
பரசுராம க்ஷேத்ர யாத்திரை. நங்கநல்லூர் J K SIVAN
17/4/26-22/4/26
எதிர்பாராத அதிதி உபசாரம்
இதுவரை ஐந்து நாட்களாக நான் கேரளாவின் சில பகுதிகளை சுற்றி வந்துள்ளேன். பெரும்பாவூரில் நண்பர் வீட்டு உபநயனம் கட்டாயமாக செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அதை ஒட்டி அருகே முடிந்த கோவில்களை தரிசிப்போம் என்று தீர்மானித்து இந்த கேரள யாத்திரை புறப்பட்டேன். அது கிருஷ்ணன் அருளால் இவ்வளவு அற்புதமாக நிறைவேறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. யாத்திரையில் ஐந்தாவது நாள் குருவாயூரிலிருந்து திரிசூர் வந்தபோது அங்கே உள்ள முக்கியமான திரிசூர் வடக்குநாதர் ஆலயம் பற்றி என்னுடைய மொபைலில் விவரம் தேடி ஆராய்ந்தேன். இந்த தேடலின் போது திடீரென்று நான் நினைத்தே பார்க்காத ஒரு பெயர் கண்ணில் பட்டது. திரிசூர் ஷோபனா விஸ்வநாதன்!!!! இந்த பெயர் கொண்ட எழுத்தாள நண்பரை நான் ஒருமுறை சென்னையில் சந்தித்திருக்கிறேன். ஆம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். இந்தியன் வங்கி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்று ஒரு வினாடி நேரம் கூட வீணாக்காமல் தனது நேரத்தை சமூக சேவை செய்ய அர்ப்பணிக்கும் அற்புத பெண்மணி இவர் . திருமதி ஷோ. வி. எழுதிய ஒரு நூலுக்கு நான் அணிந்துரை எழுதியது நினைவுக்கு வந்தது. அவரை தொடர்பு கொண்டு வடக்கு நாதர் கோவில் மற்றும் அருகே உள்ள கோவில்களை தரிசிக்க விவரம் சேகரிக்கலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
தொடர்பு கொண்டேன். இன்று ஒரு நாள் தான் கேரள க்ஷேத்ர யாத்திரை. நாளை காரில் சென்னை திரும்ப வேண்டும். இரவுக்குள் வீடு சேர்ந்து அடுத்த நாள் 23.4.26அன்று தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு.
ஷோபனாவின் குரல் கேட்டது. அன்போடு அழைத்தார். காலையிலேயே வந்து விடுங்கள் எங்கள் இல்லத்திலேயே காலை உணவு தயாராக இருக்கும் என்றார். என்னால் உடனே செல்ல முடியாததற்கு காரணம் என்ன என்றால் எங்கள் கார் டிரைவர் என்னை வேறு பாதையில் கொடுங்களூர் த்ரிப்ரயார் மார்கமாக குருவாயூர் அழைத்து சென்று விட்டது புரிந்தது. இந்த வழியாக போனால் நான் திரிசூர் அடைய முடியாது. வடக்கு நாத மஹேஸ்வரனையும் கோவில் நடை சாத்துவதற்கு முன் தரிசிக்க முடியாது.
”ஷோபனா என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் இல்லத்துக்கு இன்று காலை வர இயலவில்லை. குருவாயூர் தரிசனம் முடிந்த பின் உச்சி வேளைக்கு பிறகு வருகிறேன் என்று கேட்டுக்கொண்டேன்.’
கொட்டப்புரம் மம்மியூரில் இருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ. தூரம். குருவாயூரிலேயே காலை உணவை முடித்துக் கொண்டு விட்டோம். ஆகவே என்னென்னவோ மலையாள ஊர்களின் பெயர்களை வேகமாக காரில் பார்த்துக்கொண்டே திரிசூரில் பூங்குன்னம் வழியாக கொட்டப்புரம் வந்து சேரும்போது பகல் 12மணிக்கு மேல் ஆகிவிட்டது. பாலக்காட்டை சேர்ந்த ஒரு வயோதிக பக்தரை எங்களோடு காரில் அழைத்து வந்தோம். அவரை பூங்குன்னம் ரயிலடியில் விட்டு விட்டு திருமதி ஷோ.வி. இல்லம் தேடி வந்து சேர்ந்தோம். திருவாளர் விஸ்வநாதன் எங்களை வரவேற்றார்.
