MARGAZHI FEAST J K SIVAN

அழகிய பெண்ணாழ்வார்  1-  நங்கநல்லூர் J K   SIVAN மார்கழி 1ம் நாள் ‘
”ஏண்டி பொண்ணே,  இப்போ திருப்பாவை பாடினியே, ஆண்டாள் னு மைக்லே சொன்னாளே . ரொம்ப நன்னா பாடினே  உன் பேரு தான்   ஆண்டாளா?”  எங்கே இருக்கே, அப்பா  அம்மா என்ன பண்றா? பாட்டி  கிருஷ்ணன் கோவிலில் அந்த சிறுமியை கேட்டாள்.”ஆமாம் பாட்டி, அப்பா அம்மா இல்லே. மாமா மாமி வீட்டிலே இருக்கேன்.ஸ்கூல்  லே  எங்க லட்சுமி டீச்சர் பாட கத்துக் கொடுத்தா ””அடாடா. எங்கே போனா  உங்கப்பா அம்மால்லாம்?”நான் சின்ன குழந்தையா இருக்கும்போதே அவா ரெண்டு பெரும் ஏதோ ஆக்சிடெண்ட்லே போய்ட்டாளாம். போட்டோ கூட கிடையாது. நான் பார்த்ததில்லே….எங்க பார்த்தசாரதி மாமி, வேதா மாமி தான் என்னை ஆசையா வளர்த்து படிக்க வைக்கிறா ”அந்த பெண்  குழந்தை நடந்து  போய்விட்டது. பாட்டி கண்ணுலே ஜலம் . மெதுவாக கம்பை  ஊன்றி க்கொண்டு வீட்டுக்கு ப்ரசாதத்தோடு நடந்தாள் . அவளுக்கு முன் அவள் மனம் பல ஆயிரம் வருஷங்கள் படுவேகமாக  பின்னோக்கி ஓடியது.  துவாபர  யுகம்,.. ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன் ஆயர்பாடியில் நந்தகோபன் அரண்மனை,…. திடீரென்று தெற்கே  ஸ்ரீ வில்லிபுத்தூர்  பெரியாழ்வாரின் நந்தவனம்.   ஆண்டாள் உருவம்…. எத்தனை மார்கழி மாதங்கள் ஓடிவிட்டது…மார்கழி என்றாலே  மனதில் குதூகலம்.  இந்த வருஷம்  இதோ மார்கழி பிறந்து இன்றைக்கு  மூன்று நாட்களாகி விட்டது.   தான் படித்த ஒரு புத்தகத்தின் பக்கங்கள் கண் முன் ஓடியது
நமது பாரத தேசம் ஒரு புண்ய பூமி தான் என்பதில் யாருக்காவது துக்குணியூண்டேனும் சந்தேகம் இருக்கு மானால் கொஞ்சநாள் அண்டை நாடுகளில், அதாவது ஆப்கானிஸ்தானிலோ பாகிஸ்தானிலோ பர்மா, ரஷ்யாவிலோ, இரான் இராக்கிலோ அல்லது எங்கோ ஒரு நாட்டில் இருந்து விட்டு மீண்டும் இங்கே வரவும். யாரும் சொல்லாமலே தானே உண்மை தெரியவரும். இந்த புண்ய தேசம் இவ்வாறு பரிமளிக்க யார் காரணம், எது காரணம்?
