கார்த்திகேயன் – நங்கநல்லூர் ஜே.கே.சிவன்
இன்று கார்த்திகை தீபம். கட்டாயம் மழை இருக்கும் நாள்.
நான் 83 வருஷங்களுக்கு முன்பு, இளவயதில் வடபழனி முருகன் ஆலயம் பெரிதாக உருவாகும் முன்பு அவனோடு விளையாடியவன். சிறு கூரையில் அவன் படம் வைத்திருந்தது.
மாமனுக்கும் மருமான்களுக்கும் நல்ல இணைப்பு, பிணைப்பு உண்டு. ஆவணியில் மாமன் பிறந்த நாளும் பெரிய மருமகன் விநாயகன் பிறந்த நாளும் கொண்டாடுகிறோம். அதே மாதிரி மாமன் நரகாசுரனைக் கொன்ற ஐப்பசி சதுர்த்தசியில் தீபாவளி விசேஷமாக கொண்டாடுகிறோம். அதே சமயம் தொடர்ந்து ஆறுநாள் விரதமிருந்து ஐப்பசி வளர்பிறை ஷஷ்டியில் சுப்ரமணியன், ஷண்முகன் சூரபத்மனை வதம் செய்த நாளை கொண்டாடுகிறோம். மாலுக்கு ஒருநாள், மால் முருகனுக்கு ஒரு நாள் என்று நாம் மனமார நன்றியோடு கொண்டாடும் வைபவங்கள் இவை. ரெண்டுமே தீய சக்திகளை அழித்த நாள். இந்த வருஷம் முருகனின் ஸ்கந்த ஷஷ்டி விழாவின் போது இலங்கையில் தூய தமிழ் பக்தர்களுடன் சேர்ந்து பல சிவாலயங்களில் முருகனை சிறப்பாக வணங்கும் பாக்யம் கிடைத்தது.
கந்தன் தமிழ் கடவுள். சங்க காலத்துக்கும் முன்பே தமிழ் மக்களின் வாழ்விலும், சைவ சமயத்திலும் மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற தெய்வம். கந்த சஷ்டி. ஷண்முகனின், அறுமுகனின் வீரத்தையும், ஞானத்தையும், அருளையும், தீமையை நன்மை வெல்வதையும் எடுத்துரைக்கும் மகத்தான திருவிழா. சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்வை மட்டும் நினைவுகூர்வதல்ல. மனிதனிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் இறையருளால் வென்று, ஆன்மிக ஞானத்தை அடைவதற்கான ஒரு குறியீடு.
கந்த புராணம் – தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றியது. காசியப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்தவர் கள் சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகியோர். சூரபத்மன் கடுந்தவம் இருந்து வரம் பெற்று தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான்.இந்திரன் ஆட்சியை பறித்து தேவர்களை சிறையில் அடைத்தான். தேவர்கள் குறை தீர, சிவபெருமான் தமது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தெய்வீக நெருப்புப் பொறிகளை வெளிப்படுத்தி அவற்றை அக்னி ஏந்தி, கங்கையின் வழியாகச் சரவணப் பொய்கையில் சேர்த்து, அங்கே ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்றி கார்த்திகைப் பெண்கள் அறுவரும் அந்தக் குழந்தைகளை அன்புடன் வளர்த்தனர்.உமா தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் அணைத்ததும், ஆறு முகங்களும் பன்னிரண்டு கரங்களும் கொண்ட ஒரே தெய்வீக வடிவமாக ஷண்முகப் பெருமான் தோன்றினார். சிவபெருமானின் சக்தியால் தான் சூரபத்மன் முடிவு என்பதால் தேவ சேனாபதியாக ஷண்முகன் உருவானான். ஆறுமுகன் சூரனோடு மோதுவதற்கு முன் அன்னை பார்வதியை வணங்கி அவளிடமிருந்து சக்தி வேலாயுதத்தை பெற்றான். சிக்கலில் முருகன் விக்ரஹத்துக்கு இன்றும் வியர்த்துக் கொட்டுகிறது. முருகனின் வேல் வெறும் சக்தி வேல் எனும் ஆயுதம் அன்று. அது அறியாமையை, அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானவேல்.
ஆறுமுகன் சூரபத்மன் யுத்தம் ஆறு நாள் நடந்தது.
”தேவர்களை சிறையிலிருந்து விடுவி” என்று வீரபாஹுவை தூதனுப்பினார். சூரனின் தம்பி தாரகாசுரன் வீராவேசமாக முருகப்பெருமானின் படைளோடு போரிட்டான் தோற்று உயிரிழந்தான்.
