
கதை கதையாம் காரணமாம்… நங்கநல்லூர் J K SIVAN
ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து இது வரை யாராவது ”கதையா? வேண்டாம், எனக்கு கதை பிடிக்காது ” சின்னதுண்டா. பல் முளைக்கும் பருவத்திலிருந்து பல்லிழந்த படு கிழம் வரை கதை என்றால் ஜரூராக எழுந்துஉட்கார்ந்து ”சொல்” என்று தானே கூறுகிறது.
கதை கேட்டு வளராத குழந்தைகளைப் பார்க்க முடியாது. கதை அப்படிப்பட்ட ஒரு வசிய மந்திரம். அறுபது வருஷங்கள் முன்பு என் நங்கநல்லூர் வீட்டில் வாசலில் வேப்ப மரத்தடியில் என்னைச் சுற்றி உட்கார்ந்திருந்த பல வயசு குழந்தைகளின் பரவச முகங்கள் இப்போதும் கண் முன் தோன்றுகிறது. அப்பப்பா என்ன உற்சாகம் என்ன உணர்ச்சி மயம். என் அண்ணா குழந்தைகள், என் மனைவியின் சகோதரி அடுத்த தெருவில் இருந்தால். அவர்கள் குழந்தைகள், தெருவில் அண்டை அசல் வீட்டு குழந்தைகள் என்னை எப்போதுமே சுற்றிக் கொண்டிருக்கும் எத்தனையோ நாட்கள் அவை. என்னைக் கண்டால் கதை சொல்லு என்று அவர்கள் கேட்டபோதெல்லாம் நான் உலகிலேயே மிகப்பெரிய கதை சிருஷ்டி கர்த்தா என்ற எண்ணம் எனக்கு அப்போது தோன்றியது. 86லும் இன்னமும் உங்களுக்கெல்லாம் கதை சொல்லும் பழக்கம் என்னை விடவில்லையே.
ஏதோ கதை ஆரம்பிப்பேன் அதில் எதையெதையோ கலந்து ஒரு காக்டெயில் COCKTAIL பண்ண அவசியம் ஏற்படும். கதை வரண்டபோது கற்பனை கை கொடுக்கும் ”தாக்லா மோக்லா ” (ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் சொல்வதை இப்படி ஒரு வார்த்தையால் வர்ணிப்பது எங்கள் குடும்ப வழக்கம். இந்த சொல்லின் ஆதி பூர்வோத்தரமோ, , ஜனன விபரமோ எனக்கு இன்றும் தெரியாது)
நான் ஐந்தாவது படிக்கும்போது எங்கள் வகுப்பில் சரோஜினி டீச்சர் சொன்ன மிகப்பெரிய கதை எது தெரியுமா?. எங்களை எல்லாம் மௌனமாக இருந்தால் ஒரு பெரிய கதை சொல்லப் போறேன் என்பாள். நாங்கள் ஆவலுடன் கப் சிப். தொண்டையை கனைத்துக்கொண்டு எங்கள் எல்லோரையும் ஒரு முறை வெற்றிகரமாக பார்த்துவிட்டு ஆரம்பிப்பாள்.
”ஒரே ஒரு ஊரிலே ஒரு நரி. அதோடு கதை சரி”. இது தான் கதை. நான் கேட்ட கதைகளில் எல்லாம் முக்கால்வாசி நரி தான் ஏமாறும். ஆனால் இந்த சரோஜினி டீச்சர் கதையில் நரி எங்களை ஏமாற்றியது.
ஹோமர் கதையில் தேவைப்பட்டால் பாரதத்தின் சில நிகழ்வுகள், துப்பறியும் கதைகளில் தேவன், தமிழ்வாணன், கொஞ்சம் ஷெர்லக் ஹோம்ஸ் , வேறு எங்கோ எப்பவோ தெரிந்துகொண்டது எல்லாவற்றையும் கற்பனையால் சாந்து பூசி என்ன தோன்றுகிறதோ அப்படியெல்லாம் ஒரு கலக்கு கலக்கி குழப்பி கதையைக் கொண்டு போவேன். இதில் மயங்கி அந்த சிறுவர் குழாம் என்னை மகுடி கேட்ட நாகமாக வளைய வரும்.
