
மயில் ராவணன் கதை – நங்கநல்லூர் J K SIVAN
அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது.
பள்ளிக்கூடமே பார்க்காத, படிக்காத என் அம்மா ஜம்பாவதிக்கு தெரிந்த விஷயங்களில் நூற்றில் ஒன்று கூட இன்னும் 86 வருஷ அனுபவங்களில் எனக்கு தெரியாது என்று சொல்வதில் எனக்கு பெருமை தான். அவ்வளவு கெட்டிக்காரி என் தாய்.ராவணன் கதை சொல்வாள். அதில் அடிக்கடி மயில் இராவணன், அஹி மஹி மாயா ராவணன் என்றெல்லாம் சொல்வாளே அவர்கள் யார்? நானே தேடி சில விஷயங்கள் இப்போது தான் கண்டுபிடித்தேன். அவன் மஹி ராவணனா, மயில் ராவணனா? அம்மா மயில்ராவணன் என்று சொன்னதால் அந்த பெயரே அவனுக்கு இருக்கட்டும்.
லங்கேசன் இராவணனுடைய தாயார் வழியில், இராவணனுக்கு ஒன்று விட்ட தம்பியாக ஒரு ராக்ஷஸன் இருந்தான். அவன் பெயர் தான் மயில்ராவணன். பாதாள இலங்கையின் ராஜா அவன். ரொம்ப புத்திசாலி மாயா ஜாலங்களில் வல்லவன்.
காளியிடம் பெற்ற வரத்தால், ஹனுமானையே ஏமாற்றியவன். ஆஞ்சநேயரின் பலத்த காவலில் இருந்த இராம, லக்ஷ் மணர்களை தந்திரமாகக் கடத்திச் சென்று, பாதாள இலங்கையில் சிறை வைத்தவன் . ராமனையும் லக்ஷ்மண னையும் காளிக்கு பலிகொடுக்க முயன்ற சமயம் ஹனுமனால் கொல்லப்பட்டவன். அம்மா மயில் ராவணன் கதை சொல்லும்போது ஏழு எட்டு வயதில் எனக்கு பயம், திகில், அதிக ஆர்வமாகவும் இருந்தது. மிகவும் சுவாரஸ்யமான கதை மயில்ராவணன் கதை
வால்மீகியோ, கம்பரோ சொல்லாத இந்த மயில் ராவணனை பலர் விறுவிறுப்பாக கதை சொல்வார்கள். நாட்டுப்பாடல்கள் பாடுவார்கள். தெருக்கூத்தில் மயில் ராவணன் கையில் கத்தியோடு பனைமரத்தடியில் சூளைமேட்டில் சுற்றி சுற்றி வருவான். நடுநடுவே மரத்தத்துக்கு பின்னால் சென்று ஒதுக்குப்புறமாக பீடி பிடித்துவிட்டு வந்து ஆடுவான். ஹனுமனுக்கு, “திமிதி” என்ற மனைவியோ , “மத்ஸ்யவல்லபன் ”என்ற பிள்ளையோ இருந்ததாக எல்லாம் சொல்வார்கள். எது ஆதாரமோ அந்த ஹநுமானுக்கு தான் தெரியும்.
ராமாயணத்தில் வரும் பத்து தலை இராவணனின் அப்பா விஸ்ரவஸ் மஹரிஷி. விபீஷணன், கும்பகர்ணன் தம்பிகள். சூர்ப்பனகை தங்கை. இந்திரஜித், பிள்ளை. இது நாம் அறிந்த விஷயம். ராவணன் பிரம்மாவின் கொள்ளுப்பேரன் . புலஸ்தியர் மகரிஷி பேரன். இராவணனுடைய மனைவியான மண்டோதரியின் தகப்பன் மயன்.
இராமாயண யுத்த காண்டத்தின் இறுதியில் இராவணன் தேரேறும்போது ‘இன்று ரெண்டில் ஒண்ணு . யார் வயிற்றி லும் வாயிலும் அடித்துக்கொண்டு அழப்போகிறார்கள். சீதையா, மண்டோதரியா?” என்று தீர்மானத்தோடு தான் யுத்தத்துக்கு வருகிறான்.