இங்கு வாழ்ந்த நம் எந்தையர் முன்னோர் இசைந்து குலாவி வாழ்ந்து களித்த அற்புத தேசம் என்று பாரதியார் சொல்லி லிருக்கிறாரே. நமது மூதாதை யரும், அவர்களோடு சேர்ந்து நாம் வணங்கும் தெய்வங்க ளும், நலமோடு வாழ வழிகாட்டி வாழ்த்திய புண்ய புருஷர்களும் கூட காரணர்கள்.  ப்ரபஞ்சம் எனும் இயற்கை என்றும் அன்று போல் இன்றும் இருக்கிறதே தவிர அதை அசுத்தமாக்கி, சின்னா பின்னமாக்கி நாகரிகம் என்ற போர்வையில் நாமே உண்டாக்கிக் கொண்ட குளிரில் வாடுகிறோம். டிசம்பர் எனும் இயற்கைக் குளிர் மழை, ஊதல் காற்றோடு இன்னும் சிறிது காலம் நம்மை வாட்டி விட்டுத் தான் போகும். ஆனால் நாம் உண்டாக்கிக் கொள்ளும் குளிர் போக மனம் முதலில் குளிர வேண்டும். ”மார்கழி திங்கள் என்ற பாடல் மட்டும் நமக்குப் போதும், மடி நிறைய பொங்கல் வேண்டாம். ஒரு தொன்னையே போதும். பிரசாதம் உணவல்ல. இறை அருள் பெற விழைய, ஒரு தூண்டு கோல்.   மார்கழியை மணக்க வைத்த மா மனிதை (மனிதன் என்ற பதத்துக்கு இணையாக உருவாக்கிய ஒரு வார்த்தை என்று எடுத்துக் கொள்வோம்) ஆண்டாள்.  எட்டாம் நூற் றாண்டில் வாழ்ந்தாலும் மனதிற்கு எட்டிய தூரத்தில் என்றும் நம் கண் முன்னே நின்று, மனத்தை ஆக்ரமிக்கும் பெண் தெய்வம். பெருமாள் இருக்கும் இட மெல்லாம் ஒரு சந்நிதியில் தானும் நின்று என்றும் நமக்கு அருள்பவள். ஆடிப்பூரத்தில் துளசியோடு துளசியாக பெரியாழ்வார் கண்டெடுத்த, அவதரித்த, கோதை எனும் பெயர் பெற்றவள்.++
மார்கழி 1ம் நாள் ”’ஏம்மா குழந்தை வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்துட்டே.? உன்னுடைய திவ்ய குரல்லே நீ பாசுரங்கள் பாடும்போது என்னை ஸ்ரீ வைகுண்டத்துக்கே கொண்டு சேர்க்கிறதம்மா”.விஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் குரல் தழுதழுத்தது. வில்லிபுத்தூர்  கிராமம் 1200 வருஷங்களுக்கு முன் அமைதியாக அருகில் எந்த மனித சஞ்சாரமும் இல்லாமல் தனியே காட்டுக்குள் குடிசை வீடு போல இருந்தது. வாசலில் பசுவும் கன்றும் மேய்ந்து கொண்டிருந்தது.
”அப்பா. எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது தானே. எனக்கு நீங்க இல்லாட்டா இதெல்லாம் வருமா அப்பா?. அரங்கனை அறிமுகப்படுத்தியதே நீங்கதானே. அவனை என் மனசுக்குள்ளே  நிக்க வைச்சதுக்கு நீங்க தானே காரணம்.  எனக்கு இந்த உலகத்திலே உங்களை விட்டா வேறே யாரை தெரியும். நான் பார்த்ததில்லையே தவிர  நிறைய உங்களால் அந்த ரங்கனைப் பத்தி கேட்டு, அவனையே மனதில் எப்போதும் தோண வச்சதே நீங்க தானேப்பா?
”ஆமாம் தாயே, நான் செஞ்ச பெரிய பாக்கியம் உன்னை அடைந்தது. உன் மூலமா அந்த ரங்கனை நினைக்கிறது, அவனைப் பத்தி பேசறது, பாடறது எல்லாம். இப்படியே என் வாழ்நாள் பூரா போகணும்னு ஆசைப்படறேன் கோதை.  இப்பல்லாம் நீயே எழுத்தாணி பிடிச்சு ஓலைச் சுவட்டிலே நிறைய எழுத ஆரம்பிச்சுட்டே.  உன் எழுத்திலே ஜீவன்  ஆத்ம பலம், தெய்வீகம் எல்லாமே நிறைஞ்சு இருக்கும்மா. எனக்கு ரொம்ப சந்தோஷம் .சொல்லத்தெரியலே டீ  கண்ணே…”
” எனக்கும் நிறைய எழுத மனது துடிக்கிறது அப்பா. ஒண்ணை நினைச்சு எழுதறத்துக்குள்ளே அதைக்காட்டிலும் அருமையா வேறே ஒண்ணு மனசுக்குள்ளே  எண்ணம்  ஒடறதாலே முதல்லே  எது தோன்றதோ அதை நானே பாடிப் பார்த்து அனுபவிச் சுக்கிறேன். அப்புறம்  தான் எழுத்தாணி ஓலைலே நகர்கிறது.
