
முந்தைய தலைமுறைகள் வாழ்ந்த விதம். – நங்கநல்லூர் J K SIVAN
பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி அறிவு பெற வேண்டிய அவசியம் இல்லை என்று ஆண்கள் நினைத்து அது வழக்கமாக இருந்த காலத்தில் எத்தனையோ அற்புத பெண்களின் திறமை வெளிப்படாமலேயே போய் விட்டது. அப்புறம் தான் பால்ய விவாகம், சாரதா சட்டம் வந்தது, பெண்ணுரிமை பெண்களுக்கு சம அந்தஸ்து என்று எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் பெருமை வெளி வந்தது. என் அம்மா பள்ளிக்குச் சென்றதில்லை. திருமணம் என்றால் என்ன என்று புரியாத விளையாட்டுப் பருவத்திலேயே திருமணமாகிவிட்டது. நல்லவேளை எங்க அம்மா தப்பித்தாள் . 90 வயதுக்கு மேல் வாழ்ந்தால். அப்பா 83 வயது வாழ்ந்தார். ஆனால் ஒன்பது பத்து வயதில் கல்யாணம் செய்து வைக்கப்பட்டு பெரியவளாவதற்கு முன்பே விதவையான பெண்கள் அநேகர். இளம் வயதிலேயே அழகு வேண்டாம் என்று தலையை மொட்டை அடித்து, நெற்றிக்கு திலகம் குங்குமம், வளையல், நகைகள் வேண்டாம் என்று நார்மடி என்ற காவி அல்லது சந்தனக்கலரில் , அல்லது வெள்ளைக்கலரில் புடவை தலையை மூடி, சமூகத்தில் எந்த அந்தஸ்தும் இல்லாத அப சகுனமாக கருதப்பட்டவர்கள். இன்னும் கொடூரமான ஒரு விதி, கணவ ன் இறந்து விட்டால் இளம் மனைவியும் உயிரோடு அவன் சிவத்தோடு எரிக்கப்பட்டது வழக்கத்தில் இருந்தது. உடன் கட்டை ஏறுதல் என்று இதற்கு பெயர். அப்படி இறந்த பெண்கள் சுமங்கலி பெண்கள் தினத்தன்று வணங்கி கொண்டாடப்பட்டதும் அவர்கள் ஆசி வேண்டியதும் எங்கள் குடும்பத்தில் வழக்கம் இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. சதி என்கிற சட்டத்தால் இந்த வழக்கம் நின்றதே தவிர கிராமங்களில் அங்கொன்று இங்கொன்றாக பெண்கள் உடன்கட்டை ஏறுவது நடைபெற்று, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தீமை விலக்கப்பட்டது. எனக்கு நினைவிருக்கிறது.
அப்படி வாழ்க்கை இழந்தவள் ஒரு அத்தை. இளம் விதவையாக இருந்ததையோ, வாழ்க்கையை இழந்ததையோ அவள் லக்ஷியம் பண்ணவில்லை. அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை அவளுக்கு. ஒன்பது வயது குழந்தையாகி விளையாடியவளைப் பிடித்து மணமேடையில் அமர்த்தி 18 கஜம் கனமான புடவையை அவள் மேல் சுற்றி அவள் ஒரு 12-15 வயது பையனுக்கு மனைவியாக்கப்பட்டாள் . கணவன் பையனோடு சேர்ந்து விளையாட ஒரு ஜோடி கிடைத்ததால் இருவரும் பாண்டி பல்லாங்குழி விளையாடுவது வழக்கம்.
