NAVARATHRI KOLU J K SIVAN

நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN
இன்று மஹாளய அமாவாஸ்யை முடித்த சூட்டோடு நவராத்ரி கொலு பொம்மைகள் பரணிலிருந்து இறக்கப்
பட்டன. கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கு மேல் வயதான பொம்மைகள் இன்னும் சில இருக்கிறது. சிலது ஒரிஜி னல் கலர் போனாலும் அதன் உருவம் பாராட்டும் படி இருக்கிறது. பழைய ஞாபகங்கள் வருஷா வருஷம் அவற்றைப் பார்க்கும்போது வருவது ஒரு வித ஆனந் தானுபவம். இந்த உலகத்தில் எத்தனையோ மாதங்கள் இருந்தாலும் வருஷாவருஷம் வீடுகளில் ஆலயங்களில் ஏன் இப்போது பேங்க் ஆபீஸ்களிலும் கொலுப்படிகள் வைத்து பொம்மைகளை அலங்காரமாக வைக்கும் வழக்கம் ஹிந்துக்களுக்கு ப்ரத்யேகமானது. பாராட் டத்தக்கது. பெண்குழதைகளுக்கு சந்தோஷம் அளிக் கும் ஒன்பது நாட்கள்.
”ஆத்துக்கு பெரியவா உங்க கையாலே முதல் கொலு பொம்மை வையுங்கோ”
என் கையால் வீணை மீட்டும் வெள்ளைப் புடவைக் காரி சரஸ்வதி, செங்கமலத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மி பச்சைப் பெண் பார்வதி பொம்மைகளோடு விக்னேஸ் வரர் பொம்மை ஒன்றும் வைத்து நமஸ்கரித்தேன். பழைய கால களிமண் பொம்மைகள் ரொம்ப கன மானவையாக இருக்கும். இப்போது அநேகமாக எல்லாமே பிளாஸ்டிக் அல்லது பேப்பர் மேஷ் papermache.
என் அறையில் வருஷம் முழுதும் புத்தக அலமாரியாக இருந்த ஐந்து அடுக்கு ஸ்டீல் தகடு பீரோ உருவத்தை படிக்கட்டாக மாற்றிக் கொண்டு ஹாலில் இன்று புரட் டாசி மாசம் நவராத்ரி ஆரம்பமாகும்போது பத்து நாளைக்கு பட்டு புடவை போர்த்திக்கொண்டு, இல்லையென்றால் என் வெள்ளை வேஷ்டியை அணிந்து கொண்டு கலர் பல்புகள் ஒளிவீச ரம்ய மாக கொலுப்படிகளாக காட்சி தரும்.
நவராத்திரியின் போது நிறைய வீடுகளில் தேவி பாகவதம் படிப்பார்கள், அதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்கிறேன்.
சும்பன், நிசும்பன் என இரு ராக்ஷஸர்கள். ராக்ஷஸர்கள் பலமும், பிடிவாதமும், நெஞ்சுரமும், தன்னம்பிக்கையும் அதிகம் கொண்டவர்கள். யாராலும் தங்களுக்கு மரணம் கிடையாது என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு கடும் தவம் செய்வார்கள்.
சிலர் வெள்ளையும் சொள்ளையுமாக, பாக்கெட்டில் யாரோ சிரிக்கும் பொம்மை தெரிய, ரெண்டு கை கூப்பி நெற்றியில் விபூதி குங்குமத்தோடு நம்மை அணுகி வாக்கு கேட்டு வாங்கி அரசாளும் பதவி பெற்றதும் நாம் படும் துன்பம் தாங்க முடியாத அனுபவம் என்று நமக்கே இருக்கும்போது, சும்ப நிசும்பர்கள் வரம் பெற்ற பிறகு படுத்திய துன்பம் தாங்காமல் தேவர்கள் மஹா விஷ்ணு விடமும், சிவனிடமும் முறையிட மாட்டார் களா? அதில் என்ன அதிசயம்?
