
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
வீரவரன் கதை
பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் பல வீடுகளில் பாட்டிகள் அத்தைகள் அம்மாக்கள் சுவாரஸ்யமாக சொல்லி நாம் சின்னவயதில் ‘ஊம் ‘ கொட்டி, ”அப்பறம் என்னாச்சு” என்று ஆர்வமாக கேட்ட மறக்க முடியாத கதைகளில் ஒன்று விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள்.
இன்று ஒரு கதை சொல்கிறேன்.
விக்கிரமாதித்தன் ஒரு நள்ளிரவிலே மயானம் சென்று மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடித்து தோள் மீது சுமந்து கொண்டு நடக்கிறான். வழக்கம்போல வேதாளம் பேசுகிறது. அது பேசினால் ஒரு கதை நிச்சயம் உண்டு.
சோபாவதி எனும் பட்டணத்தை சூத்ரகன் என்ற ராஜா ஆண்டபோது அவன் வீரத்தைக் கண்டு எதிரிகள் பயந்தார்கள். நேர்மையும் பராக்ரமமும் கொண்டவன். பூமாதேவிக்கு அவனைப்பிடிக்கும்.
ஒருநாள் வீரவரன் என்பவன் மாளவ தேசம் வந்தான். அவன் மனைவி தர்மவதி. சத்வவரன் என்ற பிள்ளை. வீரவதி என்ற பெண். வீரவரன் கையில் எப்போதும் கத்தி, கேடயம் தவிர இடுப்பில் உடைவாள் இருக்கும். ராஜாவிடம் வேலைக்கு வந்து ” ஐநூறு பவுன் தினந்தோறும் சம்பளம் தாருங்கள்” என கேட்டான். ”உனக்கெதற்கு இத்தனை பணம்?” என்று அவனைக் கேட்காமல் ராஜா ஒற்றர்களை நியமித்து வீரவரன் சம்பளத்தை நல்லவழியில் செலவிழிக்கிறானா அல்லது கெட்டவழியில் பணம் போகிறதா என்று தெரிந்துகொள்ள விரும்பினான்.
வீரவரன் தினமும் உருவிய கத்தியுடன் உச்சிப்பொழுது வரையில், அரண்மனை காவல் புரிந்துவிட்டு வீட்டுக்கு போய் மனைவி கையில் அன்றைய சாப்பாட்டு செலவுக்கு நூறு பொற்காசு கொடுப்பான். நூறு பிரகாசுக்கு துணிமணி, வெற்றிலை பாக்கு, வாசனை திரவியங்கள், பூஜை சாமான்களுக்கு நூறு காசு, மீதி இருநூறு பொற்காசுகள் ஏழைகளுக்கு தான தர்மம்… இதெல்லாம் ஆன பிறகு தான் அவனது நிதிகர்மாநுஷ்டானம், சாப்பாடு எல்லாம். மறுபடியும் பிற்பகல் அரண்மனையில் சென்று காவல் காப்பான். இரவுநேரத்தில் காவல் வேலை. ராஜாவுக்கு இந்த விஷயமெல்லாம் ஒற்றர்கள் மூலம் தெரிந்து சந்தோஷப்பட்டான். ரொம்ப நல்ல ஆள் இவன் என்று மெச்சினான்.
மழைக்காலம் வந்தது. விடாது மழை. அப்போதும் வீரவரன் கவனமாக அரண்மனை ஆசார வாசல் காவல் காத்திருப்பான். அவனது வேலையை மெச்சி அவனுக்கு உத்யோக உயர்வு கொடுக்க ராஜா நினைத்தான். மழை சில நாள் தொடர்ந்து பெய்தது. இரவு இருட்டு. ராஜா யார் காவலில் என்று கேட்டபோது வீரரவன் குறிப்பில் ”அரசே நான் காவலில் இருக்கிறேன்” என்று பதில் இருளிலிருந்து வரும். ஒருநாள் இப்படி குரல் கொடுத்தபோது ஒரு பெண்ணின் பரிதாப அழுகுரல் வேறு கேட்டது. ”எனது ராஜ்யத்தில் யாருக்கு என்ன குறை? ஏன் நள்ளிரவில் பெண் ஒருவள் அழுகிறாள்?””வீரவரா” ராஜா இரவில் கூப்பிட, ”அரசே நான் இங்கே தான் காவலில் இருக்கிறேன்” என்றான்.” யாரோ ஒரு பெண் அழும் குரல் கேட்கிறது. போய் யார் என்று பார்த்து என்ன விவரம் என்று அறிந்து வா”
வீரரவன் இருளில் பயமின்றி குரல் வந்த திக்கில் நடந்தான். அவனுக்கு தெரியாமல் ராஜாவும் அவனைப் பின் தொடர்ந்தான்.