சில வருஷங்கள் கழித்து அவள் புஷ்பவதியானாள் . ஒருநாள் அவளை அவள் புருஷன் வீட்டில் கொண்டு விட்டார்கள். நிறைய வேலை செய்ய பழக்கப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு டஜன் ஆசாமிகளாவது இருப்பார்கள். ஆண்கள் வேலைக்கு செல்வார்கள். வேலை என்றால் ஏதோ கம்பனி, ஆபிஸ் என்று கனவு காண வேண்டாம். வயல் தான். காலை உணவு, மதியம் வாழை இலையில் சாப்பாடு. மாலை எதாவது நொறுக்ஸ். இரவு முக்யமாக பலகாரம். இதை ருசி குறையாமல் தயாரிக்க வேண்டும். தயாரிக்க ஸ்டவ், காஸ் அடுப்பு எல்லாம் என்ன என்றே தெரியாத காலம் ஆச்சே. ஆகவே மூன்று குமிழ் வைத்த களிமண்ணால் வேயப்பட்ட மெழுகிய களிமண் அடுப்பு. அதை நிரப்ப தோட்டத்தில், காட்டில் வெட்டப்பட்ட மரங்கள் விறகு என்று வெயிலில் காய வைத்தவை. சுள்ளிகள். புகையை ஊதி அப்புறப்படுத்த ஊதாங்குழல் என்று இரும்பில் செய்யப்பட்டு வீட்டுப் பெண்களால் மார் வலிக்க புகை கண் எரிச்சல் கொடுக்க, கண்ணீரோடு ஊதி அடுப்பெரிப்பார்கள். சாதம் வடிக்க பிரிஸ்டீஜ் குக்கர் கிடையாது. பெரிய பித்தளை தவலை அல்லது பெரிய வெண்கல பானை. சில வீடுகளில் பானை. அரிசி கொதித்து சாதமாகிவிட்டது என்று தெரிந்தவுடன். அதன் மேல் ஒரு தட்டு மூடப்பட்டு துணியால் குறுக்கே கெட்டியாக இருகைகளாலும் பிடித்துக்கொண்டு இறக்கி கஞ்சி வடிக்கப்படும். கஞ்சி ஆறியவுடன், கொஞ்சம் மோர் பெருங்காயம், உப்பு போட்டு ஜலம் சேர்த்து குழந்தைகள் சாப்பிட்டு விடும். சூடான கஞ்சியோடு கொஞ்சம் பால் சேர்த்து நாட்டு சர்க்கரை போட்டு சூடாக பருக பெரியவர்கள் காத்திருப்பார்களே. இருபது இருபத்து ஐந்து டிக்கெட்களுக்கு சாப்பாடு என்றால் எத்தனை சாதம் வடிக்க வேண்டும். அதுவும் எல்லோரும் சமர்த்தியாக சாப்பிடுபவர்கள்.
வீட்டில் நிறைய குழந்தைகள் வளைய வரும். மேயும். வீடு என்றால் ஒட்டு வீடு. ரெண்டு கட்டு மூன்று கட்டு என்று உள்ளே உள்ளே போய்க்கொண்டே இருக்கும். பின்னால் கொல்லை வரை செல்லும். கன்றுக்குட்டி பசு எல்லாம் பின்னால் காத்திருக்கும்.
அவர்களுக்கு உணவு மூன்று வேளையும் சாதம் தான். உணவு என்றால் வெறும் சாதம், குழம்பு, ரசம், காய், தயிர் என்று இல்லை. ஏதோ ஒரு சாதம். அதை தனித் தனி தட்டுகளில் உண்பது வழக்கம் இல்லை. அனைத்து அரை டிக்கெட்களும் 3லிருந்து 15 வரை வரிசையாகவோ வட்டமாகவோ உட்கார்ந்திருக்கும் . வட்டத்தின் நடுவே பெரிய பாத்திரத்தில் கலந்த சாதம், பிசைந்த சாதம் தயாராக இருக்கும். ஒரு முதியவள், பாட்டியோ, அத்தையோ, சித்தியோ, அம்மாவோ
