
‘ராதா! ஒ… ராதா ” – நங்கநல்லூர் J K SIVAN
ராதா கல்யாணம் என்கிற வார்த்தை எல்லோருக்கும் தெரிந்தது, அடிக்கடி உபயோகப்படுத்துவது. வருஷா வருஷம் கன ஜோராக விமரிசையாக ராதா கல்யாண உத்சவங்கள் நடக்கிறது. ஜெயதேவர் அஷ்டபதி பல ராகங்களில் ஒலிக்கிறது. பூஜை நடக்கிறது. பிரசாதங்கள் விநியோகமாகிறது. ரெண்டு நாள் தொடர்ந்து கல்யாணம் நடக்கிறது. ஆனால் நான் எங்கு ராதை கிருஷ்ணன் மனைவி என்று படிக்கவில்லையே எப்படி? பாகவதத்தில் காணோம், பாரதத்தில் காணோம்.. வடக்கே சில நூல்களில் ராதா கிருஷ்ணன் விவரங்கள் இருக்கிறது. வைஷ்ணவ நூல்கள் சப்தமில்லாமல் இருக்கிறதே. ஆண்டாள் கல்யாணம் விமரிசையாக நடக்கிறது. அதை வில்லிப்புத்தூரில் மற்றும் வைணவ கோயில்களில் கொண்டாடுகிறோம். ராதா கல்யாணம் போல் உத்சவங்களை வெளியே பிரசாங்கமாக அதிகம் காணவில்லை.
ஒருவேளை எனக்கு தெரியவில்லையோ என்னவோ?
ராதா யார்? வ்ரிஷபானு என்கிறவர் அவரது பூர்வ ஜன்மத்தில் ராஜா சுச்சந்தரா வாக இருந்தார். அவருக்கும் அவர் மனைவி கலாவதிக்கும் பிரம்மா கொடுத்த வரத்தின் பயனாக த்வாபர யுகத்தில் லக்ஷ்மி தேவியே பெண்ணாக அவதரித்தாள். அவளே ராதா. கலாவதி ராணியே வ்ரிஷ பானுவின் மனைவி கீர்த்தி குமாரி . வ்ரிஷ பானு வசித்த ஊர் பர்ஸானா. தொலை தூரம் நடக்கவேண்டாம் . கொஞ்சம் தள்ளி கோகுலம் என்று ஒரு ஊர். அந்த ஊரில் நந்த கோபன் ஒன்று ஒரு பிரமுகன். அந்த ஊரின் கோபர் தலைவன். வ்ரிஷபானுவின் நண்பன். ஒரு ஹோலி பண்டிகை போது நண்பர்கள் இருவரும் சந்தித்தனர். நந்தகோபன் வீட்டில் வ்ரிஷபானு தனது மனைவியோடும் பெண்ணோடும் வந்த போது தான் ராதையும் கிருஷ்ணனும் சந்தித்தனர்.
அது இறைவனும் இறைவியும் சந்தித்த அதி திவ்ய சிநேக- பாவ சந்திப்பு. சாதரணமான ஆணும் பெண்ணும் சந்திக்கும் உறவு இது வல்ல. இது மனித காதல் அல்ல. அதையும் கடந்த தெய்வீக நேசம். பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள உறவையும் மீறியது. வ்ரஜ பூமியின் உயிரே கண்ணன் என்றால் கிருஷ்ணனின் ஆத்மா ராதா.
”ஆத்மா தூ ராதிகா தஸ்ய” (ராதே, நீ தான் ஆத்மா) ஒரு புறம் பார்த்தால் ராதா ஒரு கிருஷ்ண பக்தை யாக தோன்றினாலும் மறுபுறம் அவளே கிருஷ்ணனால் ஆராதிக்கப்பட்டவள். (”ஆராத்யதே அசௌ இதி ராதா”) இது யாருக்கு கிடைக்கும்? இணை பிரிக்க முடியாத அன்பு, காதலுக்கு ஒரு அடையாளம் தான் ராதா-கிருஷ்ணன் நேசம். பிருந்தாவனமே எதிரொலித்த முடிவில்லாத கட்டுப்பாடில்லாத தூய்மையானது ராதாவின் காதல்.
ராதை குழந்தையாக இருக்கும்போது நாரதர் அவளைப் பார்க்க வந்தபோது வ்ரிஷபானுவிடம் சொன்னதை மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன்.