ராம, ராவணப் போரில் ராவணனின் படைகள் முழுவதும் அழிந்தன இராவணன் கலக்கத்தில் இருந்தான். ராவணனின் மந்திரி பிரகஸ்தன் ‘ மஹாராஜா, நான் சொல்வதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். மறந்து போய்விட்டீர்களா, நமது சேனை அழிந்தாலும் கூட உமக்கொரு தாயாதி உறவினன் பாதாளத்தில் இருப்பதை மறந்து போய்விட்டீர்களா? அவன் கபட நாடகத்தில் வல்லவன். சூதும் வாதும் அவனுக்கு அத்துபடி. அதி மாயாவி. வானம் முதல் பாதாளம் வரை அத்தனை மாயக் கலையையும் கரைத்துக் குடித்தவன். இத்தனையும் கொண்டவன் அதி பராக்கிரசாலியும் கூட. அவர் உதவியை ஏன் நீர் இன்னும் நாடவில்லை?’ என்று கூறி முடிக்கும் முன்னே ராவணன் பதைபதைத்துக் கேட்கிறான்
‘ ப்ரஹஸ்தா, எனக்கு மறந்தே போய்விட்டதே, யார் அந்த தாயாதி, அவன் பெயர் என்ன, எங்கே இருக்கிறான், உடனே சொல்?”
‘மஹாராஜா, உங்களுக்கென்ன ஆயிற்று? உங்களது தாயாதிகள் யார், எங்கே உள்ளார்கள் என்று கூட நினைவில்லையா ? பாதாள இலங்கையில் மயில் ராவணன் ஒருவன்தானே உமக்கு தாயாதி முறை சகோதரன். அவனை அழைத்தால் அவன் யுத்தம் செய்தும், தந்திரம் செய்தும் ராம-லஷ்மணர்களின் படைகளை துவம்சம் செய்து விடுவான். அவனை வெல்ல இன்னும் யாரும் பிறக்கவில்லை. ஜெயிக்க வேண்டும் என்று மனது வைத்தால் அவன் ஜெயித்தே காட்டுவான். உடனே மயில் ராவணனை அழைப்பீராக’ என்று தூபம் போட்டான் ப்ரஹஸ்தன்
” மயில் ராவணா, நான் உன்னைப் பார்க்க வேண்டுமே’ என மனதார அவனை நினைத்தான். மனதில் நினைத்தால் போதும், மயில் ராவணனுக்கு அங்கே ராவணன் தன்னை நினைத்தது தெரிந்து விடும். அவன்தான் மாயாவி ஆயிற்றே. மயில் ராவணன் யோசனை செய்தான் ‘இதென்ன திடீர் என என்னை என் தமயன் ராவணன் என்னை நினைக்கிறான்? தீர்க்க முடியாத கஷ்டம் இல்லை ஏதாவது ஆபத்து என்றால் தவிர என்னை நினைக்க மாட்டனே. அப்படி அவனாலேயே தீர்க்க முடியாத என்ன ஆபத்து அவனுக்கு வந்திருக்கும்? இனி தாமதிக்கலாகாது…யோசனையும் செய்யக் கூடாது’ என நினைத்தவன் பாதாளத்தில் இருந்து சூறாவளிக் காற்றைப் போல கிளம்பி ராவணனைப் பார்க்க இலங்கைக்குச் வந்தான்.
‘ மயில் ராவணா, உடனே சென்று ராம, லக்ஷ்மணர்களைக் கொன்றுவிட்டு வா” என்று ராவணன் ஆணையிட்டான். ”அவர்களை பிடித்து வந்து காளிக்கு பலி கொடுப்பேன்” எனச் சபதம் செய்தான் மயில் ராவணன்.