அந்த வட்டத்தின் உள்ளே உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நீட்டப்பட்ட கையிலும் போடுவாள். ஒரு கைக்கு போட்டு விட்டு மறு கைக்கு நகர்வாள் . ரெண்டு சுற்று, மூன்று சுற்றிலேயே பாத்திரம் நிறைய இருந்த தயிர் சாதமோ, குழம்பு சாதமோ, ரசம் சாதமோ காலியாகிவிடும். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஒவ்வொரு கைப்பிடியிலும் ஏதாவது ஊறுகாயோ, காயோ வைத்து கலந்து தான் போடுவாள். எரிச்சகரி என்று ஒரு அமிர்தம். பழைய கூட்டு, கரி, சாம்பார், ரசம் பருப்பு எல்லாம் ஒன்று சேர்த்து வெங்காயம் கீரை ஏதாவது நறுக்கி போட்டு எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து கெட்டியாக தண்ணீர் வற்றி, உப்பு காரமாக, சரியான புளிப்புடன் தேவாம்ருதமாக இருக்கும் . அப்போதெல்லாம் பிரிட்ஜ் fridge கிடையாது என்பதால் மீந்து போன இந்த அயிட்டங்களை ஓன்று சேர்த்து செய்த recipe அது. அதை மோர் சாதத்துக்கு தொட்டுக்க என்று கொஞ்சம் வைத்து கொடுப்பாள். எல்லோருமே பசித்து சாப்பிடுவார்கள். இப்போது மாதிரி நொடிக்கு ஒருதரம் pridge ஐ திறந்து உள்ளே வேட்டையாட வசதி இல்லாத காலம். அலமாரியில் பிஸ்கட்டோ கிடையாதே. சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பொழுது போக்க டிவியோ கம்ப்யூட்டரோ, ஐபாடோ ipad கிடையாது. ரேடியோ என்றால் என்னவென்றே தெரியாது. ஒருவரோடு ஒருவர் பேச டெலிபோன் கூட இல்லாத காலம். இப்போது மாதிரி கர்ண குண்டலமாக ஒட்டிக்கொள்ள ஒரு மொபைல் தொலைபேசி, கைப்பேசி கிடையாது. குடிக்க ஆர்வோ தண்ணீர் கிடையாது. ஆற்றிலிருந்து மொண்டு வந்த தவலையில் உள்ள ஜலம், அல்லது பானையில் உள்ள நீர் தான் எல்லோருக்குமே.
அன்றன்று தயாரிக்கும் உணவுக்கு அரைக்க கரைக்க மிக்சி grinder கிடையாது. கல்லுரலில் நிறைய அரிசி, பருப்பு போட்டு மாங்கு மாங்கு என்று அரைப்பார்கள். காலை நீட்டிக்கொண்டு சிலர் அரிசி, பருப்புகளை எந்திரம் என்னும் இரு வலுவான வட்ட கல்லுக்குள் போட்டு அரைப்பார்கள். கீழ் வட்டக்கல் அசையாது. மேல் வட்டக்கல் ஒரு மர அச்சில் பொருத்தப்பட்டு ஒரு முனையில் கைப்பிடியாக ஒரு மரக் கோல்.உபயோகித்து உபயோகித்து அந்த கைப்பிடி வழு வழுப்பாக இருக்கும். அரிசி நாம் வாங்குவது போல் பையில் வராது. நெல்லை குதிரிலிருந்து அப்பப்போது எடுத்து, புடைத்து, தூசி தும்பு நீக்கி, உரல் ( இதுவும் ஒரு கல்லால் ஆன உபகரணம்) அதன் வாய்க்குள் நிறைய நெல்லை போட்டு, மர உலக்கையால் இடிப்பார்கள். நெல்லை உமி நீக்கி, குருணை நீக்கி, அரிசியாக சேகரித்து அதை பெரிய பானைகளில் போட்டு வைப்பார்கள். அரிசிப்பானை இல்லாத வீடு அப்போது இல்லை. நெல்லை சேமித்து வைக்க குதிர் இல்லாத வீடும் பார்த்ததில்லை.இன்னும் சில கிராம வீடுகளில் நெல் குதிர் பார்க்கலாம்.
