vazhoor dharshan – J K SIVAN

12.2. 2023   வழூர்  தரிசனம்.  — நங்கநல்லூர்  J K  SIVAN

தமிழகத்தில் பல இடங்களில் காணப்படும் எளிய கிராமங்களில் ஒன்றாக தான் வழூர்  காணப்படுகிறது. சென்னையில் இருந்து .சுமார்  75-80  கி.மீ. தூரம்.  உத்தரமேரூர் -வந்தவாசி  மார்கத்தில்  சென்று அம்மையப்ப நல்லூர் அருகே இடது பக்கம் திரும்பி  எரிக்கரையோடு  ஒரு 10 கிமீ. சென்றால் வழூர்  கிராமம் தென்படும் . இங்கு தான் காமகோடி சாஸ்திரிகள் வாழ்ந்தார். இங்கு தான் அவர் வளர்ப்பு மகள் மரகதம் சேஷாத்ரி  ஸ்வாமிகளை உலகத்துக்கு தந்தாள்.
அங்கு தான்  மரகதம்  தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வாழ்ந்து வரதராஜ சாஸ்திரிகள் மனைவியாகி, சேஷாத்ரி   ஸ்வாமிகளை தனது  மணிவயிற்றில்  பெற்றெடுத்தாள். வீட்டில் பின் புறம் ஒரு துளசி மாடம்.  அதில் தினந்தோறும்  மரகதம்  துளசி பூஜை பண்ணுவாள்.  அந்த துளசி மாடத்தை இப்போது மணிமண்டபத்தில் துளசியோடு காண்கிறோம். மண்டபம் ஜொலிக்கிறது. இந்த சின்ன கிராமம் உலகப்புகழ் பெற்று விட்டது.
150 வருஷங்கள் பின்னோக்கி  சென்றால்  நாம்  நிற்கும் இந்த இடம் ஒரு வயலும் வரப்பும் நிறைந்த ஸ்தலம். எங்கும் மரங்கள், வாழைத் தோப்புகள். அதோ ஒரு குளம், அதன்  கரையில் ஒரு பழைய   சிதிலமாகும் நிலையில் ஒரு பெருமாள் கோவில்.சுந்தரவதன பெருமாள் கோவிலுக்கு  எத்தனை முறைகள் சிறுவன் சேஷாத்ரி சென்று வணங்கி இருப்பான்.
இன்று  காமகோடி சாஸ்திரிகள் வாழ்ந்த  அந்த பழைய ஒட்டு வீடு இருந்த இடத்தில் பிரம்மாண்டமான  பல கோடி ரூபாய்களை விழுங்கி விட்டு எழுந்த ஒளிவிடும் ஆலயம்  போன்ற  மணிமண்டபம்.  ஒரு  அரசாங்க அங்கீகாரம் பெற்ற  ட்ரஸ்ட் நிறுவனம் அமைத்து  பக்தர்களிடம் நன்கொடை பெற்று இந்த அற்புதமான  மண்டபம் உருவாகியிருக்கிறது.

