
காசி யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN
இது வயாதனவுடன் ஒருநாள் பித்ரு கடன் தீர்க்க காசி, கயா, பிரயாகை செல்வது பற்றி இல்லை ஸார் . கல்யாணத்தில் காசி யாத்திரை போவது பற்றி தான்.
காசி என்றால் மூன்று காசி நினைவுக்கு வரும். வடகாசி, தென்காசி, சிவகாசி. சிவகாசி பட்டாசுக்கும், பேப்பர், அச்சு கூடம் சம்பந்தமானது. தென்காசி வடகாசிக்கு நிகரான க்ஷேத்ரம். அற்புதமான ஊர். வடகாசி கேட்கவே வேண்டாம். விஸ்வநாதர் அன்னபூரணி இருக்கும் ஊர். காசியில் மரணம் அடையவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள் நமது முன்னோர். அங்கே மூச்சு விட மறந்தால் நேரே கைலாசம் தான். காதில் சிவனே மோக்ஷ தாரக மந்திரம் ஓதி அழைத்துக் கொள்வார் என்று இன்றும் அங்கே மரணிக்க காத்திருப்பவர்கள் அநேகர்.காசி யாத்திரை சம்ப்ரதாயம் அருமையானது.
காசியாத்திரை எப்படி ப்ராமண ஐயர் கல்யாணங்களில் வந்தது என்று யோசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. காசிக்கு போவது மேற்கொண்டு கல்வி கற்க.அப்படி தான் பண்டிதர்கள் சென்றார்கள். வேதம் வளர்ந்தது காசியில். புண்ய ஸ்தலம். கல்யாணத்தில் இன்றும் காசி யாத்திரை ஒரு முக்கிய அம்சமாக அமைந்து விட்டது.
கல்யாணம் அன்று காலை மேள தாளங்களுடன் பிள்ளை வீட்டார் கல்யாண மண்டபம் வருவார்கள். வேடிக்கை வினோதம் நிறைந்த சடங்கு அது. கல்யாண மண்டபம் வந்த மாப்பிளை பையன் இதுவரை வேஷ்டி கட்டிக் கொள்ளாத பெர்முடாகாரன். . பூணலை ஆணியில் கழற்றி வைப்பவன்.பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு தோளில் ஒரு துணி மூட்டையில் அரிசி,பருப்பு, தேங்காய் பழம் வெற்றிலை மாற்று வேஷ்டி, துண்டு,,கையிலொரு பனை ஓலை விசிறி, நண்பன் ஒருவன் பின்னாலோ அருகிலோ நின்று மான் மார்க் குடை பிடிக்க, ஒரு கையில் சின்ன கீதை , ராமாயண, புஸ்தகத்தை வைத்துக் கொண்டு, தேவையற்ற ஒரு கைத்தடியுடன் ,பட்டை பட்டையாக விபூதியுடன்,கழுத்தில் புதுசாக தங்கச் சங்கிலி மாட்டிக்கொண்டு புது செருப்பு அணிந்து கொண்டு, காசிக்கு படிக்க கிளம்புவது தான் காசியாத்திரை.
இதுவரை காசி எங்கே இருக்கிறது, அதில் என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ள விரும்பாதவன் கல்யாண மண்டபத்தில் சில காலடிகள் கிழக்கே சென்று வடக்கே திரும்பி நடப்பது தான் காசி யாத்திரை வைபவம். அப்போது தான் அவனது வருங்கால மாமனார் ஓடிவருவார். அவன் கையைப் பிடித்துக் கொள்வார்.
”அப்பனே , நீ காசிக்கு மேலே கல்வி கற்க போக வேண்டாமப்பா, சந்நியாசியாக வேண்டாமப்பா, சன்யாசம் வேண்டாம், கிரஹஸ்தாஸ்ரமத்திலேயே இரு. இதோ பார் என் அழகிய பெண். அவளை நான் உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன் அவள் உன் வேத கர்மாக்களுக்கு ஒத்தாசையாக இருப்பாள்”என்று அவன் குடை, சோற்று மூட்டை,புஸ்தகம், எல்லாம் பிடிங்கி வைத்துவிட்டு அவனை வாத்யார் முன் உட்காரவைத்து கையில் தாலி கொடுத்து கழுத்தில் கட்டவைப்பது என்பது தான் காசியாத்திரை சமாசாரம்.
