VEDHANAYAKI J K SIVAN

வெள்ளையன் வணங்கிய வேதநாயகி  –  நங்கநல்லூர்  J K  SIVAN  

நல்ல வெய்யில் வேளை . அந்த  கோவில் விசாலமாக  நிறைய  மரங்கள் அடர்ந்து அமைதியாக இருந்தது. எதிரே  நீளமான அகலமான  ஆறு.  ஆறு இல்லை  ஆறுகள்.  ஆம்.  மூன்று ஆறுகள் கலந்த சங்கமம். பவானி, காவேரி, அம்ருதா. அம்ருதா யாரும் பார்த்ததில்லை. பூமிக்கு அடியே  அந்தர்வாஹினியாக கலந்திருக்கிறாள். வடக்கே  சரஸ்வதி பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கலந்த மாதிரி.  

ஆற்றின் படித்துறையில் அநேகர்  ஸ்னானம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். நேரம் காலம் இல்லாமல் எத்தனையோ பேர் வந்து ஸ்னானம் பண்ணுகிறார்கள். சில இடங்களில் பித்ரு காரியங்கள் நடக்கும். ஈரத்துணியோடு பலர் குறுக்கும் நெடுக்குமாக அலைகிறார்கள்.

பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் முக்கியமானது அதற்கு இன்னொரு பெயர் . ’திருநணா’.

ஜிலு ஜிலு என்று ஆற்றிலிருந்து வந்த காற்று, மரங்களின் நிழல், கோயிலின் அமைதியில் கால் நீட்டி  ஒரு மேடையில் படுத்துவிட்டேன்.
எவ்வளவு நேரம்?? இல்லை எவ்வளவு வருஷம்/?? ஒரு குரல் கேட்டது.
எதிரே  ஒரு வெள்ளைக்காரன். ரொம்ப கிழவன் இல்லை. முன் நெற்றிக்கு மேல்  முடி இல்லை. தலையின் இரு பக்கங்களிலும் வெள்ளிக்கம்பிகள்  அலை அலையாக பின்னோக்கி படிந்திருக்க  முகத்தில்  ப்ராக்கெட் மாதிரி மூக்கின் இரு பக்கமும் குழி.ஆழ்ந்த கண்கள். அதில்  நட்பு, சாந்தம், அமைதி,  அன்பு எல்லாம் கலந்திருந்தது. அவனுக்கு தமிழ் நன்றாக தெரியும்.  இந்த ஊரிலேயே பல காலம் வசித்தவன் அல்லவா.

