26.02.2023 VADA NAGESWARAM TEMPLE J K SIVAN

26.02.2023  ஆலய தர்சனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN

குன்றத்தூர்  நாகேஸ்வரர் ஆலயம்

அனகாபுத்தூரிலிருந்து  ஸ்ரீனிவாசன் தம்பதியரோடு நாங்கள்  குன்றத்தூருக்கு காரில் பறந்தோம்.  ஒருகாலத்தில்  ”கூப்பிடு தூரம்” என்றால் ஏதோ அருகிலே இருப்பதை குறித்தது. இப்போது யாரும் யாரையும் கைதட்டி, வாயால் கத்தி கூப்பிடுவது இல்லை. அடுத்த அறையில் இருக்கும் அம்மாவுடனோ  மனைவியோடு  பேச  மொபைல் போன் தான் உபயோகிக்கிறோம்.
நாம் வாழ்வது இப்போதோ ஒரு  சத்தம் நிறைந்த  உலகம். என்னென்னவோ சத்தங்கள் சூரிய உதயத்துக்கு முன்பே தெருவில் கேட்கிறது. பக்ஷி ஜாலங்கள் எங்குமே கேட்க முடியவில்லை. நான் சொல்வது சென்னையைப்  போன்ற நகரங்களைப் பற்றி.

சென்னையைத் தாண்டி  25  கி.மீ.  தூரத்தில் ரெண்டு மணி நேரம் பயணப்பட்டால் கிராமங்கள் சில இன்னும் இருக்கின்றன. அப்படித்தான் பாதி நகரமாக மாறி வரும் குன்றத்தூருக்கு சென்றபோது ஒரு அழகிய குளக்கரையில் சேக்கிழார்  கட்டிய  நாகேஸ்வரர் ஆலய கோபுரம் கண்ணைக் கவர்ந்தது.  ஐந்து நிலை  ராஜகோபுரம். அதில் 7 கலசங்கள். தொண்டைமண்டலத்தில்  நவ்க்ரஹ க்ஷேத்ரங்களில்  இது ராகுஸ்தலம்.  நாகேஸ்வரன் நாகாபரணத்தில் ஜொலிக்கிறார். அம்பாள்  காமாக்ஷி.

சேக்கிழார்  ஒரு  அதிசய மனிதர். 2ம் குலோத்துங்கன் (அநபாய சோழன் என்றும் அவனுக்கு பெயர்) காலத்தவர்.. 4253 பாடல்களைக் கொண்ட ”பெரிய” புராணம் என்கிற திருத் தொண்டர் புராணம் எழுதினாலும் தன்னை ”சிறு” த்தொண்டர் என்றே  அடையாளம் கண்டவர்.   ஒரு மின்னஞ்சல்  எதையோ எழுதி  அதை நாலு பேர் பார்த்து படித்து விட்டால்  என் தலை பெருத்து விடுகிறது. பார்வை மேல் நோக்கி. கர்வம்.  காலின் கீழே கம்பியோ, கல்லோ தெரியவில்லையே. இடி பட வேண்டி யிருக்கிறது.  அப்படி இருக்க  சேக்கிழாருக்கு  எவ்வளவு  அடக்கம் அவருக்கு!. அதனால் தான் என்றும் அவர் பெயர் நிலைத்து நிற்கிறது. நிற்கும்.தமிழ் உள்ளவரை. 63 சைவ நாயன்மாரைப் பற்றி அவரைப் போல் எவர் எழுதமுடியும். சைவ திரு முறை யில் நீங்கா இடம் பெற்றதாயிற்றே.சோழன் அவருக்கு இட்ட பெயர் ”உத்தம சோழ பல்லவன்”.

