
இசைக்கு ஈடு இணை ஏது ? – நங்கநல்லூர் J K SIVAN
”சிவன் ஸார் , நீங்க நிறைய சாமி, கோயில், ஸ்லோகம், மஹான்கள் னு எழுதறேளே, இப்போ மார்கழி சங்கீத ஸீஸன்ஆச்சே, சங்கீதம் பத்தி எதுவும் ஏன் எழுதலே? உங்களுக்கு சங்கீதம் பிடிக்காதோ?”
”சாம்பமூர்த்தி, என்ன இப்படி கேட்டுட்டேள்? .எனக்கு சங்கீதம் ரொம்ப பிடிக்கும். நான் சங்கீதம் கத்துக்க லையே என்பது பெரிய குறை. இப்போ எப்படி முடியும்?. குரல் 86-87ல் நடுங்க ஆரம்பிச்சாச்சு. நான் ரசிகன் எந்த மொழி பாட்டையும் ரசிப்பேன்.முடிந்ததை கூடவே பாடி கத்துப்பேன், கத்துவேன். என் கத்தல் நிறைய காதுகளில் விழுந்து டேமேஜ் பண்ணி இருக்கே! இதோ ஒரு சின்ன கட்டுரை எனது சங்கீத ஆர்வம் பற்றி.
எனக்கு சங்கீதம் தெரியும் என்று பெருமைப் படவும் முடியாது. தெரியாது என்று வருத்தப்படவும் வழியில்லை. ஏதோ எனக்கு தெரிந்த, முடிந்தவரை, ராக தாள ஞானம் இல்லாமல் பாடுவேன். பாவ (bhava )த்தைஉணர்வேன். என்று சமாதானம் அடையமுடியும். இதிலும் ஒரு சிறிய சிக்கல். பாடினால் யாருக்கு பிடிக்கும் என்று கேள்வி எழும்புகிறதே, அதற்கு ஒரே விடை, எனக்கு பிடிக்கும் என்பதால் நான் பாடுகிறேன், பாடுவேன்.
பாடுவது வேறு. கேட்பது வேறு. கேட்கப் பிடிக்கிறவர்கள் பாடவேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே. சங்கீதம் நமது பண்பாட்டில் கலந்ததோ இல்லையோ, ரத்தத்தில் கலந்தது என்று நிச்சயம் சொல்லமுடியும். பாடாதவர் எவருமே இல்லை. தனக்குள், தனக்கு மட்டும் பாடிக் கொள்கிறவர்கள் வெளியே பிறரைப் பாடிக் கொல்வதை விட இது மேன்மையானது. சமூக விரோதமானது அல்ல.
அவுரங்க ஜீப் பாடமாட்டான் என்பதை விட பாடுபவர்களை தண்டிப்பானாம். சங்கீதம் பிடிக்காது அவனுக்கு.
நவராத்ரி சமயத்தில் நிறைய மாமிகள் வீட்டில் வந்தவர்களை பாடச் சொல்வார்கள். சப்தம் வெளியே வராமல் பாடும் சாமர்த்தியம் கொண்டவர்கள் இருக்கிறார்கள், ஒரே ராகத்தில் எல்லா பாட்டுகளும் பாடமுடியும், ஆரம்பித்து விட்டு முடிக்க முடியாமல் தவிக்க நேரிடும், ”அடுத்த அடி மறந்து போச்சே”, என்று சமாளிப்பது எப்படி, ” ஒரு வாரமா இருமல், தொண்டை கட்டியிருக்கிறது” என்று வராத நோயை வரவழைப்பது சமய சஞ்சீவி போன்ற விஷயம் எல்லாம் தெரிந்துகொண்டேன்.
