
இப்போதைய நிலைமை- 2 – நங்கநல்லூர் J K SIVAN
கலியுகம் எப்படி இருக்கும் என்ற 5000 வருஷத்துக்கு முந்திய சுக ப்ரம்மரிஷியின் கணிப்பு
”சிவன் ஸார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?
”நங்கநல்லூர் ”
இப்படி சொன்னால் புரியும், அதில் ஆச்சர்யம் இல்லை. ”நான் கலியுகத்தில் இருக்கிறேன் ” என்றால் என்னை ஒரு தடவை உச்சி முதல் உள்ளங்கால் வரை கொஞ்சம் கோணலாக அவரைப் பார்த்து விட்டு ”ஐயோ பாவம், வயசு 86+ ஆகிறதால் சித்த ஸ்வாதீனம் இல்லை..” என்று நகர்வார்கள். நான் சொன்னது என்னவோ உண்மைதான். நாம் இப்போது கலியுகத்தில் தான் இருக்கிறோம், துவாபர யுகத்தில், கிருஷ்ணன் காலத்தில் பரிக்ஷித்துக்கு சுக ப்ரம்மம் சொன்னதை தான் நான் உங்களுக்கு சொல்கிறேன். சரி ..யார் இந்த பரீக்ஷித்?
அர்ஜுனன் பேரன், அபிமன்யு பிள்ளை. ”தக்ஷன் என்ற பாம்பு கடித்து இன்னும் ஏழு நாளில் நீ சாகப் போகிறாய் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன். நம்மைப் போல வீடு வாசல், பணம், பெண்டாட்டி, குழந்தைகளைக் கட்டிக்கொண்டு ”ஐயோ, நான் உங்களை விட்டு போகப்போகிறேனே” என்று அழாமல் சுகப்பிரம்ம மகரிஷியை அழைத்து துளைத்து எடுத்து என்னென்னவோ நிறைய விஷயங்கள் இரவும் பகலுமாக கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.
பரீக்ஷித் நல்ல ராஜா. அவனால் நாம் எத்தனையோ ஞானம் பெறுகிறோம். இனி பரீக்ஷித் சுகர் சம்பாஷணை தொடரட்டும்.
”மகரிஷி, அடுத்ததாக ஏதோ ஒரு யுகம் வருமாமே. அதன் பேர் என்ன சொன்னீர்கள்?”” கலியுகம்.”
”பேரே நன்றாக இல்லையே. சரி, அதில் என்ன நடக்கப்போகிறது மகரிஷி ? சொல்ல முடியுமா?”
”ஆஹா, சொல்கிறேனே. சாஸ்திரங்கள் அதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறதே. கேள். அரசனே , ஆரம்பத்தில் சத்ய யுகம் 18,00,000 வருஷ காலம். மனிதனின் வயது அப்போது பத்து லக்ஷம் வருஷம். யமனுக்கு சுத்தமாக வேலையே இல்லை. எத்தனை பிள்ளை, குட்டி, பேரன் பேத்தி, கணக்கு எல்லாம் கம்ப்யூட்டரில் கூட போடமுடியாது.
அப்புறம் த்ரேதா யுகம் – ராமர் காலம் – 12,00,000 வருஷ காலம். அப்போது சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் பத்தாயிரம் வருஷம் வயசு. LIC இன்சூரன்ஸ் தேவையே இல்லை. இருந்தாலும் வயசு சத்ய யுகத்தைவிட பத்து மடங்கு வயது குறைந்து விட்டதே.
அடுத்தது துவாபர யுகம் – கிருஷ்ணன் காலம். 800,000 வருஷ காலம். மனிதன் வயது அப்போது சராசரி ஆயிரம் வருஷங்கள். ஐயோ, இதென்ன அக்கிரமம். வயஸு இன்னும் பத்து மடங்கு குறைந்து விட்டதே இன்று இப்போது அழ தேவையே இல்லை.
இப்போது கலியுகம் நடக்கிறது. இதில் நமக்கு அதிக பக்ஷ வயஸு 100. இவ்வளவு இருந்தாலே அதிர்ஷ்டம்.. 70 ஐ தாண்டி ஆசாமி இருந்தாலே அப்புறம் ஒவ்வொரு நாளும் போனஸ் தான்.. கலியுகத்தில் இன்னும் போகப்போக 20 வயது 30 வயது ஆனாலேயே மனிதன் அவன் தொண்டு கிழவன். தாத்தா ஆகிடுவான் போல் இருக்கிறது..
பின்னே என்ன? இப்போதே அங்கும் இங்குமாக ஒரு சில 30-35 வயது ஹார்ட் அட்டாக் மரணங்கள் . படிக்கவோ கேட்கவோ ஷாக் அடிக்கிறது. ஞாபக சக்தி குறைந்து போய்விட்டது. கேட்க கேட்க படிக்க படிக்க எதுவுமே மறந்து கொண்டே போகிறது. நமது தாத்தா கொள்ளு தாத்தா, காவேரியில் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டார், பனை மரம் ஏறி நுங்கு பறித்தார், தேங்காயை பல்லால் கடித்து உறித்தார். தோட்டத்தில் கரும்பு கண்ணில் பட்டால் ரெண்டு மூன்று கரும்பை கடித்தே நின்றார்…. இதெல்லாம் ஆச்சர்யமான விஷயங்கலாக வாயைப் பிளந்து கேட்கிறோம். ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடையை கூட நம்மால் கடிக்க முடியவில்லை. பல் அவ்வளவு வீக். WEAK.