அமெரிக்காவில் வசிக்கும் ஸ்ரீ  வீரமணி என்பவர்  சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தர். அவர்  வழூருக்கு வந்ததில்லை,  பார்த்ததில்லை,   ஒருநாள்  ஸ்வாமிகள் அவர் கனவில்  தோன்றி  ”வழூருக்கு போ, அங்கே ஒரு மணிமண்டபம் கட்டுகிறார்கள், அதற்கு உதவு” என்று ஆணையிட்டிருக்கிறார். ஒரு விவரமும் அறியாத வீரமணி மூன்று மாத காலம் அலைந்து வழூர் வந்தார். அப்புறம் என்ன?  தங்கக்கை  ஆசீர்வாதம் தான் நமக்கு கிடைத்த இந்த அழகிய மணிமண்டபம்.
1870ல் ஜனவரி 22 சனிக்கிழமை  ஹஸ்த நக்ஷத்ரத்தில் சேஷாத்ரி ஸ்வாமிகள் பிறந்தபோது இந்த இடம் ஒரு சிறு ஒட்டு வீடாக இருந்திருக்கலாம்.  எங்கும்  வாழைத்தோப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பழைய ஒட்டு வீடுகள், குடிசைகள் நிறைந்திருக்
கலாம்.காமகோடி சாஸ்திரி இந்த வீட்டில்  இருந்த போது  தான்  தனது  மாணவன் வரதராஜனுக்கு தனது மகள் மரகதத்தை கல்யாணம் பண்ணி வைத்தார். பல வருஷங்கள்  குழந்தை பாக்கியம் இல்லையே என்று எத்தனை முறை மரகதம் இங்கே கண் கலங்கினாள்.  ராமேஸ்வரம் போல பல  புண்ய ஸ்தலங்களுக்கு  புத்ரபாக்யம் வேண்டி  க்ஷேத்ராடனம் பண்ணினாள்.  ஆசார அனுஷ்டானங்களோடு  எவ்வளவு  மங்கள சஷ்டி, மங்கள குமார விரதத்தை வரதராஜன் மரகதம் தம்பதியர்  அனுஷ்டித்தார்கள்.  ஆனாலும், குழந்தைப் பேறு இல்லை.”அப்பா,  நான் என்ன பாவம் பண்ணினேன்,  இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவில்லையே’’ என்று மரகதம் அப்பா காமகோடி சாஸ்திரிகளிடம் கதறினாள்.  ‘குழந்தே, கவலைப்படாதேம்மா , காமாக்ஷி அம்பாள் கைவிடமாட்டாள். சீக்கிரமே உனக்கு புத்ர  ப்ராப்தி உண்டாகும்’காமகோடி சாஸ்திரிகள் குலதெய்வமான  காஞ்சி காமாக்ஷி உபாசகர். காஞ்சிபுரம் 20-25 கி.மீ. நடந்து தினமும்  அம்பாள் முன்னாள் அமர்ந்து ஜபம் பண்ணுவார். ஒரு நாள் கனவில்  காமாக்ஷி அம்பாள் ப்ரத்யக்ஷமாகி  ‘‘நவநீதம் (வெண்ணெய் )கொடு ஞானக்கலை  பிறக்கும்” ஆசிர்வதித்தாள். சீக்கிரமே  சேஷாத்ரி  ஸ்வாமிகளை பெற்றாள்  மரகதம்மாள்.
வரதராஜன் மரகதம் தம்பதி வாழ்ந்த  வீடு காஞ்சிபுரத்தில் தெற்கு தெருவில் கண்டு பிடிக்கப்பட்டு  புனருத்தாரணம் பண்ணப்பட்டு  மஹா பெரியவா அனுகிரஹத்தால், இப்போது சேஷாத்திரி நிவாஸம் என்று பெயரில் அவர் படத்தோடு தியான மண்டபமாக விளங்குவதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
காஞ்சிபுரத்தில்  அம்மா மரகதத்தின் கையைப்  பிடித்துக் கொண்டு  சேஷாத்திரி ஸ்வாமிகள் குழந்தைப் பருவத்தில் எத்தனை முறை  காஞ்சி காமாக்ஷி ஆலயம் நடந்து  சென்று  அம்பாளை தரிசித் திருப்பார் என்று எண்ணத்  தோன்றுகிறது. அப்படித்தானே ஒருநாள்  ஒரு பொம்மைக் காரனிடம் தவழும் கிருஷ்ணன் வெண்கல விக்ரஹத்தைப்  பெற்றுக்கொண்டு ஒரே நாளில் அவனது எல்லா  பொம்மைகளும் விற்றுப் போக அருளி  ‘தங்கக்கை” என்று போற்றப்பட்டார்.  திருவண்ணாமலையில் அத்தனை வியாபாரிகளும் சேஷாத்ரி ஸ்வாமிகள் வரமாட்டார் எதையாவது தொடமாட்டாரா என்று ஏங்கினார்கள். அவர் கை  பட்டால் அமோக லக்ஷ்மி  கடாக்ஷம் அல்லவா? 

