MUNDAKOPANISHAD J K SIVAN

முண்டக உபநிஷத் என்ன சொல்கிறது?
-நங்கநல்லூர்  J K சிவன்
தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வது  ஞானம், அறிவு, வித்யை என பல பெயர்கள் கொண்டது.
 முண்டக உபநிஷத் படித்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.  முண்டகம் என்றால் ”மழிக்கப்பட்ட”,  தோலுரிக்கப்பட்ட,  துண்டமான, என்று அர்த்தம். ஆசை பாசம் பற்று அனைத்தையும் உலகத்திலிருந்து  மழித்து, துறந்து….என்று அர்த்தம் கொள்ளலாம்.  மூன்று  முண்டகங்களாக,  துண்டுகளாக, பாகங்களாக  இந்த உபநிஷத் இருப்பதையும் உணரலாம்.
ஒரு முக்கியமான  வித்யை இருக்கிறது. அதை அறிந்து, தெரிந்து கொண்டால் சகல வித்யைகளையும்  தெரிந்து கொண்டதாகிவிடும். ஏனென்றால் எல்லா வித்யைகளும் அதனுள்  அடக்கம். அந்த வித்யை தான் ப்ரம்ம வித்யை எனும் ப்ரம்ம ஞானம்.  முதலில் இதை உணர்த்தியவர்  ப்ரம்மா. தனது  அதர்வனுக்கு அதை போதித்து, அவன் ஆங்கிரஸ் எனும் ரிஷிக்கு அதை சொல்லி, அவர் சௌனகனுக்கு சொல்லி அது பலரை அடைந்து கடைசியில்  ஆங்கிரசையே அடைய  அவர்  ப்ரம்மவித்யை என்றால் என்ன என விளக்குவது தான் முண்டக உபநிஷத்.

மிக உயர்ந்த  சாஸ்வத ஆன்மீக ஞானம் ப்ரம்மவித்யை. மற்றவை அழியக்கூடியவை, சாஸ்வதமில்லாதவை.
வேதகாலத்தில் யாகம் ஹோமம் மூலம் அக்னி  வளர்த்து தேவர்களை திருப்திப்படுத்தி ஞானம் பெற முயன்றனர்.
ஆத்மாவை உணர்வதின் மூலம் மட்டுமே  பிரம்மத்தை அறிய இயலும். உலகம், உடல் சம்பந்தம், பற்று அற்றது ஆத்ம ஞானம்.
அறிபவன், அறிவு, அறிந்து கொள்ளும் செயல் மூன்றும் ஒன்றானது ஆத்ம ஞானம்.
மற்ற அனுபவங்கள் மூலம் ஆத்மாவை அறிவது ரொம்ப நீளமான வழி, பல  கடின, கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுவது. பல ஜனன மரணங்கள் இதில் உண்டு.
அறியாமையை போக்குவது தான் ஞானம்.
எளிதில்  விளக்கமுடியாத வார்த்தையில்லாத  அனுபவம் ப்ரம்மஞானம்.
விவேகம், விசாரம், வைராக்கியம், அப்யாசம் மூலம் தான் அதை அடைய முடியும்.  மற்ற அனுபவங்கள் மூலம் பெரும் ஞானம் முடிவானதோ,  முழு நிறைவு பெற்றதோ  ஆகாது.
நம் எல்லோருக்குள்ளும்  ப்ரம்மம்  மறைந்திருந்தாலும்,  உறைந்திருந்தாலும்  ஞானிகள் மட்டுமே  தம்முள் ப்ரம்மம் இருப்பதை உணர்கிறார்கள்.
 நான் யார்  என்று விடாமல் சிந்தித்து  தன்னைத்  தானே  குடைந்து கொள்பவன் தான் கடைசியில் தான் தேடிய அந்த ப்ரம்மம்  அவனே என்பதை உணர்வான். .
சுய முயற்சி 90 % , தகுந்த குருவின்  போதனை 10%,   என்று  நிறைய உழைக்க வேண்டும். .
நாம ரூப, குணம் அற்ற, அபேதமானது ப்ரம்ம ஞானம்.  ப்ரம்மம்  தான் இறைவன். எங்கும் நிறைந்தது.
எல்லாமும் தானானது. இதை அறிவது தான் பர வித்யா.
காரண  காரியங்களுக்கு அப்பாற்பட்ட  எல்லாம் ஒன்றேயானது ப்ரம்மம்.
ஜீவர்களுக்கு ஆதாரமான அன்னம் அதுவே. உயிர் சக்தியான பிராணன் அதுவே. மனதை உருவாக்குவதும் அதுவே. பிரம்மத்தை அறிய  முயலும்  செயல் தான் தவம், தபஸ்.
மற்ற பலன்களை அடைய  ஈடுபடும் தவம் தபஸ்  யாகம் எல்லாமே பயனற்றது.  அழியக்கூடியது.
ஐம்புலங்களை, மனத்தை, வென்றவன் தான் பிரம்மத்தை அடைய இயலும். இது எந்த பற்றும் அற்றது.   பூரண வைராக்ய நிலை.
 மந்த்ரங்கள், யாகம், ஹோமம் மூலம் அடையும் மற்ற  ஞானம்  பிரம்மத்தை விட  தாழ்ந்தது. அதை உயர்ந்ததாக எண்ணி நம்பி அதை அட முயல்வது வீண் என்று முண்டக உபநிஷதம் நிறைய  சொல்கிறது. மூன்று வேதங்கள் சாம, ரிக், யஜுர் பிரதானமாக பின்பற்றப் பட்ட  காலம் தான் த்ரேதா (மூவகை)யுகம்.