பெரிய பானைகளில் புளி , வெல்லம், எல்லாம் சேகரித்து வைத்திருப்பார்கள். மளிகைக் கடைகள் என்று நிறைய கிடையாது. வீட்டுக்கு தேவையான அரிசி பருப்பு புளி காய்கறிகள், எல்லாம் அவரவர் நிலத்தில் இருந்தே கிடைக்கும். எண்ணெய் செக்கிலிருந்து ( ஒத்தை அல்லது சில பெரிய செக்குகளில் ரெட்டை மாடு) சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும். எள்ளு, கொப்பரை ஆகியவைகளை செக்கில் இட்டு அதை வழ வழப்பான கனமான ஒரு உலக்கை போன்று ஒரு உபகரணம் அரைத்துக்கொண்டிருக்கும். அந்த மர உலக்கையின் கழுத்தில் இருந்து வரும் கயிறு மாட்டின் நுகத்தடியிலிருந்து வரும் மரத்தில் இணைக்கப்பட்டிருக்கும். மாடு நகர நகர, சுற்றி வர, அந்த தடியான மர உலக்கை செக்கில் உள்ள கொப்பரையையோ எள்ளையோ நசுக்கி எண்ணையாக அரைத்துக் கொண்டிருக்கும். பிறகு தெளிய வைத்து வடிகட்டி எண்ணையை பீப்பாய்களில் நிறப்பி விற்பார்கள். வீசை தோலா கணக்கு அப்போது. காலணா, அரையணா, மொட்டைத்தலை எட்வர்ட் ரூபாய், கிரீடம் வைச்ச விக்டோரியா ராணி போட்ட வெள்ளிக்காசு என்று இருந்தது. என்னிடம் வெகுகாலம் ஐந்தாம் ஜார்ஜ் தலை போட்ட வெள்ளி ஒரு ரூபாய் இருந்து காணாமல்போய் இன்று வரை எப்படி தொலைந்தது, எங்கே, எப்போது என்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.
விளக்கு வெறும் அகல் அல்லது, சிம்னி என்ற கண்ணாடிக்குடுவை போட்ட விளக்கு. உள்ளே கெரசின் பாட்டில் இணைக்கப்பட்ட திரி. ஹரிக்கேன் விளக்கு எங்கு போனாலும் தூக்கிக்கொண்டு போவோம். டார்ச் என்ன என்று தெரியாது. தெருவில் நாலு பக்கமும் கண்ணாடி பிரேம் போட்ட ஒரு கூண்டில் தினமும் ஒருவன் சாயந்திரம் வந்து விளக்கை ஏற்றிவிட்டு போவான். சில நேரங்களில் என்னை தீர்ந்து போய் விளக்கு அணைந்துவிடும். அல்லது நாலு பக்க கண்ணாடியில் எதிலாவது விரிசல் அல்லது ஓட்டை இருந்து அதன் வழியே காற்று போய் விளக்கு அணைந்து விடும். இரவில் அதிக நடமாட்டம் கிடையாது. தெருவெல்லாம் புழுதி தெரு தான். நடந்து நடந்து இரவில் கூட வெள்ளையாக பாதை தெரியும். நிலாவை நம்பி ராப்பயணம் மேற்கொண்ட காலம் அது.
தெருவில் நடமாடும் வண்டிகள் குதிரை வண்டிகள், பணக்காரர்கள், ஜமீன்தார், மிராசுகள் பயணிக்கும் காளை பூட்டிய வில் வண்டி, மைனர்கள் சவாரிக்கும் ரேக்ளா. இது ஒரே ஆள் மட்டும் சாய்ந்துகொள்ளாமல் முதுகு நிமிர்த்தி உட்க்கார்ந்துகொண்டு ஒத்தைக் குதிரையை இயக்கும் வேகமான குதிரை வண்டி. பாதசாரிகள்.
எங்கள் கொள்ளுத் தாத்தாவுக்கு ஒரு சட்டை கூட கிடையாது. கையில் கூஜாவுடன் பல காத தூரங்கள் நடை. கையில் ஒரு பழுக்காத் தடி (பாணா தடி என்றும் பெயர் உண்டு) . . வழியில் ஏதாவது கள்ளர், மிருகங்கள் குறுக்கிட்டால் தற்காப்புக்கு. காலில் பாதரோட்டுக் கட்டை. குமிழ் வைத்த மரத்தாலான ஒரு காலனி. குமிழ் கால் கட்டை விரலுக்கும் பெரு விரலுக்கும் இடையில் பிடிப்பாக இறுக்கிக்கொண்டு நடக்க உதவும்.