ப்ரம்மா விஷ்ணு சிவனால் அழிக்க முடியாத அந்த ராக்ஷஸர்களை அன்னை ஆதி சக்தியால் மட்டுமே வதம் செய்ய முடியும். ஆகவே பிரம்மா, விஷ்ணு, சிவன் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அம்பாளுக்கு அளிக்க, சக்தி இழந்த ப்ரம்மா. விஷ்ணு, சிவன், தேவர்கள் ரிஷிகள் அனைவருமே வெறும் பொம்மையாகி விட்டார்கள்.அதனால் தான் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது.
அன்னை பராசக்தி திரிமூர்த்திகள் தந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் ஏந்தி. போர்க் கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத் தளபதிகளான மது, கைடபன், ரக்த பீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். ஒன்பது நாள் யுத்தம். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி.
அம்பாள் யுத்தம் செய்த அந்த ஒன்பது நாட்களை நவராத்திரி யாகக் கொண்டாடுகிறோம். அந்நாட் களில் மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங் களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னை யின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறு நாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னை யைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்படி ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியின் போது கலை நிகழ்ச்சிகள், விழா, கொண்டாடுகிறோம். நவராத்திரியில் அம்பிகை யை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடு கிறோம்..
அம்பிகையை.துர்க்கையாக, முதல் மூன்று நாள், லக்ஷ்மியாக அடுத்த மூன்று நாள், கடைசி மூன்று நாட்கள் ஸரஸ்வதியாகவும், இப்படி முப்பெரும் சக்தியாக வழிபடுகிறோம்.
பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிப்பது தான் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்காரத்தோடு ஆராதிக்கப்படுகிறாள். எடுத்த காரியம் யாவினும் வெற்றி அன்று. இப்படி அம்பாளை வழிபடுவோர் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ அன்னை அருள் புரிவாள்.
வருஷத்தில் ரெண்டு முறை நவராத்திரி என தேவி புராணம் சொல்கிறது. சித்திரையில் வரும் நவரா த்ரி வசந்த நவராத்ரி. இப்போது புரட்டாசியில் சரத் ருது என்று மாரிக்காலத்துக்கு முன்பு ரிஷிகள், முனிவர்கள் விரதமிருக்கும் சாதுர்மாஸ்ய சமயத்தில் (AUTUMN ) வரும் பண்டிகையாதலால் சாரத நவராத் திரி சாரதா என்பது சரஸ்வதிக்கும் ஒரு பெயர்ரி. இந்த ரெண்டுமே எமனுடைய கோரைப் பற்கள். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய் நொடிகள் பரவும். இந்த ஆபத்தி லிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்க பழைய காலத்தில் இந்த ஏற்பாடு.
புரட்டாசி சாரத நவராத்திரி தான் பிரபலம். நவராத்ரி பூஜையை, தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியாமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.
நவராத்ரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தி னாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப் பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண் டாடு கின்றனர். அன்றைய தினம் புதிதாக காரியங்கள் துவங்கி எளிதாக நன்மை பெறுவார்கள். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.
இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை நவராத்ரி சொல்லித் தருகிறது. இந்த ஒன்பது நாளும், ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.
”நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.” இந்த ஸ்தோத்ரம் நவராத்ரி விரத பூஜாபலன் பற்றி சொல்கிறது.
கொலு வைப்பது நவராத்திரி சமயத்தில் எல்லோர் வீட்டிலும் ஒரு உற்சாகமான சம்பவம். எத்தனையோ வருஷங்கள், எத்தனையோ வம்சங்களாக, கொலு வைத்தாலும், இன்னும் அந்த உற்சாகம் குறையவே இல்லை. இப்போதெல்லாம் ஒற்றைப்படையில் 11-13 படிகள் வைக்க வீடுகளில் இடம் கிடையாது. 3-5 அதிக பக்ஷம் 7 என்பதோடு கொலு நின்றுவிடுகிறது. இந்த வருஷம் நிறைய பேர் ”நாங்களே கொலுப்படி, பொம்மை எல்லாம் கொண்டு வந்து வீட்டில் வைத்து, 10 நாள் வாடகை பெற்று எடுத்துச் செல்கிறோம்” என்று விளம்பரங்கள் . கலியுகத்தில் ”உங்களுக்காக நாங்க ளே சாப்பிடுகிறோம். வாடகை இவ்வளவு ரூபாய் கொடுத்தால் போதும் ” என்றும் விளம்பரம் வரலாம். சோம்பேறித் தனத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
மார்க்கண்டேய புராணத்தில் ஒரு ராஜா, சுரதா என்பவன்.தனது குரு சுமதாவிடம் ”குருநாதா, என் எதிரிகளை எப்படி ஜெயிக்கலாம்? என்று கேட்கிறான் .