ஊருக்கு வெளியே, ஒரு குளம். அந்த குளக்கரையில் ஒருத்தி. அவள் தான் அழுது கொண்டிருந்தாள்:“ஐயா மகாவீ ரனே! தயாபரனே, தர்மவானே, உன்னைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன்?” என்று அரற்றிக்கொண்டிருந்தாள் .வீரவரன் அவளிடம் “யாரம்மா, நீ? எதற்காக இப்படி அழுகிறாய் ?” என்று கேட்டான்.
”வீரவரா! நான் பூமிதேவி! சூத்ரக மன்னன் தான் என் புருஷன். ஆனால் இன்றையிலிருந்து மூன்றாவது நாள்
அவன் இறந்து விடுவான். அதற்குப் பிறகு அவனைப் போன்ற நாயகன் மறுபடியும் எனக்கு எவ்விதம் கிடைக் கப் போகிறான்? அதை நினைத்துத்தான் துக்கம் தாளாமல் நான் அழுகிறேன்”
வீரவரன் திடுக்கிட்டான். உடல் நடுங்கியது.
“தாயே! இவ்வலகத்தையே ரக்ஷித்து வரும் எங்கள் ராஜாவின் மரணத்தைத் தவிர்ப்பதற்கு வழி ஏதும் உண்டா?”“ஒரு வழி இருக்கிறது. நீ தான் அதை செய்ய முடியும்”
“தாயே, அப்படியானால் அதைச் சொல்லுங்கள். இந்த க்ஷணமே செய்து முடிக்கிறேன். என் ராஜாவுக்கில்லாமல் என் உயிர் இருந்து என்ன பிரயோஜனம்.?
“வீரவரா, உன் போல தைரியசாலியும், எஜமான விசுவாசமும் உள்ளவன் வேறு யார்? இந்த அரண்மனை பக்கத்தில் ஒரு சண்டி கோயில் இருக்கிறது. ரொம்ப சக்தி வாய்ந்த, வரப்ரஸாதி அவள். அவளுக்கு உன் மகனைப் பலி கொடுத்தால் ராஜா சூத்ரகன் நூறு வருஷம் இருப்பான். உடனே செய்தாயானால், ராஜா உயிர் தப்பு. இல்லாவிட்டால் இன்றைக்கு மூன்றாம் நாள் அவன் பிணம்.””பூமிதேவித்தாயே , இப்போதே நீ சொன்னபடி செய்கிறேன்.” வீரவரன் தனது வீட்டுக்கு ஓடினான். ராஜா அவனைப் பிந்தொடர்ந்தவன் தானும் அவன் பின் பாடினான். தூங்கிக்கொண்டிருந்த மனைவி தர்மவதியை வீரவரன் எழுப்பி நடந்ததை சொன்னான்.
வீரவரனுக்கேற்ற மனைவி அவள். ”ஆமாம், நாதா, ஒரு நல்ல ராஜாவின் நலம் தான் நமக்கு முக்யம் . நமது பிள்ளையை எழுப்பி விஷயத்தை நீங்களே சொல்லுங்கள்” என்றால். வீரவரன் பிள்ளையை எழுப்பினான்.