எங்கள் வீட்டு வாசலில் வேப்ப மரத்தடி, அதன் எதிரே மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள், கொல்லையில் துணி துவைக்கும் கல் அருகே என்று குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்து என் சௌகரியம் போல கதை ஸ்தாபனத்தை இடம் மாற்றிக்கொள்வேன்/ சுரேஷ் வாயில் விரல் போட்டுக்கொண்டே ரசிப்பான். அவனது நிழல் என் மகள் மீனா. விரல் சுவை கதைச்சுவை இரண்டிலும் திளைத்திருப்பார்கள். திருடன் கதையில் வரும் சந்தர்ப்பங்களில் வித்யா பக்கத்தில் யாரையாவது கெட்டியாக பிடித்துக்கொண்டு டென்ஸ் ஆக இருப்பாள். வேகமான ரயிலில் இருந்து பாலத்தில் அது வளைந்து போகும்போது கதாநாயகனை கீழே குதிக்க வைப்பேன். அவன் ஆழமான நதியில் குதித்து லாவகமாக நீந்தி கரை ஏறுவான். என் அண்ணன் மகள் கௌரிக்கு இதயத் துடிப்பு பட பட என்று மூன்று வீட்டுக்கு கேட்கும். முகம் வியர்த்து போகும். ”அய்யோ அப்பறம்.’???? ரெண்டு பசியான முதலைகள் உணவு தேடிக்கொண்டு இருக்கும் ஆற்றில் குதித்த அந்த திருடனை ஆகாரமாக ஏற்றுக்கொள்ள வேகமாக வந்தும் நீச்சல் போட்டியில் அவனிடம் தோற்று, ஏமாந்ததாக சொல்லும்போது என் அண்ணன் மகன் ரங்கு துடிப்பான். என் கதையின் வீரன் சீக்ரம் சீக்ரம் முதலைகிட்டேந்து தப்பிக்கணுமே என்ற கவலை அவன் முகத்தில் தேங்கி நிற்கும். வீரன் கரையேறி முதலைக்கு டாடா காட்டும் சம்பவத்தில் த ன்னை மறப்பான். அப்போது வெளிப்பட்ட ரங்குவின் சந்தோஷத்தை இன்றும் என்னால் எழுத முடியாது.
நான் சொன்ன கதைகளைவிட நான் ரசித்த கதைகளை இப்போது நினைவுக்கு கொண்டுவர நினைக்கிறேன் .
பன்னியூர் படாடோப சர்மா என்று வடுவூர் துரைசாமி அய்யங்கார் கதை எழுதுவார். கருங்குயில் குன்றத்துக் கொலை, என்று எல்லாம் எழுதுவார். ஒரே மேடையில் அமர்ந்து திருடனும் ஜமிந்தாரும் காப்பி குடித்தார்கள் என்று எழுதுவார். நீள நீளமாக பெயர் எல்லாம் வைப்பார் கதைக்கு. கொலை , குத்து, கொள்ளை அடிதடி விஷயங்களை வைத்து என் போன்றோர்களை சிறு வயதில் மடக்கிப்போட்டவர் அய்யங்கார். .
ஆரணி குப்புஸ்வாமி முதலியார் கதைகள் கொஞ்சம் இப்படித்தான் இருக்கும். ஆனால் அதில் வருபவர்கள் சண்டை சச்சரவுக்கு எல்லாம் துரைசாமி அய்யங்கார் ஆட்கள் போல் போக மாட்டார்கள். ரொம்ப நேரம் ஆ.கு. முதலியார் புஸ்தகம் சேர்ந்தால் போல் படிக்க பிடிக்காது. ராஜம் அய்யர் எழுதியது மனதில் நிற்கவில்லை. நிறைய பெண்கள் அழுவார்கள் அவர் கதைகளில். எனக்கு தாங்காது . மற்றுமொரு வித்யாசமான எழுத்தாளர். மாயூரம் வேத நாயகம் பிள்ளை. அவரது பிரதாப முதலியார் சரித்திரம் எதோ உண்மையிலே ஒரு சரித்திர பாட புஸ்தகம் படிப்பது போலவே இருக்கும். நிறைய ஒவ்வொரு பாராவிலும் பக்கத்திலும் கதா பாத்திரங்கள் வாயிலாக நீதி நெறிகள் சொல்வார். அதை எல்லோரும் படித்தால் அதன் படி நடந்தால் நாட்டில் போலீஸ் இலக்காவுக்கு கோவிலில் பூக்கட்டிக்கொடுக்கிற வேலை கொடுக்கலாம். கோர்ட் நாட்டில் தேவைப்படாது.
பம்மல் சம்பந்த முதலியார் புத்தகங்கள் நாடக பாணியில் இருக்கும். எனக்கு அதில் வருபவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கும். ஒரு சின்ன கேள்விக்கு தாம்பரம் லேருந்து பீச் வரை பதில் சொல்வார்கள். கதை விறுவிறுப்பு திருப்பங்கள் எல்லாமே சுவாரசியம் குறையாமல் இருக்கும்.