”யார் நீங்கள் ஐயா?  கட்டபொம்மன்  சினிமாவில் வரும் ஜாக்சன் துரை மாதிரி இருக்கிறீர்கள்.”
”காரோ”
”யாரோ வா?  காரோ வா?” என்ன சொல்கிறீர்கள்.
யாரோ இல்லை வில்லியம் காரோ. இந்த ஊர் கலெக்டர் நான்.  அதோ பார் அது தான் என் மாளிகை இருந்த இடம்.
எதிரே  பார்த்தேன்..  ஒரு குதிரை வாசலில் கட்டி இருந்தது.  ஒரு  இடிந்த  மாளிகை வீடு.
இந்த கோவிலுக்கு  எதற்கு வந்திருக்கிறீர்கள்.?
”என் தாயை பார்க்க இங்கே தானே வரவேண்டும். வேறு எங்கே போவது?”
”உங்கள்  தாயா? இது அம்பாள் குடிகொண்ட ஹிந்துக்கள் கோவில் என்று தெரியுமா?
”உன் தாத்தாவுக்கு தாத்தா  காலத்தில் இருந்து இது எனக்கு தெரியும். என் தாய் தான் இங்கே இருக்கிறாள். வேதா…”
”அம்பாள் பெயரை  சொல்கிறீர்களா? அவள் பெயர் வேதநாயகி”.
சுற்றி முற்றிலும்  பார்த்தேன்.  இந்த ஊரு படு குக்ராமமாக இருக்கிறது. அதிகம் வீடுகள் இல்லை. கோவில். அதற்கு சற்று தள்ளி எதிரே அந்த இடிந்த மாளிகை. சுற்றிலும் ஆங்காங்கே சில கூரை வீடுகள், ஓட்டுவீடுகள், வைக்கோல் போர், மாடுகள் வண்டிகள். வயல் வேலிகள்.ஆறு …மரங்கள்.. படிக்காத  தலைப்பா கட்டிய  ஆட்கள். ரவிக்கை இல்லாத பெண்கள் …  நான் எப்படி இங்கே வந்தேன்?  யார்  இந்த பழங்கால வெள்ளைக்காரன்? எப்படி எனக்கு  பழக்கம்? தமிழ் கொச்சையாக பேசினாலும் புரிகிறதே . சிரிக்கிறானே  …என்னைப்பார்த்து. ஏற்கனவே தெரிந்தவன் போல…
”ரொம்ப யோசிக்காதே….உன்னை எனக்கு அறிமுகப்படுத்தியது  என் அம்மா தான். உன்னிடம் சொன்னால் நீ எல்லோரிடத்திலும்  சொல்வாய், நீ எழுதுபவன்  என்று தெரிந்து தான் உன்னிடம் சொல்லப்போகிறேன் ஒரு விஷயம்.. சொல்லட்டுமா?”காரோ   நீங்கள் யாரோ? வாக இருந்தாலும் சொல்லுங்கள் நான் தயாராக இருக்கிறேன் கேட்க”
இந்த  ஊர்  ரொம்ப  புண்ணியமான ஒரு ஸ்தலம். சிவலிங்கம் இருக்கிறது. எண்ணற்றவர்கள் தினமும் வருகிறார்கள். இங்கே என் அம்மாவை ப்பார்க்க அதிகம் பேர் பக்கத்து ஊர்களிலிருந்து கூட வருவார்கள். இதோ இந்த குளத்தில் குளிப்பார்கள்.
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் நான்கு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. நான் செய்த புண்ணியம் இந்த ஊருக்கும்  நான்  கலெக்டராக  இருப்பதால் இங்கே அடிக்கடி வருவேன்.  வந்தது  முதல் இந்த அம்பாள் என் மனதில் இடம் பிடித்துவிட்டாள் . ஊர் ஜனங்கள் அவளை பற்றி சொல்வதையெல்லாம் கேட்டு கேட்டு நானும் அவளுக்கு  அடிமையாகி விட்டேன். அவள் படம் இதோ பார்”