 வழூர் மணிமண்டபம் உள்ளே நுழைந்தால் கண்ணைப் பறிக்கும் சேஷாத்ரி ஸ்வாமிகள் விக்ரஹங்கள் உள்ளன. வழக்கமாக  வலது காலை இடது கால் மேல் அணைத்துக்கொண்டு, வலது கையை வலது தொடை மேல் வைத்தவாறு,  இடது கையால் முகவாய் கட்டையை பிடித்துக்கொண்டு நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி பூச்சோடும், தாடி மீசையோடும்  நம்மைப்  பார்த்து  புன்னகைக்கும்  சேஷாத்ரி ஸ்வாமிகள் சிலை.
ஒரு மணி நேரத்துக்கு மேல் இந்த அழகிய  மணி மண்டபத்தில்  கண்ணுக்குள் சேஷாத்திரி ஸ்வாமிகளை  இருத்திக்  கொண்டு தியானம் பண்ணினேன்.  வழவழப்பான  சலவைக் கல்  தரை. தரையில் உட்கார முடியவில்லை.  நாலைந்து பிளாஸ்டிக்  நாற்காலிகள் இருந்தது அதில் ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தோம்.   சில பக்தர்கள் ப்ரதக்ஷிணம் பண்ணி விட்டு வந்து  அவர் சந்நிதி எதிரே  தரையில் அமர்ந்து ஸ்தோத்ர பாராயணம் பண்ணுகிறார்கள்.  நான் சென்றபோது ரெண்டு பேர் மட்டுமே  இருந்தார்கள். 

சுவற்றில் ஆறு ஏழு பெரிய  கல்  பலகைகள் பதித்து அதில்  ஸ்வாமிகளின் வாழ்க்கை குறிப்புகள் கல்வெட்டாக  வைத்திருப்பது ஸ்வாமிகள் சரித்திரத்தை சுருக்கமாக  பக்தர்கள் படித்து அறிந்து கொள்ள உதவுகிறது.   நிசப்தமான ஹால். மேலே நிறைய  மின் விசிறிகள். ஒளிவிளக்குகள். தங்க நிறத்தில் ஒரு  சிறு ஆலயம் அதில் சேஷாத்ரி  ஸ்வாமிகள் விக்ரஹம். நித்ய பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   சமீபத்தில் ஆராதனை உற்சவம்  நடந்து முடிந்து  ஹோமகுண்டத்தில்  மந்த்ரவிபூதி (சாம்பல்) இருந்தது என் அதிர்ஷ்டம்.    எடுத்து நிறைய  பூசிக்கொண்டேன்.
இந்த குக் கிராமத்தில் பிறந்த ஒரு பிராமண சிறுவன் பிற்காலத்தில் ஒரு பெரிய பிரம்ம ஞானியாகி, இன்னொரு  ஆத்ம ஞானி  ரமண  மகரிஷியை உலகத்துக்கு அறிவிக்கப்  போகிறவன்   என்று யாருக்கு தெரியும்? சேஷாத்ரி ஸ்வாமிகளின் அப்பா வரதராஜனுக்கு  நிச்சயம் தெரிந்திருந்தது.
ஒரு சம்பவம் நினைவூட்டுகிறேன்.   தனக்கு மரணம் மறுநாள் என்று முன் கூட்டியே  உணர்ந்த வரதராஜ சாஸ்திரிகள், முதல் நாள் மாலை மனைவி மரகதத்தையும், குழந்தை சேஷாத்ரியையும் அருகே அழைத்தார்.
‘‘மரகதம்,  ஸ்ரீ  காமாக்ஷியின் அருளால் நீ எனக்கு மனைவியாக வந்து  வாய்த்தாய்.  நம்முடைய குழந்தைகளில் சேஷாத்ரி மிக விசேஷமாக விளங்கப் போகிறான். நீயும் இன்னும் சிறிது காலம் சேஷாத்ரியின் பெருமையின் கீழ் இருந்துவிட்டு புறப்பட்டு விடுவாய். உனக்கும் கண்டிப்பாக கைவல்யம் உண்டு. நான் நாளை மரணித்து விடுவேன்’’ என்று சொன்னது தீர்க்க தரிசனம்.நிதர்சன உண்மை.
வழூர் கிராமம் அமைதியாக  ரம்யமாக  உள்ளது. மண்டபம் எதிரே  குளம், இதில் காமகோடி படித்துறை.  இங்கேயும்  அருகிலும்   உள்ள  கோவில்களைப்  பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;