சேக்கிழார் நம் ஊர்  காரர்.  பக்கத்தில் குன்றத்தூரில் பிறந்து வேதாகம சாஸ்திரம் கற்று, திருமுறைகள் ஓதிய இவர் இயற்பெயர் யாருக்கும் ஞாபகமில்லை என்பதால் நினைவூட்டுகிறேன்.  ”அருண்மொழி ராம தேவர்”.  அநபாய
 சோழன்  சிவபக்தன். சிதம்பரம் நடராஜரை அனுதினமும் வழிபடுபவன். சைவத் தமிழை வளர்க்க சபை அமைத்தவன். சேக்கிழாரை  அமைச்சராக்கி  ”நீங்கள் தான் சைவ நாயன்மார்கள்  வரலாற்றை பாடல்களாக இயற்ற வேண்டும் என்று விண்ணப்பித்தான். கரும்பு தின்ன கூலியா வேண்டும்?  சேக்கிழார்  சிதம்பரம் போனார். விவரங்கள் சேகரிக்கலானார் . ஆயிரங்கால் மண்டபமே அவர் இருப்பிடமாயிற்று. ஓலைச் சுவடிகள் நிரம்பின.

ரொம்ப  விஷயங்கள் தெரிந்தால் இது தான் ப்ராப்ளம். எதைச்  சொல்வது? எப்படி ஆரம்பிப்பது? சிவ பெருமானுக்கு இது புரியாதா?  பாவம் நம் பக்தனுக்கு உதவுவோம் என்று  வானில் அசரீரியாக   ”தம்பி யோசிக்காதே, கலங்காதே, இந்தா இப்படி ஆரம்பி” என்று முதலடி எடுத்துக் கொடுத்தார்.  சேக்கிழார்  தானே பாடிக்கொண்டு பாடல்களை இயற்றினார்.

”உலகெலாமுணர்ந்து ” என்று முதலடியில் துவங்கி  பெரிய புராண  வண்டி   ஒரே ஓட்டமாக வேகமாக நிற்காமல் ஓடியது. நமக்கு ஒரு  பரிசாக பெரிய புராணம் கிடைத்தது.

”உலகெலாமுணர்ந்து ஒதுதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்”

எவ்வளவு பொருள் நிறைந்த செய்யுள் இது. உலகமெல்லாம் என்றாலே பற்று நிறைந்த இந்த பிரபஞ்சம். இதன் தன்மை அறிந்து. கங்கையும் சந்திரனும் அணிந்த ஜடாமுடியன், இந்த சிதம்பரத்தில் எல்லையற்று, முடிவற்று சதானந்தத்தில் சத் சித் ஆனந்தமயமாக ஒளி வீசி அண்டவெளியின் ரஹஸ்யமாக நிற்பவன். அந்த சிவனின் அழகிய தண்டை சதங்கை ஆடும் பதமலரைப் போற்றி வாழ்த்தி வணங்குவோம்.ஸமஸ்த்ரிதத்தில்  நாகம்,  ஸர்ப்பம்  என்றால் பாம்பு. ஒரு தீய சக்தி கொண்ட ஊறும் ஐந்து.  பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நமது சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது கிரகங்களும் பாம்பின் அம்சமாக கருதப்படுகின்றன. அப்படியான ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும்  நாகேஸ்வரர் கோயில் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்த   குன்றத்தூர்  வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 1000  வருஷ  பழமையான கோயில். மூலவர் நாகேஸ்வரர் என்றும், உற்சவர் சோமாஸ்கந்தர் எனவும் அழைக்கப்படுகிறார்.சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம் இருக்கிறது.  செண்பக மரம்  ஸ்தல விருக்ஷம்.

