
ஆழ்வாரின் அற்புத யோசனை! – நங்கநல்லூர் J K SIVAN
குலசேகர ஆழ்வார் ஆழ்வார்களிலேயே ஒரு ராஜாவாக இருந்தவர். ஆழ்வாருக்கு ரொம்ப இளகிய மனசு. திருப்பதிக்குச் சென்றவர் நம்மைப்போல் வரிசையில் டிக்கெட்டோடு நின்று கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு ” தர்ம தரிசனம் எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும். எவ்வளவு பணம் கொடுத்தால் ஸ்பெஷல் தர்சனம் சீக்கிரம் பார்க்கலாம். யாரைப் பிடிக்கலாம்?” என்று கேட்க தேவைப்படாத காலத்தில் திருப்பதிக்கு போனவர். கீழேயிருந்து திருமலைக்கு நடை தான். . பஸ் பிறக்கவில்லை. திருப்பதி வேங்கடேசனை தரிசித்த ஆழ்வாருக்கு அங்கேயே பிறக்க வேண்டும் என்று ஒரு ஆசை. என்னவாக பிறப்பது?
திருமலை செல்லும் கருங்கல் பாறைப் படிகளைப் பார்க்கிறார் ஆழ்வார். அவ்வளவு தான். ”அடடா இவை எவ்வளவு பாக்கியம் செய்தவை. இதோ இந்தக் குளத்தில் வளையவரும் மீன் எவ்வளவு அதிருஷ்டம் செய்திருக்கிறது. இதோ பாரேன், இந்த செண்பக மரத்தின் கர்வத்தை. கோவில் வாசலில் கம்பீரமாக நின்று நிழல் கொடுக்கிறது பக்தர்களுக்கு. உள்ளேயும் அடிக்கடி எட்டிப்பார்த்து பெருமாள் ஸ்பெஷல் தரிசனம் வேறே.
இந்த பெரும் பாறை மட்டும் லேசானதா? இங்கிருந்து எவரும் இதை அசைக்கக்கூட முடியாதே. ஜம்மென்று இங்கிருந்தே அதற்கு பெருமாள் தரிசனம் நேராக கழுத்தை வளைக்காமல் எட்டிப்பார்க்காமல் கிடைக்கிறதே. பாக்யசாலி பாறை.
அடடா, அதோ அந்த வைஷ்ணவரைப் பாருங்களேன். பெருமாள் எதிரே சதா சர்வ காலமும் தங்க பாத்திரத்தில் பெருமாள் வாய் கொப்புளிக்க நீரோடு, பல் துலக்கி பெருமாள் துப்பும் நீரை அந்த பாத்திரத்தில் தினமும் ஏந்த எந்த ஜன்மத்தில் புண்யம் பண்ணினவரோ.!
குலசேகர ஆழ்வார் எப்படி குழந்தையாக, பெருமாள் பித்தராகி விட்டார்! ஒன்றுமில்லாத நாம் என்னமாய்த் துள்ளுகிறோம்!! அதனால் தான் அவர் ஆழ்வார். நாம் தாழ்வாக உள்ளவர்கள்.
ஆழ்வார் 67 வருஷ காலம் பூலோக வாசம் இருந்தார். அவர் மகள் இளையும் அவரோடு சேர்ந்து வைகுண்டம் ஏகி இருவருமே பெருமாள் திருவடிகளை அடைந்தார்கள்
”ஆனாத செல்வத்து..”என்ற பாசுரத்தை நான் அடிக்கடி பாடுவேன். இன்றும் இதை எழுதிக் கொண்டே பாடினேன். மனது அவரது மற்ற பாசுரங்களையும் தேடியது. மகிழ்ந்தேன். இதை உங்களுக்கு பரிமாறுகிறேன். இதோ இன்னும் சில அருமையான பாசுரங்கள். உடனே மனப்பாடம் செய்யுங்கள் மகிழுங்கள்:
”பச்சைமாமலை போல் மேனி” பாசுரத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் இந்திர லோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்றது போல இந்த ஆழ்வாரும் ” வானாளும் செல்வம், மண்ணரசும்” … யான் வேண்டேன்”.என்கிறார்.
”ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்.
தேனார்ப் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய்பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
இந்த திருப்பதியில் குளக்கரையில் ஒரு கொக்காகவோ ஒரு பறவையாகவோ பிறக்காமல் போனேனே? அது சரி இல்லை. கொக்காக இருந்தால் ஒருவேளை புத்தி மாறி, வேறெங்காவது பறந்து போய்விடுவேனே.
பேசாமல் குளத்திலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு மீனாக திருப்பதி குளத்தில் பிறந்து விடலாம். அடேடே அதுவும் சரியாக படவில்லையே. ஒரு வேளை கொக்கு மாதிரி ஏதாவது வந்து மீனைக் கவ்வி விழுங்கி விடுமே.
