
திருவாசகம் எனும் தேன் – நங்கநல்லூர் J K SIVAN
திருவாசகத்திற்கு ஒரு தனி சக்தி உண்டு. வேறெந்த தெய்வீக பாடலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு என்ன
வென்றால் அதைச் சொல்வதற்கு, பாடுவதற்கு நா இனிக்கும், கேட்க செவி இனிக்கும். இதெல்லாவற்றையும் விட இப்படி திருவாசகம் பாடும் கருப்பொருளாக கைலாசநாதர் பரமேஸ்வரனுக்கு எத்தனை முறை கேட்டாலும் திருவாசகம் ரொம்ப பிடிக்கும். அதனால் தானே பெருந்துறை ஈசன் வாதவூரன் என்ற பெயர் பெற்ற அந்த பக்தரின் பாடல்களை மணி மணியான வாசகமாக இருக்கிறது என்று புகழ்ந்து அதைப் பாடிய வாதவூரனை இனி நீ மணிவாசகன் என்ற புகழ்ப் பெயரையும் அளித்தார். நமக்கு வாதவூரர் என்றால் யார் என்று தெரியாது.மாணிக்க வாசகர் எனும் மணி வாசகர் என்றால் உடனே சிரம் மேல் கரம் கூப்புவோம். வேறு எந்த தேவார பாடல்களுக்கும் ”திரு” வாசகம்’ எனும் சிறப்புப் பெயர் அமையவில்லை.
இனி சில மணிவாசகர் தெய்வீக பாடல்களை திருவாசகத்தில் அறிவோம். திருவாசக பாடல்கள் பல தலைப்புகளோடு தொகுக்கப்பட்டவை. அவற்றில் ஒன்று திருச்சாழல் பாடல்கள்.
சாழல் என்பது பெண்கள் விளையாட்டு. விளையாடு பவர்கள் ரெண்டு கோஷ்டியாக பிரிந்து நாம் இப்போது பாடும் அந்தாக்ஷரி மாதிரி பாட்டு போட்டிகளை நடத்துவார்கள். ஒருகோஷ்டியில் கேள்வி கேட்பது போல் பாடுவார்கள். அதற்கு அடுத்த கோஷ்டி பதில் பாட்டு பாடும். ரெண்டு பக்கமும் ஒரு லீடர் உண்டு. மணிவாசகர் இப்படி ஒரு புது மாதிரியான உத்தியை கையாண்டிருக்கிறார். மொத்தம் 20 பாடல்களைக் கொண்டது திருச்சாழல் பாடல்கள். சிவபெருமானை பற்றிய மஹிமைப் பாடல்களாக இவை அற்புதமாக அமடிந்துள்ளன. மணிவாசகரின் பக்தி கலந்த தமிழை ஒரு சில பாடல்களில் இப்போது ரசிப்போம்.
”பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
முதல் ரெண்டடி ஒரு கோஷ்டியின் புதிர், கேள்வி ?
”ஹே, பெண்களே என்னடி இது அதிசயமாக இருக்கிறது. உங்கள் இறைவன் பரமசிவன் என்பவன் வேடிக்கையான ஆளாக இருக்கிறானே! உடம்பு முழுதும் வெள்ளை வெளேரென்று சாம்பலை பூசிக் கொள்கிறான். இது என்ன அலங்காரமோ? இந்த அழகிற்கு அவன் தேடிக் கண்டுபிடித்து அணிவது என்ன வினோத ஆபரணம்? விஷப் பாம்புகள்! யாருக்காவது இப்படி ஒரு ஆபரணம் அணிய தோன்றுமா? அவனைப் பித்தன் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்?
அலங்காரம் ஆபரணம் தான் இப்படி என்றால் அவன் வாய் திறந்து முத்து முத்தாக பேசுவது இருக்கிறதே அடேயப்பா வேதமாம். ஒன்றுமே புரியாத வினோத விஷயம்!!….. ஹா ஹா ஹா” என்று கைகொட்டி சிரிக்கிறார்கள் முதல் கோஷ்டியினர்.
எதிரே இருக்கும் கோஷ்டி சும்மாவா இருக்கும்?… பதில் பாட்டு அந்த கணமே தயாராகிவிட்டது. அவராக கோரஸாக பாடுவது கேட்கிறதா?
”என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான் ஈசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ.”