‘ ஏன் சீக்கிரம்  எழுந்துட்டே ன்னு கேட்டேளே. வாசலைப் போய் பாருங்கோ, பெருக்கி, சாணம் தெளிச்சு,மெழுகி,  செம்பருத்தி பூ செருகி பெரிய கோலம் போட்டிருக்கேன், ” ரங்கா வா” ன்னு எழுதி இருக்கேன்”
”மார்கழி மாசம். பிரம்ம முகூர்த்தத்திலே சகல தெய்வங்களும் பூமிக்கு வரா அம்மா. நீ வான்னு எழுதி கூப்பிடறத்துக்கு முன்னாலே உன் குரல் கேட்டு அவனே ஓடி வருவான், அந்த ரங்கன், எனக்கு தெரியாதா? நீ என்ன புதுசா பாடினே இன்னிக்கு?”
”அப்பா, மார்கழிலே விடியறதுக்கு முன்னே எழுந்து நீராடி விரத மிருந்து முப்பது நாளும் அந்த நாராயணனையே நினைத்து நோன்பு நோற்றால் அந்த ரங்கன் வேண்டியதை தருவான்னு  நீங்க தானே சொன்னேள் ”
மனசிலே  அந்த  மாய கிருஷ்ணன் இருந்த ஆயர்பாடியிலேயே  தானும் இருப்பதாக பாவித்து தன்னை ஆண்டாளாக உருவகப்படுத்திக் கொண்டு  மார்கழி முப்பது நாளும் காத்யாயனி நோன்பு இருக்கப்போகிறாள் கோதை. ஆயர்பாடியில்  போய் மீதி பெண்களோடு சேர்ந்து கொண்டு  தானும் ஒருத்தியா ஆண்டாளாகி விட்டாள்  கோதை.  உடம்பு  வில்லிபுத்தூரில் இருந்தாலும் மனது   கிருஷ்ணன்  வீட்டையே சுத்தி சுத்தி கோகுலத்தில்  வருவதில் தான் எத்தனை சந்தோஷம்.
”என்ன எழுதினே படியேன் கேக்கறேன்.  விடிகாலை இருட்டிலே கண்ணு சரியா தெரியலை.  திரியை கொஞ்சம் இழுத்துவிடு . தீபத்தின் வெளிச்சம் ஓலைச்சுவடு படிக்க  போறலே.”
++++
கோதை ஆயர்பாடி ஆண்டாள் ஆகிவிட்டாள் மார்கழி மாதம் குளிர். யமுனை உறங்குவது போல் அமைதியாக இருக்கிறது. அதை எழுப்புகிறாள் ஆண்டாள். முதலில் தூக்கம் கலைந்து எழுந்தவள் தன் குடிலை விட்டு வெளியே வந்தாள்
‘’மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். ‘’
வில்லிபுத்தூரில்  அந்த  அமைதியான  குடிலில்  கணீரென்று கோதையின் குரலில் திருப்பாவை தோன்றியது. விஷ்ணு சித்தர் கண்களில் நீர் மாலை. ஆனந்த களிப்பு.
”அசாத்யம்  அபாரபாம்…., ஸ்ரீயப்பதே, ரங்கநாதா, எல்லாம் உன் கிருபை. என்ன அற்புதம் இந்தக் குழந்தையின் பக்தி ஸ்ரத்தை. இவ்வளவு காலம் நான் எழுதியதெல்லாம் இந்த ஒரு பாசுரத்துக்கு ஈடாகாது, அம்மா தாயே, கோதை, நீ லக்ஷ்மி அம்சம் என்பதில் சந்தேகமே இல்லேம்மா.  என்ன திவ்யமாக எழுதியிருக்கிறாய். நான் எழுதினத்துக் கெல்லாம் சிகரமாக உன் எழுத்தில் பாசுரங்கள்   பக்தியோடு  மிளிர்கிறதே. எல்லாம் அந்த ரங்கன் செயல்.நாளைக்கு நீ எழுதப்போவதையும் ஆவலாக கேட்க காத்திருக்கேன்”.
”ஓவ்வொரு நாளும் பாசுரம் எழுதப்போறேன். நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய அந்த நாராயணன் அவதாரமான கிருஷ்ணன் இருந்த ஆயர்பாடியிலே இடைச்சிறுமிகள் ஒன்றாககூடி யமுனையில் நீராடி நல்ல கணவன் கிடைக்க காத்யாயனி விரதம் இருந்த நோன்பு பற்றியும் எழுதப்போகிறேன்.