எங்கள் ட்ரைவர் தங்க ஒரு இடம் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஷோபனாவின் ஆறாவது மாடி அடுக்கு மனை இல்லம் இன்று காலை தான் புதிதாக கட்டப்பட்டு நாங்கள் தான் முதலில் கிரஹப்ரவேசத்துக்கு வந்தது போல் புத்தம் புதிதாக, சுத்தமாக, துப்புரவாக காணப்பட்டது. எங்கும் புஸ்தகம் புஸ்தகம் புஸ்தகம். ஷோபனா நிறைய படிக்கிறார். சிந்திக்கிறார். எழுதுகிறார். பூஜை அறை பிரமாதம். குருவாயூர் பிரசாதம் அளித்தேன். சமூக கூட சேவை ஒன்றில் பங்கேற்று மத்தியானம் எங்களோடு உணவு அருந்த வீட்டுக்கு வந்துவிட்டார்.
ஷோபனா விஸ்வநாதன் தம்பதியர் இருவருமே அன்புள்ளம் கொண்டவர்கள். நண்பர்களை நேசிப்பதில் போஷிப்பதில் அவர்களுக்கு ஈடு இணை காணமுடியாது. அவர் இனிய குணம் போலவே விஸ்வநாதனுக்கு இனிய காந்த சக்தி தோய்ந்த மென்மையான தேன் குரல் SPB , PBS KJY ஆகியோரை நினைவூட்டுகிறது. மலையாளம் சரளமாக வருவதால் அதிகம் KJY யை அவர் குரலில் அடையாள காணமுடிகிறது. இப்படி ஒரு குரல் அமைந்துள்ளது குருவாயூரப்பனின் வரப் பிரசாதம். மனிதர் என்னமாக பாடுகிறார்!. மலையாளம், தமிழ் என்று பல பாடல்கள் பின்னணி இசையோடு அவர் பாடுவதை எல்லாம் ஆடியோ, வீடியோ பதிவு செய்து வைத்ததை நேரம் போவது தெரியாமல் கேட்டு அனுபவித்தேன்.
பெரும்பாவூரில் என் யாத்திரைக்கு இடையே ரெண்டு மணி நேர கர்நாடக சங்கீதம் கிடைத்தது போல கோட்டபுரத்தில் எனக்கு மெல்லிசை விருந்தும் அமைந்தது ஆச்சர்யம். எனக்கு நிறைய பாட்டு கேட்கவும் பாடவும் பிடிக்கும். பாடுவதால் பிறருக்கு துன்பமூட்டுவேன். கேட்பதால் யாருக்கும் தொந்தரவு இல்லை அல்லவா?
முன்யோசனையோடு காலையிலேயே எங்களுக்கும் சேர்த்து அவியல், சாம்பார் ரசம் வடாம், ஊறுகாய் தயிர் எல்லாம் ஷோபனா சுவையாக தயார் செய்து வைத்திருந்தார்.
திரு விஸ்வநாதன் ஒரு பெரிய தார்மீக உள்ளம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். அவர் பிறந்த ஊர் அருகேயே உள்ளது. அங்கே அவர் சகோதரர் ஒரு உயர் நிலை பள்ளிக்கூடம் கட்டி நிர்வாகம் பண்ணிக் கொண்டிருந்த அவர் சகோதரர் குடும்பம் அவர் மறைவுக்கு பின் அதை அரசாங்கமே எடுத்துக்கொண்டு நிர்வகிக்க அளித்து விட்டவர்கள் என்றாலும் விஸ்வநாதன் தானே சகோதரர்களோடு படித்த அந்த பள்ளியை அடிக்கடி சென்று கவனித்து வருகிறார். தொழிலதிபராக இருந்தவர். இசையில் உள்ள ஆர்வம் குறையாமல் தினமும் நண்பர்களோடு சேர்ந்து மாலை வேளைகளில் இசை பயிற்சிகளில், நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
விஸ்வநாதனிடமுள்ள இன்னொரு சிறப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக கைதேர்ந்த காபி ஸ்பெஷலிஸ்ட். COFFEE SPECIALIST . ஆஹா மூன்று முறை அவர் போட்டுக் கொடுத்த நேர்த்தியான காப்பியைப் பருகி மகிழ்ந்த காப்பி குடிகாரன் நான்.
விஸ்வநாதனிடம் நான் கண்டா இன்னொரு அபூர்வ திறமை புகைப்படம், வீடியோ எடுப்பது. குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தையும் அற்புத குறும்படங்களாக்கி அதற்கு செவிக்கினிய பின்னணி இசையை மென்மையாக தானே பாடி அளித்துள்ளார். ஒரு சில குடும்ப நிகழ்ச்சிகளை படமாக பார்க்கும்போது நானும் அன்று அந்த விழாக்களில் அவர்களோடு இருந்த எண்ணம் மனதில் தோன்றியது.
மத்தியானம் சிறிது ஓய்வுக்கு பிறகு சாயந்திரம் திரிசூர் பூங்குன்னம் பகுதி கோயில்கள் தரிசனத்துக்கு விஸ்வநாதன் தம்பதியரோடு சென்றதை அடுத்த பதிவில் துவங்குகிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


