
சிரஞ்சீவி ராஜா விஜயம் செய்கிறார் — நங்கநல்லூர் J K SIVAN
நாளை திருவோணம்.
ஹிந்துக்கள் கொடுத்து வைத்த பிறவிகள். நமது பாரத தேசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை, எங்கும் கோலாகலம், மகிழ்ச்சி, ஆனந்தம். எவ்வளவு தான் விலை வாசி ஏறினாலும், அன்றாடம் ஏதாவது ஒரு புது வரிச்சுமை முதுகை மேலும் வளைத்தாலும் நாம் பாக்கியசாலிகள், சந்திரனில் கூட காலை வைக்கக்கூடியவர்கள். ப்ரம்மோ ஏவுகணை வீசுபவர்கள். சந்திரனில் கால் வைப்பது என்று எழுதும்போது மூன்று அடி வைத்த உலகளந்த பரமன் நினைவு வருகிறது.
மலையாள தேசத்தில் ரொம்ப ரிய திருவிழா திருஓணம். நாளைக்கு அந்த திருநாள் 5.9.2025 அன்று கோலாகலமாக உலகெங்கும் கேரளர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்படும். இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை ஒரு சிரஞ்சீவி ராஜாவைப் பற்றி இருக்கிறது. அந்த ராஜா பெயர் மஹாபலி சக்கரவர்த்தி. தர்மவான், தான சீலன். ரொம்ப நல்லவன். எல்லோராலும் விரும்ப பட்டவன். அவனது புகழைப் பார்த்து தேவர்களுக்கு பயம் வந்தது. வெகு சீக்கிரம் அவன் இந்திர பதவி அடைந்து தேவர்களுக்கு தலைவனாகி விடுவான் அசுரனை இப்படி வளர்த்து விட்டு எதிர்பாராத துன்பங்களை பிற்காலத்தில் அடைவானேன். முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய சமாச்சாரம் இது என்று தேவர்கள் மஹா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். மஹாவிஷ்ணு தானே ஒரு வாமனனாக, குள்ள மூர்த்தியாக. அவதாரம் செய்கிறார். அப்போது மஹாபலி மூன்று லோகங்களுக்கும் அதிபதியாகிவிட்டான்.
ஒரு பெரிய யாகம் பண்ணினான் மஹாபலி. யாகம் முடிந்து எல்லோருக்கும் வேண்டிய அளவு தானம் கொடுக்கும் சமயம் வாமனனும் யாசகம் பெற செல்கிறான். இந்த வேடிக்கை உருவ குள்ளபிராமணனை மஹாபலி பார்த்து விட்டு கேட்கிறான்:
”யாரப்பா நீ விசித்திரமாக இருக்கிறாய்?”
”ஆமாம் அரசே நான் விசித்ரமானவன் என்று எனக்கே அடிக்கடி தோன்றுவதுண்டு.. சிரித்தான் வாமனன்.
”இங்கே எதற்கு வந்தாய், மற்ற பிராமணர்கள் போல் நீயும் ஏதாவது யாசகம் கேட்க உத்தேசமா?”
”நீங்கள் தான் என்னை விசித்ரமானவன் என்கிறீர்களே, நான் விசித்திரமாக அல்லவோ உங்களிடம் யாசகம் கேட்க வேண்டும். கேட்கட்டுமா?”
”ஆஹா , நான் இல்லையென்று சொல்லி, இன்று யாருமே எதுவுமே பெறாமல் இங்கிருந்து போக முடியாது வாமனா. தாராளமாக நீ விரும்பியதைக் கேளப்பா”.
”நான் கேட்பதெல்லாம் வேறொன்றுமில்லை. என் சிறிய காலடி நீள அகலத்துக்கு உண்டான மண் மட்டுமே. மூன்றே மூன்று காலடி மண் மட்டும் தந்தால் அது ஒன்றே போதும். ”
” பைத்தியமாக இருக்கிறாயே, வெறும் மூன்றடி மண் கேட்கிறாயே, வேறு நல்லதாக பிரயோஜனமாக ஏதாவது கேள் தாராளமாக தருகிறேன்.”
”இல்லை, மஹாராஜா, உங்கள் தாராள மனதைப் போற்றுகிறேன் எனக்கு மூன்றடி மண் தந்தாலே போதும்.”
எங்கே ஜல பாத்திரம்?. கொண்டுவாருங்கள், இவருக்கு மூன்றடி மண் தாரை வார்த்து கொடுக்கிறேன்.
அசுர குரு சுக்ராச்சாரியார் அந்த நேரத்தில் ஓடிவந்து மகாபலி தானம் தராமல் தடுக்கிறார்.
”மஹாபலி, அவசரமாக வாக்கு கொடுக்காதே. வந்திருப்பவன் வாமனன் அல்ல, மஹா விஷ்ணு, வேண்டாம் இந்த விஷ பரிக்ஷை . தானம் தராதே. அவன் உன்னை அழித்து விடுவான்”
”குருநாதா, இந்த மஹாபலி ஒரு தரம் வாக்களித்தால் மீறமாட்டான்”
ஜலபாத்ரத்தில் இருந்து நீர் தாரை வார்க்கமுடியாமல் சுக்ராச்சாரியார் ஒரு சிறு வண்டாக மாறி தடை செய்ததை வாமன விஷ்ணு அறிந்து ஒரு தர்ப்பை நுனியால் அந்த பாத்திரத்தில் ஜலம் சொட்டும் இடத்தில் செருக அது வண்டாக இருந்து உள்ளே அடைத்து கொண்டிருந்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண்ணுக்குள் பட்டு அவர் ஒரு கண் பார்வை இழந்தார் என்று ஒரு கதை உண்டு.