காரோ பாக்கெட்டிலிருந்து ஒரு மங்கலான பிரௌன் படம் காட்டினான். அம்பாள் புன்னகைத்து அதில் நின்றாள்.உங்கள் கோவிலுக்குள் நான் உள்ளே நுழைய முடியாது. அது ஸம்ப்ரதாயமில்லை.  எனக்கோ  அவளை பார்க்கவேண்டும்?”‘எப்படி?ஆனால் அங்கே பார்.  அம்பாளின் சந்நிதி என் அருகே இருந்தது. பார்த்தேன் சுவற்றில் ஒரு சில துளைகள். என் உயரத்துக்கு கண்ணுக்கு நேராக துளைகள் தாசில்தார் அமைத்து கொடுத்தார்.  அதுவழியாக பார்ப்பேன். எதிரே  அம்மா தெரிவாள். மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். என்னவோ அவளுக்கும் எனக்கும் புரிபடாத ஒரு தொடர்பு. இணை பிரியாத பாசம்…………அதனால் தான் என் உயிரை காப்பாற்றினாள் ..””காரோ .என்ன சொல்கிறீர்கள்/?”’குறுக்கே பேசாமல் சொல்வதைக்  கேள். அப்புறம் இதை எழுது””அது 1804 ஆம் வருஷம். நான்  கோயம்புத்தூர்  கலெக்டர். இந்த பகுதி என் ஆட்சியில்  வருகிறது.  குதிரை மேல் அடிக்கடி இங்கே வருவேன். இந்த ஊருக்கு வரும்போதெல்லாம் என் மனதில் என்னவோ புரிபடாத சந்தோஷம். இந்த ஊர் ரொம்ப பிடித்துவிட்டதால் இங்கேயே  தங்க  அதோ பார்த்தாயே  அந்த  மாளிகை யை  எனக்கென  விலை பேசி  வாங்கிக்கொண்டு இங்கேயே  தான் என் வாசஸ்தலம். இங்கே இருக்க  முடிவு செய்ய காரணம். அம்மா..”
”ஆம். இந்த ஊர்  நிலபுலன்கள் வருவாய், கோவில் வருமானம் எல்லாம் என் கணக்கில் வரும்.. இங்கே ஏன் அதிகம் பக்தர்கள் வருகிறார்கள் என்று விசாரித்தேன்.. ரொம்ப சக்தி உள்ள கடவுள் இந்த சிவலிங்கம் என் தாய் என்று அறிந்தேன். அதிகம் பெண்கள் தான் வருவார்கள் என்பதால் அம்மாவுக்கு  மஹிமை ஜாஸ்தி என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன். அவரவர்கள் வீட்டில் நிகழ்ந்த ஆச்சயமான, அதிசயமான சம்பவங்களை கூறும்போதெல்லாம். அவள் மேல் என் பக்தி பாசம் அதிகமாகியது. தினமும் ஒரு தடவை நானும்  இந்த துளை வழியாக அவளை தரிசிப்பேன்.  கோவிலுக்கு நிர்வாகச்  செலவுக்கு நிறைய பணம் கொடுப்பேன். ஒருநாள் என்ன நடந்தது தெரியுமா?”காரோ  ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது சொல்லுங்கள் ?”1804ம் வருஷம். ஜனவரி மாதம் 11ம் நாள். புதன் கிழமை. வெயில் மூன்று நாட்களாக அதிகம் திடீரென்று ஒரு மழை, பலத்த காற்றும். தென்னை மரங்கள் ஆடி சாய்ந்தன.  ஆடு மாடுகள் சுவரோரம் ஒதுங்கின… கோவிலுக்கு எதிரே என் மாளிகையில் காற்றில் மர ஜன்னல்கள் கதவுகள்  படார் படார் என்று அடித்துக்கொண்டது. மின்சாரம் இல்லாத காலம். விளக்குகள் அணையாமல் ஓரமாக கொண்டு வைத்தேன். இரவு பூரா மழை தொடர்ந்தது.  என்ன செய்வது?  ஏன் இப்படி திடீர் மழை..எத்தனை நேரம் பெய்யும்.. முதல் மாடியில் என் அறையிலிருந்து பார்த்தேன். இந்த கோவில்… அம்பாள் சந்நிதி கோபுரம். என்னையறியாமல் இரு கை  கூப்பி படுக்கையில் படுத்தேன்….  அசதி நன்றாக தூங்கிவிட்டேன். யாரோ என்னை தட்டி உலுக்கி  எழுப்பியது போல் இருந்தது. ”யார் என்னை எழுப்புவது?. எதற்கு அவசரமாக என்னை எழுப்பவேண்டும்?” சிம்னி வெளிச்சத்தில் எதிரே யாரோ நிற்பது தெரிந்தது.  சின்ன பெண்ணாக யார் இவள்??  திடீர் என்று பளிச்சென்று ஒரு மின்னல் ஒளி. அவள் முகம் பளிச்சிட்டது. அட என் அம்மா..முகம் அல்லவோ இது?