VADAPALANI VENGEESWARAN TEMPLE – J K SIVAN

வடபழனி வேங்கீஸ்வரன் ஆலயம் நங்கநல்லூர் J K SIVAN

அக்டோபர் 26 ம் தேதி அன்று காலை அசோக்நகரில் என் மூன்றாவது பெண் வீட்டில் இருந்தேன்.
அமைதியான காலைப் பொழுது, சிறிது நேரம் பால்கனியில் படியில் அமர்ந்து பறவைகளின் சப்தத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். நிறைய மரங்கள் சூழ்ந்த அனேகமாக தனித்தனி வீடுகள் தோட்டங்களோடு உள்ளபகுதி. வாசலில் ஒருசில வியாபாரிகளின் காய்கறி, பழங்கள், கீரை, சப்தம் மட்டும் கேட்டது.

அன்று பிரதோஷமாக இருக்கிறதே இங்கிருந்து வடபழனி முருகன், வேங்கீஸ்வரன் கோவில் வரை நடந்து சென்றால் என்ன என்று தோன்றியவுடன் கால் தயாராகிவிட்டது. குளித்து காலையிலேயே 6.30க்குள் காப்பியும் சூடாக குடித்தாகிவிட்டதே. விடுவிடுவென்று என்று நடந்தேன். தெருவில் நடப்பது முன்பு சாத்தியம் இல்லை என்று இன்னொரு தடவை புரிந்தது. வேகமாக வண்டிகள் எதிரும் புதிருமாக, தெருவை கடக்க முடிய வில்லை, ஓரமாக நடக்க நடை பாதையில் நிறைய இடையூறுகள், இரு சக்கர வண்டிகள் அங்கும் வேகமாக ஓடுகிறதே. எங்கே எப்படி நடக்க முடியும். ஒருவாறு நடந்து வடபழனி அடைந்தேன். தெருவை கடந்து மேலே பாலத்துக்கு அடியில் திரும்பி ஸ்ரீ சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரன் கோயில் கோபுரத்தை நெருங்கினேன்.

வடபழ னியில் நாங்கள் என் சிறுவயதில் குடி இருந்த போது அடிக்கடி சென்ற கோவில் இப்போது மாறி விட்டது. நான் மட்டும் மாறாமலா இருக்கிறேன்?. காலில் செருப்பில்லாமல் அரை நிஜாரோடு சட்டையில்லாமல் தெருவில் ஓடிய நான் இப்போது யோசித்து கவனமாக பார்த்து மெதுவாக நடக்கிறேன்.

வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம் ஒரு அற்புதமான ஆலயம். எண்ணற்றோர் தொழுது வணங்கும் புராதன சிவாலயம். வடபழனி சிவன் கோவில் என்று பெயர். நாங்கள் வசித்த தெருவுக்கு பெயர் ஞாபகம் இல்லை. முனை வீட்டில், சமரபுரி முதலியார் வீட்டில் குடித்தனம் இருந்தோம்.வாசலில் பழையகால வீடுகளில் உள்ளது போல் ஒரு ஓபன் ஏர் திண்ணை. சுண்ணாம்பு மண் போட்டு கட்டிய சாய்ந்த கல் சோபா. அதில் தான் எப்போதும் ஏறி உட்கார்ந்து கொண்டு தெருவில் வேடிக்கை பார்ப்பேன்.என் வீட்டு திண்ணைக்கு எதிரே தெருவில் ஒரு லாந்தர் விளக்கு. சாயந்திரம் ஒரு ஆள் சைக்கிளில் வருவான். சிறிய ஏணி ஒன்று கொண்டு வருவான். அதை விளக்கு கம்பத்தின் மேல் சாய்த்து ஏறி, கண்ணாடி கதவை திறந்து தெருவிளக்கு லாந்தர் கண்ணாடிகளை அழுக்கு துணியால் துடைப்பான். திரியை நிமிண்டிவிட்டு, விளக்கின் அடி பாக கிண்ணத்தில் நிறைய எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி விட்டு கண்ணாடி கதவை மூடுவான். மறுநாள் காலை வரை எரியும். அதன் ஒளி தான் இருட்டைப் போக்க உதவும் சாதனம் இருக்கவே இருக்கிறது நிலா ஒளி.