அந்த காலத்து பொழுது போக்கு என்பது ஊர்க் கோவிலில் நடக்கும் உற்சவங்கள், விழாக்கள் தான். அங்கும் பார பட்சம் உண்டு. யாருக்கு முதல் மரியாதை என்பதில். யாருக்கு உரிமை ஜாஸ்தி என்று அவர்களுக்குள்ளேயே சிலருக்கு போட்டியிருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். எப்படியோ சமாளிப்பார்கள். முடி திருத்தகம் எல்லாம் கிடையாது. ஊரில் நாவித குடும்பம் இருக்கும். அவர்கள் வாடிக்கைக் காரர்கள் வீட்டுக்கு மாதத்திற்கொரு முறை அல்லது ரெண்டு மாதத்திற்கொருமுறை வருவார்கள். அனைத்து குழந்தைகளுக்கும் அரை அங்குல நீளத்தில் முடி வெட்டி அப்பளா குடுமி. (முன் பாதி மண்டை, காதுக்கு மேலாக மழிக்கப்பட்டு) பின் மண்டை மட்டும் கருப்பாக இருக்கும். இடுப்பில் நாலு முழ துண்டு. இது தான் பள்ளிக்கூடத்துக்கும் யூனி பார்ம். பள்ளிக் கூடம் என்றால் ஏதோ கட்டிடம் என்று நினைத்துகே கொண்டு ஏமாந்து போக வேண்டாம். வாத்தியார் வீட்டு திண்ணை தான். வாத்த்தியாருக்கும் கிட்டத்தட்ட இதே யூனிபார்ம் தாம். நாலு முழ துண்டுக்கு பதிலாக எட்டு முழ தட்டுச் சுற்று அல்லது பஞ்ச கச்சம். வெள்ளை என்று ஒரு காலத்திலும் அந்த வேஷ்டி இருந்ததில்லை. ஏறக்குறைய காவியேறி இருக்கும். மேல் துண்டு தோளிலோ வேட்டிமேலோ கட்டப்பட்டு இருக்கும். அப்பளா குடுமிக்கு பதிலாக வழுக்கை பாய்ந்த குடுமி. தாடி மீசை எக்ஸ்ட்ரா .
அவர் ஸ்லோகங்கள், தமிழ் பாசுரங்கள், பாடல்கள் சொல்வார் பையன்கள் திருப்பிச் சொல்வார்கள். மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள். அர்த்தம் சொல்வார். புரிந்து கொள்வார்கள். சிலர் ஏடு வைத்திருப்பார்கள் அதில் எழுத்தாணியால் புள்ளி புள்ளி யாக எழுத்துக்களாக பொரித்துக் கொள்வார்கள். ஆசிரியருக்கு பீஸ் என்ன தெரியுமா. வீட்டில் காய்த்த புடலை, கத்திரி, வெண்டை, அவரை, கொத்தவரை, பூசணி, மிளகாய். நெல், வீட்டில் கடைந்த வெண்ணெய். சொம்பில் பால். தீபாவளி பொங்கல் சமயத்தில் சில பணக்கார மாணவர்கள் வீட்டிலிருந்து வேஷ்டி மேல்துண்டு கிடைக்கும். ரொம்ப பணக்கார பிள்ளைகள் சவரன், பொன் காசு கொண்டு வந்து தந்து நமஸ்காரம் பண்ணுவார்கள்.இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது? பயமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் அநேகர். அப்படி வாழ்ந்தவர்கள் சந்தோஷமாக நீண்ட நாள் ஆரோக்யமாக தான் வாழ்ந்து தான் மறைந்தார்கள். நமக்கு பதில் சொல்ல யோசிக்க வேண்டியிருக்கிறது. கொலஸ்ட்ரால், பீ பி B P , கிட்னி ஸ்டோன் , எம் ஆர் MRI SCAN ஸ்கேன் எல்லாம் பிறக்காத காலம் என்பதால் சுகத்தை தவிர, இன்பத்தை தவிர, வேறு ஒன்றும் தெரியவில்லை. எல்லோரும் மருந்து இல்லாமலேயே எழுபது என்பது தொண்ணுறு என்று வீட்டு, நாட்டு வைத்தியத்தில் வாழ்ந்தவர்கள். பக்தி மிகுந்து, வைத்தீஸ்வரனை நம்பி வாழ்ந்த எளிய ஆங்கிலம் படிக்காத மக்கள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