இந்த கோயில் உருவான விஷயம்:
ஒரு சமயம் சேக்கிழார் கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரர் கோயிலில் சிவபெருமானை தரிசித்த சேக்கிழார், தினமும் அவரை வழிபட விரும்பினார். ஆனால் அவ்வளவு தூரம் எப்படி  செல்வது? ஆகவே  தான் வசிக்கும் குன்றத்தூரிலேயே  ஒரு கோயில் கட்டி நாகேஸ்வரர் என்கிற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடலானார் அன்று முதல் குன்றத்தூரில்  இந்த ஸ்தலம்  வட நாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில்  சேக்கிழார் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம்  சிதிலமாகி (பின்ன மாகி) விட்டதால்   அதை   சூரிய தீர்த்தத்தில் போட்டு விட்டார்கள்.  புதிய லிங்கம் ஒன்று  பிரதிஷ்டை செய்ய பட்டது.  அன்றே  சிவனின் அசரீரி  பிரதம அர்ச்சகருக்கு கேட்டது. ”சேக்கிழார் லிங்கத்தையே  பிரதிஷ்டை செய் ”.  உடனே  புஷ்கரணியில்  போடப்பட்ட  சேக்கிழார் பிரதிஷ்டை செய்த பின்ன  லிங்கம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை, ஈசன் சன்னிதியின் பின்புறம் வழிபாட்டிற்காக வைத்துள்ளனர். இந்த லிங்கத்திற்கு, ‘அருணாசலேஸ்வரர்’ என்று பெயர்.  இன்றும் பார்த்து தரிசிக்கலாம்.  இந்த லிங்கமும்  மூலவர் தான்.
குன்றத்தூர் நாகேஸ்வரன் ஆலயத்தில்  சேக்கிழாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. அனைத்து பூச நட்சத்திர தினத்தன்றும் இவருக்கு அபிஷேகம் பூஜைகள் நடக்கின்றன. வைகாசி மாதத்தில் சேக்கிழார் சிவ தரிசனம் செய்யும் வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் ராகுவின் அம்சமாக இருக்கும் நாகேஸ்வராகிய சிவபெருமானுக்கு காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய மூன்று வேளையும் பாலபிஷேகம்,  இங்கு ராகு கால பூஜையின் போது ஸ்வாமிக்கு உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வழிபடுவோருக்கு நாக தோஷங்கள், ராகு – கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாக கூறுகிறார்கள்.  கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருகிறார்கள்.   நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவிலுக்கு வந்து ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சம்.  தினமும் காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாலபிஷேகம்  நடைபெறுகிறது.  நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்யலாம். இதனால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.அம்பாளுக்கு தெற்கு நோக்கிய  தனி  சன்னிதி.  எதிரே சிம்ம வாகனம்.   சித்ரா பவுர்ணமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறும். அப்போது சுவாமிக்கு முன்புறம் செல்லும் ஒரு சப்பரத்தில், அவரைப் பார்த்தபடி  சைவ சமயக்குரவர்கள் நால்வர் மற்றும் சேக்கிழாரும் உலா வருவார்கள். தெப்போத்சவ விழாவில் ஒரு நாள்,  நாக வாகனத்தில் திருவீதி உலா  நாகேஸ்வரர் பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.
வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி, சேக்கிழாருக்கு 10 நாட்கள் குருபூஜை நடைபெறுகிறது. குரு பூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி, இங்கிருந்து தேரடி வீதிக்குச் செல்வார். அவரை பொதுமக்கள் சிவபெருமான் சார்பில் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு சேக்கிழார், கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றிரவு சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார். பின்னர் மறுநாள் காலையில் கோவிலுக்குத் திரும்புவார். அப்போது இரவு முழுவதும் கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இங்குள்ள விநாயகர், ‘அனுக்ஞை விநாயகர்’ .பரவை நாச்சியாருடன் சுந்தரர் வீற்றிருக்கிறார். மேலும் நாகத்தின் வடிவில் சத்தியநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் இருக்கிறது. காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், கற்பக விநாயகர், சனீஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன.  குன்றத்தூர்  தாம்பரத்தில் இருந்து 12 கி.மீ.. பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீஆலயம்  பஸ் நிலையத்தின் அருகிலேயே இருக்கிறது. 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

One comment

  1. Namaskaram mama,

    Thanks for the detailed description of this temple Kundrathur Nageswarar alayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;