“என் செல்லமகனே, சண்டிதேவிக்கு உன்னைப் பலிஇட்டால் நமது ராஜா நீண்ட காலம் உயிரோடிருப் பானாம். இல்லாவிட்டால் இன்றைக்கு மூன்றாம் நாள் செத்து விடுவானாம். உன் சம்மதம் வேண்டுமடா” என்றான். அவன் பிள்ளை சத்வவரன் சிறு பிள்ளையானாலும் நியாயம் தர்மம் தெரிந்தவன் என்பதால்;
“அப்பா, என் உயிரைக் கொடுத்து அரசனைக் காப்பாற்றக் கூடுமானால், எனக்குச் சகல பாக்கியங்களும் கிட்டிய மாதிரி. ஆகவே காலதாமதம் செய்யாமல் என்னை அழைத்து சென்று பலி கொடுங்கள்”இதெல்லாம் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த ராஜா அசந்து போனான். இன்னும் என்ன நடக்கப்போகிறது பார்ப்போம் என்று அவர்களை பின் தொடர்ந்தான்.
வீரவரன் மகனைத் தோளில் சுமந்துகொண்டு மனைவியோடு சண்டி கோயில் சென்றான். மகன் சத்வவரன் காளியை வணங்கி “தாயே! என் தலையைப் பலி கொண்டு எங்கள் ராஜா உயிரைக் காப்பாற்றவேண்டும் . நீண்டகாலம் நூறு வருஷம் ராஜா தொடர்ந்து ஆளட்டும்” என வேண்டினான். வீரவரன் மகன் தலையை வாளால் வெட்டி சண்டி காலடியில் வைத்து அம்மா தாயே ராஜாவின் உயிரைக் காப்பாற்று என்று வேண்டினான்.அசரீரி ஒன்று கேட்டது; “வீரவரா. உன் தீரத்தை, பக்தியை மெச்சினோம். உன்னைப் போல் எஜமான விசுவாசம் உள்ளவன் யார்? உன்னுடைய ஒரே மகனைப் பலியிட்டதால் அரசனுக்குத் தீர்க்காயுளையும், ஸ்திரமான அரசையும் அளித்துவிட்டாய்!” இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வீரவரன் மகள் அண்ணன் உடலைக் கட்டிக்கொண்டு தானும் மயங்கி விழுந்து இறந்தாள் . வீரவரன் மனைவி; ”நாதா, என் இரு செல்வங்களும் மறைந்த பின் எனக்கு உலகில் என்ன ஆணும் அவர்களுடைய உடலை தீக்கிரையாக்கும்போது அதில் தீக்குளிக்க நீங்கள் அனுமதிக்கவேண்டும். இந்த நாடும் மக்களும் சுபிக்ஷமாக வாழ நம்மால் ஆனதை செய்ய காளி தேவி அருள் செய்ததற்கு நன்றி.”
வீரவரன் யோசித்தான். இரு குழந்தைகளை இழந்து வாழ்வில் உனக்கு என்ன சுகம். ஆகவே உன் விருப்பப்படி செய். என் உயிரை கொடுக்கலாம் என்று காளிகாம்பாள் சொல்லி இருந்தால் நானே சந்தோஷமாக என் உயிரைப்பலி கொடுத்து குழந்தைகளை காப்பாற்றி இருப்பேனே. எனக்கு பாக்யமில்லை என்ன செய்ய?” என்றான். இரு உடல்களையும் கட்டைகளை அடுக்கி அதன் மேல் இட்டு சீதை மூட்டினான் . தர்மவதி எரியும் அந்த சீதையை சுற்றி வந்து வணங்கி சண்டி தேவியையும் தனது கணவன் வீரவரனையும் நமஸ்கரித்து ”தாயே அடுத்த பிறவியிலும் நான் வீரவரனையே கணவனாக பெற அருளவேண்டும்” என்று தீயில் தாவினாள் .