”இந்த குழந்தை சாதாரண பெண் இல்லை. லக்ஷ்மிதேவியே அவதரித்திருக்கிறாள். இவளை லக்ஷ்மி தாயாராகவே வளர்த்து வா. இவள் காலடி பட்ட இடம் நாராயணன் இருக்குமிடம். அவரே கிருஷ்ணன் என அறிவாய்.”
வ்ரிஷபானுவிடம் ராதை அவ்வாறே வளர்ந்தாள் . கிருஷ்ணனின் இதயத் துடிப்பு ராதா. கிருஷ்ணனின் மறுபெயர் ராதா. அழகுக்கு திரு உருவம் கிருஷ்ணன் என்றால் கிருஷ்ணனுக்கு அழகூட்டுவது ராதாவே. சைதன்ய மஹா ப்ரபுவை ராதா- கிருஷ்ணனின் மறுபிறப்பு என்பார்கள். ராதாவின் சில அழகிய பெயர்கள் தெரியுமா உங்களுக்கு.
கோவிந்த நந்தினி (கோவிந்தனுக்கு ஆனந்தம் தருபவள்) கோவிந்த மோகினி (கண்ணனை கவர்ந்த காந்த சக்தி) கோவிந்த சர்வச்வா (கிருஷ்ணனின் எல்லாமே) சர்வ காந்த சிரோமணி ( கிருஷ்ணனின் எல்லா கோபியரில் தலை சிறந்தவள்) க்ரிஷ்ணமயி ( உள்ளும் புறமும் க்ரிஷ்ணனே) தாமோதர ரதி, பர்சானே வாலி (வர்ஷனாக் காரி — வங்காளியர் ”வ” வை ”பா” என்று தானே சொல்லுவார்கள்) கிருஷ்ணப்ரியா . நாரத பஞ்சரத்ராவில் ராதா ஹரா என்று அழைக்க படுகிறாள். அதனால் தான் ‘ஹரே’ கிருஷ்ண மஹா மந்த்ரத்தில் ‘ஹரே’ என்கிற வார்த்தை ராதையோடு சேர்ந்த கிருஷ்ணனன் என்று வரும். பர்ஸானா பிருந்தாவன் -இந்த ரெண்டு ஊர்களுமே மதுரா நகரத்தை சேர்ந்தவை. ராதா கிருஷ்ணா கோவில்கள் உலகெங்கும் உள்ளன.
ராதா ராணி கோவில் ஆஸ்டின், டெக்ஸாஸ், நகரில் உள்ளது. வட அமெரிக்காவில் மிகப்பெரிய ராதா கிருஷ்ணன் கோவில் உள்ளது. கிருஷ்ணன் அருள் வேண்டுமானால் ராதாவின் கால்களை முதலில் பிடிக்கவேண்டும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணனை தரிசிக்க போவோர்கள் ராதே கோவிந்தா என்று ஸ்மரித்துக்கொண்டே தான் கோவிலை அணுகுவார்கள்.
இரவில் வெள்ளி நிலவாக ஜ்வலிக்கும் சந்திரன் பகலில் இல்லை. பகலில் விகசிக்கும் தாமரை இரவில் சூம்பி விடுகிறது. ”என் சகி ராதா, நீ இரவிலும் பகலிலுமே அழகு அறிவு இரண்டும் கலந்த உன் காந்த சக்தியை என் மீது அள்ளி வீசுகிறாய் ” என்று கிருஷ்ணனே வர்ணிப்பதாக ஒரு பாடல் விதக்த மாதவா என்ற கோர்வையில் வருகிறது.
”நீ சிரித்தால், மகிழ்ச்சி அலைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் பொங்கி எழுந்து கன்னத்திலிருந்து பீறி வெளிக் கிளம்பி என்னைத் தாக்குகிறது. ராதையின் வில் புருவங்கள் மன்மதன் வில். அவள் கடை விழிப் பார்வையின் வீச்சு தேன் வண்டுகளின் ரீங்கார த்வனியை வாரி வீசும். அந்த தேன் வண்டு அடடா என் இதயத்தை துளைத்துவிட்டதே! இது ஒரு சிறு மாதிரி வர்ணனை. முழுதும் ரசிக்க விதக்த மாதவா வை படிக்கவேண்டும்.