வண்டுகள் தீண்டும் முன்னரே மலர்களைப் பறித்து, இறைவனை பூஜிக்க விரும்பினார் ஒரு முனிவர். அதனால், பொழுது விடியும் முன்னரே மரங்களில் ஏறி பூக்களைத் தீண்டுவதில் வண்டுகளை முந்திக் கொண்டார். இவரது பக்தியைப் போற்றும் வகையில் எளிதாக மரம் ஏற அவருடைய கால்களை, மரமேறும் வேங்கைப் புலிக் கால்களாக மாற்றித் தருமாறு வேண்டிக் கொண்டதன் பலனாக அவர் கால்கள் புலிப்பாதமாகிவிட்டது. அதனால் தந்தான் இறைவன். அதனால் அவர், `புலிக்கால் முனிவ’ரானார். சமஸ்க்ரிதத்தில் வியாக்கிர பாதர்’ .அவர் வழிபட்ட ஆலயம் என்பதால் இங்கே சிவன் பெயர் வேங்கீஸ்வரர் முனிவர் வழிபட்ட ஈசனாதலால், இந்தக் கோயில் மூலவர், `வேங்கீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் காண விரும்பி, அத்திரி முனிவர்-அனுசூயா தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஆதிசேஷன். அவர் பெயர் அப்போது பதஞ்ஜலி . இவரும் வியாக்கிரபாதரும் சேர்ந்து சிவ பரம் பொருளை வழிபட்ட ஸ்தலம்தான் இந்த வேண்டிய வரம் தரும் வேங்கீஸ்வரம். இப்போது ”வடபளனி” என்று வெள்ளைக்காரன் போல் நாம் சொல்லும் வடபழனி.