”அதோ அங்கே பார், அங்கு தெரியும் பரிசுத்தமான ஆற்று மணலில் ஒரு காளி பொம்மை செய்து பூஜை பண்ணு போ ” என்கிறார் சுமதா.
ராஜா காளி பொம்மை பண்ணி அலங்கரித்து, உபவா சம் இருந்து, மனதாலும் மெய்யாலும் வேண்டுவதால் அம்பிகை அவன் எதிரிகளை அழிக்கிறாள் என்று வரும். அதனால் மண் பொம்மைக்கு மவுஸு அதிகம். இப்போதெல்லாம் பேப்பர் மெஷ், பிளாஸ்டிக், பிளாஸ் டர் ஆப் பாரிஸ் என்று என்னென்னவோ வகை யில் பொம்மைகள் வந்துவிட்டன. ”மண் பொம்மை யால் என்னைப் பூஜி.உனக்கு சகல சுகங்க ளையும், சௌபாக் யங்களையும் அளிக்கிறேன் ” என்கிறாள் அம்பிகை. இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.
கொலு என்றால் அழகு என அர்த்தம். அந்த கால ராஜாக் கள் கொலு வீற்றிருந்தார்கள் என்றால் பொம்மை மாதிரி சும்மா உட்கார்ந்து இருப்பது என்று கூட சிலர் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். மழை பெய்கிறதா என்று கூட மந்திரி தான் மேலே பார்த்துவிட்டு ராஜாவிடம் சொன்னதாக விஷயங்கள் நிறைய இருக்கிறது. .
கொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளுடன் கொலு வைக்கப்படும். கடவுள் பொம்மைகள் கொலுப்படி களில் ஜாஸ்தியாக இருக்கும் .
என் இளவயது ஞாபகம் சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது. புரட்டாசி வருவதற்கு முன்பே வீட்டில் கொலு பத்தி பேச்சு அடிபடும். அப்பா பரண் மேல் ஏறி பெட்டிகளை இறங்குவார். எல்லாம் பழங்கால பொம் மை கள். வர்ணம் போனவை . அதெல்லாம் எடுத்து துடைத்து வைக்க வேண்டியது அவர் வேலை. ட்ரங்க் பெட்டிகள், மர பெஞ்ச், மேஜை, ஜன்னல் மேடை, ஸ்டூல், இரவல் வாங்கிய செங்கல்கள், பலகைகள், அரிசி ட்ரம். இதெல்லாம் ஒன்று சேர்ந்து ஏழு அல்லது ஒன்பது கொலுப் படி தயாராகும். அப்பாவின் அத்தனை வேஷ்டிகளும் அதன் மேல் போர்த்தி அங்கங்கே பின் குத்தி ஒட்டு மொத்தமாக உறை போட்டிருக்கும். 5. 7, 9, என்று ஒற்றைப்படை படிகள். எங்கள் வீட்டில் எப்போதும் 9. கொலுப்படி கட்டும் திறமை அப்போது எல்லா வீடுகளிலும் அப்பாக்களுக்கு இருந்தது.