பரிபூரண ஆனந்தத்தை தருவது ப்ரம்மஞானம் ஒன்றே. மற்றவை ஏதோ ஒரு எதிர்பார்ப்பு காரணமாக தேடப்படும்  சாஸ்வதமில்லாத, பிறப்பு இறப்பு, உலகம், எண்ணங்கள்  சம்பந்தப் பட்டவை.  இதற்கு உதவுபவன் குருடன் குருடனுக்கு வழி காட்டும் சமாச்சாரம்.
நீயே  அந்த ப்ரம்மம் என உணர வேறு எவர் உதவி தேவை? நீ தான் உன்னுள்ளே உறையும் அதைத்  தேடி உணரவேண்டும் என்று தான் ரமண மகரிஷியும் திரும்ப திரும்ப உபதேசித்தார்.

தனிமையில்,  தாகம் பசி மறந்து தன்னுள் தானே இருப்பதை தவமாக உணர்வதற்காக தான் உலகத்தை, வாழ்க்கையை, குடும்பத்தை, விட்டு காட்டுக்கு சென்று தனியே  ஆத்மா  ஒன்றின்மேலேயே  மனம் ஈடுபட ரிஷிகள் தவம் இருந்தார்கள். எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்பட வேண்டும். ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக  இதல்ல, இதல்ல  என்று  ஒன்று, ஒன்றாக விட்டு  விடுவதே  சத் கர்மம்.   அப்போது தான் ஆத்மாவிடம் கொஞ்சம் கிட்டே  நெருங்கலாம்.  தெளிவு சற்று பெறலாம்.
ஆரம்பம், முடிவு, தோற்றம், மறைவு எதுவுமற்றது ப்ரம்மம். மற்ற இன்பங்கள்  சுகம் எல்லாமே  எங்கோ எப்போதோ எப்படியோ உருவானவை. அறியவோ, விளக்கவோ, முடிபவை. இதை நன்றாக அனுபவித்து உணர்ந்த பற்றற்ற குருவே ப்ரம்ம ஞானத்தைப்  பெற உதவுபவர். மாயையை உணர்ந்து விலக்கிக் கொள்ள, அகற்ற,  உதவுபவர்.

ஒரு  பெரிய மரத்துக்கு எத்தனையோ கிளைகள். அவை ஒன்றோடொன்று  சம்பந்தமில்லாமல் வளர்கிறது. அதன் வளர்ச்சிக்கு ஆதாரம்   மரமல்ல .  பூமியில் கண்ணுக்கு தென்படாத வேர்.  அது போல் ப்ரம்மத்தால் தான் மற்ற எல்லாம் தோன்றி வெவ்வேறாக காண்கிறது.

எண்ணற்ற குணங்கள் அனைவரிடம் காணப்பட்டாலும் அனைத்துமே மாறாத,   ஒரு  அரும் நற்குணத்திலிருந்து தோன்றி  மாறுபட்டவை. வேறுபட்டவை. மனத்தின் வேலை இது.   மனத்தை , அதில் தோன்றும் எண்ணங்களை, அழிப்பது தான் மனோ நாசம்.

காணும் யாவும், யாருமே, எங்கிருந்து வந்தோமோ அங்கேயே கடைசியில் செல்வோம், சங்கமமாவோம். அதுவே ப்ரம்மம். ஆதி காரணம். அதற்கு இடையில் எல்லாம் நாடகமேடை  என்பது தான் உட்கருத்து.

பிரம்மம் ஒன்றே புருஷன்.  அதுவே ஹிரண்யகர்பனாக  பிரபஞ்ச சிருஷ்டி காரணம். பிரபஞ்சம் அனைத்தும் தானே என உணர்த்த  அதுவே  விராட் ஸ்வரூபமாக இருப்பது.  நாம ரூபங்கள் நம்  புரிதலுக்காக வசதி. அவ்வளவே. புருஷன், ஹிரண்யகர்பன், விராட் (விஸ்வரூபன்) எல்லாம் ஒன்றே.

மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்று பாட்டி பாடினாலும் நாம் மனத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே.

ஓம் என்பது வில். ஜீவன் தான் அம்பு.  பிரம்மம் தான் லக்ஷியம்.  விடாமல் பிரணவ த்யானம் பண்ணினால் ப்ரணவஸ்வரூபமாகவே ஆகலாம்.  பிரம்மத்தை அடைய  இப்படியும் வழி இருக்கிறதே. இந்த விஷயத்தில் அம்பு வெளியே நோக்கி பறக்காமல் உள்நோக்கி ஊடுருவும். ஆத்ம தியானத்தின் போது, கண் மூடி, வாய் பேசாமல் இருப்பதால் வெளியுலக உறவு அறுந்து போகும். நமது அறியாமை, அஞ்ஞானம் தான் நம் மனதின் மூலம் நம்மை கண்டபடி இழுத்து சென்று அவஸ்தை பட வைக்கிறது. சந்தேகம் மனதை சங்கடப்படுத்தும். ஆத்ம ஞானம் அதை விடுவித்து மனதை சுத்தப்படுத்தும்.