”போதும் போதும் உன் பேச்சு. அவன் பூசிக்கொண்டிருப்பது திருநீறு. மந்திரம். மந்திரமாவது நீறு என்று தெரியாதா? நீற்றுப்போன நெருப்பு. சாம்பல் என்கிறாயே? இதனால் கூட அவன் அழகு கூடும் என்று உனக்கு தெரியவில்லையா? அதுவே அவன் பவழ மேனிக்கு எடுப்பாக அல்லவோ இருக்கிறது. பொன்னும் வைரமும் நவமணிகளும் தான் உங்களுக்கு ஆபரணமா? அவற்றிக்கு உயிர் என்றாவது உண்டா? என்னப்பன் சிவனுக்கு நெளி எது தெரியுமா? நெளியும் அரவம் அவன் அணியும் ஆபரணம் எவராலும் திருட முடியாதது. பறித்துக் கொண்டு ஓடமுடியாதது. ‘நகரும்’ அணிகலன்.. ஆபரணங்கள் அணிந்தால் அதை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும். எங்கள் இறைவன் ஆபரணம் அப்படியில்லை, அது இருப்பதால் அவன் ஜாக்கிரதை, பாதுகாப்பாக இருக்கிறான். எவருமே நெருங்க முடியாதே! யார் கிட்டே வருவார்கள்? நிம்மதி. அவன் எல்லா உயிர்களுக்கும் தலைவன். இயற்கையாகவே சிறந்த எஜமானன். சிவனுக்கு என்னடி குறை? . ராஜாதி ராஜன்…”
”ஓஹோ அப்படியா? அப்படியானால் நீ இதற்கு பதில் சொல்:
”கோயில்சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ!
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில்உ லகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.”
என்னப்பன் , பொன்னப்பன் எம்பிரான் எல்லாருக்கும் ஈசன் என்கிறாயே அந்த பரமசிவன் எல்லாவற்றிற் கும் எஜமானன், தலைவன் என்கிறாயே. அவன் எதற்கு இப்படி ஒரு கிழிந்த தையல் போட்ட துணியை கோவணமாக பிச்சைக்காரன் போல் உடுத்துக்கொண்டு நிற்கிறான்?
பாவம் சிவனுக்கு கோவில் கூட கிடையாதாடி? ஏன் சுடுகாட்டில் நிற்கிறான்? கோவணத்தை விட்டால் வேறே நல்ல ஆடை யொன்றும் இல்லையா புலியின் தோலை இடுப்பில் சுற்றிக் கொண்டிருக் கிறானே! பாவம் கவனிக்க அப்பா அம்மா கூட இல்லாத அநாதி ! அவனைப் பற்றி பெருமைப்படுவதற்கு பதில் வருத்தப்படவேண்டும் போல் இருக்கிறதே. ”
முதல் கோஷ்டிக்கு பொறுக்குமா இது? பட்டென்று பதில் சொல்கிறது.
”ரொம்ப நன்றாக நீ புரிந்து கொண்டிருக்கிறாய்? என்று ஏளனம் செயகிறது. ” பெண்ணே முதலில் இதைப் புரிந்து கொள்”. பரமசிவன் உடுத்தியது நீ உடுத்துகிற கந்தல் நூல் துணியல்ல…. நான்கு வேதங்களையும் அரைஞாண் எனும் கயிறாக இடுப்பில் சுற்றி அதில் மறைநூல்களின் உட்பொருளை உயர் தத்துவத்தை ஆடையாக அணிந்தவன். மிக எளிமையான ஞானி. மிக உயர்ந்த ஞானிகள் பிக்ஷையில் தான் பசி தீர்ப்பவர்கள். நம்மைப் போல் மூன்று வேளையும் சமைத்து சாப்பிட்டு வயிறு வளர்ப்பவர்கள் இல்லை. பிக்ஷாடானன் தான் நமக்குப் படியளப்பவன்.
அன்னை தந்தை அற்ற அனாதை என்கிறாயே. சிரிப்புத்தான் வருகிறது. பேதைப் பெண்ணே, இந்த மூவுலகிற்கும் உமா மஹேஸ்வரர்கள் தான் தாயும் தந்தையும், அம்மையப்பன் என்றே அவனுக்குப் பெயர்.
உலகிற்கே தாயும் தந்தையுமான அம்மையப்பனுக்கு தனியாக ஒரு தாயோ தந்தையோ ஏன்? அவனே எல்லாம் என்கிற சர்வேஸ்வரன் ஆக இருக்கும்போது தனியாக இல்லாமல் எங்கோ ஒரு கூட்டத்தில் ஒருவனாகவா இருப்பான்? நீ பார்க்கும் மலை காடு, வனம் வானம் எல்லாமே அவன் கண்ணைத் திறந்து ஒரு பார்வை பார்த்த்தால் சாம்பலாகி பொடிப் பொபொடியாகி விடும் என்று உணர்த்த தான் சாம்பலை பூசிக் கொண்டவன். ”
இருபது பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. எழுத தான் இடம் இல்லை. மீண்டும் பார்ப்போம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