ராதா யார்? மறுபடியும் அதே கேள்வி.
யாரோ ஒருத்தர் சொன்னார் ராதா கிருஷ்ணா என்ற ஆங்கில எழுத்தில் “R” ஐ எடுத்து விட்டால் “ஆதா கிருஷ்ணா”-அதாவது ”பாதி ” (RADHAKRISHNA – R = ADHAKRISHNA ) ”ஆதா” என்றால் வடமொழியில் ”பாதி” ஆகவே பாதி கிருஷ்ணன் என்று ஆகிவிடும் . ரொம்ப சரியான வார்த்தை. ராதாவை பிரித்துவிட்டால் கிருஷ்ணன் இல்லை. ராதாவை பிரிப்பது கிருஷ்ணனை ரெண்டாக பிரிப்பது போலவே தான். கிருஷ்ணனுக்கு பக்த வத்சலன் என்று ஒரு பெயர் வரக் காரணம் பக்தர்களே அவனுக்கு உயிர். பக்திக்கு உருவகம் தான் ராதை. கிருஷ்ணன் ராதை பக்தி “மதுர பாவ”த்தை (அதி நெருக்கம்) சேர்ந்த நேசம்.
ராதா என்பது ப்ரேமையின் உச்ச பாவம். மகா பாவம் (புண்யம் பாவம் என்று சொல்வோமே அந்த பாவம் இல்லை, BHA எனும் தடித்த உச்சரிப்பு) – உயரிய உணர்ச்சி நிலை. தனை மறந்த இறைவனோடு ஒன்று கலந்த உணர்வு..’
ஜெயதேவருடைய சிறப்பே அவர் எவ்வளவு சாதுரியத்தோடு ஸௌலப்யமாக ராதா – கிருஷ்ணனின் தெய்வீக உறவை வர்ணிக்கிறார் என்பதில் தான் இருக்கிறது. . கீத கோவிந்தம் படித்தவர்கள் இதை அனுபவித்தவர்கள். அதை ஒரு நாட்டிய நாடக வர்ணனை என்று கூட சொல்லலாம். காதல், ,விரகதாபம், ஏக்கம், பொய்க் கோபம், ஊடல், பொறாமை, சந்தோஷம், கற்பனை மனக்கோட்டை விவரங்கள் என்று பலவகையாக தானே மனதில் அனுபவித்து எழுதியிருக்கிறார். இதை விப்ரலம்ப ஸ்ரிங்காரம் என்று சொல்வார்கள். தனிமையில் வாடும் ஏக்க பிரதிபலிப்பு. ராதை, கிருஷ்ணனை நினைந்து வாடும் நேரங்களின் நேர் முக வர்ணனை. ராதையுடன் கிருஷ்ணன் ஆனந்தமாக பழகும் நேரத்தில் கிருஷ்ணனின் மனத்தை, அவன் ஆனந்தத்தை அவனே அவரிடம் சொன்னதுபோல் உணர்ந்து அனுபவித்து நமக்கும் அதை அழகாக ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களில் வர்ணிக்கிறார்.. கோவிந்தா, மாதவா, ஹரி, கேசவா என்று ராதா கிருஷ்ணனை அழைப்பதாக அவர் பாடும் அழகே ஒரு அற்புதம். அடாடா இதை பாலமுரளி கிருஷ்ணா ரசித்து பாட கூடவே நானும் எத்தனை முறை பாடிக்கொண்டே இருக்கிறேன்.
இவற்றை எட்டு பதங்களில் அவர் எழுதியது அஷ்டபதி எனப்படும். ராதா வேறு யாரோ ஒரு ஜீவன் அல்ல. கிருஷ்ணனே தான். கிருஷ்ணனின் சக்தி தான் ராதா என்ற உருவகம். அந்த சக்தியை உன்னதமாக பிரேம ஆனந்தமாக ஈடிணையற்ற தெய்வீக உறவாக பரிபூர்ண ஆனந்தமாக வாரி வழங்கி நம்மை இன்பத்தில் ஆழ்த்தும் அபூர்வ காவியம் கீத கோவிந்தம். மனதிலேயே நாம் ராதாகிருஷ்ண கல்யாணத்தை தினமுமே பாடிக்கொண்டே ரசிப்போம்.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