பூர்வ ஜென்ம கர்ம பலன் மூட்டை தான் சஞ்சித கர்மா. பல பிறவிகளில் அதன் பலனை அனுபவிக்கிறோம். ஒவ்வொரு ஜென்மாவிலும் அப்படி அனுபவிக்கும் கர்மபலன் தான் பிராரப்த கர்மா. ஒவ்வொரு ஜென்மாவிலும் நாம் புதிதாக சேர்த்து கொள்ளும் கர்மா தான் ஆகாமி கர்மா.  இதிலிருந்து எவருமே தப்ப முடியாது.  அஞ்ஞான இருளில், ஐம்புலன்களின், மனதின் பிடியில் சிக்கியவனுக்கு  ப்ரம்மம் புரிபடாது.  ப்ரம்மம் தான் சர்வமும், எங்கும் எதிலும் என்பதை அறிய மாட்டான். ப்ரம்மத்துக்கு காரணமோ,  காரியமோ,  நாம, ரூபமோ, பேதமோ  இல்லை.  ஆத்மாவுக்கும் ஜீவனுக்கும் உள்ள  உறவை அழகாக ஒரு உதாரணம் மூலம் சொல்கிறது இந்த உபநிஷத்.  ஒரு மரத்தில் கிளையில் ரெண்டு பறவைகள். ஒன்று இனிய சுவையான பழத்தை மரத்திலிருந்து கொத்தி தின்கிறது. மற்றது. பேசாமல் எதுவும் சாப்பிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா ஜீவனின் சுக துக்கங்களை  சாக்ஷி கண்காணிப்பதைக்  காட்டுகிறது இது.   மனத்தின் உருவகம் தான் உலகம்.  அதை ஊக்குவிப்பது ஐம்புலன்கள். மனம்  இவை இரண்டிலிருமிருந்து  விடுபட்டால் ஆத்மா ஒன்று தான் மிஞ்சும். மனம் ஆத்மாவோடு கரைந்து காணாமல் போய்விடும்.

ப்ரம்ம ஞானிக்கு பேச்சு நின்றுவிடும். தேவையில்லையே.  அவனே ப்ரம்மம். பிரம்மமே சர்வம் என்று ஆனபின் யாருடன் பேச்சு,எதைப்  பேசுவது?     ஆத்மாவுடன் இணைவது ஒன்றே பேரானந்தம். அதை ஏழாம் அறிவு என்று தாராளமாக சொல்லலாம். அவனைத்தான் ப்ரம்ம வரிஷ்டன் என்று போற்றுகிறோம்.  சர்யன் என்பவன் நடப்பவன், பின் பற்றுபவன். பிரம்மத்தை நோக்கி நடப்பவன் ப்ரம்மசாரி. புலன்களை அடக்க பாடுபட்டு ஜெயித்தவன்.  மனத்தை ஒருமிக்கவைத்து ஆத்ம த்யானத்தில்  ஈடுபடுபவன்.   ஆத்ம ஞானியின்  மனதில் இறை சிந்தனை, லோக க்ஷேமம், தியாகம் போன்ற தன்னலமற்ற சத், தர்ம, சிந்தனைகள், எண்ணங்கள்  மட்டுமே  தோன்றும், அது அத்தனையும் நிறைவேறும்.  காஞ்சி பரமாச்சார்யா வையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

சன்யாசம் என்பது காவி உடை உடுத்துவது, மணிகள், மாலைகள் அணிவது, தாடி மீசை, விபூதி சந்தனம் குங்குமம் மட்டும் அல்ல. குடும்பம், சொந்தம் பந்தம், உலகம், அதன் ஈர்ப்புகள், உடலை ஆக்கிரமிக்கும்  ஆசைகள் பாசங்கள் உணர்ச்சிகள் அதை ஊக்குவிக்கும் மனம் அனைத்தையும் துறப்பது.  திடசித்தம்,  வைராக்யம்,  மனோநாசம் கொண்டவர்கள் தான் ஆத்ம ஞானம் பெறுபவர்கள், ப்ரம்ம ஞானிகள். எப்படி  ஒரு பெரிய  காவேரி, கங்கை, யமுனை போன்ற நதிகள் தனது பேர் புகழ், நீள அகல ஆழம் , பரப்பு, ருசி எல்லாம் இழந்து கடலோடு அடையாளம் இல்லாமல் கலக்கிறதோ அதுபோல் ஞானி எல்லாவற்றையும் துறந்து, திரஸ்கரித்து, ஆன்மாவை தேடி சென்று ஆதாமாவோடு அடையாளம் இல்லாமல் ஒன்றாகிறான்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;