சிலர் பாட்டு ” படி’ ப்பார்கள். என் சிறுவயது நண்பன் Kn . வேலாயுதம் வீட்டில் அவன் அப்பா, காரைக்குடி கண்ணப்ப செட்டியார், வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வேன். ஒரு நாள், வேலாயுதம் வீட்டுக்குப் போனபோது, செட்டியார் ”சிவன் கெட்டிக்கார ஐயர் புள்ளே. நல்லா பாட்டு படிப் பாங்க’. எங்கே முருகன் மேல் ஒரு பாட்டு படிங்க” என்று சொன்னார். நான் அப்போது 15 வயது மாணவன். நெளிந்தேன். செட்டியார் ”படிங்க ”என்று சொல்வதன் மூலம் என்னை ‘பாடச்’ சொல்கிறார் என்பது தெரியாமல் ”அடடா முருகன் மேல் பாட்டு படிக்க சொல்கிறாரே, ஒருவேளை புஜங்க ஸ்தோத்ரம் , அல்லது கந்த சஷ்டி கவசம் ஸ்லோக புஸ்தகம் ஏதாவது கையோடு கொண்டு வந்திருக்கவேண்டுமோ?” என்று தோன்றியது. அப்புறம் தான் என்னை பாடச் சொல்கிறார் என்பது புரிந்தது. தெரிந்ததைப் பாடினேன்.
காரைக்குடி செட்டியார்கள், நகரத்தார் என்ற பெருமையான பெயர் கொண்டவர்கள். சங்கீத ஞானம் கொண்டவர்கள், சங்கீத வித்வான்களை ஆதரித்து கௌரவித்தவர்கள். நகரத்தாரைப் பற்றிச் சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. தோடி மேதை, திருவாடுதுறை TN ராஜரத் தினம் பிள்ளை, நாதஸ்வர சக்ரவர்த்தியை, ஒரு பிரபல நகரத்தார் குல தனவந்தர் தனது வீட்டில் பெண் கல்யாணத்தில் இசை விருந்து அளிக்க காரைக்குடிக்கு வரவழைத்தார். அது அவருக்கு கௌரவம், அந்தஸ்து.
ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர கச்சேரி என்ற விவரம் அறிந்து அண்டை அசல் கிராமங்களிலிருந்தெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு ஏராளமான பேர் காரைக்குடி வந்து தனவந்தர் வீட்டில் குழுமி விட்டார்கள்.
பிள்ளைவாள் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்தார். வழக்கம்போல் அற்புதமாக மூன்று நான்கு மணிநேரத்துக்கும் மேல் கான மழை பொழிந்தார். ரசிகர்கள் மாட்டுவண்டி, கோச் வண்டி, சாரட் எல்லாம் பிடித்துக் கொண்டு பல ஊர்களிலிருந்து வந்தவர்கள் ஆனந்த சாகரத்தில் மூழ்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனவந்தருக்கு தனக்கும் சங்கீதம் தெரியும் என்று சபையில் எல்லோர் எதிரிலும் காட்டிக் கொள்ள ஆசை. ஆனால் அந்த மனிதர்க்கு சுட்டு போட்டால் கூட சங்கீதம் என்ன என்றே தெரியாது. கௌரவத்துக்காக, பெருமையாக எல்லோரும் தன்னை புகழ, ராஜரத்தினம் பிள்ளை கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தவர் தனக்கும் சங்கீதம் தெரியும் என்று எல்லோர் எதிரிலும் காட்டிக் கொள்ள ஒரு வேலை செய்தார்.
ராஜரத்னம் பிள்ளையை கௌரவித்து பணமுடிச்சு கொடுத்தவர் பலர் எதிரில், உரத்த குரலில் பிள்ளையிடம் பேசினார்.
”ஐயா, உங்கள் கச்சேரி அருமையிலும் அருமை. நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு ஏமாற்றம். நீங்கள் தோடியில் ஒரு கீர்த்தனமாவது பாடி இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும் எனக்கு” என்று உளறி னார். அன்று பிள்ளை ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட, தோடியில் அபூர்வ ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம் செய்து எல்லோரையும் சங்கீதக் கடலில் மூழ்க அடித்ததில் தொப்பலாக நனைந்து நிறைய பேருக்கு தோடி ‘ ஈரம்’ இன்னும் காயவில்லை. ஆனால் சங்கீதம் அறியாத செட்டியார், இப்படி திடீர் என்று தனது அறியாமையை ”ராபணா” என்று போட்டு உடைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அநேகர் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தனர். ஊரில் பெரிய மனிதராயிற்றே.
