ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN
சோமாசிமாற நாயனார்

”அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்”
சமோசா, சமூசா , சோமாசி  என்று பல  பக்ஷண வகைகள் நமக்கு தெரியும் அளவுக்கு  சோமாசி மாற நாயனரைத் தெரியாத காரணம் யாரும் அவரைப் பற்றி நமக்கு தெரிவிக்க முன் வரவில்லை என்பதே. சிறுவயதிலிருந்தே  அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளை சிவாலயங்களில் யார் நமக்கு எடுத்துக் காட்டி  இவர் தான் அவர் என்று அவர் புராணத்தை சொல்லி இருக்கிறார்கள்.  நாமாக தெரிந்து கொள்ளாவிட்டால் பேசாமல் சமோசா, சோமாசியுடன் நிறுத்திக் கொள்வது தானே முடியும். அதுசரி இன்று தெரிந்து கொள்வோம். யார் இந்த சோமாசி மாற  நாயனார்?

அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்
    அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்
உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்
    உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்
நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்
    நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே
இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை
    ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

அம்பர் பெருந்திருக்கோவில்
இறைவன் பெயர்பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்பூங்குழல் அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் – 1
சோமாசியாரை தெரிந்துகொள்வதற்கு முன் அம்பர் நகரத்தை அறிந்து கொண்டு அங்கே செல்லவேண்டும்.  மமயிலாடுதுறை யிலிருந்து  திருவாரூர்  போகும் வழியில் பூந்தோட்டம் என்ற ஒரு அழகிய ஊர்  இருக்கிறது. அதில் சரஸ்வதி தேவி இருக்கிறாள். அங்கே இருந்து 3 கி.மீ. தூரத்தில்  அம்பர்  கிராமம் இருக்கிறது. பூந்தோட் டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மீ.  பேரளம் என்ற ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ.  மேலே சொன்ன அம்பர் கிராமத்துக்கு அம்பர் மாகாளம் என்ற பெயர் உண்டு.  சிறந்த பாடல்  பெற்ற ஸ்தலம். அங்கே   பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேற்கே 1 கி.மீ.    நான்  அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு சென்ற  போது  மூன்று நிலை  ராஜகோபுரம் கண்ணில் பட்டது.  யானை ஏறமுடியாதவாறு படிக்கட்டுகள் அமைத்துச் சிறு  மலை போல் கோவில்.  கோச்செங்கட் சோழன்  காலத்திய  கிழக்கு பார்த்த மாடக்கோவில்.  இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் பெரிய  வெற்றிடம்.  சுதையாலான பெரிய நந்திகேஸ்வரர்  சிவனை நோக்கி இருக்கிறார். இடது பக்கம் உள்ள  கிணறு தான் “அன்னமாம் பொய்கை”. பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம். பிரம்மா இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, பக்கத்தில் உள்ள சிவலிங்கமூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப்பெற்றார் என்பது ஸ்தல புராணம்.
கிழக்கு மதில் சுவர் மாடத்தில் கிழக்கு நோக்கித் தல விநாயகரான படிக்காசு விநாயகர் தரிசனம் தருகிறார்.  அடுத்தடுத்து மூன்று சிறிய விநாயக மூர்த்தங்கள்.   ப்ரஹாரத்தில்  உள்ள விநாயகர் சந்நிதியிலும் மூன்று பிள்ளையார் விக்ரஹங்கள். சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஜம்புகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.   நின்றபடி  தரிசனம் தரும் அம்பாள்  சுகந்த குந்தலாம்பாளுக்கு  தனி சந்நிதி. வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியும் பள்ளியறை.  ப்ரதக்ஷிணம் வந்து படிகளேறி மேலே சென்றால் சோமாஸ்கந்தர் சந்நிதியும் மறுபுறம் விநாயகர், கோச்செங்கட் சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய மூலத்திருமேனிகளும் உள்ளன. துவாரபாலகர்களையும் விநாயகரையும் வணங்கிச் சென்று சிறிய வாயில் வழியாக உள்ளே  இருக்கிற  ஸ்வயம்பு  பிரம்மபுரீஸ்வரரை  தரிசிக்கலாம். வலதுபுறம் நடராஜனுக்கு  சபை.   கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா  அருள் பாலிக்கிறார்கள்.
அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள்   இங்கே  சிவனை பூஜை செய்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. அம்பன், அம்பரன் ஆகிய இருவரும்  மற்ற  ராக்ஷசர் களைப் போலவே  தவமிருந்து  பெற்ற  பலத்தால் உலகிற்கு தேவர்களுக்கு எல்லாம்  தொந்தரவு கொடுத்தார்கள்.  தேவர்கள் வழக்கப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். பார்வதியை அனுப்பினார்  சிவன்.   அவள் காளியாக உருமாறி,  கன்னி உருவெடுத்து அவர்கள் முன்  வந்தாள் . ராக்ஷர்கள் அம்பன் , அம்பன் ரெண்டு பேருமே   அவளை சாதாரணப் பெண் எனக்கருதி  அவளை அடைய சண்டையிட் டனர். இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில்  அம்பன்  இறந்தான். அம்பரனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடம் தான் அம்பகரத்தூர். . 