கொலு வைக்க அதிக சிரத்தை ,பக்தி இருந்தது. மிக்சி, கிரைண்டர் இல்லாத காலத்தில் தினமும் வீட்டில் வித வித பக்ஷணங்கள் தயாராகும். அண்டை அசல் வீடுகள், உறவினர்கள் கட்டாயம் வருவார்கள். சுண்டல் பரி மாற்றம் ஜரூராக நடக்கும். பெரிய மாமிகள், பாட்டிகள் கூடி நிறைய பேசி, தினமும் மஞ்சள் குங்குமம் கொடுப் பதும் பெறுகின்றதும் வழக்கம். சுண்டல்களை சிறுவர் கள் நாங்கள் கவனித்துக் கொள்வோம். யார் வீட்டில் என்ன பக்ஷணம் என்று செய்தி கிடைத்துவிடும். சுற்றிக்கொண்டே இருப்போம். பலவித குரல்களில் மாமிகள் பாட்டிகள் எல்லாம் சுவாமி பாட்டு பாடு வார்கள்.
பண்டிகைகள் உறவுகளை இணைத்தது. ஒற்றுமை நிலவியது. குழந்தைகளுக்கும் கலாச்சாரம் புரிந்தது. வளர்ந்தது. முக்கியமாக அப்போது பெண்கள் வேலைக் கு போகவில்லை. ஹார்மோனியத்தோடு ஸ்வர மாகவோ அபஸ்வரமாகவோ பாடினார்கள். பத்து நாட்கள் பண்டிகை ஒரு விறுவிறுப்போடு அமைந்தது. உடலிலும் உள்ளத்திலும் ஏனோ தானோ என்ற சலிப்பு கிடையாது. பணத்துக்கு யாரும் முக்யத்வம் கொடுக்க வில்லை. மன நிறைவு இருந்தது . பூக்களை வீட்டிலேயே செடியில் பறித்து மாலைகள் தொடுத்தார்கள். ஒரு காலை நீட்டி தூணிலே சாய்ந்து கொண்டு அத்தைகள் பாட்டிகள் பெரியம்மாக்கள் சித்திகள் ஒன்று சேர்ந்து பூ தொடுத்தார்கள். முழம் என்று சொல்லி அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் கட்டி அரையோ முக்காலோ முழமாக்கி நாற்பது ஐம்பது ரூபாய் கேட்க தெரியவில் லை. வெற்றிலை வீட்டிலேயே கிடைத்தது. கடையில் இப்போது சின்னதாக ஒரு வெற்றிலை ரெண்டு ரூபாய்.
முதல் படியில் கலசம் பின் ஆண்,பெண் மரப்பாச்சிக்க ளுடன் ஆரம்பித்து மனித குல வளர்ச்சியோடு படிகள் மேலே மேலே சென்று உச்சிப்படியில் தெய்வங்கள் முக்கியமாக முத்தேவிகள், ப்ரம்மா விஷ்ணு மஹேஸ் வரன் பொம்மைகள் வைப்பது சம்ப்ரதாயம். சில வீடுகளில் இருப்பதை எல்லாம் அடுக்கி வைத்தனர். வண்ணான் முதுகில் துணி மூட்டை தலைப்பாகை யோடு, அருகே வண்ணாத்தி இடுப்பில் குழந்தையோடு, ஒரு கையில் கஞ்சி கலயம். செட்டியார் செட்டியாரம்மா எதிரே பாத்திரங்களில் அரிசி பருப்பு வகைகள். போஸ்ட் பாக்ஸ். கையில் ஒரு கஞ்சிரா மாதிரி ஒரு வாத்யத்தோடு டான்ஸ் பண்ணும் வெள்ளைக்கார வடக்கத்தி கிராப் தலை பெண்கள். எங்கம்மா ”பார்ஸி காரி” என்பாள். நாய்க் குட்டி பக்கத்தில் நாரதர். சல்யூட் அடிக்கும் நேதாஜி. அவர் பக்கத்தில் அனந்த சயனர் ஆதிசேஷனோடு. யானை பொம்மைகள்! சில பொம்மைகள் ஜோடியாக அந்த பக்கம் ஒன்று இந்தப் பக்கம் ஒன்று என்று வைத்திருப்போம். பார்ஸிக்காரி, மான், தொப்பி போட்ட பையன், கருப்பு வெளுப்பு நாய்கள் இதுபோல் பல ஜோடி இருந்தது. காந்திஜி, நேருஜி பொம்மை நிறைய வீட்டில் கொலுவில் பார்க்க முடிந்தது.