மூன்றடி மண் வரம் பெற்ற வாமனன் அடுத்த கணமே திருவிக்ரமனாய் உருவெடுத்து முதலடியால் மண்ணுலகம் ,ரெண்டாம் அடியால் விண்ணுலகம் என அளந்து மூன்றாம் அடிக்கு இடமெங்கே என, மகாபலியின் சிரமே அதுவாக, மகாபலியை கீழே அழுத்தியதால் மஹாபலி கீழே சுதல லோகத்திற்கு செல்கிறான். .
கிருஷ்ணன் காக்கும் கடவுள். மனிதர்கள், தேவர்களை ,மட்டுமா காப்பாற்றினான்?. விஷ்ணுவாக கருடன் மேல் பறந்து வந்து கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றியது நினைவிருக்க வேண்டாமா? ”ஆதிமூலமே”என்ற ஒரு குரல் போதுமே அவனுக்கு ஓடி வந்து உதவ. வேதங்களும் புராணங்களும் கடலளவு சொல்கிறதே அவன் மஹிமையை.
ஒரு பழைய ஞாபகம் நினைவுக்கு வருகிறது. வாரா வாரம் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும்போது அம்மா எங்கள் தொடைகளில் காய்ந்த மிளகாய் வற்றல், பெருங்காயம், ஜீரகம், போட்டு காய்ச்சிய நல்லெண்ணெயால் ஏழு சொட்டு புள்ளிகள் வைத்து சொல்லும் ஸ்லோகம் காதில் ஒலிக்கிறது.
‘அஸ்வத்தாமா, பலி, வ்யாஸா, ஹநுமாஞ்சா, விபீஷணா, க்ருபா, பரசுராமா, ஸப்ததே சிரஞ்சீவின: ” இந்த ஏழு பேரைப் போல என்றும் மரணமில்லாமல் நானும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டுமாம். நான் மட்டுமல்ல என் சகோதரர்கள் இருவரையும் அப்படி இருக்க வேண்டி தான் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவாள். அம்மா வாக்கு கொஞ்சம் பலித்து நான் 86+ல் இருக்கிறேன். என் மூத்த அண்ணா 92+ . நிச்சயம் நாங்கள் சிரஞ்சீவிகள் இல்லை. சஞ்சீவி மூலீகை அம்மா கை சாப்பாடுதான். இந்த ஸ்லோகத்தில் மஹாபலி இருப்பதால் நினைவுக்கு வந்து. அவன் ஒரு சிரஞ்சீவி. மரணமற்றவன்.
ஸமஸ்கிருதத்தில் चिर. chira , சிர என்றால் ரொம்ப நாள், பல்லாண்டு, எனப் பொருள்..ஆகவே சிரஞ்சீவி என்பது நிலையாக நீண்ட காலம் வாழ்வது. சாகாவரம் பெறுவது. அப்படி எல்லோரும் சாகாவரம் பெற்றதில்லை. ”மஹாபாலி வருஷாவருஷம் நீ ஒருநாள் பூமிக்கு விஜயம் செய்யலாம் ”என மஹாவிஷ்ணு அருளியதால் மஹாபலி வருஷம் ஒருநாள் சுதல லோகத்திலிருந்து தான் ஆண்ட பூமிக்கு ஆவணி திருவோணத்தன்று விஜயம் செய்கிறார். கேரளாவில் அவருக்கு சிறந்த வரவேற்பு.
ஓணம் திருவிழா அறுவடைத் திருவிழா. எத்தனையோ யுகம் ஆனாலும் அந்த நல்ல ராஜாவை இன்னும் நினைவில் கொண்டு ஒவ்வொரு கேரள வீட்டிலும் வாசலில் வண்ண வண்ண கோலங்களும், பூக்கள் அலங்காரமும் விளக்கும் ஏற்றி அற்புதமாக வாழையிலையில் பல கேரள உணவு பண்டங்கள், பாயசத்தோடு வரவேற்கிறார்கள். கம்பர் ராமாயணத்தில் வாமன மூர்த்தியை எவ்வளவு அழகாக பாடுகிறார் பாருங்கள்.
”உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ்வடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் –
சிலை குலாம் தோளினாய்! – சிறியன் சாலவே!”
பூமிக்கும் ஆகாசத்துக்குமாக வளர்ந்த வாமனன் ஒரே அடியில் இந்த மண்ணுலகு எல்லாம் அளந்து, மண் வேறு இல்லாமல் அடுத்த அடியில் விண்ணையெல்லாம் அளந்து, மூன்றாவது அடிக்கு, மண்ணோ, வேறு இடமோ இல்லாமல் என்ன செய்வது சொல்? எங்கே மூன்றாவது அடிக்கு இடம்?” என்று கேட்டபோது மஹாபலி தனது சிரத்தை குனித்து காட்டுகிறான்.
”வந்தவன் வாமனன் இல்ல, மஹா விஷ்ணு என்று அசுரர் குல ஆசார்யன் சுக்ரன் எடுத்துச் சொல்லியும், ”மஹா விஷ்ணுவே என்னிடம் யாசகம் பெற வந்தது எனக்கு பெருமை தான், ஆச்சர்யம், சந்தோஷம் ” என்று சொன்ன வாக்கை நிறைவேற் றியவன் மஹாபலி. அவனை வாழ்த்தி பாதாளலோக சக்ரவர்த்தி யாக்கினார் மஹா விஷ்ணு
இன்னொரு விஷயம் அடுத்த மன்வந்தரத்தில் ”சாவர்ணி மனு, இந்திரன்” மஹாபலி தான். இந்திரன் என்பது ஒருவன் பெயர் அல்ல. பதவியின் பேர். மந்திரி மாதிரி
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