ராஜரத்னம்பிள்ளைக்கு ஆச்சர்யம் ஒரு பக்கம். செட்டியாரின் முட்டாள்தனத்தைக் கண்டு சிரிப்பு ஒரு பக்கம். பிள்ளை குறும்புக்காரர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆகவே இந்தமாதிரி சந்தர்ப்பங்கள் கிடைத்தார் பிள்ளை விடுவாரா? சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு உடம்பை கூனி குறுக்கிக்கொண்டு பவ்யமாக எல்லோர் எதிரிலும் நடித்தார்.
”செட்டியார்வாள், உங்கள் சங்கீத ஞானம் எனக்கு தெரியும். நீங்கள் ஒரு ஜாம்பவான் என்று கேள்விப்பட்டு தான் உங்கள் வீட்டில் நாதஸ்வரம் வாசிக்க ஒப்புக்கொண்டேன். சிறந்த சங்கீத ரசிகர் நீங்கள். நான் தப்பு செய்துவிட்டேன். அந்த பயத்தில் இருந்தேன்.அதனால் உங்களை எப்படியாவது சந்திக்காமல் சென்றுவிடவேண்டும் என்று பார்த்தேன். என்னைக் கையும் களவுமாக பிடித்துவிட்டீர்களே. நீங்கள் சொன்னது ரொம்ப வாஸ்தவம். நான் இன்று தோடி பாடமுடியாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சொல்லாமல் தப்பிக்கலாம் என்று பார்த்தேன். வகையாக உங்களிடம் அகப்பட்டுக் கொண்டேன்.”
செட்டியார் பெருமிதமாக அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். தான் பிள்ளையை மடக்கி பிடித்ததை எல்லோரும் ரசிக்கிறார்களா என்று பார்த்தார். எல்லோரும் சிரித்தது ராஜரத்தினம் பிள்ளை ”அகப்பட்டுக்கொண்டதற்காக” என்று நினைத்தார். அப்போது நாதஸ்வர சக்ரவர்த்தி சொன்னது தான் இங்கு முக்கியமான விஷயமே.
”செட்டியார் மன்னிக்க வேண்டும். உங்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன். வரும் அவசரத்தில் நான் வழக்கமாக தோடி ராகம் வாசிக்கும் நாதஸ்வரத்தை வீட்டிலேயே மறந்துபோய் வைத்து விட்டு வந்துவிட்டேன். சரி வந்த இடத்தில் இந்த நாதஸ்வரத்தில் வரும் மற்ற ராகங்களை மட்டும் வாசித்து விட்டு நழுவலாம் என்று நம்பிவிட்டேன். ஏமாந்தேன். உங்களிடம் வகையுமாக மாட்டிக்கொண்டு விட்டேன். என்னை மன்னித்தருளவேண்டும்.” என்றார். சபையே குலுங்கியது. சிரிப்பு அடங்கவும் கைதட்டல் அடங்கவும் வெகு நேரமாயிற்று.
செட்டியார் பாவம் தனது சங்கீத ஞானத்திற்காக அனைவரும் கை தட்டுவதாக எண்ணி பெருமைப் பட்டார்.நண்பர்களே எனது சங்கீத ஞானம் ஒளரங்க சீப், செட்டியார் ஞானத்தைக் காட்டிலும் கொஞ்சம் உயர்வானது என்று எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
மிகவும் அரிதான ஒரு பழைய கால பிளேட். TNR பிள்ளையின் தோடி ஆலாபனையை கேளுங்கள் https://youtu.be/xrsQZ3XRHqQ?si=dqD4ytdiLhlWec1k
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