தசாவதாரம் செட், எம தர்மன் தர்பார், சிவபெருமான் கைலாச மலை பூத கணங்கள் செட். கல்யாண ஜான் வாஸா ஊர்வலம் செட் பொம்மைகள் ரொம்ப பிரபலம். எங்கே அதெல்லாம் இப்போது ? மரப்பாச்சி தம்பதிகள், ஒரு கலசம், ஊசி கூட வைத்து பூஜை நடக்கும். சகல பொம்மைகளும் இந்த படிகளில் காணலாம். கொலு பொம்மைகள் வைக்க ஒரு பாரம்பரிய முறை உண்டு. அதன் படி தான் படிப்படியாக வைப்பார்கள். சிறந்த கொலுவுக்கு இப்போதெல்லாம் பரிசுகள் கொடுக்கி றார்கள். பையனாக நான் தினமும் சாயந்திரம் சுண்டல் சேகரிக்க பல வீடுகள் சென்றிருக்கிறேன்.
பார்க் என்று தரையில் கொசகொச வென்று நிறைய மண் கொட்டி பாத்தி கட்டி. திட்டு திட்டாக செடிகள் புல் நட்டு நடுநடுவே சின்ன சின்ன பிளாஸ்டிக் மண் பொம்மைகளை நிரப்புவோம். இதில் குழந்தைகள் பங்கு ரொம்பவே அதிகம். ரெண்டு பக்கமும் குத்து விளக்கேற்றி கோலங்கள் போட்டு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்கள். அபிராமி அந்தாதி, தேவி பாகவதம், ஒப்பிப்பார்கள். நிறைய கேட்டிருக்கிறேன். காது ரொம்பி இருக்கிறது.
வடபழனி சாளிக்ராமத்தில் வாசிக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு பெரியது. வாசலில் பூவரச மரம் வீட்டின் மேல் சாய்ந்து கொண்டு நிற்கும். திண்ணை ரேழி தாண்டி போனால் முற்றம். மேலே கூரையில். சூரிய வெளிச்சம் பளிச்சென்று அங்கே இருக்கும். அதற்கு வலது பக்கம் பெரிய ஹால் மாதிரி ஓபனாக இருக்கும். எதிரும் புதிரும் ரெண்டு இருட்டு அறைகள். கதவு நாதாங்கியிலிருந்து சங்கிலி கதவு மேல் வாசல் கால் நிலையில் ஹூக் ஒன்றில் மாட்டி யிருக்கும். வீட்டுக்காரர் குப்பு மாமா போஸ்ட் மாஸ்டர். நிறைய சின்ன சின்ன பல்புகள் மேல் கலர் காகிதம் சுற்றி பளிச் பளிச் என்று பல வித வண்ணங்களில் ஒளி வீச செய்வார். எலக்ட்ரிக் விஷயங்கள் கொஞ்சம் அத்து படி போஸ்ட் மாஸ்டருக்கு. இன்னும் எத்தனை எத்தனையோ கலைந்த கரைந்த கொலு ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அப்பப்போ வரும்போது சொல்கிறேன். துர்கா பூஜை நவராத்ரி ஆரம்பமாகிவிட்டது. கண் மூடி கண் திறப்பதற்குள் பத்து நாட்கள் ஓடிவிடும். தெருக் கோடியில் ஐப்பசி காத்திருக்கிறது. கோலாகலமான தீபாவளி எங்கும் சத்தமாக ஒளியாக ஒலியாக ஆனந்தம் தரும். அதைத் தொடர்ந்து ஆறு நாள் மஹா சஷ்டி என்று சுப்பிரமணிய வழிபாடு. எப்படி தொடர்ச்சி யாக ஏதாவது ஒரு பண்டிகை பகவானை நினைப்பதற்கு என்பதற்காகவே நமது முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
நவராத்திரியின் 1ம் நாள் – தேவி மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி.