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார்  என்கிற  பிராமணர்  பிறந்த  ஸ்தலம் இது.  சிறந்த சிவபக்தர்.  இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஒரு  ஆசை.  அதுவும் யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என விருப்பம்.   சோமாசி மாறருக்கு யாகத்தீயில் தாம் பூஜிக்கும் பழங்கள், வஸ்திரங்கள், நைவேத்ய பொருள்கள் போன்றவற்றைச் சிவனாரே நேரில் வந்து பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. சோம யாகங்கள் பண்ணுவதில் ஆர்வம் என்பதால் அவர் பெயரே  சோமாசிமாறன் என்று ஆகிவிட்டதாம்.
சிவபெருமானை  நேரில் கண்டு அழைக்க முடியாதே என்ன செய்வது?  சிவபெருமானிடம் தூது செல்ல அவரது அன்புக்கு பாத்திரமான சுந்தரராரிடம் நட்பு கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார். எம்பெருமானுக்கும், சுந்தரருக்கும் இருக்கும்  தோழமை  அவருக்கு தெரியுமே. முதலில்  சுந்தரரின் நட்பை  பெறுவது எப்படி? சுந்தரருக்கு தூதுவளை கீரை பிடிக்கும் என்று  கேள்விப்பட்டு   தூதுவளைக்கீரையைத் தினமும் பறித்து கொடுத்து அதன் மூலம் நட்பை வளர்க்கலாம் என்றுஎண்ணினார்.  தினமும்  ஆற்றில் குளிக்கும்போது அடுத்த  கரைக்கு நீந்திச்சென்று தூதுவளைக்கீரையைப் பறித்துவந்து சுத்தம் செய்து சுந்தரருக்கு கொடுத்து அனுப்பினார்.    யார்  தனக்கு தினமும்  பிடித்த தூது வளைக்கீரை அனுப்புகிறார் என்று அறிய  சோமாசி மாற நாயனாரைப் பார்க்க சுந்தரர் வந்தபோது அவரிடம்  எப்படியாவது  தான் நடத்தும்  சோம யாகத்திற்கு   பரமேஸ்வரனை அழைத்து வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
 சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும்  ஒப்புக்கொண்டார். ஆனால்  தான்  எந்த வேடத்தில் வருவேன் என்பது ரகசியமாக இருக்கும்   அதை ஏற்பதானால்  தான்  வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்  பரமேஸ்வரன்.
இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீசனைப் போல் உருமாறி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன் வந்தாள். கீழ்சாதிப் பிள்ளகள் போல் உருமாறிய பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர். சோமாசிமாற நாயனார் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவ்வாறு நீசன் ஒருவன் குடும்பத்தோடு வந்திருக்கிறானே என்று வருத்தப்பட்டார். உடனே விநாயகர் தன் சுயரூபத்தில் சோமாசிமாறருக்கும், அவர் மனைவிக்கும் காட்சி தந்து, வந்திருப்பது சிவன் என்பதை உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார். தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.
 சோமாசிமாறர் யாகம் செய்த இடம் அம்பர் பெருந்திருக்கோவிலில் இருந்து அம்பர் மாகாளம் செல்லூம் சாலை வழியில் சாலையோரத்தில் உள்ளது.  அம்பல் அல்லது அம்பர்  பிரம்மபுரீசுவரர் கோயில் (அம்பர் பெருந் திருக்கோயில்) காவிரி தென்கரைத் தலங்களில் 54ஆவது சிவஸ்தலம்.  பூந்தோட்டம் செல்கிறபோது அவசிய அம்பர் மாகாளம் சென்று  பிரம்மபுரீஸ்வரரை  சுகந்த குந்தளாம்பிகையையும்  சோமாசிமாற நாயனாரையும் தரிசிக்க  பிளான் போடுங்கள்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;