+++
வில்லிப்புத்தூரில்  இருந்து இப்போது நேராக  ஆயர்பாடிக்கு செல்கிறோம். அங்கு சில பெண்கள் விடியற்காலையில் கூடியிருக்கிறார்கள். மற்றும் சிலரை எழுப்ப செல்கிறாள் ஆண்டாள் என்கிற சிறுமி. ‘
”மார்கழி வந்து விட்டதே. எழுந்திருக்க வேண்டாமா. நாம் எல்லாருமாக யமுனைக்கு செல்வோம். அங்கு புனித நீராடி ஸ்ரீ கிருஷ்ணனைப் பணிவோம். அவன் ஒருவன் போதுமே நாம் கேட்டதெல்லாம் அருள.
தோழியர்களே எழுந்திருங்கள்.”என்னடி ஆண்டாள் , இந்த மார்கழி குளிரில் அதிகாலையில் வந்து எங்களை எழுப்பி ” வா குளிப்போம், பாடுவோம்” என்கிறாய். எதற்கு ஏன்?  விஷயம் சொல்லேன்?    என்றனர் அந்த ஆயர்பாடி சிறுமியர் அவளிடம் .
”நான் சொல்றேன் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு விஷயம் தான் சொல்வேன். அப்போது தான்உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியும். ஒரே அடியா ஒரு மாச விஷயத்தை ஒரே நாளில் சொல்லித் திணிக்கக் கூடாது.
 மார்கழி 1ம் நாள் ஆண்டாள் என்கிற சிறுமி சொல்ழலும்  விஷயம்:  “இந்த மார்கழி என்கிற மாசம் ரொம்ப ஒசத்தியா னது.எனக்கென்னமோஇந்த மாதம் தான் ரொம்ப பிடிக்கும். வெயில் கிடையாது தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த ஊர் என் உயிர். ஏன் என்றால் இதில் தான் கிருஷ்ணன், அந்த ஆணழகன், கருநீல வண்ணன் செவ்விதழ், கன்னம் உடையவன்-கண்களோ செந்தாமரை அவன் இருக்கும் நம்முடைய இந்த ஆயர்பாடி, ஒரு ஸ்வர்க பூமி என்பதில் என்ன சந்தேகமடி உங்களுக்கு!!.   அவன் சாதாரணமானவனா யிருந்தால் இந்த பேச்சுக்கே இடமிலையே! எதிர்த்தவர்களின்உயிர் குடிக்கும் வீரன் அந்த நந்த கோபனின் பிள்ளையை தவிர வேறு யார்? அவன் அம்மாவைப்  பற்றி சொல்ல வில்லையே, இந்த
சிங்கக்குட்டியை பெற கொடுத்து வைத்தவள் அவள். யசோதை அவள் பேர்.”
”நேரமாச்சே சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து அவனைப் பாடுவோம்”
”ஆண்டாள், கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன் அப்படி என்ன இதுக்கு முக்கியம்?”
”எதற்காக இந்த மார்கழி மாதம் நோன்பு என்று தெரியணும்னாக்க, இந்த மாசம்தான் அந்த கிருஷ்ணனுக்கு, நாராயணனுக்கு பிடிச்ச மாசம். மாதங்களில் அவன் மார்கழியாகவே இருக்கானாம். நாமெல்லோரும் ஏன் இந்த உலகில் எவருமே ஸ்வர்கமடைய நாம் செய்யும் இந்த பாவை நோன்பு தவிர குறுக்கு வழி வேறே இல்லை அல்லவா?
பெண்கள் ஸ்நானம் முடித்து கூட்டமாக சேர்ந்து நாராயணனை நெக்குருகி, மனமுருகிப்பாடி , வெள்ளை உள்ளத்தோடு வேண்டி அன்றைய நோன்பைத் தொடங் கினர். பிறகு தத்தம் வீடு திரும்பினர்.
மார்கழி மாதம் நம்அனைவராலும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்ய இயலுமா? சென்னை வாசிகளே! திருவல்லிக் கேணி தான் சென்னையின் வில்லிப்புத்தூர். அங்கு மார்கழி முழுதும் கோலாகல மாக விமரிசையாக ஆண்டாள் நீராட்டு விழா, பிரபந்த பாசுரம் எதிரொலிக்க, விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திவ்யதரிசனம் கிடைக்கிறதே, விடாமல் போவோம். நம்மால் முடிந்த நோன்பு இதையாவது செய்வோமே. கிளம்புங்கள் எல்லோரும் உடனே போவோம். அதற்கும் போக முடியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது  tv .https://youtu.be/GtFwQLhFWzI?si=in_Z4GPoV9moUDgp5.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;