2ம் நாள் – கௌமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரி.
3ம் நாள் – வாராஹி , கன்யா கல்யாணி .
4ம் நாள் – மகாலட்சுமி. இவளே ரோஹிணி
5ம் நாள் – வைஷ்ணவி, மோகினி..
6ம் நாள் – இந்திராணி. சர்ப்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்த கோலம்.
7ம் நாள் – மஹா ஸரஸ்வதி, சுமங்கலி.
8ம் நாள் – நரசிம்மிதருமி. நரசிம்மி.சினம் தணிந்த கோலம்.
9ம் நாள் – சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரி.10ம் நாள் – அசுரர்களை அழித்து அம்பிகையின் வெற்றியை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.
நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம், சிறப்பு, அனுஷ்டிக்கும் முறை, அதன் பலன் பற்றி தேவி மஹாத்மியம் விரிவாக சொல்கிறது.
மூக பஞ்சசதி என்கிற ஸ்தோத்ரத்தில் சரஸ்வதியை ”விமலபதி” என்று வர்ணிப்பது அவளது வெண்ணிற ஆடையை குறிக்கும். ஆகாயம் நிர்மலமாக இருக்கும்போது தோன்றும் சந்திரன் ”சரத் சந்திரன்” என்று அழைக்கப் படுகிறான். சரத் கால நிலா. வெண்மை அமைதியை குறிக்கும். பரிசுத்தத்தை வெளிப்படுத்தும்.
‘ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த நவராத்திரி சமயம் பாரத தேசம் பூரா வானிலை ஒரே மாதிரி இருக்கும். தென் மேற்கு பருவக்காற்று முடிந்து கிழக்கே வட கிழக்கு பருவக்காற்று தலையெடுக்கும் சமயம். குளிர்ச்சி நிறைய காத்திருக்கும். நமது தேசத்தில் பல நகரங்களில் உஷ்ணமானி அதிக பக்ஷமாக 85°F க்கு ஒரு பத்து சதவிகிதம் மேலேயோ கீழேயோ தான் காட்டும். அனலும் இல்லை, எலும்பைத் துளைக்கும் குளிரும் இல்லை. மித உஷ்ணம். சட்டை இன்றி பூஜை செய்ய தோதான சமயம்..
நமது ஊரில் ஆயுத பூஜை விசேஷம். ஆயுத பூஜை. அன்று பழைய சைக்கிள் கூட குளித்து சந்தனம் குங்குமம் பூ வைத்துக் கொள்ளும்.
10வது நாள் தசமி, விஜய தசமி. தொட்டதெல்லாம் பொன்னாகும், வெற்றி கிட்டும் நாள். இந்த பத்து நாள் தான் தசரா என்று பத்து இரவுகளாக எல்லா இடத்தி லும் கோலா கலமாக கொண்டாடுகிறார்கள். மைசூரில் கேட்கவே வேண்டாம். கூட்டம் அம்மும். ஸ்பெஷல் ரயில் விடுவார்கள். மைசூர் மகாராஜா அரண்மனை இந்திர லோகம். சாமுண்டி என்கிற சக்தி துர்கா தேவதை மைசூர் மகாராஜா வம்ச குல தெய்வம் என்பதால் அதி விசேஷம். யானை, குதிரை ஊர்வலங் கள் சாமுண்டி மலைவரை நீளும். வாண வேடிக்கை, பளிச் பளிச் அலங்கார தீபங்கள். துர்கா தானே மகிஷாசூரனை ஒன்பது நாள் தவமிருந்து சம்ஹாரம் செய்தவள். அவளைச் சிறப்பாக கொண்டாட வேண்டாமா?