கிழக்கு பார்த்த வேங்கீஸ்வரர் ஆலயத்தின் அழகான ஒன்பது நிலை ராஜகோபுரம் வேகமாக காரில் வடபழனி நோக்கி செல்லும் சாலையில் தூர இருந்தே தெரியும். நாலு பக்க வாசல். உள்ளே நுழைந்தால், தங்க முலாம் பூசிய பெரிய த்வஜ ஸ்தம்பம். அழகிய வேலைப்பாடுகளுடன் பலிபீடம், சிறிய மண்டபம், அதில் நந்திகேஸ்வரன். சிற்பக்கலை மிக்க தூண்கள் கொண்ட பெரிய மண்டபம். வலது புறம் வியாக்கிர பாதரும் இடது புறம் பதஞ்சலி முனிவரும் தெற்குப் புறத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோர் நின்று கொண்டு வேங்கீஸ்வரரை தொழுகிறார்கள். ஐந்து தலை நாக வெள்ளி கவசத்தோடு வேங்கீஸ்வரர் கம்பீரமாக பெரிய சிவலிங்கம். பிள்ளையாருக்கு தனி சந்நிதி. அழகிய தக்ஷிணாமூர்த்தி.அம்பாள் சாந்தநாயகிக்கு தனி சந்நிதி.
கோவிலின் விமானம் பழைய கால சம்பிரதாயப்படி கஜப்பிரஷ்ட அரை வட்டவடிவம். ப்ரஹாரத்தில் ப்ரம்மா, தியான சண்டிகேஸ்வரர், துர்க்கை, சுப்பிரமணியர் வள்ளி – தெய்வானை தரிசனம் பெறலாம். வடமேற்கு மூலையில் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி, மகாலக்ஷ்மி. இவர்களை வலம் வந்த பின்பு, 24 தூண்க ளுடன்கூடிய விசாலமான மண்டபத்தின் வழியாக வந்தால்… அழகிய முன்மண்டபத்துடன் கூடிய தனிக் கோயில். அதில் இருபுறமும் உள்ள சிலை வடிவங்கள் அழகான கலைத் தோற்றத்துடன் காணப்படுகின்றன. வழவழப்பான மார்பிள் தரை குளுமையளிக்கிறது. உள்ளே நின்ற கோலத்தில் சாந்தநாயகி அருள்புரிகிறார்.நான் சென்ற 26.10.23 அன்று ப்ரதோஷம் . காலையிலேயே அபிஷேகத்தின் போது சென்று தரிசித்தேன். பழைய சிவன் புதுசா வந்திருக்கேன் என்று ஈஸ்வரனிடம் அறிமுகம் செய்து கொண்டு திரும்பினேன். நான் வசித்த தெரு அடையாளமே தெரியவில்லை. எந்த வண்டியும் என் மீது ஏறாமல் ஓரமாக ஆற்காட் ரோடு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சமரபுரி வீடோ, எதிரே வேங்கீஸ்வரர் கோயில் வாகன மண்டபமோ, எதிர்த்த மண் தெருவில் வள்ளலார் பக்தர்கள் திருச்சபையோ, அங்கே தேங்காய் துருவல், அவலோடு சர்க்கரை போட்டு தரும் பூவரச மரத்தடி மேடையோ இப்போதுமா இருக்கும்?
ஒரே ஒரு சம்பவம் மனதில் ஒரு ஆழமான கீறல், வடுவாக பதிந்திருக்கிறது. அப்போது எனக்கு ஐந்து ஆறு வயது.என்னோடு வடபழனி கூரைக்கட்டு கட்டிடத்தில் படித்தவள் சம்பா என்ற வேங்கீஸ்வரர் கோயில் குருக்கள் மகள். அவளுக்கும் அதே வயது. அவள் அக்கா பிரசவித்து வீட்டிலேயே ஒரு இரவு குழந்தை பிறந்தது. மறுநாள் காலை ஒரே கூட்டம் எங்கள் வீட்டிலிருந்து ஒரு தெரு தாண்டி கோவில் அக்ராஹாரம். அங்கே ஒரு ஓட்டுவீட்டில் குருக்கள் வசித்தார். அப்பாவுக்கு குருக்கள் ரொம்ப பரிச்சயம். ஆகவே மறுநாள் காலை அப்பா குருக்கள் வீட்டுக்கு போகும்போது நானும் கூடவே ஓடினேன். வீட்டில் யாரும் பேசவில்லை.குருக்கள் தலையில் வெள்ளை சவுக்கத்தை போட்டுக்கொண்டு அதன் கண்களை துடைத்துக் கொண்டு இருந்தார். அப்பா அவர் தோளைத் தொட்டபோது பேசவில்லை, உடம்புகுலுங்கியது. அழுகை சத்தம் மட்டும் வீட்டில் உள்ளே இருந்து கேட்டது. சம்பாவைக் காணோம். எங்கு போனாளோ ? அப்புறம் இதை இப்போது எழுதும் வரை அவளைப் பார்க்கவில்லை. 80 வருஷம் ஆகிவிட்டது. இருக்காளோ , போய்ட்டாளோ தெரியாது.
வாத்தியார்கள் கூட்டமாக ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள், வாசலில் ஒரு மூங்கில் ஓலையை யாரோ ஒரு தலைப்பாக்காரன் முடைந்து கொண்டி ருந்தான். ரெண்டு மூங்கில் கொம்புகள் ஏணி மாதிரி பண்ணி படுக்க போட்டிருந்தது. வா என்று வேகமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னை அப்பா இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டுக்குள் போகாமல் நேராக கொல்லை பக்கம் இழுத்ததுக் கொண்டு போனார். கிணற்றுக்கு அருகே வாளியில் அம்மா ஜலம் வைத்திருந்தாள் என்னையும் குளிப் பாட்டி அப்பாவும் குளித்தார்.
அப்புறம் தான் அம்மாவிடம் அப்பா சொன்னது கொஞ் சம் கேட்டது.
”சுந்தரிக்கு என்ன ஆச்சு?
”பிரசவம் சிக்கலா போய்ட்டுதாம். குழந்தை தலைமாடு கால்மாடு மாறி கொடி சுத்தி எவ்வளவு பாடு பட்டும் மருத்துவச்சியாலே காப்பாத்த முடியலையாம். ரத்தப் போக்கு அதிகமாய்ட்டதாலே குளிர் ஜன்னி வந்து சுந்தரி 27 வயசுலே குழந்தையோடு இன்னிக்கு விடிகாலம்பற வெள்ளிக்கிழமை போய்ட்டாள்
.”ஈனஸ்வரத்தில் ஆத்துக்காரர் வந்துட்டாரான்னு ?” கேட்டதா ஆத்தாக் காரி அழுதுண்டே சொன்னா. ஆம்படையான் இன்னும் மன்னார்குடியிலிருந்து வரலே. இன்னிக்கு காலம்பரம் வந்தாவிட்டு எடுக்கப் போறா…
‘போனவாரம் குருக்கள் நம்மாத்துக்கு வந்து முப்பது ரூபா வேணும் தலைச்சன் பிரசவம் பொண்ணுக்குன்னு கேட்டாரே நீங்க கொடுத்தீளோ?’
”’பதினாலு ரூபா தேத்திக் கொடுத்தேன். அதுக்கு மேலே என்கிட்டே யில்லியே என்ன பண்றது…
”’சரி இதை சீக்ரம் கொடுக்கிறேன் ன்னு வாங்கிண்டு போனார்…..பாவம்”

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;