச்சிகளிலும் பாடுவதில்லை.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