கிழக்கே வங்காளத்தில் காளி பூஜை, துர்கா பூஜை மும்முரமாக நடக்கும். பழைய காலங்களில் ரத்தம் நிறைய ஆறாக ஓடும். உக்ர தேவதைக்கு பலி நிறைய எருமைகள். அதற்கும் முந்தி எப்போதோ மனிஷ னையே பலியாக கொடுத்திருக்கிறார்கள். கடைசி ஐந்து நாள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். மேற்கே எப்படி ‘கணபதி பப்பா மோரியா’ மராத்தியர் களை சுண்டி இழுக்குமோ அதுபோல் கிழக்கே காளி மாதா வங்காளியர்கள் அனைவரையும் கட்டிப்போடு வாள்.
வடக்கே ராம் லீலா. பாகவதம் பிரகாரம் ராமர் சாரத நவராத்திரி பூஜைகள் செய்து பலம் பெற்று ராவண னை முடித்தார் என்று சொல்லும். வடக்கே ராம் லீலா வில் பெரிய ராவணன் கும்பகர்ணன் பொம்மைகள் விழா முடிவில் சிதைக்கப்படும். எரிக்கப்படும்.
குஜராத் பகுதியில் நவராத்திரி நாட்களில் நிறைய பேர் கர்பா, டாண்டியா நாட்டியங்கள் நடனங்கள் கலந்து ஆடுவார்கள். கோலாட்டம் கும்மி மாதிரி. சந்தோஷம் முகத்தில் கொப்புளிக்கும் அனைவருக்கும். இனிப்பு பக்ஷணங்களுக்கு பஞ்சமே இல்லை. வெளிநாடுகளில் வாழும் வடக்கத்தியர்கள் இந்த நாளை ஒன்று சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடுவது பற்றிய படங்கள் நிகழ்ச்சி தொகுப்புகள் பார்த்திருக்கிறேன். வயதே வித்தியாசம் கிடையாது இதில். பாட்டு புரியாது நமக்கு. காதுக்கு என்னமோ மாதிரி புரிபடாமல் இருக்கும். தலை, கை மட்டும் ஆடும். பின்பாட்டு ஒலி நாடாவில் எல்லோரும் கேட்கும்படியாக வைத்து ஆடுவார் கள்.ஆரம்பத்தில் மெதுவாக சாதுவாக தோன்றும் பாட்டு போகப் போக குதிரை வேகம், மான் வேகம், பெற்று அனைவரும் எம்பி எம்பி குதித்து காற்றில் பறப்பது போல் சுற்றி ஆடுவார்கள். பாட்டும் சூடு பிடிக்கும்.ஜாம் நகரில் சில வருஷங்களுக்கு முன்பு நான் என் கப்பல் உத்யோக விஷயமாக சென்றிருந்த போது என் நண்பர்கள் என்னையும் இரவு வெகுநேரம் ஆட வைத்து விட்டார்கள். அர்த்தம் புரியாமல் ஏதோ எலக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தை தா என்று குதித்தபோது மூச்சு வாங்கியது. விதவிதமான இனிப்பு மற்றும் பேர் தெரியாத பக்ஷணங்களை சாப்பிட்டேன். சில வீடுகளில் தேவி பாகவதம் வாசிப்பார்கள். விஜய தசமிகளில் அழுது கொண்டே பள்ளி போக தொடங்கும் குழந்தைகள் ஜாஸ்தி. ஆயுத பூஜா அன்று தொழிற்சாலைகளில் இனிப்பு காரம் விநியோகம் நடக்கும். அலுவகங்களில் எல்லோரும் பை நிறைய பொறி கடலை, நாட்டு சர்க்கரை, பழங்கள், இனிப்பு வகைகளோடு வீட்டுக்கு வந்திருக்கிறோம்.