கலியுகத்தில் மதம், பக்தி, மரியாதை, பதவிசு, எல்லாம் குறைந்து விடும். இப்போதே மதம் என்று எவனாவது எசகு பிசகு பண்ணினால், சொன்னால், உடனே பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்……மத சார்பற்ற…. இதற்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு இன்னும் புரியவில்லை. கோவில்கள் சிலரது வாழ்க்கைக்கு சவுகரியங்களை தேடித்தரும் சுலப வழியாகி விட்டதே. கிராமங்களில் கோவில்களில் ஆளே இல்லை. சில கோவில்களில் சாமியே காணோம். அமெரிக்காவுக்கோ எங்கோ பறந்து சென்று விடுகிறது. கோவில் நிலங்கள் பிளாட் ஆகிவிட்டன. அன்னதானம் நிச்சயம் என்று தெரிந்த சில கோவில்களில் பிச்சைக்காரர்கள், உழைக்காமல் பிழைப்பவர்கள் தான் சாப்பாட்டு நேரத்தில் கண்ணில் படுகிறார்கள். பக்தர்களுக்கு இலவச உணவு சுத்தமாக என்று கிடைக்குமோ?.
கருணையாவது, காருண்யமாவது, கத்திரிக்காயாவது. ஒரு ரூபாய்க்கு குழந்தையை விற்கிறார்கள். அசந்தால் அறுபதுக்கு மேலே கிழவிகள் கழுத்தில் இருக்கும் தங்கச்சங்கிலி, தங்கள் உயிர் இரண்டையும் கோட்டை விடுகிறார்கள். மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்மையில் கொல்கிறார்கள். பத்திரிகை, டிவி, யூட்யூப், வாட்ஸாப்ப் எல்லாமே நிமிஷத் துக்கு நூறு கொலை கொள்ளை பற்றி தான் செய்தியும் படமும் போடுகிறது. நல்லவிஷயம் எதையும் சொல்ல யாருக்கும் பிடிக்க வில்லையா? சொல்வதற்கு எதுவும் இல்லையா? முதல் ஆறு ஸ்லோகங்களில் சுகர் முன்பே சொன்ன, நிறைய அக்கிரமங்களை, லிஸ்ட் போட்டு சொல்லிவிட்டேன்.
ஏதாவது ஒன்று நடக்கப்போகிறது என்று ஏற்கனவே தெரியாவிட்டால் தான் அதிர்ச்சி. எதிர்பார்த்தது நடக்கிறது என்றால் அதை ஏற்று, அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக்கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளவேண்டும். அது தான் புத்திசாலித்தனம். இன்றோ நேற்றோ அல்ல ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே இது தெரிந்த விஷயம். கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே வரும்போது தான் பாதிப்பு தெரிகிறது. ஸ்டாக் இன்னும் நிறையவே இருக்கிறது.
சுக ப்ரம்மம் சொல்கிறார் ”ஹே ராஜன், சொல்கிறேன் கேள். கலியுகத்தில் எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்று ஆகும். உண்பதே உடல் எடுத்ததின் காரணம். அடாவடி, அதிரடி தில்லு முல்லு , அடித்தே கொல்வது , அக்கிரமம், பொய் , அதிகார துஷ்ப்ரயோகம், பணத்தின் பாபச் செயல் இவைகள் சர்வ சாதாரண சாத்தியமாகும். சத்தியமும் ஆகும். தன் குடும்பத்தை காப்பதே ஒருவனுடைய பெரிய உயர்ந்த தியாகச் செயல் என்று ஆகியிரும். குடும்பம் சிதறிவிடும்.
எவனிடம் அதிகமாக சொத்து, காசு சேர்கிறதோ அவன் சொல் ஒன்றே வேத வாக்கு. அந்த சொத்து காசு வகையறா எப்படி சேர்ந்தது என்பது முக்கியமில்லை. அது சாமர்த்தியமாக போற்றப்படும். அவனையே சிறந்த தலைவனாக, அறிவாளியாக, கௌரவம் கொண்டவனாக, யுக புருஷனாக கை தட்டி வரவேற்பார்கள்.
எவன் ஒரு நாளைக்கு, ஒரு வேளைக்கு, தனது காரியம் நிறைவேற மற்றவர்களுக்கு வயிறார உணவு அளிக்கிறானோ அவன் தெய்வமாக கொண்டாடப் படுவான். ஏனென்றால் கலியுகத்தில் பசி மக்களை வாட்டும். அலைக்கழிக்கும். உணவின் வாசனை கூட கிட்டாதவனுக்கு ஒருவேளை, ஒரு நாள், சாப்பாடு பரிபூர்ண திருப்தியை ஆனந்தத்தை அளிக்கும் அல்லவா?.
மேலே தொடர்வோமா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