வீரவரன் அடுத்து சண்டிதேவி சந்நிதியில் நின்று வணங்கினான் ”அம்மா அசரீரி வாக்குப்படி என் மகனை சந்தோஷமாக உனக்கு பலியிட்டு ராஜா நீண்ட கால வாழவேண்டும் என்று அருள் வேண்டினேன். என் மக்கள் மனைவி இருவருமே அவன் உடலோடு எரிந்து விட்டார்கள். எனக்கு இனி உலகில் எந்த பிடிப்பும் இல்லை. சாதாரணமாக வாழ்ந்து சாவதற்கு பதில் என் உயிரையும் உன் காலடியில் அர்ப்பணிக்கிறேன்” என்று வாளை வீசி தன் தலையை துண்டித்துக் கொண்டான்.
இதெல்லாம் கண்டு கேட்டுக்கொண்டிருந்த ராஜா சண்டி தேவி முன் வந்து விழுந்து வணங்கினான்.”அம்மா, ஒரே ராத்திரியில் நடந்த இந்த அதிசயங்களை என்னால் நம்ப முடியவில்லை. என் உயிருக்காக எவ்வளவு விசுவாசமாக வீரவரன் தன் மகன் உயிரை பலி கொடுத்தான். அவன் குடும்பம் எவ்வளவு சிறந்தவர்களை கொண்டது. அவன் மகள், அவன் மனைவி, அவனே கூட தனது உயிரை மாய்த்துக் கொண்டான். இப்படிப்பட்டவர்களை இழந்து நான் எதற்கு நூறு ஆண்டு வாழவேண்டும். அவர்கள் உயிரை நீ மீட்டுக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் என் தலையோ இதோ உன் காலடியில் அர்ப்பணிக்கிறேன்”என்றான் ராஜா. அசரீரி மீண்டும் ஒலித்தது. ”ஹே , ராஜன், உன் நேர்மை, நியாயம் தர்மம் எல்லாம் அறிந்தவள் நான். அவசரப்பட்டு உன் உயிரைப் போக்கிக்கொள்ளாதே. எண்ணற்ற மக்களின் நல்வாழ்வுக்கு நீ நல்லவனாக அரசாள வேண்டும். உன் விருப்பப்படியே இதோ வீரவரன், அவன் மகன், மகள், மனைவி அனைவரும் உயிர் பெற்று எழுவார்கள்” என்றவுடன் ராஜா முன்னே வீரவரன், அவன் மகன், மகள், மனைவி எல்லோரும் கைகூப்பி நின்றார்கள். அனைவரும் சண்டிதேவியை வணங்கினார்கள்.
மறுநாள் அரசவையில் ராஜா முதல்நாள் இரவு நடந்த சம்பவங்களை சொல்லி வீரவரனை அவன் மகனை இரு தேசங்களுக்கு, கூர்ஜரம், எனும் லாடதேசம், கர்நாடகம் இரண்டுக்கும் ராஜாக்களாக்கினான். ”கதையை முடித்த வேதாளம் ”விக்ரமாதித்யா, இப்போது நீ சொல், இவர்களில் பராக்ரமம் நிறைந்தவன் யார்? சரியான விடையை சொல்லாவிட்டால் உன் தலை நூறு சுக்கல்.. ஜாக்கிரதை” என்றது.
“வேதாளமே, அந்த ராஜா சத்ரகன் தான் எல்லோரிலும் சிறந்த பராக்ரமன்.””எதனால் அப்படி முடிவுக்கு வந்தாய்? வீரவரானோ, அவன் மனைவியோ, மகனோ உயர்ந்தவர்கள் இல்லையா?’ “வேதாளமே , கேள், வீரவரன், அவன் மனைவி, மகன், மகள், எல்லோருமே, ஒரு நல்ல ராஜாவின் நீண்ட ஆயுளுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய துணிந்த பிரஜைகள். அது கடமை, என நியதியாக கொண்ட நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் உயிரைக் கொடுத்தாவது அரசனை காப்பது தெரிந்ததே. இந்த சத்ரக மன்னன் தனது உயிரை மக்காளுக்காக கொடுக்க முன்வந்தது சிறந்த செயல்”இப்படி விக்ரமாதித்தன் பதில் சொன்னதும் வேதாளம் அவன் தோளை விட்டு பறந்து மீண்டும் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டது….
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