விஜய தசமி அன்று தான் அர்ஜுனன் ப்ருஹன்னளை யாக இருந்தவன் தனது காண்டீவத்தை விராட தேசத் தில் அஞ்ஞாத வாசம் முடிந்து வன்னி மரக்கிளையிலி ருந்து மீண்டும் எடுக்கிறான். சமீபத்தில் தெலுங்கில் நர்த்தனசாலா என்ற படம் யூ ட்யூப் பில் பார்த்தேன். என்.டி . ராமராவ் ப்ரஹன்னளையாக பெண் வேஷம் தரித்து அவருக்கு பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘ கலளித ராக சுதாராஸ ஒரு அற்புத பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. ஒரு அருமையான அழகு நடிகர் ராமராவ். அவரை நன்றாக பயன் படுத்தியிருக்கி றார்கள் அந்த காலத்தில். அந்த பாடலின் லிங்க் கொடுத்திருக்கிறேன். கேட்டுப் பாருங்கள் என்பதை விட ராமராவின் அழகு முகத்தை காண்பது சுவாரசியமாக இருக்கும். https://www.youtube.com/watch?v=ehSC4t9_pgc இந்த லிங்கை இணைய தளத்தில் பார்க்க முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
மஹா பெரியவா சொல்வார் ”என்னதான் துர்கா, லக்ஷ்மி சரஸ்வதியாகவோ, முப்பது முக்கோடி தெய்வங்களாக வழிபட்டாலோ, கடைசியில் அது அத்தனையும் அந்த சக்தி, பராசக்தி ஒன்றே தான். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் தேவியை ”சிருஷ்டி கரதீ ப்ரஹ்ம ரூபா ” என்று சொல்லியிருக்கிறது. படைக்கும் தொழில் இது. காக்கும் தெய்வமாக ”கோபித்ரி, கோவிந்த ரூபிணி” என்றும் அழிக்கும் தெய்வமாக ”சம்ஹாரிணி, ருத்ர ரூபிணி” என்று சொல்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்ரம், சரஸ்வதி அஷ்டோத்ரங்கள் அவளை ” பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாய” என்று முத்தொழில் புரியும் முத்தேவிகளாக எல்லாம் அந்த பராசக்தி ஒன்றே ” என உரைக்கிறது.
“ நவராத்திரியின் போது கன்யா பூஜைகள் நடத்து வார்கள். லக்ஷ்மி பிருகு முனிவர் மகளாக பிறக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பார்கவி என்று பெயர். காத்தியாயனர் மகளாக பார்வதி அவதரித்து காத்யாயனி என்று பெயர். துர்கா சுக்தம் இதை சொல்கிறது.
கடவுளை குழந்தையாக, சிறுமியாக வழிபடுவது நமது மனத்தில் குழந்தைகளிடம் காணும் கள்ளம் கபடமற்ற எளிமை, காம, குரோத துக்க மார்ச்சர்யங்கள் இல்லா மையை, உண்டாக்கவே தான். உபநிஷங்கள் குழந்தை யாக இரு என்று இதைத்தான் சொல்கின்றன’.
ஒரு சிறு விண்ணப்பம். எங்களது க்ரிஷ்ணார்ப்பண சேவா டிரஸ்ட் நிறைய ஆன்மீக புத்தங்களை குழந்தை களுக்கு வெளியிட்டிருக்கின்றனவே, அவற்றை குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் இந்த நவராத்ரி அன்று பரிசாக அளிக்கலாமே. நங்கள் தான் உதவ காத்திருக்கிறோமே. இருக்கவே இருக்கிறது, பிளாஸ்டிக், துணி, 80 முதல் 100 செ .மீ. ரவிக்கை துணிகள்.இவைகள் எப்படியோ இருந்த போதிலும் அதோடு கொடுக்கப் படும் எங்கள் புத்தகங்கள் சில நல்ல விஷயத்தையும் குழந்தை களுக்கு தெரிவிக்கட்டுமே. வேண்டுபவர் என்னை அணுகவும். விலை கிடையாது. நன்கொடையாக நீங்கள் கொடுப்பது எவ்வளவானாலும் அடுத்த புத்தகம் தயாரிக்க உதவும். இப்படித்தானே முப்பதுக்கும் மேலே புத்தகங்கள் நன்கொடை மூலமே குழந்தைகளை மற்றவர்களை அடைந்திருக்கின்றன. இன்னும் எத்தனையோ அவ்வாறே அவர்கள் கையில் சேரக் காத்திருக்கிறது. ஜே. கே சிவன் 9840279080 வாட்ஸாப்ப் jksivan@gmail.com

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;