ஆழ்வார் யோசித்தார் செண்பக மரம் ஒன்று கண்ணில் பட்டது. நீண்டநாள் உயரமாக நின்று எவர் தலையும் மறைக்காமல் இந்த செண்பக மரமாக இருந்து வெங்கடேச பெருமாளைப் பார்த்துக்கொண்டே நிற்கலாம். அடியார்களுக்கு நிழலையும் தரலாம். ஷெண்பகமரமாக பிறக்கலாமா?இல்லை அதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. இந்த பக்தர்கள் என்னிடம் பூக்களைப் பறித்துக் கொண்டு மலையடிவாரத்தில் எங்கோ போய் விட்டால் என்ன செய்வது?.
வேறே என்னவாக பிறக்கலாம்? பேசாமல் ஒரு கூரான முள் மரமாக காட்டில் இங்கேயே ஒரு ஓரத்தில் நிற்பது தான் புத்திசாலித்தனம்.. யாரும் கிட்ட வரமாட்டார்கள். நிம்மதியாக வெங்கடேசனை தரிசிக்கலாம்.
”ச்சே, என்ன அவசர புத்திடா உனக்கு குலசேகரா?. முள் மரமாக இருந்தால் எவராவது வந்து வெட்டி அடுப்பில் போட்டு எரித்து விடுவார்கள். அப்புறம் சாம்பலான பிறகு எப்படிடா வேங்கடேசனைப் பார்ப்பாய்?
நல்ல உபாயம் ஒன்று தோன்றுகிறதே. இந்த வெங்கடேசனை சுற்றி ஏழு மலைகள் ப்ரம்மாண்டமாக நிற்கிறதே. அதில் ஒன்றின் சிகரமாகவே ஆகிவிட்டால் என்ன? .ஆஹா அசாத்திய யோசனை. எவனும் அசைக்க மாட்டானே. நாமும் காலம் காலமாக இங்கேயே அசையாமல் நின்று பெருமாளை திவ்யமாக தரிசிக்கலாமோ?
உள் மனசு குரல் கொடுத்தது. குலசேகரா, ரொம்ப சுயநலம்டா உனக்கு. பெரிய உயர சிகரமாக இருந்தால் பக்தன் மலை ஏற மாட்டானே. பகவானைக்காட்டிலும் அவனுடைய பக்தன் பாத ஸ்பர்சம் ச்லாக்கியமாச்சே. அது கிடைக்காமல் போய் விடுமே. ஏன் யோசிக்க வில்லை ?”
ஆமாம். வாஸ்தவம். சரி. இன்னொரு வழி இருக்கே. அந்த உயரிய மலைமீதிருந்து வீழும் நீர் வீழ்ச்சியாகவோ, நதியாகவோ, காட்டாறாகவோ பிறந்தால் எப்படி? பரவாயில்லையே . நல்ல விஷயம் தான்.. பக்தர்கள் பாத கமலங்களைத் தொடும் புண்ணியம் அதிகம் கிடைக்கலாமே.
”குலசேகரா, கொஞ்சம் உன் கற்பனையை நிறுத்து. நீ போடும் பிளான் போகாத ஊருக்கு வழி”
”ஓஹோ நான் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறேனோ?. நீராக மாறினாலும் பக்தர்களுக்கு அதில் கால் வைக்க எண்ணம் தோன்றினால் தானே என் ஆசை நிறைவேறும்?.
பலப்பல யோசனைக்கு பிறகு ரொம்ப சுலப வழி இது தான். இந்த கோவில் இருக்கிறதே அதை மறந்தே போனேனே!! வெங்கடேசன் கோவில் வாசலில் பேசாமல் ஒரு பெரிய பாறையாக கிடந்து விடுவோம். என்னை மிதித்துக்கொண்டு தானே எல்லா பக்தர்களும் உள்ளே சென்று பெருமாளைக் காண முடியும். இதுவே சரியான முடிவு. இன்றும் எல்லா கோவில்களும் குலசேகரஆழ்வார் குலசேகர படியாக ஒவ்வொரு கருவறை முன்பும் பக்தர்கள் நிற்கும் படியாக காண்கிறார். — எப்படி குலசேகர ஆழ்வார் யோசனை? ஆழ்வாரின் அற்புத பாசுரத்தை படியுங்கள் :
1. நாரையாக (கொக்கு) ;
ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே:
2,மீனாக:
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே:
3. தங்க வட்டிலாக :
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறு வேனாவேனே:
4. செண்பக மரமாக:
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே:
5. முள் புதராக :
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே:
6. திருப்பதி மலை சிகரமாக:
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா அருந்தவத் தன் ஆவேனே:
7. காட்டாறாக :
தேனார்பூஞ் சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே:
8. மலை வழிப்பாதையாக :
சோலைத் திருவேங்கட மலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே
9. கோவில் வாசல்படியாக:அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