பிரம்மச்சாரி வானப்ரஸ்தம் சன்யாச நிலைகளுக்கு போகுமுன் அவன் கிரஹஸ்தாஸ்ராமத்தில் ஈடுபட வேண்டும் என்பது பாரம்பரிய வழிமுறை. இப்போது பெண்கள் கிடைக்காத நிலையில் எத்தனையோ பிராமண பிரம்மச்சாரிகள் வெளி நாடுகளில் உத்யோகம் என்ற வானப்ரஸ்தம் சென்றுவிடுகிறார்கள். அப்படியே சன்யாசிகளாகி விடுகிறார்கள். எல்லாவற்றையும் விடுவது தானே சன்யாசம். அப்பா அம்மாவும் வேண்டாம் பிறந்த நாடு பாரதமும் வேண்டாம் என்பது சன்யாசமாகி விட்டது.
ஆகவே இப்போதுள்ள நிலையில் ”மேற்படிப்பும் வேண்டாம், சன்யாசமும் வேண்டாம், ஒரு பெண் கிடைத்தால் போதும்” என்று மாப்பிள்ளை உடனே அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வது நியாயமே. ஆகவே காசி யாத்திரை இப்போது கல்யாணங்களில் முக்கியம் எனலாம். காசியாத்திரை சடங்குக்கு தனிப்பட்ட மந்திரம் இல்லை. சமாவர்த்தன வழிபாட்டுக்கு என் புத்ரி உனக்கு உதவுவாள். வீட்டில் மாடு இருந்தால் பால் கறப்பாள் , ஆஸ்ரமத்தை பெருக்குவாள், ஆற்றிலிருந்து குளித்துவிட்டு இடுப்பில் குடம் நிறைய தண்ணீர் கொண்டு வருவாள்” என்று பொருத்தமில்லா வாசகங்களை வாத்யார் சொல்ல பெண்ணின் தகப்பனார் கிளிப் பிள்ளையாக அதை சொல்லி பெண் தருவார். மறுவார்த்தை பேசாமல் யோசிக்காமலேயே அந்தப் பெண்ணை அவன் மணந்து கொள்ள சம்மதிப்பான்.
ஒவ்வொரு ப்ராஹ்மணனும் தனக்கு ஏற்பட்ட ரிஷி கடன், தேவ கடன், பித்ரு கடன் என்ற மூன்றையும் தீர்த்து விட்டே சன்யாசம் பெற்று மோக்ஷத்தை அடைவது பற்றி எண்ண வேண்டும்.
குடை விசிறி கைத்தடி எப்படியும் பிற்காலத்தில் உதவும். அடிக்கடி கரன்ட் போய்விடுவதால் பனையோலை விசிறி அத்தியாவசியம். குடை மழைக்கும் வெயிலுக்கும் அவசியம்.கைத்தடி அறுபதுக்கு மேல் தேவைப்படலாமே . கீதை புத்தகம்? படித்து தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவரை தேவைப்படாது.புத்தக அலமாரியில் ஒரு மூலையிலிருக்கட்டும்.
கல்யாணமண்டத்தில் அங்கே கிழக்கு பார்த்து அரிசி, பருப்பு தேங்காய், கூறை புடவை,ரவிக்கை, விளையாடல் சாமான்கள்,இவைகளை கையில் எடுத்து கொண்டு. பிள்ளை வீட்டார் பரதேசி கோலத்துடன் வர வேண்டும். பெண் வீட்டார் பருப்பு தேங்காய், மஞ்சள், குங்குமம், சந்தனம்,பழம்,புஷ்பம் சக்கரை வெற்றிலை,பாக்கு, மஞ்சள் தேங்காய் இவைகளை வைத்து கொண்டு மாப்பிள்ளையை எதிர் கொண்டு அழைக்க வேண்டும்.
அப்புறம் அடுத்த வேடிக்கை மாலை மாற்றுதல். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறதே.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