நான் படுக்கையில் இருந்தே அவளை விழித்து உற்று பார்த்தேன். என் கையை பிடித்து  ” தர தர” என்று இழுத்தாள். ”வா என்னோடு” என்று தலை அசைத்தாள். ஒன்றுமே  புரியாமல், மயக்க நிலையில் இருப்பவன் போல் எழுந்தேன். என் கையை விடாமல் இழுத்துக்    கொண்டு நடந்தாள் . என் உயரத்தில் பாதி தான் இருந்தாள் …. நல்ல பலமான கை .  அவள் பின்னாலேயே படி இறங்கி வெளியே வந்தேன்.  விடு விடு  வென்று  என்னை வீட்டை விட்டு வெளியேற்றி  இந்த பக்கமாக வந்தாள் . கையை விட்டாள் . அவளையும் வீட்டையும் மாறி மாறி பார்த்தேன். நள்ளிரவுக்கு மேல் ஆகி விட்டது..கலெக்டர் இரவு உடையில்  காலில் செருப்பு இல்லாமல்  காற்றில் மழையில் நனைந்து கொண்டு தெருவில் நிற்கிறேன். யாருமே கண்ணில் தென்படவில்லை. நாங்கள் இருவர் மட்டுமே.. என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்துவிட்டு இதோ இந்த சந்நிதிக்குள் ஓடிவிட்டாள். அடுத்த கணம் எனக்கு ஒரு அதிர்ச்சி.  ”அவள் என்னை இழுத்து வந்தது. நான் இந்த பக்கம் வந்துநின்றது. அவள் கோயிலுக்குள் ஓடி மறைந்தது.. எல்லாம் சில வினாடிகளில் நடந்து முடிக்க  திடீரென்று காது  செவிடு பட ”தடால்” என்று சத்தம். என் எதிரே இருந்த என் மாளிகை மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. தூண், கதவு சுவர்கள் கூரை எல்லாம்  மாடியில் உடைந்து  கீழே மண்ணாகியது..  காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. மழை நிற்கவில்லை. நான் தொப்பலாக பயத்தோடு நிற்கிறேன்…  சத்தம் கேட்டு யார் யாரோ ஓடிவந்தார்கள்.  ”துரை,  துரை”  நீங்கள் எப்படி வெளியே வந்தீங்க?. ஈஸ்வரன் தான் உங்களை  காப்பாத்தினார் ” என்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ”ஈஸ்வரன் அல்ல ஈஸ்வரி.  என் தாய்,  என்னைக் காப்பாற்றினாள் ….என்ற உண்மை எனக்கு மட்டுமே தெரியும்.கட்டிலில் படுத்திருந்த என்னை எழுப்பி வெளியே  இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தி  என் உயிரைக் காப்பாற்றியவளுக்கு கோவிலில்  ‘தந்த கட்டில்”  ஒன்று உடனே செய்ய ஏற்பாடு செய்தேன் ..” அதில் என் பெயரை எழுதி கையெழுத்தும்  போட்டி ருக் கிறேன்…ஆலய நிர்வாகிகள் இன்னும் வைத்திருக்கிறார்கள்…”

கார் ட்ரைவர் வந்து  ”சார்  சார்”  என்று  எழுப்பினார். சார்  என்ன மரத்தடியிலேயே படுத்து  தூங்கிட்டீங்க?.. வாங்க போகலாம்…

பவானி சங்கமேஸ்வரர் கோவில் பற்றி படித்து தெரிந்து கொண்ட விஷயத்தை நினைத்துக் கொண்டே தூங்கி இருக்கிறேன் நான் படித்ததை எப்படி எழுதவேண்டும் என்று அம்பாள் காரோவை அனுப்பி மறுபடியும் ஒரு அதிசயம் புரிந்திருக்கிறா ளோ?….என்று மனதில் தோன்ற அவளை வணங்கிவிட்டு  சங்கமேஸ்வரனை நமஸ்கரித்து கோவிலை சுற்றி வந்து காரில் ஏறிக்கொண்டு சென்னை நோக்கி பறந்தோம்…

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;