ஆனால் சூரனின் ஆணவம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ரெண்டாம் நாள் அசுரனின் படை அழிந்தது. மூன்றாம் நாள் சிங்கமுகாசுரன் வீழ்ந்தான். நான்காம் நாள் சூரன் மாயப்போர் நிகழ்த்தினான்சுப்ரமணியன் மாயையை அழித்தான். ஐந்தாம் நாள் வெகு மும்முரமாக சூரன் சகல சக்திகளோடும் ஆயுதங்களோடும் எதிர்த்தும் தோற்றான். ஆறாம் நாள் .ஷஷ்டி. சூர ஸம்ஹாரம் நடந்தது. மா மரமாக ஒளிந்திருந்த சூரனை இரு கூறாக்கியது ஷண்முக வேல். ஒரு கூறு வண்ணமாமயிலாயிற்று. மறு பாதி விடியலைக்கூவி நினைவூட்டும் சேவலாயிற்று. சுப்பிரமணியன் மயிலை வாகனமா கவும் சேவலைக் கொடியாகவும் ஏற்றான். சூரபத்மன் மறையவில்லை, மயிலும் சேவலுமாக சேவையானான்.
ஏழாம் நாள் சுப்ரமணியன் தேவசேனா திருமணம்.
ॐ तत्पुरुषाय विद्महे महासेनाय धीमहि । तन्नः षण्मुखः प्रचोदयात् ॥
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி தந்நோ ஷண்முகப் ப்ரசோதயாத்.
பரம்பொருளே , ஸ்கந்தா, குஹா, ஷண்முகா, தேவ சேனாபதி, உன்னை தியானிக்கிறோம். ஷண்முகா உன் அருளால் எம்மை நல்வழியில் செலுத்து.
षडाननं चन्दनलेपिताङ्गं महोरसं दिव्यमयूरवाहनम् । रुद्रस्य सूनुं सुरलोकनाथं ब्रह्मण्यदेवं शरणं प्रपद्ये ॥
ஷடானனம் சந்தனலேபிதாங்கம் மஹோரஸம் திவ்யமயூரவாஹனம் ருத்ரஸ்ய ஸூனும் ஸுரலோகநாதம்
ப்ரஹ்மண்யதேவம் சரணம் ப்ரபத்யே.
ஆறுமுகா, ஷண்முகா, சந்தன அபிஷேக, அலங்கார மூர்த்தி, மயூர வாஹனா சிவகுமாரா, தேவ சேனாபதி உன்னை சரணடைகிறேன். சுப்ரமணியன் ப்ரணவஸ்வரூபன்.
குறிஞ்சி நிலத் தெய்வம்: தொல்காப்பியத்தின்படி குறிஞ்சி நிலத்திற்குரிய (மலையும் மலை சார்ந்த இடமும்) கடவுள் முருகன் ஆவார். “சேய்” (இளமையானவர் / சிவந்த நிறத்தவர்) என்ற பொருளில் ‘சேயோன்’ என அழைக்கப்படுகிறார்.
சங்க இலக்கியச் சிறப்பு: நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் முருகனின் வேலன் வெறியாட்டு, குன்றக்குரவை போன்ற வழிபாட்டு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
வழிபாட்டு முறைகள்:
காவடி எடுத்தல்: அகத்தியரின் சீடரான இடும்பன், சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளைக் காவடியாகச் சுமந்து வந்ததன் நினைவாகப் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுக்கின்றனர். அலகு குத்துதல் & மொட்டை அடித்தல்: ஆணவத்தை அழித்து இறைவனிடம் சரணடைவதன் அடையாளமாக இவை கடைப்பிடிக்கப்படுகின்றன.
விரதங்கள்: கந்த சஷ்டி விரதம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் மற்றும் மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திர விரதங்கள் மிக முக்கியமானவை.
முருகனின் அறுபடைவீடுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு:
1. திருப்பரங்குன்றம், மதுரை : சூரபத்மனை வதம் செய்த பிறகு, இந்திரனின் மகளான தெய்வானையை முருகப்பெருமான் மணந்து கொண்ட தலம்.
2. திருச்செந்தூர், தூத்துக்குடி: கடற்கரையில் அமைந்துள்ள ஒரே படைவீடு. இங்குதான் முருகன் சூரபத்மனை வதம் செய்து, அவனை மயிலாகவும் சேவலாகவும் ஆட்கொண்டார்.
3. பழனி (திருவாவினன்குடி)திண்டுக்கல் : ஞானப்பழத்திற்காகக் கோபித்து ஆண்டிக் கோலத்தில் நின்ற தலம். போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட மூலவர் சிலை இங்குள்ளது.
4. சுவாமிமலை தஞ்சாவூர் தந்தை சிவபெருமானுக்கே பிரணவ மந்திரத்தின் (ஓம்) பொருளை குருவாக இருந்து உபதேசித்த தலம் (தகப்பன்சாமி).