கடலை தாண்டி பறந்து கொண்டிருந்த ஹனுமானின் உடல் முழுதும் வியர்வை. அது கடலில் சொட்டியபோது அங்கே வாய் திறந்து கொண்டு இருந்த மச்சகன்னியின் என்பவளின் வாயில் விழுந்து அவள் பின்னர் கருவுற்று ஒரு பிள்ளை பெற்றெடுத்தாள். அவன் தான் மச்சவல்லபன் எனப் பெயரிட்டாள். மச்சவல்லபன் தனது தாத்தா வாயு பகவானிடம் சென்று வணங்கி வரம் பெற்றான். ”என்னடா வரம் வேண்டும் உனக்கு””என் அப்பா ஹனுமானுக்கு நிகரான ஆற்றல் எனக்கு வேண்டும். அவரையும் வெல்லும் சக்தி வேண்டும்” என்றான் மச்ச வல்லபன். ”அப்படியே ஆகட்டும்”மச்சவல்லபன் பதினான்கு உலகங்களையும் வெல்ல புறப்பட்டபோது அவனை பாதாள லோகத்தில் மயில் ராவணன் சந்தித்து தன்னோடு இருக்கும்படி வேண்டினான். மச்சவல்லபன் மயில் ராவணனின் பாதாள இலங்கைக்கான கோட்டைக்கு படைத்தலைவன் ஆனான். மயில் ராவணனின் இரண்டாயிரம் கோடி அரக்கர்களும் கோட்டை வாயிலைக் காத்தனர்.
தந்திரத்தால் ராம, லட்சுமணரை பாதாள இலங்கைக்கு கடத்தி வந்தான். அனுமன் அவர்களைத் தேடி பாதாள உலகம் வந்தான். அங்கே கோட்டைக்கு காவலாக நின்ற மச்சவல்லபனுடன் போர் புரிந்தான். மச்சவல்லபனை எளிதில் வெல்ல முடியவில்லை. பிள்ளையாயிற்றே. அவனுக்கு சமமான சக்தி படைத்தவனல்லவா. ஹநுமானுக்கு அவனைத் தெரியாதே?அனுமன் ஆச்சர்யத்தோடு ” நீ யாரப்பா, இவ்வளவு திறமையோடு சக்தியுடன் என்னோடு மோதுகிறாய்? என்று கேட்டான் ஹனுமான். மச்சவல்லபன் நடந்தது அனைத்துயும் முழுசாக கதையாக சொன்னான். ஹனுமான் சந்தோஷத்தோடு அவனுக்கு தன் விஸ்வரூபத்தைக் காட்டி ” மச்சவல்லபா, நான் உன்னுடைய அப்பா மகனே” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மச்சவல்லபனை மயக்கமுறச் செய்தான். பிறகு வேகமாக ஹனுமான் பாதாள இலங்கையில் மயில் ராவணனைக் கண்டு, அவனையோடு யுத்தம் செயது அவனைக் கொன்றான்.
மயில் ராவணனின் தங்கை தூரதண்டியின் மகனான நீலமேகனுக்கு அனுமன் பட்டம் கட்டினான். அவனுக்கு காவல் நிற்கும் படி தன் மகன் மச்சவல்லபனை படைத்தலைவனாக நியமித்து பூலோகம் மீண்டான்.
இந்த கதையை நான் எந்த புத்தகத்திலும் படித்ததில்லை. எல்லாம் அம்மா சொன்னது. அவளுக்கு எப்படி எங்கே யார் மூலம் தெரிந்தது. எல்லாம் தாத்தாவிடம் இருந்து தான். இந்தப் பழம் கதை பல பேருக்கு தெரிந்தது. நாரத முனிவர் கௌதம ரிஷிக்கு சொன்னதாக நாட்டுப்புறக் கதையில் பாட்டாக பாடுவார்கள். அந்த காலத்தில் மயில் இராவணன் நாட்டுப்புற கதை பாட்டு புஸ்தகமாக அச்சிட்டப்பட்டு விற்கப்பட்டது. தெருக்கூத்து தோல் பாவைக் கூத்து என்று பொம்மலாட்டமாக பாடப்பட்டு வந்தது. மயில் ராவணன் கதை விவரமாக சொன்னால் இன்னும் ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும். நிறைய விஷயங்கள் இருக்கிறது அதில்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