நாலணா ஒரு வாரத்திற்கு என்று மாம்பலம் ஸ்டேஷன் கிழக்கு பகுதியில் தெருவில் ஒரு மாடியில் லெண்டிங் லைப்ரரியில் புத்தகம் எடுப்பேன். அவர்கள் அதிகம் ஆங்கில புத்தகம் தான் வைத்திருப்பார்கள். எர்ல் ஸ்டேன்லி கார்டினர் பெர்ரி மேசன் கதைகள் நிறைய படித்தேன். நூறுக்கு மேல் இருக்கும். அப்பப்போ A A பேர் என்று பேர் மாத்தி எழுதுவார். தமிழ் வாணனின் சங்கர்லால் பெர்ரி மேசனிலிருந்து விளைந்தவரோ என்று பிறகு யோசிக்க வைத்தது. லெப்டினண்ட் கர்னல் ட்ரேக் trag என்ற போலிஸ் அதிகாரி ஒவ்வொரு கதையிலும் 10-15வது பக்கத்திற்கு மேல் தான் தலை காட்டுவார். மேசனை நம்பமாட்டார். யோக்யமான போலிஸ் அதிகாரி. பால் ட்ரேக் drake என்று துப்பறிவாளன் சமய சஞ்சீவியாக மேசனுக்கு துப்பு கொடுப்பான். டெல்லா ஸ்ட்ரீட் என்று ஒரு பெண் உதவியாளி மேசனுடன் பேசிக் கொண்டே இருப்பாள். அவள் பேச்சிலிருந்து கூட மேசனுக்கு புது யுக்தி கிடைக்கும். பாதி புஸ்தகத்துக்கு மேல் நீதிமன்ற கேள்வி பதில்கள் என்னை அசர வைத்தது. ஒவ்வொரு கதையிலும் புத்தகத்திலும் வரும் பெர்ரி மேசனின் கட்சிக்காரர் ஒத்துழையாமை இயக்க ஆசாமியாகவே இருப்பார். பொய் சொல்வார். முக்கால் வாசி பெண்கள் தான். அவர்கள் சொன்னதை வைத்துக்கொண்டு சொல்லாததை கண்டுபிடிப்பார். ஹமில்டன் பர்ஜர் என்று ஒரு அராங்க வக்கீல் ஒவ்வொரு கதையிலும் தோத்துப் போவதற்கென்றே வருவார். சரியான கெடுபிடி ஆசாமி. மேசனுக்கு ஜன்ம வைரியாகவே தன்னை அவதாரம் செய்து கொண்டவர். இந்த புத்தகங்கள் இன்னும் நிறைய படித்திருந்தேனானால் நான் போலீசில் சேர்ந்திருக்கலாம். இல்லையென்றால் கோர்ட் குமாஸ்தா உத்தியோகமாவது விருப்பத்தோடு செய்திருக்கலாம். இப்படி முகநூலில் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன் .
நாலணா கொடுத்து கொடுத்து நான் வாங்கி விரும்பி படித்த மற்றுமொரு வாடகை புத்தக ஆசிரியர் ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் . பெயருக்கு வைக்கும் பேரே ஒவ்வொரு புஸ்தகத்திலும் ஆச்சர்யமாகவும் நூதனமாகவும் இருக்கும். முதல் வரி யிலிருந்து முடியும் பக்கத்துக்கு முன்னூறு பேரை வெட்டுவதும் சுடுவதுமாக இருக்கும். இது துப்பறியும் கதை இல்லை. காசுக்கு கொலை செய்யும் இதயமற்ற மெஷின்கள். எல்லா கதைகளிலும் எல்லா புத்தகங்களிலும் வருவார்கள். ஒட்டு மொத்தமாக அவர்கள் அனைவருமே கிராதகர்கள். இதயத்தை கழட்டி எங்கோ தொலைத்தவர்களாக இருப்பார்கள். என்னவோ தெரியவில்லை. இது மாதிரி புத்தகங்கள் நிறையவே சின்ன வயதில் என்னைப் போல் நிறைய பேர் படிப்பார்கள். என் கண் பார்வையைக் கெடுத்தவர்களில் முக்யமானவர் ஜேம்ஸ் ஹேட்லி சேஸ். மட்டமான பிரிண்ட் சின்ன எழுத்தில். அகாதா கிறிஸ்டி கதைகள் எனக்கு ரொம்ப பிடித்தது.எத்தனையோ இரவுகள் கதை முடியும் வரை இரவில் அரிக்கன் லைட்டில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்னை தூரோகத்தை இழக்க வைத்தவர். அம்மாவிடம் என்னை திட்டு வாங்க செய்தவர். என்னவோ கெடுமதி யாரை விட்டது. தமிழில் விக்ரமாதித்தன் கதைகள் அரு . ராமநாதன் எழுதியது, பஞ்ச தந்த்ர கதைகள். பரமார்த்த குரு, தெனாலி ராமன், ராஜாஜி எழுதிய ராமாயண பாரத கதைகள் பிடித்தது.
இதிலிருந்து விடுபட்டு வளர்ந்து சில காலத்தில் தேவனுக்கும் கல்கிக்கும் தாவினேன். என் எண்ணங்கள் விரிந்தன. சொர்க்க பூமிக்கு கொண்டு செல்லப்பட்டேன். JHC யை கைவிட்டேன். மறுபடியும் அவரைத் தொடவில்லை. தேவனைப்பற்றியும் கல்கி பற்றியும் நிறையவே எழுதவேண்டும். இதற்கென்று ஒரு தனிக்கட்டுரையை வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