5. திருத்தணிதிருவள்ளூர்: சூரபத்மனுடனான போருக்குப் பின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்து அமர்ந்த அமைதியான தலம்.
6. பழமுதிர்சோலை, மதுரை : வள்ளி, தெய்வானை சமேதராய் காட்சி தரும் தலம். அவ்வையாருக்கு ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என முருகன் திருவிளையாடல் நிகழ்த்திய இடம்.
(இவை தவிர சிக்கல் சிங்காரவேலர் கோவில், மருதமலை, வைத்தீஸ்வரன் கோவில் (செல்வமுத்துக்குமாரசாமி ), எட்டுக்குடி, இலங்கையில் உள்ள கதிர்காமம் மற்றும் மலேசியா பத்துமலை ஆகியவை புகழ்பெற்ற தலங்களாகும்).
முருகன் புகழ் பாடும் அற்புத பாடல்கள் 1. அருணகிரிநாதரின் திருப்புகழ்: இளமையில் தீய வழிகளில் சென்று வாழ்க்கையை வெறுத்த அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். அப்போது முருகப்பெருமான் அவரைத் தாங்கிப் பிடித்து, நாவில் “ஓம்” என எழுதி “முத்தைத்தரு பத்தித் திருநகை…” என அடியெடுத்துக் கொடுத்தார். சந்தக் கவிதைகளால் ஆன திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகியவற்றை அருளினார். “யாமிருக்க பயமேன்” என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு உணர்த்தியவர் இவரே.
நக்கீரரின் திருமுருகாற்றுப்படை: கற்கிமுகி என்ற பூதத்தால் சிறைபிடிக்கப்பட்ட நக்கீரர், தன்னை விடுவிக்க முருகனை வேண்டிப் பாடிய நூலே திருமுருகாற்றுப்படை (பத்துப்பாட்டில் முதலாவது). முருகப்பெருமான் தனது வேலால் மலையைப் பிளந்து நக்கீரரையும் மற்றவர்களையும் காத்தருளினார்.
ஒளவையாரின் முருகன் பாடல்கள் : களைப்புடன் நாவல் மரத்தடியில் அமர்ந்திருந்த அவ்வையாரிடம், மாடு மேய்க்கும் சிறுவனாக வந்த முருகன், “பாட்டி, சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டார். மணல் ஒட்டிய பழத்தை ஊதிச் சாப்பிடுவதைக் குறிப்பிட்டு, தமிழ்ப் புலமை கொண்ட அவ்வையின் அகந்தையை அன்பால் கரைத்தார்.
பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம்: சென்னை தம்பு செட்டித் தெருவில் நடந்து சென்றபோது குதிரை வண்டி மோதி பாம்பன் சுவாமிகளின் கால் எலும்பு முறிந்தது. மருத்துவமனையில் அவர் சண்முக கவசம் பாடி வழிபட, மயூர வாகனத்தில் முருகப்பெருமான் காட்சி தந்து அவரது காலைக் குணப்படுத்தினான் . மயூர வாகன சேவன விழா இன்றும் கொண்டாடப் படுகிறது.
கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் : காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் அமர்ந்து கந்தபுராணம் எழுதியபோது, முதல் வரியான “திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்…” என்பதை முருகப்பெருமானே அடியெடுத்துக் கொடுத்தார்.
முருகப்பெருமானின் திருவுருவங்கள் பல் வேறு. குழந்தை, பால சுப்ரமணியன் ந்தை வடிவம் ஒரு முகம் கொண்ட அழகன்.
ஆறுமுகம் பன்னிரு கரம் கொண்ட ஸ்கந்தன், ஷண்முகம் , ஆண்டியாக கோவணம் தரித்த பழனியாண்டி.
விசுவரூப ஸ்கந்தர் பல ஸ்தலங்களில் உயரமான மலைகள் மேல் காணப்படுபவன்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கு ராய கோபுரத்தில் பன்னிரண்டு முகங்களும் முப்பத்திரண்டு கரங்களும் கொண்ட ஸ்கந்தரின் விசுவரூபச் சிற்பம் உள்ளதாக அறிகிறேன். நான் மதுரை சென்றபோது தகவல் கிடைக்காததால் தரிசிக்க தவறி விட்டேன். உங்களால் முடிந்தால் தரிசியுங்கள். இதன் பின் உள்ள சரித்திர புராணமோ இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. மதுரை வாழ் என் அன்பர்களே, உங்களால் முடிந்தால் தரிசித்து விட்டு புகைப்படத்துடன் விபரங்களை எனக்கு சொல்வீர்களா? இன்னொரு விஷயம். எட்டு முகம் கொண்ட முருகன் எங்கே இருக்கிறான்? என்ன தாத்பர்யம்?
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.